Thursday, February 1, 2018

தொழிற்கல்விக்கான உதவி ரூ.50 ஆயிரமாக உயர்வு

Added : பிப் 01, 2018 00:53

சென்னை: தொழிற்கல்வி கற்கும் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும், கல்வி உதவித்தொகை, 25 ஆயிரம்ரூபாயிலிருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசாணை : தொழிற்கல்வி கற்கும்ஏழை மாணவர்கள், தங்கள் படிப்பை தொடர, முதல்வர் பொது நிவாரணநிதியிலிருந்து, நிதியுதவிவழங்கும் திட்டம், 2003ல், துவக்கப்பட்டது.

இதன்படி, ஆண்டு தோறும், 100 மாணவர்களுக்கு, அவர்கள் படிக்கும் காலத்தில், ஒரு முறை மட்டும், 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. பின், இந்த எண்ணிக்கை, 200 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின், பெற்றோர் ஆண்டு வருமான உச்சவரம்பு, 2015 - 16ல், 50 ஆயிரம் ரூபாயில் இருந்து, 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.
தற்போது, மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி, 25 ஆயிரம் ரூபாயில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி உத்தரவின்படி, இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வு : முதல் பட்டதாரி சலுகை பெற்றிருந்தும், தொழிற்கல்வி படிக்க முடியாமல், மிகவும் வறிய நிலையில் உள்ளோரும், தொழிற்கல்வி உதவித்தொகை பெறலாம்.

இந்த உதவித்தொகை, மாவட்ட கலெக்டரால் பரிந்துரைக்கப்பட்டு, சிறப்பினமாக கருதப்படும் நிகழ்வுகளை ஆய்வு செய்து, முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, வழங்கப்படும்.
ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றினால் இடமாற்றம் : கிடப்பில் போன அரசு உத்தரவு

Added : பிப் 01, 2018 00:28

ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோரை, இடமாற்றம் செய்யும் அமைச்சரின் உத்தரவை, மின் வாரியம், ஆறு மாதங்களுக்கு கிடப்பில் போட்டுள்ளது, ஊழியர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மின் இணைப்பு, மின் தடை புகார் உள்ளிட்ட பணிகளுக்காக, மின் வாரிய பிரிவு அலுவலகங்களுக்கு வருவோரிடம், சில ஊழியர்கள், பொறியாளர்கள் லஞ்சம் கேட்பதாக, மின் வாரிய விஜிலென்ஸ் பிரிவுக்கு புகார்கள் சென்றன. விசாரணையில், வணிக ஆய்வாளர், வணிக உதவியாளர், 'போர்மேன்' ஆகிய பதவிகளில் உள்ளோர், அதிகம் லஞ்சம் வாங்குவது தெரிய வந்தது.

பரிந்துரை : இதையடுத்து, இந்த பணியிடங்களில், ஒரே இடத்தில், மூன்று ஆண்டு களுக்கு மேல் பணிபுரிவோரை, இடமாற்றம் செய்ய, விஜிலென்ஸ் பிரிவு, 2017 செப்.,ல் மின் வாரியத்திற்கு பரிந்துரைத்தது. பின், அனைத்து பதவிகளிலும், மூன்று ஆண்டுகளுக்கு மேல், ஒரே இடத்தில் இருப்போரை இடமாற்றம் செய்ய, வாரியம் முடிவு செய்தது. இந்த இடமாற்ற உத்தரவு, சில அரசியல்வாதிகள் வாயிலாக, கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'இடம் மாற்ற உத்தரவு, வரும், பிப்ரவரி முதல், நடைமுறைக்கு வரும்' என, மின்துறை அமைச்சர், தங்கமணி, 2017 அக்டோபரில் அறிவித்தார்.
இதன்படி, இன்று முதல், இடமாற்ற உத்தரவை, நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால், அதற்கான பணிகள் ஏதும் துவக்கப்படவில்லை. இடமாற்ற உத்தரவை, ஆறு மாதங்களுக்கு மேல் கிடப்பில் போட, மின் வாரியம் முடிவு செய்துள்ளதால், ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

