Tuesday, June 6, 2017

'தி.நகரில் மக்கள் நடமாட்டமே இல்லை...!'' -புலம்பும் சிறு வியாபாரிகள்

நமது நிருபர்




தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில், 'தி சென்னை சில்க்ஸ்' ஜவுளிக்கடையில் கடந்த புதன் கிழமை (31-5-2017) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. அடுத்த சில நிமிடங்களில், கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதில், தீயின் கோர நாக்குகள் ஜவுளிக்கடையின் அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவ ஆரம்பித்தது. நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து தீயை அணைக்கப் போராடினர். கட்டுக்கடங்காமல் எரிந்துகொண்டிருந்த தீயினால் அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனால், தீயணைப்பு பணிகளில் பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும் தொடர்ந்து 36 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்தத் தீ விபத்தினால், பாதிக்கப்பட்ட ஜவுளிக்கடையின் கட்டடம் வலுவிழந்து போனது. இதையடுத்து கட்டடத்தை இடிக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2-ம் தேதியிலிருந்தே நவீன எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு கட்டடத்தை இடிக்கும் பணி ஆரம்பமானது. அருகிலுள்ள மற்ற கட்டடங்களுக்கு எந்தவித சேதமும் இல்லாமல், இடிக்க வேண்டியிருப்பதால், கட்டடம் இடிக்கும் பணிகளில் மிகுந்த கவனம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்டட இடிபாடுகள் பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதனால், வடக்கு உஸ்மான் சாலையின் பெரும் பகுதி காவல்துறையின் கண்காணிப்பில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஜவுளிக்கடையின் அருகில் அமைந்துள்ள நடை பாதை கடைகள் மற்றும் மேம்பாலத்தின் கீழாக அமைந்துள்ள சிறுவியாபாரக் கடைகள் ஆகியவை வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

ரம்ஜான் பண்டிகை நெருங்கிவரும் இச்சமயத்தில் வழக்கமாக, தி.நகரில் மக்கள் கூட்டம் கடல் அலையென ஆர்ப்பரிக்கும். ஆனால், நடந்துமுடிந்த பெரும் தீ விபத்தும், அதற்கடுத்த சில நாள்களில் அதே பகுதியிலுள்ள சொகுசு ஓட்டல் ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், சம்பவ இடங்களைச் சுற்றி பொதுமக்கள் நடமாட காவல்துறை தடை விதித்திருக்கும் காரணத்தாலும் தி.நகரில் மக்கள் போக்குவரத்து வெகுவாகக் குறைந்துள்ளது.

அன்றாட வயிற்றுப் பிழைப்புக்காக தெருவோரக் கடைகளை நடத்திவரும் சிறு வியாபாரிகளின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. போலீஸ் கெடுபிடி இல்லாத இடங்களில் மட்டும் கடை திறந்து வைத்திருக்கும் சிறு வியாபாரிகளும், மக்கள் கூட்டம் குறைந்திருக்கும் காரணத்தால், வியாபாரமின்றி கலக்கமடைந்துள்ளனர்.

40 வருடங்களாக கைக்குட்டை மற்றும் கைவினைப் பொருட்கள் விற்கும் செண்பகம் என்பவரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, ''வேலை நாட்களில்கூட தி.நகர் கூட்டமாகத்தான் இருக்கும். ஆனால், இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமைகூட அவ்வளவாக கூட்டம் இல்லை. 8 மணிக்கு எல்லாம் கடை திறந்தாச்சு. இன்னும் ஒண்ணுகூட விக்கல. இப்படியே இந்த நிலை தொடர்ந்தால் உணவுக்குக்கூட கஷ்டப்பட வேண்டியதுதான்'' என்றார் வேதனையுடன்.

ஐஸ்க்ரிம் வகைகள், ஜூஸ் வகைகள் மற்றும் பெண்களுக்குத் தேவையான கவரிங் நகைகளை விற்றுவரும் கடையின் உரிமையாளர் செல்வம் தற்போதைய நிலைபற்றிக் கூறும்போது, சாதாரண நாள்களில் 2,000 முதல் 3,000 ரூபாய் வரை வியாபாரம் நடந்தால், அதில் சுமார் 500 ரூபாய் லாபம் கிடைக்கும். ஆனால், இப்போது அந்த அளவு வியாபாரத்தையோ, அல்லது லாபத்தையோ எதிர்பார்ப்பது என்பது முட்டாள்தனம்'' என்று நொந்துகொண்டார்.

25 வருடங்களாக நடைபாதையில், துணிக்கடை வைத்து இருக்கும் அகமது,''வாங்கி வைத்திருக்கும் பொருள்களை எப்படி விற்பது? மொத்தக்கடையிலிருந்து வாங்கிய பொருளுக்கான பணத்தை எப்படி செலுத்துவது என்றும் தெரியவில்லை'' என்று தவிப்பதாகக் குறிப்பிட்டார். பெரும்பான்மையான சிறு வியாபாரிகள் அனைவரும், ''பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், குழந்தைகளுக்குப் பள்ளிக் கட்டணம், சீருடை எனச் செலவுகள் அதிகரித்துள்ள இந்தச் சமயத்தில், பெரும் சிரமத்துக்கு ஆளாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்'' என நொந்து கொண்டனர்.

தீ விபத்துக்குள்ளான கட்டடத்தை இடிக்கும் பணி இரண்டு, மூன்று நாள்களில் நிறைவு பெறும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது 'கட்டடம் இடிக்கும் பணி மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது' என்ற அறிவிப்பால், சிறு வியாபாரிகள் அனைவரும் பெரும் கலக்கமடைந்துள்ளனர். இயல்பு நிலை எப்போது திரும்பும் என்ற ஏக்கத்துடன் ஏங்கி நிற்கிறார்கள் தி.நகர் சிறு வியாபாரிகள்!

ம.நிவேதிதா

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...