Sunday, June 4, 2017

வாரிசு, இறப்புச் சான்றிதழ் அவசியமென்ன?



வாரிசுச் சான்றிதழ்

ஒரு குடும்பத் தலைவர் இறந்து விடுகிறார். அவரது பெயரில் சொத்துகள், வங்கிப் பணம், முதலீடுகள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் அவர் யாருக்கும் சொத்துகளை எழுதிவைக்கவில்லை என்றால் மனைவி, பிள்ளைகள் போன்ற அவரது வாரிசுதாரர்கள் அந்தச் சொத்தில், பணம், முதலீடுகளில் உரிமைகோர குடும்ப அட்டை போன்ற ஆவணங்கள் போதுமானதல்ல. வாரிசுச் சான்றிதழ் அவசியம். வாரிசுச் சான்றிதழ் வாங்கியிருந்தால் அந்த நிலத்துக்கு உரிமை கோருவதை யாராலும் தடுக்க முடியாது. வாரிசுச் சான்றிதழ்பெறுவதற்காக விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசின் இணையத்தில் (http://cms.tn.gov.in/sites/default/files/forms/cert-legalheir_0.pdf) கிடைக்கிறது.

இந்தப் படிவத்தை நிரப்பி அத்துடன் இறப்புச் சான்றிதழ், வாரிசு உரிமை கோருபவர்களின் இறப்பிடச் சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும். வட்டாட்சியருக்குத்தான் வாரிசுச் சான்றிதழ் கொடுப்பதற்கான அதிகாரம் உள்ளது. ஆனால் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர்களின் விசாரணைக்குப் பிறகு இந்தச் சான்றிதழ் வழங்கப்படும்.இறப்புச் சான்றிதழ்

இந்தியப் பிறப்பு/இறப்புச் சட்டத்தின்படி (1969) இறப்புகளைப் பதிவுசெய்ய வேண்டியது கட்டாயம். ஒருவர் இறந்துவிட்டார் என்பதற்கான ஆதாரச் சான்றிதழ் ‘இறப்புச் சான்றிதழ்’தான். இறந்தவரின் பெயரில் உள்ள நிலம், வீடு, முதலீடு போன்றவற்றை உரிமை கோர இறப்புச் சான்றிதழ் அவசியம். இறப்பு நிகழ்ந்த ஊரின் உள்ளாட்சி அமைப்புகள்தான் இறப்புச் சான்றிதழ் தரக்கூடிய அதிகாரம் பெற்றது. உதாரணமாக நகராட்சி, மாநகராட்சிகளில் மாநகராட்சி ஆணையரிடமும், ஊராட்சிகளில் நிர்வாக அலுவலர், சுகாதார ஆய்வாளர் போன்ற அதிகாரிகளிடம் இறப்புச் சான்றிதழ் பெறலாம்.

மருத்துவமனையில் இறக்கும்போது, இறந்தவரின் பெயர், வயது உள்ளிட்ட தகவல்களை மருத்துவமனையில் தெரிவித்து, இறப்பு நிகழ்ந்ததற்கான காரணத்தைக் குறிப்பிடும் படிவம் IV-ஐ பெற்றுக்கொள்ள வேண்டும். வீட்டில் இறப்பு நிகழ்ந்தால், அதை அருகில் உள்ள பிறப்பு/இறப்பு பதிவாளரிடம் தெரிவித்து படிவம் IV-ஏ-வைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதுவே இறப்பை உறுதிப்படுத்தக்கூடிய சான்றிதழ். ஒருவர் இறந்த பிறகு முப்பது நாட்களுக்குள் இறப்பைப் பதிவுசெய்ய வேண்டும். இல்லையெனில் தக்க காரணத்தைத் தெரிவித்து ஒருவருடத்திற்குள் தாமதக் கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...