Tuesday, March 17, 2015

மனதில் நிற்கும் ரயில்கள்! By தஞ்சாவூர்க்கவிராயர்



மத்திய ரயில்வே பட்ஜெட்டில் பயணிகளுக்கான புதிய வசதிகள் சில அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ரயில் போக்குவரத்து சாமானியர்களின் பயணத்துக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. அறுநூறும் எழுநூறும் கொடுத்து ஆம்னி பேருந்தில் பயணம் செய்ய வசதியில்லாத ஏழை எளிய மக்களின் பயணத்திற்கு எப்போதும் ரயில்தான் உதவுகிறது.

அந்தக் கால ரயில் என்றாலே புகை விட்டபடி போகும் ரயில் என்ஜின்தான் நினைவுக்கு வரும். ரயில் பற்றிய சித்திரங்கள் அப்படித்தான் வரையப்பட்டன.

இலங்கையில் புகை விட்டபடி செல்லும் ரயில்களை "புகை ரதங்கள்' என்றே சொல்வார்கள். என்ன ஒரு கவித்துவமான சொல்லாட்சி!

புகைவண்டிகளில் இருந்து இறங்கும் பயணிகள் கண்களைக் கசக்கிக் கொண்டுதான் இறங்குவார்கள். புதிதாகத் திருமணமான பெண்கள் ரயில்களில் கண்களைக் கசக்கிக் கொண்டு பயணிப்பதைப் பார்த்தால் கண்களில் ரயில் கரி விழுந்து விட்டதா அல்லது பிறந்த வீட்டை விட்டுச் செல்வதால் ஏற்படும் பிரிவாற்றாமை காரணமா என்று கண்டுபிடிப்பது கஷ்டம்.

பாசஞ்சர் வண்டியின் பெட்டிகள் தனித்தனி மரத்துண்டுகள் கோக்கப்பட்ட இருக்கைகளுடன் பார்க்கவே நேர்த்தியாகவும் அழகாகவும் இருக்கும். ரயிலில் விற்கப்படும் ஆரஞ்சுப் பழங்களும் ரயில் புகையும் கலந்த வாசனை, ரயில் பூராவும் பரவி இருக்கும். இந்த வாசனை அலாதியானது.

ரயில் என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல குழந்தை மனம் கொண்ட எல்லாருக்குமே சலிப்புத் தராத வியப்புதான். பாசஞ்சர் வண்டிகள் எல்லா ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். அதுவும் கிராமங்களிலிருக்கும் சிறிய அழகிய ரயில் நிலையங்களில் நின்று புறப்படும்போது அந்தக் கிராமத்தை விட்டுப் புறப்பட மனமே இல்லாமல் புறப்படுவது போல் தோன்றும்.

கிராமத்து ரயில் நிலையங்களின் அழகு சொல்லி மாளாது. ரயில் வருகின்ற நேரம் தவிர மற்ற நேரங்களில் பெரும்பாலும் ஆள் அரவமற்றே காட்சி தரும். அவற்றின் பிளாட்பாரம் நெடுகிலும் மரநிழல் படுக்கையாய் விரிந்திருக்க அதன் மீது ஆங்காங்கே பூக்களும் இலைகளும் உதிர்ந்து அழகை அதிகரிக்கும்.

சில ஸ்டைஷன்களில் விழுதுகளைத் தொங்க விட்டபடி நிற்கும் அழகிய ஆல மரங்கள். அவற்றின் நிழல் எப்போதும் குளுமையாக இருக்கும். ஸ்டேஷன் மாஸ்டர் வெள்ளைச் சீருடையுடன் கையில் பச்சைக் கொடியும் கக்கத்தில் சுருட்டிய வைத்திருக்கும் சிவப்புக் கொடியோடும் சிலைபோல் நிற்பார்.

அவர் கொடியை ஒரு சொடுக்கு சொடுக்கி காண்பிக்கும் லாவகம் வியப்பளிக்கும். எக்ஸ்பிரஸ் ரயில்கள் கிராமத்து ரயில் நிலையங்களை புழுதிப்புயலுடன் கடகடத்தபடி கடந்து செல்லும்.

"கூஜா' என்கிற பாத்திரம் ரயில் பயணத்துக்கென்றே தயாரிக்கப்பட்டதோ என்று எண்ணத் தோன்றும். சற்று பெரிய ரயில் நிலையங்களில் ரயில் நிற்கும்போதெல்லாம் ஒரு கையில் கூஜாவில் காபியை வாங்கிக் கொண்டு மறு கையால் வேட்டி நுனியைப் பிடித்தபடி ஓடி வரும் நடுத்தர வயது குடும்பஸ்தர்களைத் தவறாமல் பார்க்கலாம்.

