Wednesday, June 21, 2017

மாவட்ட செய்திகள்
போரூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்: போரூர் மேம்பாலத்தை பொதுமக்களே திறந்து வாகனங்களை ஓட்டியதால் பரபரப்பு



போரூரில் மழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கட்டி முடிக்கப்பட்டும் திறப்பு விழா காணாத மேம்பாலத்தை பொதுமக்களே திறந்து வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.

ஜூன் 21, 2017, 05:30 AM

பூந்தமல்லி,


பூந்தமல்லி மவுண்ட் சாலை, குன்றத்தூர் சாலை, ஆற்காடு சாலை ஆகியவற்றை இணைக்கும் முக்கிய சந்திப்பாக போரூர் ரவுண்டானா விளங்கி வருகிறது. இந்த சாலைகளின் வழியே பூந்தமல்லி, வடபழனி, குன்றத்தூர், கிண்டி ஆகிய பகுதிகளுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வாகனங்களில் செல்கின்றனர்.

இதன் காரணமாக காலை மற்றும் மாலை நேரங்களில் போரூர் சந்திப்பில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் அந்தபகுதியில் புதிய மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், புதிய மேம்பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

புதிய மேம்பாலம்

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த தி.மு.க. ஆட்சியில் 2010-ம் ஆண்டு போரூர் ரவுண்டானா பகுதியில் ரூ.34.72 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது.

பின்பு 2011-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், மேம்பாலம் கட்டுமானப் பணி கிடப்பில் போடப்பட்டது. பின்னர், அதற்கான நிதியாக ரூ.55 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் கட்டுமான பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.

அந்த மேம்பால கட்டு மானப் பணிகள் ஏறக்குறைய முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

போக்குவரத்து நெரிசல்

சிறு சிறு வேலைகள் மட்டும் நடந்து வருகிறது. அதனால் அந்த மேம்பாலம் எப்போது திறக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தனர். வேலை முடிந்த பின்னரும் அந்த மேம்பாலம் பயன்பாட்டுக்காக திறப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு போரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது. இதனால் போரூர் ரவுண்டானா சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போரூர் ரவுண்டானாவில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போரூர் ரவுண்டானாவை கடப்பதற்கு குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் ஆவதாக வாகன ஓட்டிகள் புலம்பியபடி இருந்தனர்.

பொதுமக்களே திறந்தனர்

மேலும், அந்த பகுதி சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகனங்கள் ஊர்ந்தபடிதான் செல்ல முடிந்தது.

இதனால் பொறுமையிழந்த வாகன ஓட்டிகள் சிலர் திறப்பு விழாவுக்காக காத்திருந்த மேம்பாலத்தின் மேல் வாகனங்களில் ஏறிச்சென்றனர். அவர்களை போக்குவரத்து போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

சுமார் ½ மணி நேரம் வரை திறக்கப்படாத புதிய மேம்பாலத்தின் மீது வாகனங்கள் சென்றன. இதனால் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து நெரிசல் படிப்படியாக குறைந்தது. அதனை தொடர்ந்து திறக்கப்படாத மேம்பாலத்தில் வாகனங்கள் செல்வதற்கு போலீசார் தடைவிதித்தனர்.

போரூர் ரவுண்டான பகுதியில் எந்த நேரமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்துகொண்டே இருக்கிறது. எனவே கட்டி முடிக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Madras HC relief for SC medico denied government quota

Madras HC relief for SC medico denied government quota Affirmative action is not exception or bounty, but is constitutional right of student...