கோவையில் அரசு டவுன் பஸ் பயணிகளுக்கு... இனியில்லை பயம்; இனிதாகும் பயணம்! விரைவில் வரப்போகின்றன 150 புதிய பஸ்கள்!
Added : ஜூன் 26, 2018 01:18
கோவை மக்களுக்கு ஒரு நல்ல செய்தி!செவிப்பறையைக் கிழிக்கும் தடதட சப்தம், உடைந்து தொங்கும் படிக்கட்டுகள், கதிகலங்க வைக்கும் கரும்புகை... என கோவையில் பொதுமக்களை மிரட்டி வரும் அரசு சொகுசு டவுன்பஸ்கள், விரைவில் விடைபெற போகின்றன; அவற்றுக்கு பதிலாக புதிய டவுன்பஸ்கள் வரவிருக்கின்றன; முதற்கட்டமாக, 75 புதிய பஸ்கள், ஜூலை 15ல் பயணத்தை துவங்கவுள்ளன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கோவை கோட்டத்துக்கு உட்பட்ட கோவை நகரில், 462 அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் பெரும்பாலானவை, பல லட்சம் கி.மீ., துாரம் இயக்கப்பட்டவை. இந்த பஸ்களின் பராமரிப்பும் மோசம். குறிப்பாக, ஜே.என்.என்.யு.ஆர்.எம்., திட்டத்தில் கொண்டு வரப்பட்ட சொகுசு பஸ்களின் தற்போதைய நிலை, படுமோசம்.
பயத்துடன் பயணம்!
மற்ற சாதாரண பஸ்களை விட, சொகுசு பஸ்களே அதிகமாக பழுதாகின்றன; கரும்புகையை அதிகமாக கக்கி வருகின்றன. இவற்றுக்கு மாற்றாக இயக்கப்படும் (ஸ்பேர் பஸ்) பஸ்கள், அதை விட அவலமாகவுள்ளன. இதனால், பஸ்களின் உள்ளே இருப்பவர்கள் மட்டுமின்றி, வெளியே இருப்போரும், அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
இதற்கு தீர்வு காணும் பொருட்டு, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களை கொண்ட, கோவை கோட்ட அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு, 430 பஸ்களை வழங்குவதாக தமிழக அரசு உறுதியளித்திருந்தது. 150 பஸ்களை மட்டும் முதற்கட்டமாக, கோவை நகரில் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. இவற்றில், 75 பஸ்கள் 'பாடி' கட்டப்பட்டு, தயாராக உள்ளன.மீதமுள்ள 75 பஸ்கள், வேகமாக தயாராகி வருகின்றன. முதலில் வரும் 75 பஸ்கள், ஜூலை 15லிருந்து பயணத்தைத் துவக்கவுள்ளன. காணொளிக் காட்சி வாயிலாக, இந்த பஸ்களின் இயக்கத்தை தமிழக முதல்வர் பழனிசாமி துவக்கி வைக்கவுள்ளார்.
நிறம் மாறும் பஸ்கள்!
அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த முறை வழங்கப்பட்ட, பச்சை, மஞ்சள் வண்ணங்களுக்கு பதிலாக, நீலம், வெள்ளை நிற பஸ்கள், மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளன. இந்த பஸ்களின் இருக்கைகள், சொகுசாக அமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் மைலேஜ் கிடைக்கும்; மூன்று ஆண்டுகளுக்கு, 'ஸ்பேர் பார்ட்ஸ்' வாங்க வேண்டிய அவசியம் ஏற்படாது' என்றார்.இந்த பஸ்களையாவது, முதலில் இருந்தே சிறப்பாக பராமரிக்க வேண்டுமென்பதே, கோவை மக்களின் ஒருமித்த கோரிக்கை.
'பெரியகடை வீதி வந்தாச்சு!'மைக்கில் வரும் அறிவிப்பு
புதிதாக வரும் பஸ்களில் நிறம் மட்டுமின்றி, பல நல்ல மாற்றங்களும் உண்டு. பயணிகள் வசதிக்காக 57க்கு பதிலாக, 52 இருக்கைகள் மட்டுமே இருக்கும்; கடைசி 'சீட்'களில் பயணிப்போர்க்கு, 'சீட் பெல்ட்' இணைக்கப்பட்டிருக்கும்; டிரைவர் 'சீட்' அருகே உள்ள 'மைக்' வாயிலாக, பஸ் ஸ்டாப்பின் பெயரை, அங்கிருந்தே அவர் கூற முடியும். பஸ்சுக்குள் 2 எல்.இ.டி.,விளக்குகள், பிரேக் லைட், படிக்கட்டுகளில் எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்படுகின்றன; இரு அவசர வழிகள் இருக்கும்; பெரிய விபத்து ஏற்பட்டால், பின்புறத்தை மொத்தமாக திறந்து தப்ப முடியும். பி.எஸ்.,4 இன்ஜின் என்பதால், புகை, சத்தம் குறைவாயிருக்கும்; 'பிக் அப்' அதிகமாயிருக்கும்.
-நமது நிருபர்-
No comments:
Post a Comment