THE HINDU TAMIL
பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில், மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாட்டு விதிகளை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு பொதுத்தேர்வு நாளை (4-ம் தேதி) தொடங்கி, ஏப்ரல் 1-ம் தேதிவரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைமுறையில் சில மாற்றங்களை பின்பற்ற பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான கட்-ஆப் மதிப்பெண் களில் முதலிடம் பெற மாணவர் களிடையே ஒவ்வொரு ஆண்டும் கடுமையான போட்டி நிலவுகிறது.
இதன் காரணமாக, இயற்பியல், வேதியியல், உயிரியியல், கணிதம் ஆகிய பாடங்களில் முழு மதிப்பெண் (சென்டம்) வாங்குவதற்காக, மாணவர்கள் கடுமையாக முயற்சிக்கின்றனர். எனினும், எல்லோருக்கும் ‘சென்டம்’ கிடைப்பதில்லை. தேர்வு எழுதி முடிக்கும்போது, ‘சென்டம்’ எடுக்க வாய்ப்பில்லை என்று உணரும் மாணவர்கள், தாங்கள் எழுதிய விடைத்தாளின் ஒவ்வொரு பக்கத்திலும் கோடு போட்டு கொடுத்துவிட்டு, அந்த தேர்வை புறக்கணித்து விடுகின்றனர்.
பின்னர் உடனடி மறுதேர்வு எழுதி, ‘சென்டம்’ வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் மத்தியில் இதுபோன்ற பழக்கம் அதிகரித்து வருவதை உணர்ந்த கல்வித்துறை, நடப்பாண்டில் தேர்வு தொடர்பான விதிகள் குறித்த புத்தகத்தின் 42-ம் பக்கத்தில் வரிசை எண் 11-ல் புதிய விதியை அறிவித்துள்ளது. இதன்படி, தேர்வு அறையில் மாணவர்களுக்கான விதி முறைகளை அறிவிக்கும்போது, தேர்வு எழுதிய அனைத்து பக்கங் களிலும் கோடு போட்டு கொடுக்கும் மாணவர்களிடம், இது ஒழுங்கீன நடவடிக்கை, இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால், அடுத்த 2 பருவ தேர்வுகளை எழுத அனுமதிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல், விடைத்தாள் திருத்தத்தின்போதும் புதிய மாற்றம் கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்ணை நிர்ணயிப்பதில் உயிரியியல் பாடத்தில் எடுக்கப்படும் மதிப்பெண் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, உயிரியியல் பாடத்துக்கான விடைத்தாள் திருத்துவதிலும் புதிய மாற்றம் கொண்டு வரப்படுகிறது.
கடந்த ஆண்டு வரை, உயிரியியல் தேர்வு எழுதும் மாணவர்கள், உயிரி- தாவரவியல், உயிரி- விலங்கியல் எனத் தனியாக விடைத்தாள்களை எழுதுவர். அவை தனித்தனியாக திருத்தப்பட்டு, கூட்டு மதிப்பெண்கள் வெளியிடப்படும். இவ்வாறு தனித்தனியாக திருத்தப்படும்போது, அரை மதிப்பெண் வந்தால், ‘ரவுண்ட் ஆப்’ விதிப்படி முழு மதிப்பெண் கொடுக்கப்படும்.
உயிரி-தாவரவியல், உயிரி- விலங்கியல் என இரண்டு பிரிவிலும் தலா அரை மதிப்பெண் எடுக்கும்போது, ‘ரவுண்ட் ஆப்’ விதிப்படி இரண்டு அரை மதிப் பெண் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது. இதை தவிர்க்க, ஒவ் வொரு பிரிவுக்கும் ‘ரவுண்ட் ஆப்’ விதியை தவிர்த்து, இரண்டு பிரிவின் மதிப்பெண்களையும் சேர்த்த பின்னர் ‘ரவுண்ட் ஆப்’ விதியை பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment