காயிலாங்கடைக்குப் போகும் விலையில்லா பொருட்கள்...
‘இலவசங்கள் மக்களை மானமற்றவர்களாக மாற்றும் யுக்தி. இவை, மக்களைச் சோம்பேறிகளாக்கும்’ என்ற எச்சரிக்கைக் குரல்கள் ஒரு பக்கம். ‘வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்கள் அதிகம் உள்ள நாட்டில், மானியங்களும் இலவசங்களும் அவசியம்’ என்ற ஆதரவுக் கரங்கள் மறுபக்கம். இந்த விவாதங்களுக்கு இடையே, தேர்தல்களில் இலவசங்கள் முக்கியமான வாக்குறுதிகளாக இடம்பெற்று, அவை, தேர்தலின் போக்கை மாற்றியமைத்துள்ளன. இலவசப் பொருட்கள், பயனாளிகளுக்கு உண்மையில் பயனளித்ததா?
2011 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில் இலவச ஆடு-மாடு, ‘மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி’ என 3 பொருட்கள் அடங்கிய பேக்கேஜ், மாணவர்களுக்கு இலவச ‘லேப்-டாப்’ ஆகியவை அ.தி.மு.க சார்பில் இலவசப் பொருட்களாக அறிவிக்கப்பட்டன. இதில், ஆடு மாடுகள் கதை தனி. ஆனால், மின் சாதனங்களான மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறியின் நிலை என்ன?
வாங்குனா வாங்குங்க... இல்லைன்னா போங்க!
திருச்சி கிராப்பட்டி பகுதியில் மயில்வாகனன் தெருவில் வசிக்கும் பெண்களைச் சந்தித்தோம்.
“இந்தப் பகுதியில் மூன்று மாதங்களுக்கு முன்புதான் மிக்ஸி, கிரைண்டர் கொடுத்தாங்க. மின்விசிறியில் றெக்கையே இல்லை; கிரைண்டரில் கல் உடைஞ்சு போயிருந்துச்சு; மிக்ஸியில் பிளேடு இல்லை. அதை வேண்டாம்னு சொன்னோம். அதுக்கு, ‘இதுதான் கவர்மென்ட்ல இருந்து வந்தது. இதுக்கு மேல ஒண்ணும் பண்ண முடியாது. வாங்குனா வாங்குங்க... இல்லைனா போங்க’னு சொல்லிட்டாங்க. நல்ல பொருளாக வாங்குனவங்களுக்கும், ரெண்டு மூணு வாரங்கள்கூட தாக்குப்பிடிக்கல. எல்லாம் வீணாப்போச்சு. தேவையில்லாம வீட்டை அடைச்சுக்கிட்டு இருக்குனுனு பலபேர் அதைக் காயிலாங்கடையில 200 ரூபாய்க்குப் போட்டுட்டாங்க. இப்படி சரியில்லாத இலவச மிக்ஸி, கிரைண்டர் சேர்ந்துட்டதால, இப்போ அவங்களும் வாங்குறது இல்ல” என்று சொல்லிவிட்டு, வீட்டில் இருந்த தமிழக அரசின் விலையில்லா பொருட்களைக் கொண்டுவந்து வீதியில் போட்டார் சரோஜா.
“மாவுக்கல்லுல மாவாட்ட முடியாது!”
“இந்த கிரைண்டர்ல மூணு தடவை மாவாட்டுனேன். ஓடிக்கிட்டே இருந்த கிரைண்டர் திடீர்னு நின்னுபோச்சு. அதை எடுத்துக்கிட்டுப் போய் கடைக்காரங்கக்கிட்ட கொடுத்தேன். அதை சரி பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க. சரி விலைக்கு எடுத்துக்கங்கன்னு சொன்னா, 200 ரூபாய்க்குதான் போகும்னு சொல்லிட்டார். ‘இது மாவுக்கல். இதில் மாவாட்ட முடியாது’னு சொல்லிட்டாங்க.
வாங்குன மறுநாள் ஃபேனை போட்டேன். பட்டுனு சத்தம் வந்துச்சி. அப்படியே உடைஞ்சிபோய் தொங்குச்சி. பக்கத்து வீட்டுப் பொண்ணு மிக்ஸியில சட்னி அரைச்சுக்கிட்டு இருந்துச்சு. திடீர்னு பிளேடு உடைஞ்சி ஜார்ல இருந்து தண்ணி ஒழுகி புகையா வந்துச்சு. மிக்ஸி வெடிக்கப் போகுதுன்னு பயந்து, எல்லோரும் வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்தாங்க. நாங்க போய்தான் அணைச்சோம். தரமான பொருளாகத் தரக்கூடாதா? இப்படி ஓட்டை உடைசலாகக் கொடுத்துட்டு, ‘நாங்க கொடுத்த மிக்ஸி, கிரைண்டரை மக்கள் மகிழ்ச்சியோடு பயன்படுத்துறாங்க’னு டி.வி-யில சொல்கிறாங்க. இதைச் சொல்லி ஓட்டுக்கேட்டு வரட்டும்... இந்த வீணாப்போன பொருட்களை அவங்க தலையில தூக்கி வெக்கிறோம்” என்றார் கவிதா.