முறைகேடான செயல் : இதுகுறித்து, மின் ஊழியர்கள் கூறியதாவது: மின் உற்பத்தி, மின் வழித்தடம், மின் வினியோகம், நிதி என, அனைத்து பிரிவுகளிலும், தற்போது, மின் வாரியம், முன்னேற்ற பாதையில் செல்கிறது. ஆனால், சில பொறியாளர்கள், ஊழியர்கள் லஞ்சம் உள்ளிட்ட முறைகேடான செயல்களால், ஒட்டு மொத்த நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. இதை தவிர்க்க வேண்டும் என்றால், தவறு செய்தால், தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பயம் வர வேண்டும். அதற்கு, ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோரை கட்டாயம் இடமாற்றம் செய்ய வேண்டும். அதை செயல்படுத்தாமல், இதற்கான உத்தரவை, சிலரின் சுயநலத்திற்காக கிடப்பில் போட்டால், நிர்வாகத்தின் மீது, மக்களுக்கு நம்பிக்கை வராது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -


 போராட்டத்தில், ஈடுபட்ட, பஸ் ஊழியர்கள், சம்பளம், 'கட்!'
சென்னை:ஊதிய உயர்வு கோரி, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு, பொது மக்களை பாதிப்படைய செய்ததால், பஸ் ஊழியர்கள் மீது, தமிழக அரசு, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. போராட்ட நாட் களுக்கான, சம்பளம், 'கட்' செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு, அதிகபட்சமாக, 7,000 ரூபாய் வரை, சம்பளத்தில், 'துண்டு' விழுந்துள்ளது; 'தொழிற்சங்கங்களை நம்பி மோசம் போய் விட்டோம்' என, ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.




அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின், 13வது ஊதிய ஒப்பந்தம், 2016, ஆகஸ்டில் முடிந்தது. போக்குவரத்து துறை அமைச்சர், தொழிற்சங்கத்தினருடன், 11 முறை பேச்சு நடத்தினார். ஜன., 4ல் நடத்தபேச்சில், 2.44 சதவீத ஊதிய உயர்வு தர, அரசு முன்வந்தது. இதை, 37 தொழிற்சங்கங்கள் ஏற்றன. தொ.மு.ச., - சி.ஐ.டி.யு., உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஏற்கவில்லை.

வேலை நிறுத்தம்

ஒப்பந்தத்தை ஏற்காத தொழிற்சங்க   நிர்வாகிகளின் அறிவுரையை ஏற்று, பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள், பஸ்களை ஆங்காங்கே நிறுத்தி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

'போராட்டம் தொடரும்' என, அடுத்தடுத்த நாட்களில், தொழிற்சங்கத்தி னர் அறிவித்தனர். நீதிமன்றம் தலையிட்டு, ஊழியர்களை பணிக்கு திரும்ப உத்தரவிட்டது. 'கோரிக்கை நிறை வேறும் வரை, பணிக்கு திரும்ப மாட்டோம்' என, தொழிற்சங்க கூட்டமைப்பு, விடாப்பிடியாக இருந்தது.

பொங்கல் பண்டிகை நெருங்கிய நிலையில், பஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால், வியாபாரிகள், பொதுமக்கள் என, அனைவரும் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், தொழிலாளர்கள் கோரிக்கைக்கு தீர்வு காண, ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை, மத்தியஸ் தராக நியமித்தது. ஜன., 12 முதல், தொழிலாளர் கள் பணிக்கு திரும்பினர்.

வாக்குறுதி

'போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது, நிர்வாகம் எவ்வித நடவடிக்கையையும் எடுக்காது' என, ஊழியர்களுக்கு, தொழிற் சங்கத்தினர் வாக்குறுதி அளித்தனர். நேற்று, தொழிலாளர்களுக்கு, புதிய ஊதிய உயர்வுடன் சம்பளம் வழங்கப்பட்டது. அதில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு, வேலைக்கு வராத நாட்களுக்கான சம்பளம்
பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இது, தொழிலா ளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.

