Tuesday, September 12, 2017

மனிதநேயம் தேவை


By ம. அஹமது நவ்ரோஸ் பேகம்  |   Published on : 12th September 2017 03:33 AM  
மனிதாபிமானம் என்ற வார்த்தை மனிதர்களிடம் காட்ட வேண்டிய நேசத்தைக் குறிக்கிறது.
எந்த ஒரு மனிதனின் இதயத்தில் இயற்கையிலேயே ஈவு, இரக்கம், அன்பு ஆகியவை ஊற்றெடுக்குமோ அவரிடத்தில் மனிதநேயம் இருக்கும். அப்படிப்பட்டவரின் நேசம் மற்ற மனிதர்களிடத்து ஜாதி, மதம், இனம் என்ற பாகுபாடு பார்த்து வெளிப்படாது.
அப்படிப் பாகுபாடு பார்த்து அன்பு காட்டுபவர்கள் மனிதர்களும் அல்லர். அவர்களின் மனதில் தம் சமூகம் சாராத மக்களின் மீது துவேஷமும், வன்மமுமே நிறைந்திருக்கும்.
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பாடினார் வள்ளலார். ஓரறிவு உயிர்களிடம் இத்துணை அன்பு காட்டவேண்டுமென்றால், ஆறறிவு படைத்த மனிதர்களிடம் எத்துணை நேசம் காட்ட வேண்டும் என்பது நம் அறிவுக்கு எட்ட வேண்டும்.
மனிதநேயதிற்கென எல்லைகள் கிடையாது. பசித்தோருக்கு உணவளித்தல், ஆடை இல்லாதோருக்கு ஆடை அளித்தல் போன்ற செயல்கள் மனிதநேயத்தின் வெளிப்பாடு. சக மனிதரைப் பார்த்து நேசத்துடன் புன்னகைப்பது குறைந்தபட்ச மனிதநேயம்.
"யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்று உவகை கொண்ட கணியன் பூங்குன்றனாரின் மனிதநேயம் எல்லைகள் தாண்டியது. எந்நாட்டினர் என்றாலும் என் இனம் என்பது, சுருங்கி என் நாடு, என் மக்கள், என் மதம், என் மொழி, என் ஊர் என்று இன்னும் சுருங்கி நான், எனது குடும்பம் என்ற சிறிய வட்டத்திற்குள் ஒடுங்கி விட்ட மனிதநேயம், இன்னும் சில காலங்களுக்குள் நான், எனது தேவை, என் நலம் என்று ஒரேயொரு ஒரு புள்ளியில் நின்று விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
உள்நாட்டுப் போர்களினால் இலங்கை, சிரியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மனிதநேயம் சிதைந்து போனதென்றால், வளர்ந்த நாடுகளின் பேராசை, ஆதிக்கம் செலுத்தும் மனப்பாங்கு, போன்றவற்றால் பாலஸ்தீனம் உள்ளிட்ட நலிந்த நாடுகளில் குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமான மக்கள் பலிகடா ஆக்கப்பட்டார்கள்.
இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். காணாமல் போனார்கள். அகதிகளாக்கப்பட்டார்கள். பிரிட்டனில் இருந்து செயல்படும் மனிதஉரிமை அமைப்பு, உள்நாட்டுப் போரினால் சிரியாவில் மட்டும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவித்
துள்ளது.
இம்மக்கள் அந்நிய நாட்டு மண்ணில் அகதிகள் முகாமில் தங்கும் அவல நிலையையும், கடல் மார்க்கமாக அண்டை நாடுகளுக்குச் செல்லும் பொழுது நீரில் மூழ்கி இறந்து போனதையும் செய்தித்தாள்களில் படித்தோம்.
அலைகளின் தாக்குதல்களில் சிக்கிய மீன் குஞ்சுபோல, கரையில் சடலமாக ஒதுங்கிக் கிடந்தவர்களின் புகைப்படம் நம் மனதை பதைபதைக்க வைத்தது. இப்பொழுது மியன்மரில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறையும் மனிதநேயத்திற்கு விடப்பட்ட சவால்தான்.
ஐ.எஸ். தீவிரவாதிகள் முன்பாக முகமூடியிடப்பட்ட, கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் பிணைக்கைதிகள் இருப்பது போன்ற ஒளிப்பதிவுகளில் மண்டியிட்டது கைதிகள் மட்டுமா? மனிதநேயமும்தான்.
அடிமைகளிடமும், கைதிகளிடமும் பரிவும், பாசமும் காட்ட வேண்டும் என்றும், அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்றும் சொல்லும் இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக செயல்படும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள்.
தனிமனித ஒழுக்கங்களே சமுதாய ஒழுக்கமாக மேம்படும்.
மனிதநேயம் என்னும் விதை முதலில் வீட்டில் குழந்தைகளின் மனதில் விதைக்கப்பட்டு தொடங்க வேண்டும். தான் காயப்படும்பொழுது தனக்கு வலிப்பது போல, மற்றவர்களைக் காயப்படுத்தும் பொழுது அவர்களுக்கும் வலிக்கும் என்பதை இளம் பருவத்திலேயே சொல்லிக் கொடுக்கும் பொழுது மனிதநேயம் அவர்களின் நெஞ்சங்களில் மலர ஆரம்பிக்கும்.
தான் விரும்பிய பொருள் அல்லது அன்பு கிடைக்கவில்லை என்றால் அந்தப் பொருளையோ, அன்பை மறுத்த மனிதரையோ வெறுக்கவோ, வெறி கொண்டு கொலை செய்யவோ மனம் துணியாது. சில பெற்றோர்களின் மனதில் மனிதநேயம் மரித்துப் போவதால் தாங்கள் பெற்றெடுத்த பிஞ்சுக் குழந்தைகளை கருணைக் கொலை செய்வதற்கு நீதிமன்றங்களை நாடுகிறார்கள்.
வீடுகள் மட்டுமின்றி, கல்விக் கூடங்களும் மாணவர்களுக்கு மனிதநேயத்தைக் கற்றுக் கொடுக்கத் தவறுவதால் இன்று பள்ளிகளிலேயே மனிதாபிமானமற்ற செயல்கள் அரங்கேறுகின்றன.
மனிதநேயமற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கலவரப் பகுதிகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும் ஊடகங்கள் திரும்பத், திரும்பக் காட்டுவதால் அதனைப் பார்க்கும் மக்களின் உணர்சிகள் தூண்டப்படும்.
குற்றம் செய்பவர்களின், பாதிக்கப்பட்டவர்களின் மதம்,சமூகம் ஆகியவற்றை குறிப்பிடுவது நிலைமையை இன்னும் மோசமாகவே ஆக்கும். துவேஷத்தைப் பரப்பும் வகையில் அரசியல்வாதிகளோ, சமூக விரோதிகளோ பேசும் பேச்சுகளால் வன்முறை பெரிதாகி, மதக் கலவரமாக வெடிக்கும்.
ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொண்டால் அசம்பாவிதங்களை ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வரலாம்.
ஒவ்வொருவரும் மனிதநேயம் தழைப்பதற்கு நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை சிந்தித்து செயலாற்ற வேண்டும்.

ஜாக்டோ-ஜியோ போராட்டம் எதிரொலி: மருத்துவ விடுப்பு எடுக்க அரசு ஊழியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு


By DIN  |   Published on : 12th September 2017 02:59 AM  |   
ஜாக்டோ -ஜியோ சங்கத்தைச் சேர்ந்தவர்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்புகளை எடுப்பதற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஒருபிரிவினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்கள் திங்கள்கிழமை முதல் பணிக்குச் செல்லாமல் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
திடீர் கட்டுப்பாடுகள்: ஜாக்டோ -ஜியோ போராட்டம் தொடங்கிய நாளில் இருந்தே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. சாதாரண விடுப்புகளை எடுக்கக்கூடாது என்று முதலில் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஜாக்டோ -ஜியோ அமைப்பின் ஒருபகுதியினர் திங்கள்கிழமை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பதில் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
போராட்டக் காலம் முடிவடையும் வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்புகள் எதுவும் கோரக் கூடாது. மேலும், மருத்துவ விடுப்புகளுக்கு உடனடியாக அனுமதி தரப்படமாட்டாது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மருத்துவ விடுப்பு தொடர்பான விண்ணப்பங்கள் மருத்துவக் குழுவுக்கு அனுப்பப்படும். குழு பரிசீலித்து விடுப்பு அளிக்கலாம் என ஒப்புதல் கொடுத்த பிறகே மருத்துவ விடுப்புக்கு அனுமதி தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
1.25 லட்சம் பேர்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் யார் யார் என்பது குறித்து தமிழக அரசால் கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. திங்கள்கிழமை பணி வருகை பதிவேட்டில் கையெழுத்திடாத அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை 1.25 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. மேலும், அவர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்: தடையில்லாச் சான்று வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


