Sunday, June 4, 2017

'ஒரு இட்லி ரெண்டு ரூவா!' - தெருத்தெருவாய் இட்லி விற்கும் சேலம் பாட்டி

VIJAYSURYA M

சேலம் மாவட்டம் கொளத்தூரில் உள்ள போண்டா மார்க்கெட் பகுதியில் வசிப்பவர் பச்சியம்மாள். 80 வயதான இவர், தினமும் தெருத்தெருவாகச் சென்று இட்லி வியாபாரம் செய்துவருகிறார். இவருக்காகவே தினமும் பல குழந்தைகள் காத்திருப்பார்களாம். குறைந்த விலையில் நிறைவான உணவை விற்பனை செய்யும் அந்தச் சிறுதொழில் தொழில்முனைவோரைச் சந்தித்தேன்.



``இந்த வியாபாரத்தை நீங்க எப்போ ஆரம்பிச்சீங்க?''
``எனக்குக் கல்யாணம் ஆன புதுசுல என்னோட மாமனார் வீட்டுல ஹோட்டல் வெச்சு நடத்தினாங்க. அங்கே சமையல் வேலை செஞ்சிட்டிருந்தேன். ஒருகட்டத்துல நானே தனியா இட்லி விற்க ஆரம்பிச்சேன். தெருத்தெருவாகப் போய் விற்பேன். அப்ப ஒரு ரூபாய்க்கு பத்து இட்லி குடுப்பேன். இப்பதான் விலைவாசி ஏறிப்போச்சு. இருந்தாலும் இப்பவும் நான் பத்து ரூபாய்க்கு அஞ்சு இட்லியும், பத்து ரூபாய்க்கு மூணு தோசையும் குடுக்கிறேன். 40 வருஷங்களா இந்த வியாபாரம் பண்ணிக்கிட்டிருக்கேன்.''

``உங்களைப் பற்றியும் உங்க குடும்பத்தைப் பற்றியும் சொல்லுங்க பாட்டி?''
``எனக்கு 80 வயசு. என்னோட கணவர் பேரு சுப்பிரமணி. அவர் இறந்து மூணு வருஷம் ஆகுது. எனக்கு மூணு பசங்க. ஒருத்தன் இறந்துட்டான். ரெண்டு பேருக்குக் கல்யாணம் ஆகிருச்சு. இப்ப வரைக்கும் நான் என்னோட சொந்த உழைப்புலதான் சம்பாதிச்சு வாழ்ந்துட்டிருக்கேன். என் மருமகள் அப்பப்போ எனக்கு உதவியா இருப்பா. நான் காலையில இட்லி கொண்டுபோவேன். எனக்காக பல பேரு காத்துட்டு இருப்பாங்க. பள்ளிக்கூடம் போகும் புள்ளைங்க எல்லாரும் நான் இட்லி கொண்டு வர்றதைப் பார்த்துட்டு, 'ஐ! பாட்டி வந்திருச்சு... பாட்டி வந்திருச்சு'ன்னு கத்துங்க. அதைப் பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். என்னோட பேரப் புள்ளைங்களா அவங்களை நினைச்சுக்குவேன்.''



``உங்களுக்கு அரசு உதவி ஏதாவது கிடைச்சுதா?''
``நானும் எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்த்துட்டேன். அரசாங்கத்துல இருந்து எந்த உதவியும் வரலை. ஏரியா தலைவர்கிட்ட சொன்னேன், இன்னிக்கு வரைக்கும் கண்டுக்கவே இல்லை. நடக்கவே முடியலை. ரொம்ப கஷ்டமா இருக்கு. ஏதோ என்னால முடியுற வரைக்கும் தெருத்தெருவாப் போய் இட்லி வியாபாரம் செய்றேன். ஆனா, இதைத் தொடர்ந்து செய்ய முடியுமான்னு தெரியலை'' என்றார் உதிர்ந்த குரலில்.

தன் உழைப்பால் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தப் பாட்டியும் ஓர் சாதனைப் பெண்மணிதான். அகத்துக்குள் ஆழமான நம்பிக்கைவைத்து வாழ்க்கையைக் கடத்திவரும் இந்தப் பாட்டிக்கு அரசு உதவ வேண்டும்.

No comments:

Post a Comment

HC: No addl certificate needed for MD anaesthesiology docs

HC: No addl certificate needed for MD anaesthesiology docs TIMES NEWS NETWORK 21.01.2026 Bengaluru : The high court has held that a medical ...