Monday, June 25, 2018

விரைவில் ரயில் பயணிகள் கூறுவர்... 'குறையொன்றுமில்லை!' ஏழு ரயில்களில் வருகிறார் 'கேப்டன்'!

Updated : ஜூன் 25, 2018 01:36 | Added : ஜூன் 25, 2018 01:26





கோவை:நீலகிரி எக்ஸ்பிரஸ் 'டிரெயின் கேப்டன்' சேவைக்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து, கோவையில் இருந்து செல்லும் மூன்று முக்கிய ரயில்கள் மற்றும் சேலம் கோட்டத்தில் நான்கு ரயில்களில், இச்சேவை விரிவுபடுத்தப்படவுள்ளது.

சேலம் ரயில்வே கோட்டத்தின் கீழ், கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய முக்கிய ஸ்டேஷன்கள் உட்பட, 194 ரயில்வே ஸ்டேஷன்கள் உள்ளன.பயணிகள் பாதுகாப்பு, ஸ்டேஷன் வசதிகளை மேம்படுத்துவது, குறைகளை நிவர்த்தி செய்வது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.

சமீபகாலமாக, பயணிகளின் குறைகளுக்கு உடனடி தீர்வு காணும் விதமாக, ரயில்களில் 'டிரெயின் கேப்டன்' எனும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

சேலம் ரயில்வே கோட்டத்தில் முதல் முறையாக, மேட்டுப்பாளையம் - சென்னை இடையேயான நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில், கடந்தாண்டு ஜனவரியில், 'டிரெயின் கேப்டன்' நியமிக்கப்பட்டார். வெள்ளை சீருடையில் இருக்கும் அவர், அனைத்து ரயில் பெட்டிகளிலும் சோதனை செய்து, பயணிகளின் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு கண்டு வருகிறார். இது பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால், மேலும் நான்கு ரயில்களில், இச்சேவையை விரிவுபடுத்த, சேலம் ரயில்வே கோட்டம் திட்டமிட்டுள்ளது.சேலம் கோட்ட ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நியமிக்கப்பட்ட, 'டிரெயின் கேப்டன்' வாயிலாக, பயணிகளின் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளதால், கோவை - பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ், கோவை - சென்னை சேரன் எக்ஸ்பிரஸ், கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களிலும், 'டிரெயின் கேப்டன்'கள் நியமிக்கப்படவுள்ளனர்.தவிர, சேலம் - சென்னை செல்லும் ரயில் உட்பட சேலம் கோட்டத்தில் நான்கு ரயில்களில், இச்சேவை விரைவில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 19.01.2026