ஹோல்டால்கள், டிரங்குப் பெட்டிகள் சகிதம் ரயிலில் பயணிக்கும் குடும்பங்களை அந்தக் காலத்தில் காணலாம். இரவு பத்து மணிக்கு தஞ்சாவூர் ஸ்டேஷனில் காத்திருக்கும் பாட்டிமார்கள், ரயில் நிற்கும் கொஞ்ச நேரத்தில் முறுக்கும் தேன்குழலும் நிரம்பிய டின்களை எடுத்துக் கொண்டு ரயிலில் ஏறி மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு பத்திரமாக மாம்பலத்தில் வந்திறங்கும் சாமர்த்தியம் படைத்தவர்கள்.

வெகுகாலத்திற்கு முன்னர் சில ஊர்களுக்கு முதன்முறையாக ரயில் வந்தபோது கிராமவாசிகள் பார்த்துவிட்டு மிரண்டு ஓடியிருக்கிறார்கள். முதல் திரைப்படம்கூட ஒரு ஊருக்கு புதிதாக ரயில் வருவதைப் பற்றித்தான்.

ரயில் பயணம் சில சமயம் மனிதர்களை விசித்திரமான சந்தேகப் பிராணிகளாக்கிவிடுகிறது. இதை வைத்து "எல்லார்வி' ஒரு கதையே எழுதியிருக்கிறார்.

ஒரு ரயில் பயணி கண்ணில் படுகிறவர்களிடம் எல்லாம் "சார் இந்த வண்டி விருத்தாசலம் வழியாத்தானே போகுது?' என்று கேட்டுக் கொண்டிருப்பார். டிக்கெட் பரிசோதகரிடமும் கேட்டு உறுதி செய்து கொள்வார். விருத்தாசலம் போய்ச் சேரும் வரை பக்கத்திலிருப்பவர்களை நச்சரித்துக் கொண்டே வருவார்.

முன்பெல்லாம் ரயில்வே ஸ்டேஷன்களில் மின்சார வசதி கிடையாது. அப்போதெல்லாம் ஒரு நபர் கையில் தீவட்டியுடன் நின்று கொண்டு "வடமதுரை.. வடமதுரை' என்று சத்தம் போடுவாராம். ஓடுகிற ரயில் என்ஜின் டிரைவரிடம் மூங்கில் வளையத்தில் கோத்த சாவியை பிளாட்பாரத்தில் நிற்பவர் லாவகமாக ஒப்படைக்கும் காட்சி ஆச்சரியமூட்டும்.

"ஒரு பகல் நேர பாசஞ்சர் வண்டியில்' என்கிற தலைப்பில் ஜெயகாந்தன் எழுதிய கதையை மறக்க முடியுமா? பாசஞ்சர் வண்டியின் பயணிகள்தான் சக மனிதர்களை நேசிக்க கற்றுக் கொடுத்தனர்; கற்றுக் கொண்டனர். பிறருக்காக விட்டுக் கொடுக்கும் சுபாவம், பிறர் துன்ப துயரங்களுக்கு செவி கொடுக்கும் மனசு எல்லாம் பயணங்களின்போது சர்வ சாதாரணம்.

ஓடும் ரயில் பெட்டிகளில் முகிழ்க்கும் நட்பு அலாதியானது. இரண்டு பயணிகள் பேசிக்கொண்டே போகும்போது அவர்களிடையே பல வருஷ அன்னியோன்யம் ஏற்பட்டுவிடும். அவரவர் இறங்க வேண்டிய இடம் வரும்போது பிரியா விடைபெறுவார்கள்.

ஆனல் அந்த நட்பு சில நாட்களில் மறக்கப்பட்டு விடும். இதனை "ரயில் சினேகம்' என்றே குறிப்பிடுவது வழக்கம்.

கிராமத்து சிறுவர்களுக்கு ரயிலில் வரும் விருந்தினர்களை ரொம்பவும் பிடிக்கும். அதுவும் பட்டணத்திலிருந்து ரயிலில் வரும் சிறுவர்களை ஒருவித பொறாமையுடன் பார்ப்பார்கள்.

தனது ரயில் பயணம் பற்றிச் சொல்லும்போது, "ஏ, அப்பா! எங்க ரயில் எவ்வளவு புகை விட்டுக்கிட்டு வந்தது தெரியுமா?' என்று அந்தக் குழந்தை சொல்வதை கண்கள் விரியக் கேட்பார்கள்.

ரயில் போகும்போது "தடக்' "தடக்' என்ற சத்தம் ஒரு தாள லயம்போலக் கேட்கும். ரயிலின் இந்தத் தாலாட்டைக் கேட்டுக்கொண்டே தூங்குவதும் விழிப்பதும் தனி சுகம்.