By DIN  |   Published on : 12th September 2017 02:58 AM  | 
maduraicourt
Ads by Kiosked
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க தடையில்லாச் சான்று வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு தொடங்கியுள்ள ஜவாஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் இந்தி கற்பிக்கப்படுகின்றன. தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்காததால் இப்பள்ளிகளை இங்கு தொடங்க முடியவில்லை. எனவே தமிழகத்தில் ஜவாஹர் நவோதயா பள்ளிகளைத் தொடங்க உத்தரவிட வேண்டும் என்று நாகர்கோவிலைச் சேர்ந்த ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, நவோதயா பள்ளிகளின் சமிதி சார்பில் ஆஜரான புதுச்சேரி நவோதயா பள்ளி முதல்வர் வெங்கடேஸ்வரன், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் முதன்மை பாடமாகவும், 11, 12 ஆம் வகுப்புகளில் கூடுதல் பாடமாகவும் தமிழ் கற்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதைப் பதிவு செய்த நீதிமன்றம், இந்த வாதத்தை நவோதயா பள்ளிகளின் மண்டல இயக்குநர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதே போல, நவோதயா பள்ளிகளை ஆரம்பிப்பது தொடர்பாக தமிழக அரசு தனது முடிவைத் தெரிவிக்க அவகாசம் வழங்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது புதுச்சேரி நவோதயா பள்ளி முதல்வர் தெரிவிக்கையில், ஜனவரி மாதத்தில் நவோதயா பள்ளிகளின் மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ள நிலையில் முதல் 3 ஆண்டுகளுக்கு 240 மாணவர்கள் பயில்வதற்கான வசதியுடன் கூடிய தாற்காலிக கட்டடத்தில் பள்ளி இயங்கலாம் என விதி உள்ளது. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளியைத் தொடங்க அனுமதியும், இடமும் வழங்கினால், மத்திய அரசு, பள்ளி கட்டமைப்பு வசதிக்காக ஒரு மாவட்டத்திற்கு ரூ.20 கோடிவழங்கும் என்றார்.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படும் என்று நவோதயா பள்ளிகளின் மண்டல இயக்குநர் உறுதி அளித்துள்ளார். இது தமிழக அரசின் இரு மொழிக் கொள்கையை மீறும் வகையில் அமையாது. எனவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான தடையில்லா சான்றை 8 வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், அதற்கான அடிப்படை தேவைகளை செய்வது குறித்தும் முடிவெடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்ற இடைவெளியே தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமையாததற்கு காரணம் என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

ஆதார் விவரங்களைச் சமர்ப்பிக்காவிட்டால் கல்வி உதவித் தொகைக்கான நிதி ரத்து: மத்திய அரசு எச்சரிக்கை


By DIN  |   Published on : 12th September 2017 05:03 AM  |   
AadharCard
Ads by Kiosked
ஆதார் விவரங்களைச் சமர்ப்பிக்காவிட்டால் எஸ்.சி., எஸ்.டி. பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கான மத்திய நிதி ரத்து செய்யப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறையின் தென் மாநிலங்களுக்கான ஆய்வுக் கூட்டம் மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலோட் தலைமையில் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், அந்தமான் நிகோபர் தீவுகள், லட்சத் தீவுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சமூக நலத் துறை அதிகாரிகளும், செயலர்களும் பங்கேற்றனர். தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதியும் பங்கேற்றார்.
இதில் மத்திய அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்படும் தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.), பழங்குடியின (எஸ்.டி.) பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கான நிதி, முதியோர் ஓய்வூதியத் திட்டம், போதை மறுவாழ்வு மையத் திட்டம் என்பன உள்ளிட்ட திட்டங்கள் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.
கூட்டத்தில் பேசிய மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறைச் செயலர் ஜி.லதா கிருஷ்ண ராவ், எஸ்.சி., எஸ்.டி. பள்ளி மாணவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டது தொடர்பான எந்தவொரு விவரங்களையும் தமிழகம், கேரளம், புதுச்சேரி போன்ற சில மாநிலங்கள் இன்னும் சமர்ப்பிக்கவில்லை.
இந்த விவரங்களை உடனடியாக, ஓரிரு வாரங்களில் இந்த மாநிலங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
அப்போதுதான் இந்தத் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்கும். அவ்வாறு குறிப்பிட்ட காலத்துக்குள் விவரங்களைச் சமர்ப்பிக்கவில்லை எனில், நிதி ரத்து செய்யப்படும்.

கோரக்பூர் குழந்தைகள் மரணம்: மயக்க மருந்தியல் மருத்துவர் நீதிமன்றத்தில் சரண்


By DIN  |   Published on : 12th September 2017 02:28 AM 
உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் அரசு மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த வழக்கில் தொடர்புடைய மயக்க மருந்தியல் துறை மருத்துவர் சதீஷ், நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தார்.
இதைத் தொடர்ந்து நீதிபதியின் உத்தரவின்பேரில் அவர் சிறையிலடைக்கப்பட்டார். இதனிடையே, மருத்துவர் சதீஷை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்குமாறு நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப் போவதாக உத்தரப் பிரதேச காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோரக்பூரில் செயல்படும் பாபா ராகவ்தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் அடுத்தடுத்து மரணமடைந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாநில பாஜக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைப்பதற்கான சூழலை இச்சம்பவம் உருவாக்கியது. மருத்துவமனையில் பிராண வாயு உருளைகள் போதிய அளவில் இருப்பு இல்லாததே குழந்தைகள் இறப்புக்குக் காரணம் எனவும் கூறப்பட்டது.
இதுகுறித்து விசாரிக்க மாநில தலைமைச் செயலர் ராஜீவ் குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. சம்பவத்தை விசாரித்த அக்குழு, பாபா ராகவ் மருத்துவமனை முன்னாள் தலைவர் மருத்துவர் ராஜீவ் மிஸ்ரா, மயக்க மருந்தியல் துறை முன்னாள் தலைவர் சதீஷ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்தது.
இதனிடையே, இந்த விவகாரத்தில் மருத்துவர்கள் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். மயக்க மருந்தியல் துறை மருத்துவர் சதீஷ் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், கோரக்பூரில் அமைந்துள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அவர் திங்கள்கிழமை நேரில் சரணடைந்தார்.
இதையடுத்து, மருத்துவர் சதீஷை நீதிமன்றக் காவலுக்கு அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதேவேளையில் இரு நாள்கள் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி நீதிமன்றத்தின் முறையிட உள்ளதாக உத்தரப் பிரதேச காவல் துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகள் வரும் டிசம்பருக்குள் கணினி மயமாக்கப்படும்: சு.ஜவஹர்


By DIN  |   Published on : 12th September 2017 02:44 AM  |   
meeting
காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிதி மற்றும் மனிதவள மேலாண்மை ஆய்வுக் கூட்டத்தில் பேசிய கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலாளர் தென்காசி ஜவஹர். (கீழ் வரிசையில்) கூட்டத்தில் கலந்துகொண்ட அரசுத் துறை
Ads by Kiosked
மாநிலம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் கணினிமயமாக்கப்படும் என கருவூலக் கணக்குத் துறை முதன்மைச் செயலாளரும், ஆணையருமான சு.ஜவஹர் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் கீழ் அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடுகளை கணினி மயமாக்குதல் திட்ட முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து சு.ஜவஹர் பேசியதாவது:
மாநில அரசு நிதி மேலாண்மை மற்றும் மாநில அரசு மனிதவள மேலாண்மையை இணைத்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது.
இதில், தற்பொழுது நடைமுறையில் உள்ள தன்னியக் கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பளப் பட்டியல், மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியவை சேர்க்கப்படவுள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.288.91 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, தனியார் நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, உள்கட்டமைப்பு வசதிகள், மென்பொருள் உருவாக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன்மூலம், மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 23, 648க்கு மேற்பட்ட பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் நேரடி இணையத்தின் மூலம் சம்பளப் பட்டியலை கருவூலத்தில் சமர்ப்பிக்க இயலும். இத்திட்டத்தில் அரசின் வருவாயினை இணையவழி மூலம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதால் அரசின் நடப்பு வரவினை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். மேலும், டிஜிட்டல், விரல் ரேகைப் பதிவுமுறைப்படி தகவல்கள் உறுதிப்படுத்து வதன் மூலம் மாநிலத்தின் நிதிநிலை விவரம் அரசுக்கு விரைந்து கிடைக்கும்.
இதனால், தேவையற்ற காலதாமதமும், முறைகேடுகளும் தவிர்க்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 9 லட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடுகள் கணினி மயமாக்கப்படுவ தோடு, சம்பளப் பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விபரங்கள் ஆகியவை அவ்வப்போது விரைந்து பதியப்படும்.
அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வரையில், அவர்களது விவரங்கள் பதியப்படுவதால், பல்வேறு அலுவலகங்களுக்கு இடையேயும் வெவ்வேறு ஊர்களுக்கு இடையில் பணிப் பதிவேடுகள் மாற்றப்படுவது தவிர்க்கப்படும். மேலும், பணிப்பதிவேடு காணாமல் போகாது, பணி மாறுதலை விரைந்து தெரிந்து கொள்ளலாம். ஓய்வூதியம் தாமதமின்றி வழங்கப்படும். பணியாளர் தொடர்பான அரசின் ஆய்வுக்கும் திட்டமிடலுக்கும் இக்கணினி ஆவணங்கள் உதவும்.
முதல்கட்டமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சென்னை, ஈரோடு, திருவண்ணா மலை மாவட்டங்களில் பணிப் பதிவேடு கணினிமயமாக்கல் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி,காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 31,219 அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு களும் விரைவில் கணினிமயமாக்கப்படும். எனவே, இதர மாவட்டங்களிலும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, வரும் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, கருவூலம், கணக்குத்துறை இணை இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    சி.எம்.சி., மருத்துவ கல்லூரியில் ஒரே ஒரு மாணவர் மட்டும் சேர்க்கை
    பதிவு செய்த நாள்11செப்
    2017
    22:12