இளைஞர் ஒருவர், இணையத்தில் வந்த விளம்பரம் ஒன்றை நம்மிடம் காண்பித்தார். அதில், “இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை ஆன்லைனில் விற்கலாம். மூன்று பொருட்கள் மூன்றாயிரம் ரூபாய்” என்று போடப்பட்டு இருந்தது.
திருச்சியில் பல இடங்களில் மூன்று பொருட்கள் 2,500 ரூபாய் என்று விற்பனை நடக்குது. புதுகார்டுக்கு, விடுபட்டவங்களுக்கு என்று சொல்லி இலவசப் பொருட்களை எடுத்துக்கொண்டு போய், ஆளும் கட்சிக்காரர்கள் ஆன்லைனில் பணம் பார்ப்பதாகவும் மக்கள் சொல்கிறார்கள்.
அலாவுதீன் விளக்குப் புகை போல...
மதுரை டி.ஆர்.ஓ காலனியில் வசிக்கும் பாண்டி என்பவர், அவருடைய வீட்டுக்கு நம்மை அழைத்துச் சென்றார். விலையில்லா மிக்ஸியை ஆன் செய்தார். மிக்ஸியில் இருந்து வினோதமான சத்தத்துடன் புகை கிளம்பியது. அலாவுதீன் விளக்கிலிருந்து வரும் புகைபோல வீடெங்கும் பரவியது. பயந்துபோய் நாம் ஆஃப் பண்ணச் சொன்னோம்.
‘‘போன மாசம்தான் கொடுத்தாங்க. இதைத் தொடவே பயமாக இருக்கு. எங்க ஏரியா கட்சிக்காரங்கக்கிட்ட சொன்னேன். அடுத்து வர்றப்போ மாத்திக்கலாம்னு சொன்னாங்க. ஃபேனை போட்ட உடனே மூடி தனியாக, றெக்கை தனியாகப் பறக்க ஆரம்பிச்சிடுச்சு. கிரைண்டரில் கல்லு தனியா கழன்று வருது. எல்லாமே அட்டையில செஞ்ச மாதிரி இருக்கு. இதுக்கான சர்வீஸ் சென்டருக்கு எடுத்துட்டுப் போனேன். ‘எங்களுக்கு நிறைய வேலை இருக்கு. அடுத்த மாசம் வாங்க’னு சொல்லிட்டாங்க” என்று நொந்துபோய் பேசினார் பாண்டி.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி அருகே உள்ள சென்நெல் புதுக்குளம் மற்றும் அம்பேத்கார் காலனி பகுதியில் தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர் வழங்கப்பட்டது. தென்காசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. பொருட்களை வாங்கியவர்கள் வீட்டுக்குப் போய் அட்டைப் பெட்டியைத் திறந்து பார்த்த போது அதிர்ந்துபோய்விட்டனர்.
மிக்ஸிகளில் பிளேடு உள்ளிட்ட உதிரி பாகங்கள் கழன்றும், கிரைண்டரில் அரவைக் கல், மின் விசிறியில் இறக்கைகளும் உடைந்து காணப்பட்டன. மேலும் சிலர் மிக்ஸி, கிரைண்டரை இயக்கி பார்த்தபோது அவை செயல்படாமல் நின்றுவிட்டன. உடனடியாக அதிகாரிகள் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள், ஓட்டை உடைசல் பொருட்களுக்குப் பதிலாக வேறு பொருட்களை வழங்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் சமரசம் பேசிய அதிகாரிகள், பழுதான பொருட்களுக்கு மாற்றுப் பொருட்கள் கொடுக்க ஒரு மாதம் ஆகும் என்று சொல்லிவிட்டனர்.
“கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை!”
கொளத்தூர் விநாயகபுரம் மாதாகனி, “கடந்த மாதம் எங்கள் பகுதியில் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றைக் கொடுத்தார்கள். பொருட்களை வழங்குவதற்கு முன்பு டோக்கன் கொடுத்தனர். கால்கடுக்கக் காத்திருந்து டோக்கன் வாங்கினேன். இலவசப் பொருட்களை வழங்குவதற்கு ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர். காலையில் க்யூவில் நின்றவர்களுக்கு மாலையில்தான் பொருட்கள் வழங்கப்பட்டன. மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறியை சந்தோஷத்துடன் வீட்டுக்குக்கொண்டு வந்தேன். முதலில் மின்விசிறியை ஆன் செய்தேன். ஒருவித சப்தத்துடன் அது ஓடியது. அடுத்து கிரைண்டரை சோதனை செய்தபோது அது இயங்கவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. பொருட்கள் வாங்கிய 5-வது நாளில் திடீரென இரவு டமார் என்ற சப்தம் கேட்டது.
