Thursday, June 15, 2017

16ம் தேதி முதல் அமலாகிறது தினசரி பெட்ரோல் விலையை தெரிந்து கொள்வது எப்படி?

2017-06-13@ 01:26:19




புதுடெல்லி: சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதத்துக்கு 2 முறை மாற்றி அமைத்து வந்தன. பல சர்வதேச நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இதே நடைமுறையை இந்தியாவிலும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக புதுச்சேரி, சண்டிகர், விசாகப்பட்டினம், ஜாம்ஷெட்பூர், உதய்ப்பூரில் மே 1 முதல் இது அமலுக்கு வந்தது.

அன்று முதல் தினமும் நள்ளிரவு 12 மணிக்கு அன்றைய தினத்துக்கான பெட்ரோல், டீசல் விலை மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதை வரும் 16ம் தேதி முதல் நாடு முழுவதும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தினசரி விலை நிலவரத்தை அறிந்து கொள்வது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிவரத்துக்கு ஏற்ப தினசரி விலை முடிவு செய்து அறிவிக்கப்படும். பெட்ரோல் பங்குகளுக்கு முதல் நாள் இரவே தெரிவிக்கப்படும். அங்கு வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளலாம். இது தவிர, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் fuel@IOC என்ற மொபைல் ஆப்மூலம் தினசரி பெட்ரோல், டீசல் விலையை அறிந்து கொள்ளலாம். இதுதவிர, RSP< SPACE >DEALER CODE என 9224992249 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினாலும் அன்றைய விலை விவரம் மொபைலுக்கு அனுப்பப்படும் என தெரிவித்துள்ளன.

இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு 26,000 டீலர்கள் உள்ளனர். இவர்களுக்கு முந்தைய நாள் இரவு 8 மணிக்கு மறுநாள் விலை பற்றிய தகவல் அனுப்பப்படும். இந்த நிறுவனத்துக்கு 10,000 நேரடி விற்பனை நிலையங்கள் உள்ளன.அங்கு மைய சர்வரில் மேற்கொள்ளும் மாற்றத்துக்கு ஏற்ப தானாகவே பங்க்குகளில் விலை மாற்றப்படும். மற்றபடி எஸ்எம்எஸ், இ-மெயில், மொபைல் ஆப், எண்ணெய் நிறுவன இணையதளங்கள் மூலம் தினசரி விலையை அறிந்து கொள்ளலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. சோதனை முயற்சியாக 5 நகரங்களில் தினசரி விலை நிர்ணயம் செய்தபோது பெரிய அளவில் விலை மாற்றம் இல்லை. ஆனால், 15 நாட்களுக்கு ஒருமுறை விலை மாற்றம் நடைபெற்றபோது அதிகளவில் பெட்ரோல், டீசல் இருப்பை பங்குகளில் வைத்திருந்த உரிமையாளர்கள் அன்றாட விலை நிர்ணயத்தால் கூடுதலாக இருப்பு வைக்க தயங்கினர். இதனால் டீலர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து 16 ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய மாட்டோம். எண்ணெய் நிறுவனங்களில் இருந்தும் பெட்ரோலிய பொருட்களை வாங்க மாட்டோம் என எண்ணெய் நிறுவன கூட்டமைப்பு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025