Monday, June 26, 2017

ஜெயில் வேண்டாம்... ஜி.எச். போறேன்...கோவை சிறையில் அடம் பிடிக்கும் கைதிகள்

2017-06-26@ 03:00:30



கோவை: கோவை மத்திய சிறையில் 2 ஆயிரம் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் உள்ளனர். கைதிகளில் சிலர், அடிக்கடி நெஞ்சு வலிப்பதாக கூறி மருத்துவமனைக்கு அழைத்து செல்லவேண்டும் என சிறை அதிகாரிகளிடம் முறையிட்டு வருகின்றனர். மாவோயிஸ்ட்கள் உடல்நிலை சரியில்லை என பலமுறை கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து, கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று செல்கின்றனர். நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய சயான் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை போலீசார் சிறைக்கு அழைத்து சென்றபோது, கை வலிக்கிறது, என்னால் சிறையில் இருக்கமுடியாது என புலம்பியுள்ளார். முக்கிய குற்றவாளி என்பதால் சிறை நிர்வாகிகள் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

2வது முறையாக, சிகிச்சை முடிந்து சிறைக்கு சென்றபோது, `வலி போகவில்லை. சிறையில் இருக்க மாட்டேன்’ என சயான் அடம்பிடித்தார். போலீசார் மீண்டும் சிறையில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்த்தனர். கோடநாடு வழக்கின் மற்றொரு கைதியான மனோஜ் சாமியாரும், சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவர்களைப்போல் மற்ற கைதிகளும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என அடம் பிடிக்கின்றனர். ‘‘எனக்கு ஏதாவது ஏற்பட்டால் நீங்கள்தான் பொறுப்பு, சிகிச்சைக்கு அழைத்து செல்லாவிட்டால் தற்கொலை செய்வேன்..’’ என பல கைதிகள் மிரட்டல் விடுக்கின்றனர். இதனால் சிறை அதிகாரிகள் தவிப்படைந்துள்ளனர். கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கு சிகிச்சை தர மருத்துவமனை உள்ளது. இதில் போதுமான மருத்துவ வசதி இல்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கோவை அரசு மருத்துவமனை வார்டில் சேர்ந்து ஜாலியாக பொழுது போக்க விரும்புவதாக தெரிகிறது. அவர்களுக்கு விடிய விடிய பாதுகாப்பு தர நிற்கவேண்டியுள்ளது என போலீசார் புலம்புகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025