Friday, June 22, 2018

கலப்பு திருமண தம்பதிக்கு அவமதிப்பு பாஸ்போர்ட் அதிகாரி, 'டிரான்ஸ்பர்'

Added : ஜூன் 21, 2018 20:13



லக்னோ,:உ.பி.,யில், பாஸ்போர்ட் எடுக்க வந்த, கலப்பு திருமண தம்பதியை, மத ரீதியாக அவமானப்படுத்திய, 'பாஸ்போர்ட்' அதிகாரி, அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள நொய்டாவை சேர்ந்தவர், முகமது அனாஸ் சித்திக். இவரது மனைவி, தன்வி சேத். நொய்டாவில் உள்ள ஒரு நிறுவனத்தில், இருவரும் பணிபுரிகின்றனர்.முஸ்லிம் மதத்தை சேர்ந்த சித்திக்கும், ஹிந்து மதத்தை சேர்ந்த தன்வியும், 2007ல், காதல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு, 7 வயதில் பெண் குழந்தை உள்ளது.சித்திக், தன் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காகவும், தன்வி, புதிய பாஸ்போர்ட் எடுப்பதற்கும், விண்ணப்பித்து இருந்தனர்.

வேடிக்கை

இதற்காக, இருவரும், நேற்று முன்தினம், நொய்டாவில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் சென்றனர்.அப்போது, தன்வி சேத்தின் விண்ணப்பத்தை பார்த்த, விகாஸ் மிஸ்ரா என்ற பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி, 'இஸ்லாமியரை மணந்த நீங்கள், ஏன் இன்னும் மதம் மாறவில்லை; பெயரையும் மாற்றிக் கொள்ளவில்லை?' என, கேட்டுள்ளார்.கணவன் - மனைவி இருவரில் ஒருவர் மதம் மாறி, அனைத்து ஆவணங்களிலும் பெயரை மாற்றினால் மட்டுமே, பாஸ்போர்ட் வழங்க முடியும் எனக் கூறி, அவர்களது விண்ணப்பத்தை நிலுவையில் வைத்தார்.தன்வி சேத்தை, அவமானப்படுத்தும் விதமாக, அந்த அதிகாரி சத்தம் போட்டு பேசியதை, பாஸ்போர்ட் அலுவலகத்தில் பலரும் வேடிக்கை பார்த்தனர்.இதனால், அவமானத்துக்கும், கடுமையான மன உளைச்சலுக்கும் ஆளான, தன்வி சேத், இந்த சம்பவம் குறித்து, மத்திய வெளியுறவு அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுஷ்மா சுவராஜுக்கு, சமூக வலைதளமான, 'டுவிட்டர்' வாயிலாக புகார் அளித்தார்.

பணியிட மாற்றம்

இதையடுத்து, அமைச்சர் சுஷ்மாவின் உத்தரவின் அடிப்படையில், விகாஸ் மிஸ்ரா என்ற அந்த பாஸ்போர்ட் அதிகாரி, அதிரடியாக நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.சம்பவம் குறித்து அறிக்கை அளிக்கும்படி, பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு, வெளியுறவு அமைச்சகம் சார்பில்,'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இதற்கிடையே, சித்திக்கின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்கவும், தன்விக்கு புதிய பாஸ்போர்ட் வழங்கவும், நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.01.2026