அந்தக் காலத்து கருப்பு வெள்ளைத் திரைப்படங்களில் ஒரு குடும்பம் ஊரைவிட்டு பட்டணத்துக்கு குடிபெயர்வதைச் சொல்ல, குபுகுபுவென்று புகை விட்டுக் கொண்டு போகும் ரயிலைக் காட்டுவதே வழக்கம்.

பழைய திரைப்படமொன்றில் "ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது' என்று பாடியபடி ரயிலை ஓட்டி நடந்து செல்லும் சிவாஜியின் முகபாவங்களையும் நாகேஷின் சேட்டைகளையும் மறக்க முடியுமா?

"நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார்' என்ற வரிகளைப் பாடும்போது சிவாஜியின் முகத்தில் தெரியும் பெருமிதத்திற்குக் காரணம் ரயில் அல்லவா?

"தில்லானா மோகனாம்பாள்' படத்தில் ஓடிக் கொண்டிருக்கும் ரயில் பெட்டிக்குள் சிவாஜியும் பத்மினியும் பாலையாவும் சி.கே. சரஸ்வதியும் அரங்கேற்றிய நகைச்சுவையுடன் கூடிய காவிய ரசத்தை மறக்கத்தான் முடியுமா?

ரயிலில் ஜன்னலோரம் உட்கார இடம் கிடைத்துவிட்டால் மனசு மகிழ்ச்சியில் துள்ளுகிறது.

அழகும் அமைதியும் கொஞ்சும் சில சின்னஞ்சிறு ரயில்வே ஸ்டேஷன்களைப் பார்க்கும்போது அந்த ஸ்டேஷனில் இறங்கி மீதி வாழ்க்கையை அங்கேயே கழித்து விடலாமா என்று தோன்றும்.

ரயில் பயணங்களின்போது நாம் நம்மை ஒரு துறவியாக, ஒரு கவியாக சில சமயம் ஒரு குழந்தையாகக்கூட உணர நேரிடும்.

நண்பர் ஒருவர் ரயில்வே ஜங்ஷனை "கல்யாண சத்திரம்' என்று குறிப்பிடுவார்.

ரயிலுக்காகக் காத்திருக்கும்போது தூரத்திலிருந்து வந்து கொண்டிருக்கும் ரயிலின் மஞ்சள் விளக்கு அருகில் வரவரப் பெரிதாவது நமக்குள் நம்பிக்கை வெளிச்சமாய்ப் பரவுவதை மறுப்பதற்கில்லை.

ரயிலைப் பற்றிய உருக்கமான கதை ஒன்றினை வண்ணநிலவன் எழுதியிருக்கிறார்:

ஒரு தாய். பெரியவனும் சிறியவனுமாய் இரு குழந்தைகள். ரயிலுக்குக் காத்திருக்கிறார்கள். அந்த ஊரில் ரயில் தண்டவாளம் மாற்றுகிற வேலை செய்த கூலி ஆட்களில் அந்தப் பெண்ணும் ஒருத்தி.

அந்த ஊரில் அவர்களுக்கு வேலை முடிந்துவிட்டது. பிழைப்பு தேடி மெட்ராஸ் போகிறார்கள்.

பெரியவன் அம்மாவை கேள்வி கேட்டு நச்சரிக்கிறான்.

"அம்மா இந்தத் தண்டவாளமெல்லாம் நீ போட்டதாம்மா?'

"பேசாம இருக்க மாட்டே?'

"நீ, அப்பா, ராமுத் தாத்தாவெல்லாம் தெக்குக் காடு வழியா தண்டவாளம் போட்டீங்களே? அந்த தண்டவாளம் தானேம்மா இது?'

"ஆமா... ஆமா... உயிரை வாங்காதே..'

மெட்ராஸ் போகிற ரயில் வருகிறது. அதில் அவசரத்தில் ரிசர்வேஷன் கம்பார்ட்மென்டில் ஏறிவிடுகிறார்கள்.

உள்ளே இருந்தவர்கள் அவளை இறங்கச் சொல்லி விரட்டுகிறார்கள். ரயில் கிளம்பி விடுகிறது.

"ரிஸர்வேஷன் கோச்சில் வருகிறவர்களின் கோபமும் நீதிவேட்கையும் லேசுப்பட்டதா என்ன?

அடுத்த ஸ்டேஷனிலேயே இறக்கி விடப்பட்டு ரயில்வே போலீஸிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.

ரயில் புறப்பட்டுப் போகிறது.

குழந்தை கேட்கிறது.

"அம்மா ரயில் போற இந்தத் தண்டவாளம்கூட நீ போட்டதுதானம்மா?'



கட்டுரையாளர்: எழுத்தாளர்.

No comments:

Post a Comment

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...