சாதி மாறித் திருமணம் செய்து கொண்டதற்காகத் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட இளவரசனை மறந்துவிட்டோம்... படுகொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் பற்றிய விவாதங்கள் ஓய்ந்துவிட்டன.. இப்போது பரப்பபாகப் பேசப்படும் சங்கர் கொலையும் காலத்தினால் கட்டாயம் அழிந்துவிடும்.
ஆனால், இந்தச் சமூகத்தில் புரையோடிக்கிடக்கும் சாதியின் பிடியில் கருகிய திவ்யா, ஸ்வாதி, கவுசல்யாவின் எதிர்காலத்தைப் பற்றி நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? இன்று இவர்களது நிலைமை என்ன? வறட்டு சாதி கவுரவத்தினால் தலைக்கேறிய ஆணவத்துக்கு இரையானதைத் தவிர இவர்கள் அடைந்த பலன் என்ன?
இளவரசன் தற்கொலைக்குத் தூண்டுதலாக இருந்தவர்கள் இந்தச் சமூகத்தில் சுதந்திரமாக வலம்வருகின்றனர். கோகுல்ராஜ் கொலையில் சம்பந்தப்பட்ட யுவராஜ் போலீஸுக்கே சவால்விடும் அளவுக்குச் செய்த அலப்பறைகளை யாரும் மறந்திருக்க முடியாது. சங்கரைக் கொலை செய்தவர்கள் சலனமில்லாமல் சாவியை மாட்டி வண்டியைச் செலுத்தியபோது தெரிந்த சாதி வெறி இன்னும் சில நாட்களாவது மனசாட்சி உள்ளவர்களின் நினைவுகளில் நிற்கும்.
சாதிப் பெருமையை, குலப் பெருமையைக் காக்க வேண்டிய நிர்பந்தம் பெண்கள் மீது இச்சமூகத்தால் திணிக்கப்பட்டிருக்கிறது.
உயர்கல்வி, வேலை நிமித்தமாகச் சொந்த ஊரை விட்டு நகரங்களுக்குச் செல்லும் பெண் பிள்ளைகளுக்குக் குடும்பப் பெரியவர்கள் திருநீறு இட்டு ஆசீர்வதிக்கும்போது, ‘நம் குடும்ப கவுரவத்தை நீதான் அம்மா காப்பாற்ற வேண்டும்’ என்றே ஆசீர்வதிப்பார்கள். அதன் பின்னால் உள்ள அரசியல் சாதி மாறி திருமணம் என்பதைக் கனவிலும் நினைத்துவிடாதே என்பதே. அதையும் மீறி காதல் செய்ததாலேயே இன்று சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாகிறார்கள் சில பெண்கள்.
இன்று தனி மரமாக நிற்கும் கவுசல்யாவின் ஒற்றைக் கோரிக்கை, தன் படிப்பைத் தொடர வேண்டும் என்பதுதான். இளவரசன் தற்கொலைக்குப் பின் தனக்கு மனநல ஆலோசனை வழங்கிய மருத்துவர்களிடம் திவ்யா தெரிவித்ததும் படிப்பைத் தொடர வேண்டும் என்ற விருப்பத்தையே.
‘படிப்பைத் தொடர உதவுங்கள்’ என கவுசல்யா முன்வைத்த வேண்டுகோளுக்கு சமூக ஊடகங்களில் வெளியான கருத்துகள் அதிர்ச்சி தருகின்றன. படிக்கும்போது காதலில் விழுந்ததற்காகக் கிடைத்த தண்டனையை அனுபவியுங்கள், உங்கள் நிலை மற்றவர்களுக்கு ஒரு பாடம் போன்ற கருத்துகளே பகிரப்படுகின்றன. வீட்டில் தங்கள் காதலுக்கு எதிர்ப்பு இருக்கும் என்ற பயத்திலேயே அவசரமான திருமண பந்தத்துக்கு திவ்யாவும் கவுசல்யாவும் தள்ளப்பட்டனர். ஒருவேளை அவர்கள் காதலுக்கு அவர்கள் வீடுகளில் அங்கீகாரம் இருந்திருந்தால் படிப்பை முடித்துவிட்டுத் திருமணத்தைப் பற்றி யோசித்திருப்பார்கள். எந்தத் திருமணம் தங்களைப் பிரிக்காது என நினைத்தார்களோ அதே திருமணம்தான் அவர்களை ஓட ஓட விரட்டியிருக்கிறது.
இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் ஆகியோரைக் கொன்று தாகம் தீர்த்துக் கொண்ட சாதி வெறி திவ்யாவையும், கவுசல்யாவையும் அவர்கள் பாதையில் விட்டுவைக்குமா? சமூகத்தை நோக்கிக் கரம் நீட்டியிருக்கும் திவ்யா, கவுசல்யாக்களுக்கு நாம் செய்யப்போவது என்ன? இதற்கான பதிலில்தான் அவர்கள் வாழ்வும் எதிர்காலமும் அடங்கியிருக்கின்றன.
No comments:
Post a Comment