இது குறித்து, தொழிலாளர்கள் கூறியதாவது:'ஊதியத்தை, 2.57 சதவீதம் உயர்த்த வேண்டும்; தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை, ரத்து செய்ய வேண்டும்; வேலைநிறுத்தத்தில் ஈடு பட்ட நாட்களை, விடுப்பு நாட்களாக கணக் கிட வேண்டும்; அவற்றை அடையும் வரை, வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற மாட்டோம்' என, தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.

ஆனால், நீதிமன்றம் மற்றும் நீதிபதி குறித்து அவதுாறாகப் பேசி, அனைத்தையும் கெடுத்து விட்டனர். சம்பளம் பிடித்தம் மட்டுமின்றி, அடுத்தடுத்து நடவடிக்கைகள் பாயும் என, அதிகாரிகள் மிரட்டுகின்றனர். தொழிற்சங்க நிர்வாகிகளின் பேச்சை நம்பியதால், எங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

'போராடியதால் பலன்'

இது குறித்து, போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூறியதாவது: தொழிற் சங்கத்தினர் நிர்வாகத்திலும், நீதி மன்றத்திலும் போராடியதால் தான், ஓய்வு பெற்றோருக்கான பலன்கள் கிடைத்துள்ளன. தொழிலாளர் களுக்கு, ஓரளவாவது ஊதிய உயர்வு கிடைத்து உள்ளது.தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக இன்று, சென்னையில், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடனும் கலந்து பேசி, முடிவெடுக் கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
எம்.எல்.ஏ.,க்களுக்கு பழைய சம்பளம்தான்! கவர்னர் ஒப்புதல் பெறுவதில் தாமதம்

Added : பிப் 01, 2018 02:52 




  சென்னை: சம்பளத்தை உயர்த்தும் சட்ட மசோதாவுக்கு, கவர்னர் ஒப்புதல் வழங்காததால், எம்.எல்.ஏ.,க்களுக்கு, ஜனவரி மாதத்திற்கு, பழைய சம்பளமே வழங்கப்படுகிறது.

'எம்.எல்.ஏ.,க்களுக்கான சம்பளம், 55 ஆயிரம் ரூபாயில் இருந்து, 1.05 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்; இது, 2017, ஜூலை முதல் வழங்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி, சட்டசபையில் அறிவித்தார்.இதற்கான சட்ட முன்வடிவு, சட்டசபையில், ஜன., 10ல், துணை முதல்வர், பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்; மசோதா நிறைவேற்றப்பட்டது.

மசோதாவிற்கு, கவர்னர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. இதனால், ஜனவரி மாதத்திற்கு, பழைய சம்பளமே வழங்கப்படுகிறது. கவர்னர் ஒப்புதல் பெற்ற பின், நிலுவைத் தொகையுடன், எம்.எல்.ஏ.,க்களுக்கு புதிய சம்பளம் வழங்கப்பட உள்ளது.
இன்ஜி., படிப்புக்கு, 'ஆன்லைன்' கவுன்சிலிங் உறுதி : பெட்டி, படுக்கையுடன் சென்னைக்கு வரவேண்டாம்

Added : பிப் 01, 2018 06:31



  'இன்ஜி., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இந்த ஆண்டு முதல் ஆன்லைனில் மட்டுமே நடத்தப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இனி, மாணவர்களும், பெற்றோரும், பெட்டி, படுக்கையுடன், சென்னைக்கு வர தேவையில்லை.

அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, 550 இன்ஜி., கல்லுாரிகளில், தமிழக அரசின் சார்பில், பொது கவுன்சிலிங் நடத்தி, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஒற்றை சாளர முறையில் நடக்கும் இந்த கவுன்சிலிங்கில், மாணவர்களின் மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

இதற்காக, சென்னையில் அண்ணா பல்கலை வளாகத்தில், கவுன்சிலிங் மையம் அமைக்கப்பட்டு, மாணவியர், அவர்களின் பெற்றோர் தங்குவதற்கு, இலவச விடுதி வசதி செய்யப்படும். மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வரும் ஒரு நபருக்கு, அரசு பஸ்சில் சென்னைக்கு வர, இலவச கட்டண சலுகை தரப்படும்.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, ஆன்லைனுக்கு மாற்றப்படுகிறது. இதை, உயர்கல்வி அமைச்சர், அன்பழகன், நேற்று உறுதி செய்தார். இதற்கான ஏற்பாடுகள், முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அவர் கூறினார்.

அண்ணா பல்கலையின் கணினி அறிவியல் துறை தலைவரும், ராமானுஜன் கணினி மைய இயக்குனருமான, பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ், கவுன்சிலிங் கமிட்டி உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில், கவுன்சிலிங் பணிகள் நடந்து வருகின்றன. ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ள மாணவர்களின் வசதிக்காக, 32 மாவட்டங்களிலும், கவுன்சிலிங் உதவி கணினி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த மையங்களில், கணினியுடன், உயர்தர இணையதள வசதி செய்யப்பட்டிருக்கும். மாணவர்கள் அங்கு சென்று, சேர்க்கையில் பங்கேற்கலாம். மேலும், வீட்டில் இணையதளத்துடன் கூடிய, கணினி வசதியுள்ள மாணவர்கள், வீட்டில் இருந்தவாறே கல்லுாரியையும், பாட பிரிவையும் தேர்வு செய்யலாம்.

கவுன்சிலிங் மையத்தில், தனியார் கல்லுாரி தரகர்கள் முகாமிட்டு, மாணவர்களை தங்கள் கல்லுாரிகளில் சேர வைக்கும் பிரச்னைகளுக்கு, இனி இடம் இருக்காது. கவுன்சிலிங்கிற்காக, அண்ணா பல்கலையில் மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகளுக்கான செலவுகளும் குறையும் என, உயர்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -
இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்: வருமான வரி வரம்பு உயர வாய்ப்பு

Added : பிப் 01, 2018 04:40



புதுடில்லி : மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இன்று, 2018 - 19ம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட்டை, பார்லிமென்டில் தாக்கல் செய்ய உள்ளார். இது, பா.ஜ., அரசின் கடைசி பட்ஜெட் என்பதால், ஊதியதாரர்கள், நிறுவனங்கள், நுகர்வோர் உட்பட, அனைத்து தரப்பிலும், பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எர்னஸ்ட் யங் நிறுவனம் நடத்திய ஆய்வில், 69 சதவீதம் பேர், வருமான வரி வரம்பு உயரும் என, நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். மத்திய பட்ஜெட்டில், வருமான வரி வரம்பு, தற்போதைய, 2.50 லட்சம் ரூபாயில் இருந்து, 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என, தெரிகிறது. 'இதனால், 75 லட்சம் பேர், வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெறுவர்' என, எஸ்.பி.ஐ., எகோரப் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

தற்போது, 3 - 5 லட்சம் ரூபாய் வரையிலான வருவாய்க்கு, 5 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது. இந்த வரம்பு, 6 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படலாம். இதையடுத்து, 6 - 12 லட்சம் ரூபாய் வரை, 20 சதவீதம்; 12 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட வருவாய்க்கு, 30 சதவீதம் என, வரி நிர்ணயிக்கப்படலாம். ''இதனால், 6 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட வருவாயினருக்கு, ஆண்டுக்கு, 15 ஆயிரம் ரூபாய் வரிச் சலுகை கிடைக்கும்,'' என கூறுகிறார், வரி ஆலோசகரான, ரவி குப்தா.

மத்திய தர வகுப்பினர், குறிப்பாக, மாத ஊதியம் பெறுவோருக்கு, வரி வரம்பு உயர்வு மூலம், ஓரளவு நிவாரணம் கிடைக்கும். மத்திய அரசு, 'பாரத்மாலா' திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் சாலை போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இதையொட்டி, பட்ஜெட்டில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என, தெரிகிறது.