    வேலுார்: மத்திய அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில், சி.எம்.சி., மருத்துவ கல்லுாரியில், ஒரே ஒரு மாணவர் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

    'நீட்' தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வேலுாரில் உள்ள, சி.எம்.சி., மருத்துவக் கல்லுாரி, இந்தாண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்தியது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில், சி.எம்.சி., நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதன் தீர்ப்பு, அக்டோபரில் வெளியாக உள்ளது.இதனால், 100 எம்.பி.பி.எஸ்., மற்றும், 60 எம்.டி., மருத்துவர் படிப்பு இடங்கள் காலியாக உள்ளன. 

    இந்நிலையில், மத்திய அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில், கேரள மாநிலம், திருவனந்த புரத்தை சேர்ந்த சித்தாந்த் நாயர், 18, என்ற ஒரே ஒரு மாணவர் மட்டும், இந்தாண்டு, எம்.பி.பி.எஸ்., படிக்க நேற்று சேர்க்கப்பட்டார். அவருக்கு நேற்று வகுப்பு துவங்கியது.

    கல்லுாரி அதிகாரிகள் கூறியதாவது: சி.எம்.சி., மருத்துவக் கல்லுாரி, மத்திய அரசுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களின் பிள்ளைகளுக்கு, ஆண்டுக்கு, ஒரு 'சீட்' வழங்கப்படும். தற்போது, சேர்க்கப்பட்டு உள்ள மாணவரின் தந்தை, ராணுவ வீரர்; 2,001ல், காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இறந்து விட்டார். இந்த மாணவரை, மத்திய அரசு தேர்வு செய்து அனுப்பியுள்ளது.இவ்வாறு அவர்கள்
    கூறினர்.
    கோவை சிறையில் தொடரும் உயிரிழப்பு! : 13 நாளில் 4 பேர் பலி; உணவில் ஊழல் என குற்றச்சாட்டு
    பதிவு செய்த நாள்11செப்
    2017
    21:55

    கோவை: கோவை மத்திய சிறையில், 13 நாட்களில், நான்கு கைதிகள் உயிரிழந்துள்ளனர்; சிறையில் கைதிகளுக்கு கொடுக்கும் உணவில் ஊழல் நடப்பதால், ஊட்டச்சத்து குறைந்து, உயிரிழப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    கோவை மத்திய சிறையில், விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என, 1,800க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கான பிரத்யேக சிறையில், 40க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கோவை மத்திய சிறையில், உடல்நலக் குறைவால் கைதிகள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது. 13 நாட்களில், நான்கு கைதிகள் உயிரிழந்துள்ளனர். இதற்கு, கோவை மத்திய சிறையில் நடக்கும் உணவு ஊழல் தான் முக்கிய காரணம் என, கூறப்படுகிறது.

    சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சிறையில் உள்ள கைதிகளுக்கு, சிந்தாமணி மூலம், உணவு பொருட்கள் ரேஷனில் வழங்கப்படுகின்றன. எப்.சி.ஐ., குடோனில் இருந்து அரிசி பெறப்படுகிறது. 1,800 கைதிகளுக்கு நாள்தோறும், 200 கிலோ பருப்பு வழங்க வேண்டும். ஆனால், 20 - 25 கிலோ தான் வழங்கப்படுகிறது. இதேபோன்று, வேர்கடலை வெறும், 20 சதவீதம் தான் வழங்குகின்றனர். எண்ணெய், காய்கறி, கோழிக்கறி என, அனைத்திலும் மிகவும் குறைந்த அளவு தான் வழங்குகின்றனர்.கைதிகளை பரிசோதிக்கும் சிறை மருத்துவமனை டாக்டர்கள், சத்து குறைபாடு உள்ளதாக கூறுகின்றனர். 

    உணவில் போதுமான சத்துகள் இல்லாததால், கைதிகளுக்கு வயிற்றுவலி, வாந்தி, பேதி, நெஞ்சு வலி, மஞ்சள் காமாலை, காய்ச்சல் போன்ற வியாதிகள்
    ஏற்படுகின்றன.சிறையின் உள்ளே, உணவு பொருட்களை சப்ளை செய்ய வருவோர், 'பில்' கொண்டு வருவதில்லை. இதனால், எத்தனை கிலோ பொருட்கள் உள்ளே செல்கின்றன என்பதும் தெரியாது. இந்த உணவு ஊழல் குறித்து, சிறைத் துறை உயரதிகாரிகள் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    'புகாரில் உண்மை இல்லை'

    கோவை சிறை, எஸ்.பி., செந்தில்குமாரிடம் கேட்ட போது, ''சிகிச்சையில் இருந்த கைதிகள் தான், உயிரிழந்துள்ளனர். சத்து குறைபாடு போன்ற காரணங்கள் இல்லை. கைதிகளின் உடல்நிலை குறித்து, முகாம் நடத்தி, சோதனை செய்யப்படுகிறது. உணவில் ஊழல் என்பதில் உண்மையில்லை. கைதிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கிறோம்,'' என்றார்.
    தரமில்லா பாதுஷா விற்பனை : ரூ.50 ஆயிரம் இழப்பீடு
    பதிவு செய்த நாள்11செப்
    2017
    19:50

    சென்னை: தரம் குறைந்த பாதுஷா விற்ற கடைக்காரர், பாதிக்கப்பட்டவருக்கு, வழக்கு செலவு தொகையுடன், 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை மாவட்ட, வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், சூளையைச் சேர்ந்த, வேணுகோபால் தாக்கல் செய்த மனு: சென்னை, சவுகார்பேட்டையில் உள்ள, இனிப்பு மிட்டாய் கடையில், 250 கிராம் பாதுஷா வாங்கினேன். வீட்டிற்கு சென்று, அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில், வாந்தி, மயக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இது குறித்து, நேரில் புகார் கூறியும், என் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியும், இனிப்பு கடைக்காரர் கண்டு கொள்ளாததால், மன உளைச்சலுக்கு ஆளானேன். எனவே, ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார். வழக்கு விசாரணையின் போது, இனிப்பு மிட்டாய் கடைக்காரர் சார்பில், யாரும் ஆஜராகவில்லை.

    இதையடுத்து, நீதிபதி ஜெயபாலன், நீதித்துறை உறுப்பினர், உயிரொலி கண்ணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: கிண்டியில் உள்ள, 'கிங்' ஆய்வு மையத்தில் சோதனை செய்ததில், 'பாதுஷா தரமற்றது' என, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. கடைக்காரரின் சேவையில் குறைபாடு உள்ளது. அதனால், மனுதாரருக்கு, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், வழக்கு செலவு தொகையாக, 5,000 ரூபாயும், அவர் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    அரசு டாக்டர் சங்க நிர்வாகிகள் தேர்வு

    பதிவு செய்த நாள்11செப்
    2017
    23:41

    மதுரை: அரசு டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தலில் மாநில தலைவராக மதுரை டாக்டர் கே.செந்தில் தேர்வு செய்யப்பட்டார்.தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலில் அரசு டாக்டர்கள் சங்க மாநில நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில், மாநில தலைவராக மதுரை டாக்டர் கே.செந்தில், செயலாளர் கோவை ரவிசங்கர், பொருளாளர் சிவகங்கை கே.ராமு, துணைத் தலைவர்களாக சீனிவாசன், அன்பழகன், இணை செயலாளர்களாக புலிகேசி, சுந்தர்ராஜன் ஆகியோர் தேர்வு
    செய்யப்பட்டனர்.
    வேலைநிறுத்தம் ஏன்? பஸ் ஊழியர்கள் விளக்கம்
    பதிவு செய்த நாள்11செப்
    2017
    22:41

