Tuesday, March 17, 2015

ஒன் மேன் ஆர்மி டிராஃபிக் ராமசாமி - 1

1949 ஆம் ஆண்டு. எனக்கு அப்போது வயது 14. நான் 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். அம்மா என்னை அரிசி எடுத்து வருவதற்காக சென்னையில் இருந்து காஞ்சிபுரம் அனுப்பி இருந்தார். நான் காஞ்சிபுரத் தில் இருந்து 10 கிலோ அரிசியை எடுத்துக் கொண்டு பஸ்ஸில் வந்தேன். அதற்கான அனுமதியையும் பெற்று இருந்தேன். 

அப்போதையக் காலத்தில் குறிப்பிட்ட எடைக்கு மேல் அரிசி மற்றும் நெல்லை அனுமதி இல்லாமல் வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப் பட்டிருந்தது. (அப்போது சென்னையில் இருந்து காஞ்சி புரத்துக்கு பஸ் கட்டணம் 1 ரூபாய் 25 காசுகள்)

சென்னையை நோக்கி வந்துகொண்டு இருந்தது பஸ். ஆற்காடு செக்போஸ்ட்டில் வந்தபோது பஸ்ஸை நிறுத்தி அவரவர் கைகளில் இருந்தப் பொருட்களை அதிகாரிகள் பரிசோதனை செய்துகொண்டு இருந்தனர். என்னைப் பரிசோதித்த ஓர் அதிகாரி என் மடியில் இருந்த அரிசிப் பையைப் பார்த்துவிட்டு, ‘பத்து கிலோ அரிசியைக் கொண்டு செல்ல அனுமதி வாங்கி இருக்கிறாயா?’ என்றார். நான் அனுமதி வாங்கிய விவரத்தைச் சொன்னேன். 

ஆனாலும், அந்த தாசில்தார் நான் கொண்டுவந்த அரிசிப் பையைப் பிடுங்கிக் கொண்டார். நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் அரிசிப் பையைக் கொடுக்கவில்லை. ‘எங்கள் வயலில் விளைந்த அரிசி இது. பத்து கிலோ எடுத்துச் செல்ல உரிய அனுமதி வாங்கி இருக்கிறேன். அப்படியும் நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்?’ எனக் குரலை உயர்த்தி நியாயம் கேட்டேன். அதில், அந்த தாசில்தாருக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது. ‘என்னிடமே நியாயம் பேசுகிறாயா? உன்னால் முடிந்ததைச் செய்துகொள். அரிசியைத் தர முடியாது. மீறிப் பேசினால் போலீஸுக்குத் தகவல் சொல்ல வேண்டி இருக்கும்!’ என மிரட்டி அனுப்பிவிட்டார்.
எங்கள் குடும்பத்தில் அப்போது 11 பிள்ளைகள். நான் கொண்டுபோகும் அரிசியில்தான் சாப்பாடு செய்ய வேண்டிய நிலை. சில நேரங்களில் அப்பா ஓவர் டியூட்டி பார்த்தாலும் பார்ப்பார். வெறும் கையோடு போனால் அம்மா என்ன செய்வாள்? பலவித வேதனைகளும் மனதைக் குழப்ப, அரிசிப் பையை இழந்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். 

தாசில்தார் அரிசிப் பையைப் பிடுங்கிக்கொண்ட விஷயத்தைச் சொன்னேன். சொல்லும்போதே எனக்கு அழுகை பொங்கியது. அப்போது வீட்டுக்கு வந்த என் தந்தை, ‘சரி, விடு. அதிகாரிகள் ஏதோ தவறான அரிசின்னு நினைச்சுப் பிடிச்சிருப்பாங்க. அதை விட்டுத்தள்ளு. நான் கடைக்குப்போய் அரிசி வாங்கி வருகிறேன்’ என எனக்கு ஆறுதல் சொல்லிக் கிளம்பிவிட்டார்.

ஆனால், என்னால் என்னை சமாதானம் செய்துகொள்ள முடியவில்லை. ‘ஏதோ ஓரளவுக்கு சமாளித்துக் கொள்ளும் குடும்பம் என்பதால் சிக்கல் இல்லாமல் போய்விட்டது. இதேபோல் ஒரு அன்றாடங்காய்ச்சியின் குடும்பத்துக்கு நேர்ந்து இருந்தால் என்னாகி இருக்கும்?’ என்கிற எண்ணம் அன்று முழுக்க என்னைத் தூங்கவிடவில்லை. தவறாக நடந்துகொள்வது எத்தகையக் கண்டனத்துக்கு உரியதோ... அதேபோல்தான் தவறைத் தட்டிக் கேட்காமல் அலட்சியம் காட்டுவதும். அந்த ஆவேசம் எனக்குள் அடங்காதத் தீயாகத் தகிக்கத் தொடங்கியது.

‘ஒரு தனி நபர் ஓர் ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு எத்தனை கிலோ அரிசியை எடுத்துச் செல்லலாம்? அதற்கு யாரிடம் அனுமதி பெற வேண்டும்?’ என்கிற விவரங்களை எல்லாம் மறுபடியும் படித்துப் பார்த்து தெரிந்துகொண்டேன். சட்டப்படி நான் 10 கிலோ அரிசியைக் கொண்டு வந்ததில் எந்தத் தவறும் இல்லை என்கிற நிறைவு எனக்கு நிம்மதியைக் கொடுத்தது. நியாயமாக நடந்தும் அரிசியைப் பறித்துக்கொண்ட அந்த தாசில்தாரை நிச்சயம் சும்மா விடக்கூடாது என்கிற ஆவேசமும் எனக்குள் அடங்கிவிடவில்லை.