கார்ப்பரேட் நிறுவன வரி, 30 சதவீதத்தில் இருந்து, படிப்படியாக, 25 சதவீதமாக குறைக்கப்படும் என, 2016 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில், 5 கோடி ரூபாய்க்கும் குறைவான விற்றுமுதல் உள்ள நிறுவனங்களுக்கு, 29 சதவீதமாக வரி குறைக்கப்பட்டது. இது, மேலும் குறைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பங்கு விற்பனையில், மூலதன ஆதாய வரி விலக்கு வரம்பு, ஓராண்டில் இருந்து, மூன்று ஆண்டுகளாக உயர்த்தப்படலாம். மத்திய அரசு, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மிகத் தீவிரமாக உள்ளது.குறிப்பாக, தொழிலாளர்கள் சார்ந்த துறைகளில், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், தேசிய வேலைவாய்ப்புகொள்கை, பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகளின் வருவாயை, 2022ல் இரு மடங்காக உயர்த்துவோம் என, ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையொட்டி, பட்ஜெட்டில், கிராமப்புற மேம்பாடு மற்றும் சமூக நல திட்டங்களுக்கு அதிக தொகை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.

மத்திய பட்ஜெட்டில், வேளாண் துறை, குறு,சிறு,நடுத்தர நிறுவனங்கள் துறை, அடிப்படை கட்டமைப்பு வசதி, அனைவருக்கும் வீடு ஆகிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என, தெரிகிறது.

-சவுமியா காந்தி கோஷ், பொருளாதார வல்லுனர்
எந்த வங்கியிலும் ஆதாரை பதிய வசதி

Added : பிப் 01, 2018 03:41 |



  வங்கிகளில் செயல்படும், ஆதார் மையங்களில், வேறு வங்கி வாடிக்கையாளர்கள், வங்கிக் கணக்கே இல்லாத பொதுமக்களும், ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களை செய்யலாம்.

ஆதார் எண்ணை, வங்கிக் கணக்கு, மொபைல் போன், பான் கார்டு போன்றவற்றுடன் இணைக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், ஆதார் பதிவு மையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. கூட்டத்தை சமாளிப்பதற்காக, வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களிலும், ஆதார் பதிவு மையங்களை துவக்க, மத்திய அரசு, நடவடிக்கை எடுத்துள்ளது.

குறிப்பாக, வங்கிக் கணக்குடன், ஆதார் இணைப்பது கட்டாயம் ஆகியுள்ளதால், தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள், தங்களின், 10 கிளைகளுக்கு, ஒரு கிளை வீதம், ஆதார் பதிவு மையங்களை அமைத்துள்ளன. ஆனால், வங்கி வாடிக்கையாளர்களுக்கு, எந்த கிளையில், ஆதார் மையம் செயல்படுகிறது என, தெரியாத நிலை உள்ளது. இதை, மக்கள் எளிதில் கண்டறியும் வசதியை, ஆதார் பதிவை மேற்கொள்ளும், யு.ஐ.டி.ஏ.ஐ., எனும், தனித்துவ அடையாள எண் மேம்பாட்டு ஆணையம் செய்துள்ளது.

இதன்படி, //appointments.uidai.gov.in/easearch.aspx என்ற வலைதள முகவரியை, 'டைப்' செய்தால், ஒரு திரை தோன்றும். அதில், எந்த மாநிலம், மாவட்டம், ஊர் போன்ற விபரங்களை குறிப்பிட்டதும், எந்த வங்கிக் கிளையில் ஆதார் மையம் செயல்படுகிறது, யாரை தொடர்பு கொள்வது என்பது உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும், பதிவு மையம் அமைந்துள்ள வங்கியில், கணக்கு வைத்திருக்காதவர்களும், வங்கிக் கணக்கே இல்லாதவர்களும் கூட, எந்த வங்கிக் கிளையிலும், ஆதார் விபரங்களை பதிவு செய்யலாம், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

NEWS TODAY 2.5.2024