    சென்னை: அரசு பஸ் ஊழியருக்கான, 6,650 கோடி ரூபாயை, அரசு வழங்காததால் தான், 24ம் தேதி முதல், வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக, போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: பஸ் ஊழியருக்கான, 13வது ஊதிய ஒப்பந்தம், ஓராண்டாகியும் நிறைவேற்றப்படவில்லை. ஊழியரிடம் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதி, 2,200 கோடி ரூபாய்; பங்களிப்பு ஓய்வூதியம், 1,700 கோடி ரூபாய்; பணிக்கொடை நிதி, 750 கோடி ரூபாய்; கூட்டுறவு நிறுவனங்களுக்காக பிடித்தம் செய்த, 300 கோடி ரூபாய்; விடுப்பு சம்பளம், 300 கோடி ரூபாய், என, 5,250 கோடி ரூபாய் வழங்க, அரசு முன்வரவில்லை. ஓய்வு பெற்றோருக்கான, 800 கோடி ரூபாய்; பேச்சுக்கு பின், நிர்வாகம் செலவழித்த தொகை, 600 கோடி ரூபாயை வழங்க, அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எனவே, வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
    தொழிலதிபர்கள், வி.ஐ.பி.களுக்காக துணை நடிகைகளை பணியில் அமர்த்திய சூதாட்ட கிளப் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது: 2 லட்சம் போதை பொருள் பறிமுதல்

    2017-09-11@ 00:33:45




    கீழ்ப்பாக்கம்: தொழிலதிபர்கள் மற்றும் வி.ஐ.பி.களுக்காக துணை நடிகைளை பணியில் அமர்த்தி சூதாட்ட கிளப் நடத்திய இரண்டு பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து போதை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் தெருவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் வார விடுமுறை நாட்களில் இரவு நேரங்களில் மது போதை, விருந்துடன் கேளிக்கை நிகழ்ச்சிகளும் சூதாட்டமும் நடைபெற்றது. இதனால் குடியிருப்புக்கு ஏராளமான விஐபிக்கள் சொகுசு கார்களில் வந்து சென்றனர். இதுபற்றி கீழ்ப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் ஹரிகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தும்படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் கிழக்கு மண்டல இணை கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் நேற்று முன் தினம் இரவு அக்குடியிருப்பில் உதவி கமிஷனர் ஹரிகுமார் அதிரடி சோதனைகளை மேற்கொண்டார்.

    அப்போது அக்குடியிருப்பில் வெளிப்பக்கம் பூட்டியிருந்த ஒரு வீட்டின் மீது உதவி கமிஷனருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவ்வீட்டின் கதவை அவர் தொடர்ந்து தட்டியதும் அங்கிருந்த அறையில் இருந்து வாலிபர் ஒருவர் வெளியே வந்தார். பிறகு பூட்டை திறந்த போலீசார் வீட்டிற்குள் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கே ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கஞ்சா, ஹான்ஸ், பான்பராக், உயர் ரக மதுபானங்கள் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் இருந்தன. மேலும் அங்கே சூதாட்டம் நடந்ததற்கு அடையாளமாக சீட்டுக் கட்டுகளும் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கீழ்ப்பாக்கம் காவல் நிலைய போலீசார் பிடிபட்ட யோகேஷ் ஜோஷி (22) என்ற வாலிபர் கொடுத்த தகவலின்படி சூதாட்ட கிளப் நடத்திய தண்டையார்பேட்டையை சேர்ந்த விக்ரமன் (38) என்பவரை கைது செய்தனர். அவர் போலீஸ் விசாரணையில், ‘‘நான் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்த சூதாட்ட கிளப்பை நடத்துகிறேன்.

    ஒவ்வொரு சனி, ஞாயிறு மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் இந்த கிளப் நடைபெறும். ஏராளமான தொழிலதிபர்கள் மற்றும் விஐபிகள் இங்குவந்து சீட்டு விளையாடுவார்கள். அவர்களுக்கு தேவையான மது, குட்கா உள்ளிட்ட அனைத்து போதைப் பொருட்களும் இங்கு ஏற்பாடு செய்யப்படும். சில சமயங்களில் இளம்பெண்களை வரவைத்து நடனம் ஆடி ரசிப்போம். சினிமா துணை நடிகைகள் வந்து ஆடியிருக்கிறார்கள். யோகேஷ் ஜோஷி என்னிடம் பல வருடங்களாக ஊழியராக வேலை பார்க்கிறான். நீங்கள் ரெய்டு நடத்திய தினத்தில் நான் வேறு வேலையாக வெளியே சென்றுவிட்டதால் அன்றைய தினம் கிளப் நடக்கவில்லை’’ என்று கூறியுள்ளார். இதையடுத்து இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நீட் தேர்வுக்கு எதிராக லண்டனில் பிரிட்டன் வாழ் தமிழர்கள் போராட்டம்
    2017-09-11@ 17:17:22




    லண்டன்: நீட் தேர்வுக்கு எதிரான தமிழர்களின் போராட்டம் கடல் கடந்து பிரிட்டன் வரை பரவி உள்ளது. பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் இந்திய தூதரம் முன்பு கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட பிரிட்டன் வாழ் தமிழர்கள் நீட் தேர்வு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்தப்படி நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.

    நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்பது அவர்களின் கருத்தாகும். கிராமப்புற மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கும் நீட் தேர்வை தமிழகத்தில் திணிக்கக்கூடாது என்று இந்திய அரசை பிரிட்டன் வாழ் தமிழர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு உச்ச நீதிமன்றம் 18ல் விசாரணை

    2017-09-12@ 00:21:29




    புதுடெல்லி: தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வரும் திங்கட்கிழமை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதம், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினருக்கு 20 சதவீதம், ஆதி திராவிட வகுப்பினருக்கு 18 சதவீதம், பழங்குடியினருக்கு 1 சதவீதம் என மொத்தம் 69 சதவீதம் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    இந்த இடஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டு உள்ளதால், அரசியல் சட்டப் பாதுகாப்பு பெற்றுள்ளது.
    இந்நிலையில், ‘தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வரும் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறை உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. அதனால், தமிழகத்தின் இந்த ஒதுக்கீட்டு முறையை உடனடியாக ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என கடந்த வாரம் நாகர்கோவிலை சேர்ந்த திருமால்மங்கள் என்ற மாணவி மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வீல்கர் மற்றும் சந்திராசூட் அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது. ஆனால், அது விசாரிக்கப்படவில்லை. எனவே, விசாரனையை 18ம் தேதி நடத்துவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
    சிபிஎஸ்இ ஆசிரியர்கள் 33 பேருக்கு விருது

    2017-09-12@ 00:23:44




    புதுடெல்லி: நாடு முழுவதும் திறமையாக செயல்பட்ட 33 சிபிஎஸ்இ ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்களின் கல்வித்திறன் மற்றும் முன்னேற்றம், ஆர்வம், அவர்கள் சார்ந்த துறையில் அவர்களுக்கு இருக்கும் நன்மதிப்பு மற்றும் அர்ப்பணிப்புவு, விடாமுயற்சி போன்றவற்றை அடிப்படையாக கொண்டு, இந்த விருதுக்கு ஆண்டுதோறும் சிபிஎஸ்இ ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

    டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில், மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் உபேந்திர குஷ்வாஹா கலந்துக் கொண்டு 33 ஆசிரியர்களுக்கு சான்றிதழ் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசை வழங்கினார். சிபிஎஸ்இ-யின் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அனிதா கார்வாலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ‘‘புதிய தலைமுறைகளை நல்ல முறையில் உருவாக்குவதன் மூலம் நாட்டை வடிவமைக்கும் ஆசிரியர்களின் பணி ஈடு இணையில்லாதது. ஆசிரியர்களே நாட்டின் உண்மையான பெருமையாக உள்ளனர். மாணவர்கள் மீதும் அதன் மூலம் நாட்டின் மீதும் இவர்கள் நீண்ட காலமாக தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்'’ என்றார்.
    போராட்டம் எதிரொலி அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்க தடை: தமிழக அரசு அவசர உத்தரவு
    2017-09-12@ 00:39:40




    நெல்லை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் எதிரொலியாக அவர்கள் விடுப்பு எடுக்க தடை விதித்து தமிழக அரசு நேற்று அவசர உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 7ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டார். அதை பொருட்படுத்தாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ேநற்று 5ம் நாளாக அரசு ஊழியர்களின் ேவலைநிறுத்தம் தொடர்ந்ததால் அத்யாவசிய பணிகள் அனைத்தும் ஸ்தம்பித்தன. இந்நிலையில் தமிழக பணியாளர் மற்றும் சீர்திருத்தத்துறை செயலாளர் ஸ்வர்ணா நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: வேலைநிறுத்தம் காரணமாக அரசு ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்கக் கூடாது. அவர்கள் பணிக்கு வராதது சட்ட விரோதமானது என ஏற்கனவே அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கீழ்க்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது.

    அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சாதாரண விடுப்பு, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட எந்த விடுப்புகளும் அனுமதிக்கக் கூடாது. மருத்துவ விடுப்பு தவிர எந்த விடுப்பும் எடுக்க அனுமதி கிடையாது. அரசு ஊழியர்கள் மருத்துவ விடுப்பு கோரினால் அவர்களது மருத்துவ சான்றின் உண்மைத் தன்மையை அறிய உரிய மருத்துவ குழு விசாரணைக்கு அனுப்ப வேண்டும். மருத்துவ சான்றின் உண்மையை அறிவதற்கு முன்பு மருத்துவ விடுப்பு வழங்கக் கூடாது. அரசு ஊழியர் மருத்துவ விடுப்பு கோரி அளித்த சான்று உண்மையிலேயே மருத்துவம் சார்ந்தது இல்லை என தெரிய வந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அனைத்து அரசுத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அவசரமாக அனுப்பப்பட்டுள்ளது.
    ஸ்ரீரங்கம், மயிலாடுதுறையில் குவியும் பக்தர்கள் இன்று முதல் காவிரி புஷ்கரம்
    2017-09-12@ 01:05:53




    திருச்சி: ஸ்ரீரங்கம், மயிலாடுதுறையில் காவிரி புஷ்கர விழா இன்று துவங்குகிறது. இதையொட்டி பக்தர்கள் குவிந்தனர். நம் நாட்டில் கங்கை, நர்மதா, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, பிரம்மபுத்திரா, துங்கபத்ரா, சிந்து, பரணீதா ஆகிய 12 நதிகள் புனிதத்துவம் கொண்டவையாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இந்த நதிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலத்தில் புஷ்கரம் என்னும் பெயரில் புனிதமடைவதாக ஐதீகம். குருபகவான் சஞ்சாரத்தின் அடிப்படையில் நதிகளுக்கு புஷ்கரம் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. புஷ்கர விழா நடைபெறும் நாட்களில் அந்த குறிப்பிட்ட நதியில் நீராடினால் அனைத்து புண்ணிய நதிகளிலும் பலமுறை நீராடிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பொதுவாக துலாம் ராசிக்கும் காவிரிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே துலாம் ராசியில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் காவிரியில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. இன்று குருபகவான் துலாம் ராசியில் பிரவேசிக்கிறார். எனவே காவிரி மகாபுஷ்கரம் விழா இன்று(12ம் தேதி) தொடங்கி 24ம் தேதி வரை நடக்கிறது.

    விழா நடைபெறும் 12 நாட்களும் ஜீயர்கள் மற்றும் மகான்களின் ஆசியுரைகளும், பல்சுவை நிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முக்கிய வைணவ மடாதிபதிகள், ஜீயர்கள் கலந்து கொள்கின்றனர். மகா புஷ்கரத்தில் காவிரி ஆற்றில் புனித நீராட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் ஸ்ரீரங்கத்திற்கு வருகை தர உள்ளனர். மயிலாடுதுறை துலாகட்டத்தில் நேற்று மாலை 6 மணிக்கு 12 ராசிகளுக்குரிய நதிகள் கடஸ்தாபனம் மற்றும் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இன்று காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. அதன் பின் 8.25 மணிக்கு ஆதீனகர்த்தர்கள், மடாதிபதிகள், துறவிகள் காவிரி புஷ்கர விழாவை தொடங்கி வைத்து புனிதநீராடுவர். தொடர்ந்து துறவியர் மாநாடு நடக்கிறது.
    திறந்தநிலை பல்கலை. பட்டம் வேலைக்கு தகுதியானது: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

    2017-09-12@ 01:09:17




    மதுரை: திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பெறும் பட்டங்களும் வேலை வாய்ப்புக்கு தகுதியானவை என்பதால், பதவி உயர்வும், பணப்பலன்களும் வழங்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. 

     மதுரையை சேர்ந்த ரத்தினவேல், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: சென்னை ஐகோர்ட்டில் உதவியாளராக கடந்த 2000ம் ஆண்டில் நியமிக்கப்பட்டேன். திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பிஏ முடித்தேன். ஐகோர்ட் கிளையில் பணியாற்றியபோது கடந்த 2009ல் உதவி பிரிவு அலுவலராக பதவி உயர்வு வழங்கி ெசன்னைக்கு
    மாற்றப்பட்டேன். ஆனால், எனக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதை எதிர்த்து வழக்கு நிலுவையில் இருந்தபோது, கடந்த 13.7.2016ல் உதவி பிரிவு அலுவலராக வழங்கப்பட்ட பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டது.நான் முறையாக படிக்காமல் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளதாகவும், பிளஸ் 2 முடித்து திறந்தவெளியில் பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது. பதவி உயர்வை ரத்து செய்த உத்தரவை ரத்து செய்து, எனக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நூட்டி.ராமமோகனராவ், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர், ‘‘திறந்தநிலை பல்கலை.யில் பெறப்படும் இளநிலை பட்டங்கள், சென்னை பல்கலை.யால் வழங்கப்படும் இளங்கலை பட்டங்களுக்கு இணையானது அல்ல என்பதை ஏற்க முடியாது. ஏனெனில் திறந்தநிலை பல்கலை.யில் பெறும் பட்டங்கள் வேலைவாய்ப்புக்கு தகுதியானதாக கருத வேண்டுமென யூஜிசி கூறுகிறது. மத்திய அரசும் இதுதொடர்பாக உத்தரவிட்டுள்ளது. இதில், மாநில அரசு மட்டும் எப்படி மாறுபட முடியும்? ஐகோர்ட் விதிகளின்படியும் திறந்தநிலையில் பெறும் இளநிலை பட்டங்கள் வேலை வாய்ப்புக்கும், பதவி உயர்வுக்கும் தகுதியானது. இதில், மனுதாரருக்கு விளக்கமளிக்கவும் வாய்ப்பு வழங்கவில்லை. திறந்தநிலையில் பெறும் இளங்கலை பட்டம் பதவி உயர்வு பெற தகுதியானது. பதவி உயர்வை ரத்து செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஏற்கனவே பதவி உயர்வு வழங்கிய நாளிலிருந்து உதவி பிரிவு அலுவலராக பதவி உயர்வும், அதற்குரிய பணப்பலன்களையும் வழங்க வேண்டும்,’’ என உத்தரவிட்டுள்ளனர்.
    மும்பை மெயில் இன்று காலை புறப்படும்

    2017-09-12@ 00:12:42

    சென்னை: மகாராஷ்டிராவில் கடந்த வாரம் சரக்கு ரயில் தடம் புரண்டதால் மும்பை ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவது தொடர்கிறது. அதனால் நேற்று மாலை 4.30 மணிக்கு வரவேண்டிய மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 12 மணி நேரம் தாமதமாக இன்று அதிகாலை சென்னை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம் காரணமாக நேற்றிரவு திங்கட்கிழமை 10.30 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்ல வேண்டிய மும்பை மெயில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு புறப்படும்.
    தாசில்தார்களும் ஸ்டிரைக்:தாலுகா அலுவலகத்திற்கு பூட்டு
    பதிவு செய்த நாள்11செப்
    2017
    23:45

    திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் அரசு ஊழியர்களின் பேராட்டத்தால் தாலு<கா அலுவலகத்திற்கு பூட்டுபோட்டுவிட்டு வெளியேறியதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்படைந்தனர்.நெல்லையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு பணிகள் ஸ்தம்பித்தன.

    தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சங்கங்கள் கடந்த 7ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஏற்கனவே நடந்த போராட்டங்களில் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று கலெக்டர் அலுவலகத்தில் தாலுகா அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை.அரசு பள்ளிகளில் பெரும்பான்மையான ஆசிரியர்கள் பணிக்கு வராததால் பள்ளிகளும் செசயல்படவில்லை.

    திருநெல்வேலி மாவட்டத்தில் 15 தாலுகா அலுவலகங்கள், 3 கோட்டாட்சியர் அலுவலகங்களிலும்தாசில்தார்கள் மற்றும் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர்.இதனால் வருவாய்த்துறையில் எந்த பணிகளும் நடக்கவில்லை. குறிப்பாக நேற்று திங்கள்கிழமை மனுநீதிநாளில்மக்களிடம் பெறப்படும் மனுக்களை வகைப்படுத்துதல் அதற்கு பதில் சொல்வதற்கும் ஊழியர்கள்,அதிகாரிகள் இன்றி சிரமப்பட்டனர். இன்று 12ம் தேதி முதல் இதுவரை ஸ்டிரைக்கில் பங்கேற்காதஅரசு அலுவலர் ஒன்றியமும் பங்கேற்க இருப்பதால் போராட்டம் இன்னமும் தீவிரமடையும்எனவும் இதனால் மக்கள் மேலும் பாதிப்படையயும் வாய்ப்புள்ளது.
    பணியில் சேர சென்றவருக்கு 'டிஸ்மிஸ்' ஆணை

    பதிவு செய்த நாள்11செப்
    2017
    22:49




    ஈரோடு: ஈரோட்டில், பணியில் சேர்வதற்காக சென்ற, அங்கன்வாடி உதவியாளருக்கு, பணி நீக்க ஆணை வழங்கப்பட்டதால், அதிர்ச்சி அடைந்தார்.ஈரோடு, சூரம்பட்டி வலசு, அணைக்கட்டு
    பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ்குமார்; துணி மடிக்கும் தொழிலாளி. இவர் மனைவி நாகரத்தினம், 26. சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியில் உள்ள, அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்துக்கு, விண்ணப்பித்தார். தகுதி அடிப்படையில், பணி வழங்கப்பட்டது. ௮ம் தேதி பணியில்
    சேர சென்றார். அப்போது, தகுதி அடிப்படையில், 24 நாட்கள் வயது குறைவாக உள்ளதாக கூறி, பணியில் சேர முடியாது என, பணி நீக்க ஆணை தரப்பட்டுள்ளது. இதனால், அவர் அதிர்ச்சி அடைந்தார். ஈரோடு, டி.ஆர்.ஓ., கவிதாவிடம், நேற்று மனு வழங்கினார். 