தூங்கிக்கொண்டு இருந்த நான் விழித்துப்பார்த்தபோது மின்விசிறியிலிருந்து புகை வந்தது. பயத்தில் இலவசப் பொருட்களை அப்படியே ஓரம் கட்டிவிட்டேன். அரசு கொடுத்த இலவசப் பொருட்களைப் பொறுத்தவரை எங்கள் குடும்பத்துக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதையாகிவிட்டது” என்றார்.
வடசென்னை எம்.கே.பி. நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சங்கர் கூறுகையில், “கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 37-வது வார்டில் இலவச கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி ஆகியவற்றை கொடுத்தார்கள். 10 நாட்களாகக் கொடுக்கப்பட்டன. எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்கள் காத்திருந்து பொருட்களை வாங்கினோம். வாங்கிப் பார்த்தால் பலரது கிரைண்டரில் அரைக்கும் இரண்டு கற்களுக்குப் பதில் ஒரு கல் மட்டுமே இருந்தது. அதை எப்படி பயன்படுத்த முடியும்? இன்னும் சிலருக்கு மிக்ஸியும் மின்விசிறியும் ஓடவே இல்லை.
இப்படி எங்கள் பகுதியில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த பிரச்னை உள்ளது. இதுகுறித்து நாங்கள் அதிகாரிகளிடம் முறையிட்டவுடன் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்லும்படி சொன்னார்கள். உடனே அருகில் உள்ள அரசு சர்வீஸ் சென்டருக்குப் பயன்படாத அந்தப் பொருட்களைக்கொண்டு சென்றோம். எங்களின் விவரத்தை வாங்கிக்கொண்டு பொருட்களை சர்வீஸ் செய்து தருவதாக அவர்கள் சொன்னார்கள். ஆனால் ,இதுவரை எங்கள் கைக்கு பொருட்கள் வந்து சேரவில்லை. பழுதான பொருட்களை இலவசமாக கொடுப்பதால் யாருக்கு என்ன பயன்” என்றனர் ஆவேசத்துடன்.
சிண்டிகேட் கொள்ளை!
‘இலவச மிக்ஸி, கிரைண்டர்கள் தரமானவையாக இல்லை. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது’ என எதிர்க் கட்சிகள் ஒரு பக்கம் புகார் கிளப்பத் தொடங்கி உள்ளன. உண்மையில் இலவச கிரைண்டர், மிக்ஸி தயாரிப்பில் என்னதான் பிரச்னை. கோவை கிரைண்டர் உற்பத்தியாளர்களிடம் விசாரித்தோம்.
“தமிழகம் முழுவதும் 1.85 கோடி கிரைண்டர்கள் தயாரிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டது. ஒரு கிரைண்டர் விலை 2,142 ரூபாய். மிக்ஸி, கிரைண்டருக்குக் குறைந்த எண்ணிக்கையிலான உதிரிபாகங்கள் போதுங்கறதால, 2,142 ரூபாய்ல கொஞ்சம் லாபம் வெச்சா தரமான கிரைண்டரை தயாரிக்கலாம். ஆனா, இதுல அப்படி நடக்கறதில்லை. சிண்டிகேட் போட்டு பெருமளவு கொள்ளை நடக்குறதால இதில் தரமான பொருளைத் தயாரிக்கறது சாத்தியமில்லை.
ஒரு கும்பல் சிண்டிகேட் அமைத்து, அதில் கிரைண்டர் ஆர்டர் வாங்குன தயாரிப்பு நிறுவனங்களையும் சேர்த்து பெருமளவில் கொள்ளையடிக்கிறாங்க. ரூ.2,142க்கு கொடுக்கப்படுற கிரைண்டர்ல 1,000 ரூபாய் வரைக்கும் இந்த சிண்டிகேட் கும்பலுக்குப் போகுது. தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழக்கமா கிடைக்குற லாபம்தான்.
ஆனா, இந்த கும்பலுக்குப் பெரிய அளவு பணம் போகுது. இந்த 4 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்துல கிட்டத்தட்ட 1,500 கோடி ரூபாய் அப்படியே இந்தக் கும்பலுக்குப் போயிடுது. 1,200 ரூபாயில்தான் கிரைண்டர் தயாரிக்கப்படுது. அது எப்படி சரியா ஓடும்? அதனாலதான் இத்தனை பிரச்னையும்.
ஆனால், கிரைண்டர் தயாரிப்பாளர்களுக்கு இதுல பெரிய லாபமில்லை. கடந்த ஜூன் மாசத்துல இருந்து அரசுக்குத் தரப்பட்ட கிரைண்டர்களுக்கு இதுவரை பணம் வரவே இல்லை. கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் நிலுவையில இருக்கு. இது தவிர, தயார் நிலையில் இருக்குற 5 லட்சம் கிரைண்டரை எடுக்காம இருக்காங்க. இதுல நடக்குற மிகப் பெரிய சிண்டிகேட் கொள்ளையைத் தடுத்து நிறுத்தி இருந்தா, தரமான கிரைண்டர் கிடைச்சிருக்கும்” என்கிறார்கள் பெயர் வெளியிட விரும்பாத கிரைண்டர் தயாரிப்பாளர்கள் சிலர்.
அடுத்த இதழில்...