‘எப்போதடா விடியும்?’ எனப் புரண்டு புரண்டுப் படுத்தேன். காலையில் எழுந்த உடன் தபால் ஆபீஸுக்குப் போனேன். மூன்று பைசாவுக்கு ஒரு போஸ்ட் கார்ட் வாங்கினேன். எனக்கு நடந்த அநீதியை அப்படியே எழுதி அப்போதையக் காஞ்சிபுரம் கலெக்டருக்கு அனுப்பினேன். ‘நிச்சயம் எனக்கான நியாயம் கிடைக்கும்’ என்கிற நம்பிக்கையோடு பள்ளிக்கூடம் சென்று விட்டேன்.
நான்கு நாட்கள் கழித்து, ஆற்காடு சிக்னலில் என் அரிசியைப் பிடுங்கி வைத்துக்கொண்ட அதே தாசில்தார் எங்கள் வீட்டுக்கு முன், கையில் அரிசிப் பையோடு நின்றுகொண்டு இருந்தார். நான் அவரை பார்க்காதது போல் வீட்டுக்குள் சென்றுவிட்டேன். ‘தம்பி... தம்பி...’ என்றபடியே பதறிய அவர், மாவட்ட ஆட்சியர் தன்னை சஸ்பெண்ட் செய்துவிட்டதாகக் கூறினார்.

‘‘உங்களோட அரிசிப்பை ஒரு அரிசிகூடக் குறையாமல் இதோ இருக்கு. நடந்தது தவறுதான். என்னைவிட எத்தனையோ வயசு சின்னப் பையனான உங்ககிட்ட மனசு வருந்தி மன்னிப்புக் கேட்டுக்கிறேன்’’ என்றார் கண்ணீரோடு. 

அரிசிப் பையை என்னிடம் கொடுத்து, ‘‘நடந்த சம்பவத்தை மறந்து என்னை மன்னிச்சிட்டதா நீங்க ஒரு கடிதம் கொடுத்தாத்தான் மறுபடியும் நான் தாசில்தார் உத்தியோகம் பார்க்க முடியும். தயவு பண்ணி என்னை மன்னிச்சிட்டதா ஒரு கடிதம் எழுதிக் கொடுங்க தம்பி’’ என அவர் இரு கைகளையும் உயர்த்திக் கும்பிட்டபடி சொல்ல... எனக்கே ஒரு மாதிரியாகிவிட்டது. 

இது என் நியாயத்துக்கான வெற்றி என சத்தம் போட்டுக் கத்த வேண்டும்போல் இருந்தது. 

வயதில் சிறுவனாக இருந்தாலும், எனக்கு நடந்த அநீதியை யாருடைய துணையும் இல்லாமல் என்னால் தட்டிக் கேட்க முடியும். அதற்கான நியாயத்தைப் பெற முடியும் என்கிற துணிச்சல் எனக்குள் முதல் முறையாகப் பூத்தது. யாரையும் அழவைத்து ரசிக்கும் குரூரம் எனக்கு ஒருபோதும் இருந்தது இல்லை. அதனால், ‘நடந்த தவறை தாசில்தார் ஒப்புக்கொண்டார். என் அரிசிப் பையையும் முறைப்படி திருப்பிக் கொடுத்தார். இனி இதுபோல் அவர் யாரிடமும் நடந்துகொள்ள மாட்டார் என நம்புகிறேன். திருந்திய மனநிலையில் இருக்கும் இவரை சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்து விடுவித்து உரிய பணியில் அமர வைக்கலாம்!’ எனக் கடிதம் எழுதிக் கொடுத்து அனுப்பினேன்.


அறிந்தோ அறியாமலோ தவறு நிகழ்ந்துவிடுகிறது. அதன் பாதிப்பு அறிந்து ஒருவர் மன்னிப்புக் கேட்கும்போது, தவறைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பாக அவரை மன்னிப்பதில் தவறே இல்லை. 

மன்னிப்புதான் மனிதகுலத்தின் மைய விளக்கு. அது தரும் சுடரில்தான் இந்தப் பூமிப் பந்து சுற்றுகிறது. தவறு செய்தவர்களைத் திருந்தச் செய்வது மட்டுமே நம் கடமை. 

14 வயதில் ஒரு தாசில்தாரையே சஸ்பெண்ட் ஆக வைத்திருக்கிறேன் என்றால், நியாயத்தின் அடிப்படை யில் என்னால் எதையும் தைரியமாகச் செய்ய முடியும் என்கிற நம்பிக்கை அப்போதுதான் பிறந்தது. மனதுக் குள் புது வெள்ளம் பாய்ந்ததுபோல் ஓர் உற்சாகம். ஒரு சிறு எறும்பு யானையின் காதுக்குள் புகுந்து யானையைக் குப்புற சாய்த்தது போன்ற நிறைவு.

மூன்று பைசா போஸ்ட் கார்டில் எழுதப்பட்ட விஷயத்தை அக்கறையோடு படித்து, உரியபடி விசாரித்து, தவறு செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுத்த அந்தக் கலெக்டர்தான் ‘அநியாயமாக நடக்கும் எதையும் தட்டிக் கேட்கலாம்’ என்கிற துணிச்சலை எனக்குள் வார்த்தவர். 

இன்றைக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மீது வழக்குப்போட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்புகிறேன் என்றால்... அதற்கான தைரியம் அந்த 14 வயதில் உருவானது.    

- டிராஃபிக் ராமசாமி எழுதிய விகடன் பிரசுரத்தின் ‘ஒன் மேன் ஆர்மி‘ நூலில் இருந்து..

No comments:

Post a Comment

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...