    அதிகாரிகளிடம் விசாரித்த போது, 'வயது குறைவாக உள்ளதால், பணியில் சேர்க்க முடியாது. உரிய வயது வந்ததும், அடுத்து ஆட்கள் எடுக்கும் போது, முன்னுரிமைப்படி பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என விளக்கம் அளித்தனர்.
    1.25 லட்சம் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்

    பதிவு செய்த நாள்11செப்
    2017
    22:28

    உயர் நீதிமன்ற தடையை மீறி, 60 ஆயிரம் ஆசிரியர், 65 ஆயிரம் அரசு ஊழியர்கள், நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் போராட்டம் நடத்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. தடையை மீறி, போராட்டம் தொடரும் என, ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள், செப்., 9ல் அறிவித்தனர். அதன்படி, நேற்று தமிழகம் முழுவதும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதனால் நேற்று, 60 ஆயிரம் ஆசிரியர்கள், 65 ஆயிரம் அரசு ஊழியர்கள் என, மொத்தம், 1.25 லட்சம் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மீது, அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி, நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதற்காக, அரசு ஊழியர்கள், தற்காலிக விடுப்பு எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ விடுப்பு கேட்போருக்கு, மருத்துவக் குழு ஆலோசனைக்கு பின், விடுப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    - நமது நிருபர் -
    மதுரை, நெல்லை மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை 250ஆக அதிகரிப்பு
    பதிவு செய்த நாள்11செப்
    2017
    23:39

    மதுரை: மதுரை, நெல்லை அரசு மருத்துவ கல்லுாரிகளில், மாணவர் எண்ணிக்கையை 250 ஆக உயர்த்த அரசு உத்தரவிட்டுள்ளது.இவ்விரு கல்லுாரிகளில் நடப்பு ஆண்டு, எம்.பி.பி.எஸ்., படிப்பில், தலா 150 மாணவர்கள் நீட் தேர்வு மதிப்பெண் முறையில் சேர்க்கப்பட்டனர். இவ்விரு
    கல்லுாரிகளும் பழமையானது என்பதால், இங்கு மாணவர் எண்ணிக்கையை 250 ஆக உயர்த்த இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. 

    கவுன்சில் விதிப்படி மருத்துவ கல்லுாரியில் 250 மாணவர்களுக்கான நவீன வசதியுடன் கூடிய வகுப்பறை, ஆடிட்டோரியம், மாணவ, மாணவிகளுக்கென தனித்தனி விடுதி, முதல்வர் அறை, கூட்ட அரங்கு, நுாலகம் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கென மத்திய அரசு தனது பங்களிப்பு நிதி ரூ.60 கோடியை இரு கல்லுாரிகளுக்கும் ஒதுக்கியுள்ளது. மாநில ஒதுக்கீடு எங்கே: 2018 ல் 250 மாணவர்கள் சேர்க்கைக்கு, நவம்பருக்குள் மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்ய வேண்டும். 2018 மே- மாதத்திற்குள் அதற்கான அங்கீகாரம் கிடைத்தாகவேண்டும். இதற்காக மாநில
    அரசு தமது பங்களிப்பு நிதியை இரு மருத்துவ கல்லுாரிகளுக்கும் ஒதுக்கி, கட்டுமான பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவ கல்லுாரி டாக்டர்கள் கருத்து
    தெரிவித்துள்ளனர்.

    மதுரை டீன் மருதுபாண்டியன் கூறியதாவது: இரு கல்லுாரிக்கும் மத்திய அரசு பங்களிப்பு தொகை ஒதுக்கிஉள்ளது. நவம்பருக்குள் இந்திய மருத்துவ கவுன்சில் குழுவினர் ஆய்வுக்கு வருவதாக கூறியுள்ளனர். அங்கீகாரத்திற்கு பின், 2018 முதல் 250 மாணவர்கள் சேர்க்கப்படுவர், என்றார்
    தற்கொலை செய்த பெண் உடல் இந்தோனேஷியா செல்கிறது
    பதிவு செய்த நாள்11செப்
    2017
    23:02


    நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில், கணவர் வீட்டில் இந்தோனேஷியா பெண் தற்கொலை செய்த வழக்கில், குடும்பத்தினர் புகார் செய்ய விரும்பாததால், உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. குலசேகரத்தைச் சேர்ந்தவர் சுபாஷ், 32. இந்தோனேஷியாவில் வேலை பார்த்த போது, அங்கு பெர்தாமியா வர்தானியா, 28, என்ற பெண்ணை
    காதலித்தார். குலசேகரத்தில் இந்து முறைப்படி திருமணம் முடித்து, இந்தோனேஷியாவுக்கு சென்றனர். அங்கு, கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சுபாஷ், எந்த தகவலும் சொல்லாமல், குலசேகரம் வந்து விட்டார். அவரை தேடி பெர்தாமியாவும் வந்தார். ஆனால், சமரசம் ஏற்படவில்லை. இதனால், விரக்தியடைந்த பெர்தாமியா, சுபாஷ் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். 

    அவரது உடலை, கணவன் வீட்டாரிடம் கொடுக்கவில்லை. 'பெண்ணின் உறவினர்கள் வந்த பின் முடிவு எடுக்கப்படும்' என, போலீசார் தெரிவித்திருந்தனர்.இந்தோனேஷியா துாதரகத்தில் இருந்து, இரண்டு அதிகாரிகள், குலசேகரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர்.
    பெர்தாமியா மரணம் தொடர்பாக, அவரது குடும்பத்தாரிடம் இருந்து எந்த புகாரும் இல்லை எனவும், அவரது உடலை இந்தோனேஷியாவுக்கு அனுப்ப வேண்டும் எனவும் கடிதம் கொடுத்தனர். 

    இதை தொடர்ந்து அவரது உடலை, விமானம் மூலம் அனுப்புவதற்கான பணி நடக்கிறது.
    மயிலாடுதுறையில் மகா புஷ்கரம் இன்று துவக்கம்! : காவிரி தாய்க்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வழிபாடு

    பதிவு செய்த நாள்
    செப் 11,2017 22:59



    மயிலாடுதுறை: மயிலாடுதுறையில், மகா புஷ்கரம் விழா இன்று துவங்குகிறது. காவிரி துலா கட்டத்தில் நேற்று, காவிரி தாய் சிலைக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, ஆரத்தி எடுத்து பெண்கள் வழிபட்டனர்.

    நாகை மாவட்டம், மயிலாடுதுறை காவிரியில், 144 ஆண்டுகளுக்குப் பின், மகா புஷ்கரம் விழா, இன்று கோலாகலமாக துவங்குகிறது. சங்கராச்சாரியார்கள், ஆதீன குருமகா சன்னிதானங்கள், துறவிகள், காவிரி ஆற்றில் புனித நீராட உள்ளனர். மாலை, வேதவியாசர், காவிரி தேவி படத்துடன், மயிலாடுதுறை துலா கட்டத்திலிருந்து ஊர்வலம் நடக்கிறது. இதில் சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகள் கலந்து கொள்கின்றனர். இன்று துவங்கி, 24ம் தேதி வரை நடக்கும் புஷ்கர விழாவின் அனைத்து நாட்களிலும், வேத பாராயணம், ருத்ர பாராயணம், திருமுறை முற்றோதல், லலிதா, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்து, காவிரிக்கு ஆரத்தி எடுக்கப்படுகிறது.

