Saturday, June 23, 2018

துயரம் கடந்த சாதனைப் பெண்

Published : 19 Jun 2018 10:50 IST

எஸ்.விஜயகுமார்




பவிதா

கடினமாக உழைத்துப் படிப்பவர்களால் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும் என்பது அறிந்ததே. என்றாலும்கூட, தனது வாழ்வில் ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத இழப்புக்குப் பின்னர்ச் சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் மாணவி பவிதா பிரீத்தி. சென்னை சைதாப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியான பவிதா பிரீத்தி பிளஸ் டூ தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்று மாநகராட்சி பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களில் ஒருவராகச் சாதனை படைத்துள்ளார்.

வணிகவியல் பிரிவு மாணவியான அவர், பொருளாதாரம் மற்றும் கணக்குப் பதிவியல் பாடங்களில் தலா 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். வணிகவியல், வணிகக் கணிதம் பாடங்களில் சதமடிக்கும் வாய்ப்பை ஒரு மதிப்பெண்ணில் இழந்தாலும் அவற்றில் தலா 199 மதிப்பெண்களைக் கைப்பற்றியுள்ளார். அது மட்டுமல்லாது தமிழில் 194, ஆங்கிலத்தில் 184 என மொழிப் பாடங்களில் தனது திறமையை நிரூபித்துள்ளார். இந்தச் சாதனையை அவர் எத்தகைய சிக்கலை எதிர்கொண்ட பிறகு நிகழ்த்திக் காட்டி இருக்கிறார் என்பதில்தான் அனைவருக்குமான படிப்பினை இருக்கிறது.

இரண்டு நாளில் புத்தாண்டு பிறக்கப்போவதை எண்ணி மாணவப் பருவத்துக்கே உரித்தான துறுதுறுப்புடன் காத்திருந்த பவிதாவுக்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்துக்கே 2017-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி வாழ்க்கையில் மறக்க முடியாத துயரமான நாளாக அமைந்தது. தனக்கு ஆசானாகவும் இருந்த பாசத்துக்குரிய தந்தை விபத்தில் சிக்கி, ஒரு நாள் முழுவதும் கோமாவில் இருந்து உயிரிழந்தார். அப்போது தனது எதிர்காலத்தை இழந்துவிட்டதுபோல உணர்ந்தார் பவிதா.


அப்பாவின் கனவு, எனது இலக்கு

“தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார் அப்பா. கல்வியில் சாதிக்க வேண்டும் என்ற உணர்வைக் குழந்தை பருவத்தில் இருந்தே எனக்கும் அக்காவுக்கும் ஊட்டி வளர்த்தார். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 484 மதிப்பெண் எடுத்தபோது, சைதாப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் என்னைச் சேர்த்துவிட்ட அப்பா, அங்கு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற சாதனை மாணவர்களின் பெயர் பலகையைக் காண்பித்து, அதில் உன் பெயரும் வர வேண்டும் என்றார்.

தினமும் எனது பாடங்களுக்கான புதிது புதிதான வினாத்தாள்களைக் கொண்டு வந்து அவற்றுக்கு என்னைத் தயார்படுத்தினார். அப்பாவோடு சேர்ந்து அம்மாவும் நான் எழுதியவற்றை விடைத்தாள்களைத் திருத்திக்கொடுத்து, என்னை மேலும் ஊக்கப்படுத்தி வந்தனர். பள்ளி தொலைவில் இருந்ததால் பள்ளிக்குச் சென்று வருவதற்கே தினமும் 4 மணி நேரம் செலவிட வேண்டியிருக்கும்.

அதனால், நான் பள்ளியில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போதே கூர்ந்து கவனித்துக்கொள்வேன். மேலும், ஆசிரியர்கள் வழிகாட்டுதல்படி படிக்க வேண்டிய பாடங்களைப் பட்டியலிட்டுப் பிரித்து, ஒவ்வொரு நாளும் இவ்வளவு படித்து முடிக்க வேண்டும் என்று இலக்கு வைத்துப் படித்து முடித்துவிடுவேன்.


படித்து முடித்தவற்றை வீட்டில் தேர்வெழுதிப் பார்த்துவிடுவேன். வீட்டில் படிக்கும் நேரம் குறைவாகவே இருக்கும்” என்கிறார் பவிதா.

தந்தை கூறியபடி பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, பள்ளியின் சாதனை மாணவியாகப் பெயரெடுக்க வேண்டும் என்ற கனவோடு காத்திருந்தபோதுதான் விபத்தில் அவருடைய தந்தை உயிரிழந்தார். செய்வதறியாது பரிதவித்துப்போன பவிதாவை அவருடைய ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தி மீண்டும் பள்ளிக்கு வரவழைத்திருக்கிறார்கள்.

“சான்றோர்களின் பொன்மொழிகளை வீடு முழுவதும் அப்பா வைத்திருந்தார். அவற்றைப் பார்க்கும்போது, எனக்கு ஆறுதல் கிடைத்தது. பிளஸ் டூ தேர்வு முடிவு வெளியாகி எங்கள் பள்ளியில் முதல் மாணவியாக, மாநகராட்சிப் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களில் ஒருவராகத் தேர்ச்சி பெற்றதை அறிந்தபோது, அப்பாவின் ஆசையை நிறைவேற்றிவிட்டேன் என்ற மனநிறைவு ஏற்பட்டது.

அப்பாவின் ஆசையில் ஒரு பகுதியை மட்டுமே நிறைவேற்றி இருக்கிறேன். ஐ.ஏ.எஸ். தேர்வெழுதி ஆட்சியராக வர வேண்டும் என்பது அப்பாவின் கனவு, எனது இலக்கு. அதையும் அடைந்தே தீர வேண்டும்” என்று நம்பிக்கையோடு கூறுகிறார் சோதனையைக் கடந்து சாதனைப் படைத்திருக்கும் பவிதா பிரீத்தி.

No comments:

Post a Comment

மாற்றத்தைப் பாா்வையில் தொடங்குவோம்!

மாற்றத்தைப் பாா்வையில் தொடங்குவோம்! அரசுப் பள்ளிகள் வெறும் கட்டடங்கள் அல்ல; அவை லட்சக்கணக்கான ஏழைப் பிள்ளைகளின் கனவுக்கூடங்கள். தினமணி செய்த...