Friday, June 22, 2018

தாய்ப்பால் ஊட்டும் அட்டை படம்ஆபாசம் இல்லை என கோர்ட் அதிரடி

Added : ஜூன் 21, 2018 20:15



புதுடில்லி: குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்ணின் புகைப்படத்தை, அட்டையில் பிரசுரித்த மலையாள பத்திரிகையின் மீது போடப்பட்ட வழக்கை, கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, 'மாத்ருபூமி' நாளிதழ் நிறுவனத்தில் இருந்து, 'கிருஹலஷ்மி' என்ற வார இதழ் வெளியாகிறது.இதன் சமீபத்திய இதழின் அட்டையில், ஒரு பெண், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை போன்ற புகைப்படம் பிரசுரிக்கப்பட்டது. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை விளக்கும் கட்டுரை, அந்த இதழில் வெளியானது.அந்த அட்டைப் படத்துக்கு, கிலு ஜோசப், 27, என்ற பெண், 'மாடலாக' நடித்திருந்தார்; இதற்கு, சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கேரளாவில், மிகப்பெரிய விவாதத்தை, இந்த அட்டைப் படம் ஏற்படுத்தியது. கிலு ஜோசப், ஒரு கும்பலால் தாக்கப்பட்டார்.இந்த அட்டைப் படம், பெண்களை தரக்குறைவாக சித்தரிப்பதாகவும், அதில் பாலியல் தன்மை அதிகம் இருப்பதாகவும், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.பெலிக்ஸ் என்பவர், அந்த அட்டைப் படத்தில், பால் குடிப்பதைப் போல நடிக்க வைக்கப்பட்டு இருக்கும் குழந்தை, பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக புகார் அளித்தார்.இதையடுத்து, பத்திரிகை மீதும், அதில் நடித்திருந்த கிலு ஜோசப் மீதும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தடுப்பு சட்டத்தில், வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு, கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, ஆண்டனி டோமினிக் மற்றும் நீதிபதி, தாமா சேஷாத்திரி நாயுடு ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது; அப்போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:மனித உடலை, இந்திய கலைஞர்கள், எப்போதுமே கொண்டாடுகின்றனர்; அதற்கு, ராஜா ரவிவர்மா ஓவியங்கள், அஜந்தா சிற்பங்கள் ஆகியவையே சான்று.ஆபாசம் என்பது, பார்ப்பவரின் கண்களைப் பொறுத்தது. ஒருவர் கண்களுக்கு அழகாக தெரிவது, மற்றொருவர் கண்களுக்கு ஆபாசமாக தெரியலாம். எனவே, அந்த அட்டைப் படத்தில் பிரசுரமான புகைப்படம், எந்தவிதத்திலும், பெண்களை இழிவுபடுத்துவதைப் போல இல்லை; எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 26.01.2026