    பொறுப்பாளர் மாதாஜி ஞானேஸ்வரி தலைமையில், அமைக்கப்பட்டுள்ள குழுக்களில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, 24ம் தேதி வரை, தினமும் ஆரத்தி மற்றும் சகஸ்ரநாம பாராயணம் செய்ய உள்ளனர். ஆரத்தி குழுவினர், காவிரி துலா கட்டத்தின் தென் கரையில், புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள காவிரி தாய் சிலைக்கு, நேற்று காப்பு கட்டி, சகஸ்ரநாம அர்ச்சனை, ஆரத்தி எடுத்து, சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில், பொறுப்பாளர்கள் மாதாஜி ஞானேஸ்வரி, புவனேஸ்வரி, பிரவீனா, புஷ்கரம் விழாக்குழு செயலர் முத்துக்குமாரசாமி, துணைத் தலைவர் ஜெகவீரபாண்டியன், இணைச் செயலர் அப்பர் சுந்தரம், பா.ஜ., தேசியக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மகா புஷ்கர விழாவை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர், விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர். மயிலாடுதுறை நகரில், 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாகை மாவட்டத்திற்கு, இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, புறநகர் பகுதியில், மூன்று தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    21 இடங்களில் நடக்கிறது : குரு பகவான், 12 ஆண்டுகளுக்கு பின், கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். அவர், ஓராண்டு காலம், துலாம் ராசியில் சஞ்சரிப்பார். 

    இந்த ஓராண்டில், துலாம் ராசிக்குரிய புண்ணிய நதியான காவிரியில், பிரம்மாவின் கமண்டலத்தில் உள்ள புஷ்கர தீர்த்தம் காவிரியில் கலந்து, நீராடுபவர்களின் பாவங்களை தீர்க்கும் என்பது நம்பிக்கை. கர்நாடகாவில், கா விரி உற்பத்தியாகும் தலைக்காவிரி, பாகமண்டலா, குஷால்நகர், ஸ்ரீரங்கபட்டணம், டி.நரசிபுரா, சிவசமுத்திரா, தலக்காடு, பன்னுார், கனகபுரா, சங்கமம் ஆகிய இடங்களில், புஷ்கரம் நடக்கிறது. தமிழகத்தில், மேட்டூர், பவானி கூடுதுறை, ஈரோடு, கொடுமுடி, பள்ளிபாளையம், பரமத்தி வேலுார், திருச்சி, சுவாமிமலை, திருவையாறு, மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய இடங்களில் நடக்கிறது.
    சி.எம்.சி., மருத்துவ கல்லூரியில் ஒரே ஒரு மாணவர் மட்டும் சேர்க்கை
    பதிவு செய்த நாள்11செப்
    2017
    22:12

    வேலுார்: மத்திய அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில், சி.எம்.சி., மருத்துவ கல்லுாரியில், ஒரே ஒரு மாணவர் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

    'நீட்' தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வேலுாரில் உள்ள, சி.எம்.சி., மருத்துவக் கல்லுாரி, இந்தாண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்தியது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில், சி.எம்.சி., நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதன் தீர்ப்பு, அக்டோபரில் வெளியாக உள்ளது.

    இதனால், 100 எம்.பி.பி.எஸ்., மற்றும், 60 எம்.டி., மருத்துவர் படிப்பு இடங்கள் காலியாக உள்ளன. 

    இந்நிலையில், மத்திய அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில், கேரள மாநிலம், திருவனந்த புரத்தை சேர்ந்த சித்தாந்த் நாயர், 18, என்ற ஒரே ஒரு மாணவர் மட்டும், இந்தாண்டு, எம்.பி.பி.எஸ்., படிக்க நேற்று சேர்க்கப்பட்டார். அவருக்கு நேற்று வகுப்பு துவங்கியது.

    கல்லுாரி அதிகாரிகள் கூறியதாவது: சி.எம்.சி., மருத்துவக் கல்லுாரி, மத்திய அரசுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களின் பிள்ளைகளுக்கு, ஆண்டுக்கு, ஒரு 'சீட்' வழங்கப்படும். தற்போது, சேர்க்கப்பட்டு உள்ள மாணவரின் தந்தை, ராணுவ வீரர்; 2,001ல், காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இறந்து விட்டார். இந்த மாணவரை, மத்திய அரசு தேர்வு செய்து அனுப்பியுள்ளது.இவ்வாறு அவர்கள்
    கூறினர்.
    சேலம் - சென்னை விமானம் சேவை துவங்குவதில் தாமதம்

    பதிவு செய்த நாள்11செப்
    2017
    21:58

    சேலம்: சேலத்தில் இருந்து, சென்னைக்கு விமான சேவையை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு, தமிழக அரசியல் சூழலே காரணம் என, கூறப்படுகிறது.

    சேலம், கமலாபுரத்தில், 1993ல், விமான நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு, 6,000 அடி மட்டுமே ரன்வே உள்ளதால், சிறிய ரக விமானங்கள் மட்டுமே இயக்கக்கூடிய சூழல் உள்ளது. இரு முறை தனியார் நிறுவனங்கள் மூலம், சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை துவங்கப்பட்டும், வரவேற்பு இல்லாததால், ஒருசில மாதங்களில் நிறுத்தப்பட்டது.சிறு விமான நிலையங்களுக்கு உயிரூட்டும் வகையில், 'உதான்' திட்டம் கொண்டு வரப்பட்டது. சிறு நகரங்களுக்கு இடையே, விமான போக்குவரத்து சேவைகளில் ஏற்படும் நஷ்டத்தை, மத்திய அரசு, 80 சதவீதம், மாநில அரசு, 20 சதவீதம் ஏற்க வழி செய்யப்பட்டது.இதன்படி, ஏர் ஒடிசா நிறுவனத்துக்கு, சென்னையில் இருந்து நெய்வேலிக்கும், சேலத்தில் இருந்து புதுச்சேரி வழியாக, சென்னைக்கும் விமானம் இயக்க, அனுமதி அளிக்கப்பட்டது. 

    மாநில அரசுகளுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட பணிகள் முடிந்த பின், செப்., முதல் விமான சேவை துவங்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.செப்., துவங்கி, இரு வாரங்களான நிலையில், விமான சேவை குறித்து, எவ்வித அறிவிப்பும் வெளிவரவில்லை. அதே சமயம், 'உதான்' திட்டத்தில் அனுமதி பெறப்பட்ட சேவைகள், வேறு மாநிலங்களில், செப்., 15 முதல் துவங்குகின்றன.ஏர் ஒடிசா நிறுவன அலுவலர் ஒருவர் கூறியதாவது:'உதான்' திட்டத்தில், அனுமதி பெறப்பட்ட ஏர் ஒடிசா நிறுவனம், தமிழகத்தில் விமான சேவை துவக்க தயாராகவே உள்ளது. ஆயினும், மாநில அரசின் அனுமதி உள்ளிட்ட, ஒருசில காரணங்களால் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள, அரசியல் சூழலும் இதற்கு காரணமாக இருக்கலாம். அக்., மாதத்தில், விமான சேவை துவங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
    இவ்வாறு அவர் கூறினார்.
    சேலம் உதவி கமிஷனருக்கு ஜனாதிபதி விருது கிடைக்காததேன்?

    பதிவு செய்த நாள்11செப்
    2017
    19:51

    சேலம் : உதவி கமிஷனருக்கு அறிவிக்கப்பட்ட, மத்திய அரசின் ஜனாதிபதி விருது, வழக்கை காரணம் காட்டி ரத்தாக உள்ளது. வழக்கை மறைத்த, உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் என, தெரிகிறது. சேலம், மேற்கு சரக குற்றப்பிரிவு உதவி கமிஷனர் கண்ணன், 49. இவர், 2014ல், தீவட்டிப்பட்டி ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். அப்போது, அங்கு பணிபுரிந்த, எஸ்.ஐ., ராஜேஸ்வரி, ஓய்வு பெற்ற, டி.எஸ்.பி., கோபால் இடையே மோதல் ஏற்பட்டது. இதை, சரியாக விசாரிக்கவில்லை என, உயர் நீதிமன்ற பரிந்துரைப்படி, கண்ணன் மீது, 2015ல், வழக்கு பதிவானது. இந்நிலையில், டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்ற கண்ணன், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். போலீசில், சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான ஜனாதிபதி விருதை, கண்ணனுக்கு வழங்க, அப்போதைய கிருஷ்ணகிரி, எஸ்.பி., திருநாவுக்கரசு பரிந்துரைத்தார். கிருஷ்ணகிரி, சேலம் மாநகரம் மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகள், 'கண்ணன் மீது வழக்கு எதுவும் இல்லை' என, தெரிவித்து விட்டனர். கண்ணனுக்கு, 2016ம் ஆண்டுக்கான ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டது. அதை, ஆக., 15ல் பெற இருந்தார்.

    கண்ணன் மீது வழக்கு உள்ள நிலையில், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து, ஓய்வு பெற்ற, டி.எஸ்.பி., கோபால், முதல்வர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதிக்கு புகார் அனுப்பினார். இதனால், விருது வழங்குவது, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விருதை ரத்து செய்வது குறித்து, மத்திய உள்துறை பரிசீலிக்கிறது. வழக்கு விபரங்களை மறைத்த, அப்போதைய அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது.

