Monday, June 25, 2018

ஆய்வு நடத்த ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது; தடுத்தால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை: ஆளுநர் மாளிகை எச்சரிக்கை

Published : 24 Jun 2018 18:09 IST

சென்னை
 


தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் : கோப்புப்படம்

மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஆய்வு நடத்த ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. ஆளுநரின் பணிகளுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது ஐபிசி 124 பிரிவின் கீழ் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ஆளுநர் மாளிகை எச்சரித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் கைது செய்தனர்.

இதனிடையே, நாமக்கலில் திமுகவினரை போலீஸார் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், மா. சுப்பிரமணியன், ஜெ. அன்பழகன் உள்ளிட்டோர் கருப்புக் கொடி ஏந்தி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நோக்கி நேற்று பேரணியாக சென்றனர். அவர்கள் ஆளுநர் மாளிகை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்,

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''ஆளுநர் மாவட்டந்தோறும் சென்று பார்வையிடுவது தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. அதன் உண்மை நிலையை எடுத்துக் கூறுவது கடமையாகும். அரசியலமைப்பு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி, ஆளுநர் மாநிலத்தின் எந்தப் பகுதிக்கும் செல்ல முழு அதிகாரமும், சுதந்திரமும் உண்டு. இந்தப் பயணத்தின்போது, மாவட்ட ஆட்சித் தலைவரையும், மக்களையும் சந்திக்கவும், பேசவும் ஆளுநருக்கு முழு சுதந்திரம் இருக்கிறது.

குடியரசுத் தலைவருக்கு மாதந்தோறும் அறிக்கை அனுப்ப வேண்டி இருப்பதால், அதற்காகவே இந்த ஆய்வுகளை ஆளுநர் மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வின் போது, பல்வேறு மாநிலங்களுக்குச் செல்லும் போது, மக்களின் பிரச்சினைகளை ஆளுநரால் அறிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், இந்த ஆய்வின் போது, அதிகாரிகளுக்கு ஆளுநர் எந்தவிதமான உத்தரவுகளையும் பிறப்பித்தது இல்லை, அரசின் எந்தத் துறையையும் விமர்சித்ததும் இல்லை. மாவட்ட ஆட்சித்தலைவர், அதிகாரிகள் ஆளுநரிடம் அரசின் திட்டங்கள், சாதனைகள் ஆகியவற்றைத் தெரிவிக்கிறார்கள். ஆய்வு என்ற வார்த்தையை எதிர்க்கட்சித் தலைவர் தவறான நோக்கில் மக்களிடம் எடுத்துரைக்கிறார். அவர் சட்டம் குறித்து அறியாமல், ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவதிலும், சாலை மறியலிலும் ஈடுபடுகிறார்.

ஆளுநரின் பணிகளுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது ஐபிசி 124 பிரிவின் கீழ் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க முடியும். மக்களின் நலன் கருதி மாவட்டந்தோறும், அடுத்து வரும் மாதங்களிலும் ஆளுநரின் இந்த ஆய்வுப்பணிகள் தொடரும்.''

இவ்வாறு ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

In 2023 too, -40 was good enough for NEET PG

In 2023 too, -40 was good enough for NEET PG  Rema.Nagarajan@timesofindia.com 19.01.2026 There is much outrage in the medical community that...