    உதவி கமிஷனர் கண்ணன் கூறியதாவது: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு தொடரப்பட்டது. அது, குற்ற வழக்கு அல்ல. அதே நேரம், வழக்கை விசாரிக்க வேண்டிய கூடுதல், எஸ்.பி., பணியிடம் காலியாக இருந்தது. இதனால், விசாரணை முடிவில் தாமதம் ஏற்பட்டது. வழக்கை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. விருது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், விசாரணைக்கு பின் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


    இணையதள விளையாட்டுகள்: இலவச, 'லேப் - டாப்'களில் தடை?

    பதிவு செய்த நாள்11செப்
    2017
    19:39


    கணினி விளையாட்டுகளால், மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, அரசு, 'லேப் - டாப்'களில், விளையாட்டுகளுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள், பிளஸ் ௨ முடித்ததும், அவர்களுக்கு, இலவச லேப் - டாப் வழங்கப்படுகிறது. அனைத்து வகை, 'சாப்ட்வேர்'களையும் உள்ளீடு செய்து, இதை உடனடியாக பயன்படுத்த முடியும். இந்நிலையில், லேப் - டாப் வாங்கும் மாணவர்கள் பலர், 'வீடியோ கேம்' விளையாடுவதும், இணைய தளங்களில் பொழுதை போக்குவதும் தெரிய வந்துள்ளது. சமீபத்தில், 'ப்ளூ வேல்' இணையதள விளையாட்டால், சில மாணவர்கள் பலியாகினர். இதைத் தொடர்ந்து, பள்ளி, கல்லுாரிகளில், மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அப்போது, இலவச லேப் - டாப் பெறும் மாணவர்கள், இணையதள விளையாட்டில், நேரத்தை செலவிடுவது தெரிய வந்துள்ளது. எனவே, இந்த பாதிப்பிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் வகையில், அரசால் வழங்கப்படும் லேப் - டாப்களில், 'கேம் அப்ளிகேஷனை' நீக்கவும், அது போன்றவற்றை பதிவிறக்கம் செய்ய முடியாத அளவுக்கு, தொழில்நுட்ப தடை ஏற்படுத்தவும், கல்வித்துறை அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

    - நமது நிருபர் -
    நீங்க விரும்புற எல்லாமே இருக்கு: சிங்கப்பூர் சுற்றுலா துறை அழைப்பு

    பதிவு செய்த நாள்11செப்
    2017
    19:41



    சென்னை: 'நிச்சயம் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் நாடாக, சிங்கப்பூர் இருக்கும். இந்திய சுற்றுலா பயணியர் அதிகம் வர வேண்டும்' என, சிங்கப்பூர் சுற்றுலாத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

    சிங்கப்பூர் சுற்றுலாத் துறையும், பொருளாதார மேம்பாட்டு வாரியமும் இணைந்து, சுற்றுலா பயணியரை கவரும் வகையில், 'ஆர்வம் நிறைவேறும்' என்ற தலைப்பில், இந்தியாவின் முக்கிய நகரங்களில், பிரசாரம் செய்து வருகின்றன. இதற்கான குழுவினர், நேற்று சென்னை வந்தனர்.

    இது குறித்து, சிங்கப்பூர் சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர், ஸ்ரீதர் கூறியதாவது:

    சிங்கப்பூர், 50 ஆண்டுகளாக, உலக சுற்றுலா தலமாகவும், வர்த்தக மையமாகவும் அடையாளப் படுத்தப்பட்டு உள்ளது. உலகளவில் சுற்றுலா, முதலீட்டை ஈர்ப்பதில் போட்டி அதிகரித்துஉள்ளது. சுற்றுலா, வர்த்தகம் தொடர்பாக, இந்தியர்கள், சிங்கப்பூருக்கு வர ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்படி, 2016ல், 11 லட்சம் இந்தியர்கள், சிங்கப்பூருக்கு பயணித்து உள்ளனர். இது, 2015ஐ காட்டிலும், 8 சதவீதம் உயர்வு. இந்தாண்டு, ஜன., - ஜூன் வரை, 6.6 லட்சம் பேர் பயணித்து உள்ளனர். இது, 15 சதவீத வளர்ச்சியை காட்டுகிறது. இயற்கை அழகை ரசிப்போர், வித்தியாசமான பொருட்களை வாங்க விரும்புவோர், உணவு பிரியர்கள், கலை ஆர்வம் உள்ளோர், தொழில் துவங்குவோர் என, அனைத்து தரப்பினரையும், சிங்கப்பூர் நிச்சயம் திருப்திப்படுத்தும். இந்த பிரசாரத்தில், சிங்கப்பூரின் தனித்தன்மை குறித்து விவரிக்கிறோம். இதன் பயனாக, வரும் காலங்களில், இந்தியர்களின் வருகை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
    வங்கியில், 'டிபாசிட்' அதிகரிப்பு  வருமான வரி துறை கண்காணிப்பு

    வங்கியில், ஜூலைக்கு பின், 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல் நிரந்தர வைப்பு தொகை வைத்த வாடிக்கையாளர்களை, வருமான வரித் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.





    பண பரிமாற்ற அறிவிப்புக்கு பின், வரி வருவாயை பெருக்க, வங்கி மற்றும் வருமான வரித் துறை மூலம், மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.முதல் கட்டமாக, கறுப்பு பணத்தை வெளி கொண்டு வரும் நோக்கில், ஜூலைக்கு பின்,

    வங்கியில் நிரந்தர வைப்புத் தொகை வைத்துள்ள வாடிக்கையாளர்களில், 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல், இருப்பு வைத்துள்ளோரின் வருமான விபரம் கண்காணிக்கப்படுகிறது.
    வங்கிகளில், நிரந்தர வைப்பு தொகைக்கு, 6 முதல், 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி, ஆண்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய்க்குள் இருந்தால், வாடிக்கையாளர் வருமான வரி செலுத்த தேவையில்லை; அதற்கு மேல் இருந்தால், 'பான்' எண் உள்ளோர்,

    வரித் துறையினர் குறி

    10 சதவீதம்,இல்லாதோர், 20 சதவீத வரி செலுத்த வேண்டும்.வங்கி மண்டல அதிகாரி ஒருவர் கூறியதாவது:பண மதிப்பு நீக்க அறிவிப்புக்கு பின், வங்கியில் நிரந்தர வைப்பு தொகை அதிகரித்துள்ளது. இந்த வாடிக்கையாளர் மீது வருமான வரித் துறையினர் குறி வைத்துள்ளனர்.

    மேலும், வைப்பு தொகைக்கான வட்டிக்கும் வரி வசூலிக்கப்படுகிறது. வங்கி வாடிக்கையாளர் விபரம், ஆன்- - லைன் மூலம் வருமான வரித் துறைக்கு சென்றுவிடும். அதன்படி வருமான வரி வசூலிப்பர். இந்த நெருக்கடியால், வங்கிகளில் நிரந்தர வைப்பு தொகை குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.
    - நமது நிருபர் --
    ஆசிரியர்கள்–அரசு ஊழியர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு



    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை கோரி தொடரப்பட்டுள்ள வழக்கு மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    செப்டம்பர் 12, 2017, 04:00 AM
    மதுரை,

    மதுரையைச் சேர்ந்த வக்கீல் சேகரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–


    தமிழ்நாடு ஆசிரியர்–அரசு ஊழியர்கள் சங்கங்கள் (ஜாக்டோ, ஜியோ) தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 7.9.2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தை அனுமதித்தால் அரசுப்பள்ளிகளில் 10–ம் வகுப்பு, பிளஸ்–2 மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும். பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படும். எனவே அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இடைக்கால தடை

    இந்த மனுவை, நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் விசாரித்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் தங்களது போராட்டத்தை தொடரக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற 14–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    இந்தநிலையில், கோர்ட்டு உத்தரவை மீறி ஏராளமான அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து வருகின்றனர்.


    போராட்டம் தொடர்ந்து வருவது குறித்து நேற்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோரின் கவனத்துக்கு மனுதாரர் தரப்பினர் கொண்டு சென்றனர். போராடும் அரசு ஊழியர்கள் மீது அவமதிப்பு வழக்கை கோர்ட்டு தானாக முன்வந்து (சூமோட்டோ) பதிவு செய்யவும் கோரிக்கை வைத்தனர்.

    அவர்களின் கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். அரசு ஊழியர்கள் மீது அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு அனுமதி வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

    அவமதிப்பு வழக்கு

    இதனையடுத்து மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–
    அரசு ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தொடரக்கூடாது என்று கடந்த 7–ந்தேதி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனாலும் ஏராளமானவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது கோர்ட்டு உத்தரவை அவமதிப்பதாகும். இந்தநிலையில் போராட்டத்தை தொடர்ந்து வரும் 74,675 ஊழியர்களுக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    போராட்டத்தில் ஈடுபடக்கூடாது, தொடரக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டது தெரிந்து இருந்தும், அரசு ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

    னவே தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தலைவர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தலைவர், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தலைவர் மற்றும் சங்கங்களின் உறுப்பினர்கள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

    ரகசியம் காப்போம்!

    ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...