தமிழ்நாட்டில் நரிக்குறவர் சமுதாயத்தில் இருந்து வந்திருக்கும், முதல் பொறியியல் பட்டதாரி ஸ்வேதா. பட்டம் தனக்கு அளித்திருக்கும் பெருமையையும், கொடுத்திருக்கும் கடமையையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ள வேண்டிய பரபரப்பில் இருக்கிறார். அவர் கடந்து வந்த வழிகளைப் பற்றி அவரின் வார்த்தைகளோடு இணைந்து பயணிக்கலாமா?
"நான் படித்தது பெண்கள் பள்ளி என்பதால், பள்ளியில் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. அங்கே தோழிகள் எல்லோருமே என்னை தங்கம், செல்லம் என்றுதான் கூப்பிடுவார்கள். கல்லூரியில்தான் மிகவும் பயந்தேன். தனியாகச் செல்லக் கூட பயந்த காலங்கள் அவை. கல்லூரி முடியும்போது, என் இனப் பெயரைப் பகிரங்கமாகச் சொல்லிக் கூப்பிட்டிருக்கிறார்கள். இன்றைக்கு ஏதாவது சொல்லி விடுவார்களோ என்று நினைத்து ஒவ்வொரு நாளும் பயந்து கொண்டிருந்தேன். கல்லூரிப் பேருந்தில் வீட்டுக்கு வரும்போது ஒரு நிறுத்தம் முன்னாலேயே இறங்கி விடலாமா என்றெல்லாம் யோசித்திருக்கிறேன்.
எங்களின் சமுதாயத்தை முன்னேற்றப் பாடுபட வேண்டும் என்ற எண்ணம், என் அம்மா, அப்பாவிடம் இருந்துதான் வந்தது. நரிக்குறவ இனத்தை முன்னேற்றும் முயற்சியில் ஈடுபடுபவர், எதற்காக பொறியியல் படிக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். அப்போது படிப்பைத் தேர்ந்தெடுப்பது குறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருந்தது. என் பெற்றோருக்கு, அவரின் மகள் படித்து நல்ல நிலைமைக்கு வந்து, எங்கள் இனத்துக்கே வழிகாட்ட வேண்டும் என்று ஆசை. அதனால் அப்போது பிரபலமாக இருந்த பொறியியல் படிப்பில், கணிப்பொறியியலில் சேர்த்தனர். படிப்பை முடித்த பிறகு வேலையைவிட, எங்கள் இனத்துக்காகப் போராட வேண்டியது அவசியம் என்று உணர்ந்திருக்கிறேன்.
பெற்றோர்கள் கொஞ்சமாவது படித்திருந்ததால்தான், கல்வியின் முக்கியத்துவம் அவர்களுக்கு புரிந்தது. திருச்சியை அடுத்த தேவராயனேரியில் 26 வருடங்களாக அவர்கள், நரிக்குறவர் கல்வி மற்றும் நல சங்கத்தை நடத்தி வருகின்றனர். அரசு உதவியுடன், ஆரம்பப் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறோம். இதுவரை சுமார், 3000 மாணவர்கள் படிப்பை முடித்துச் சென்றிருக்கிறார்கள்.
சொந்தக்காரர்கள் என்ன சொல்கிறார்கள்?
பள்ளியை நடத்துவதற்கே அவர்களிடம் பெரிய எதிர்ப்பு இருந்தது. 'என் பிள்ளையை வைத்து சம்பாதிக்கப் பார்க்கிறாயா?' என்றெல்லாம் என் அம்மாவைப் பார்த்துச் சொன்னார்கள். 'பெண்களைப் படிக்க வைத்தால் கெட்டுப் போய்விடுவார்கள்' என்று பயந்தார்கள். ஆனால் நிலை இப்போது மாற ஆரம்பித்திருக்கிறது.
நரிக்குறவர்களின் நிலை
பெரும்பாலான நரிக்குறவர்களின் நிலை இப்போதும் அப்படியேதான் இருக்கிறது. குழந்தைத் திருமணங்கள் ஓரளவுக்குத் தடுக்கப்பட்டிருக்கின்றன. பிள்ளைகள் குறைந்தபட்ச ஆரம்பக் கல்வியையாவது முடிக்கிறார்கள்.
ஊசி, பாசி விற்றல் ஆகிய பாரம்பரியத் தொழில் குறித்து
எங்கள் இனத்தில் யாரும் மற்றவர்களை சார்ந்து வாழ மாட்டார்கள். எங்கள் இனம் மலைப்பகுதியில் வாழ்ந்ததால், அந்த முரட்டுத்தனம் இன்னும் முழுமையாகப் போகாமல் இருக்கிறது. இதனால் யாரையும் சாராத, சுய தொழில்களை ஊக்குவிக்கிறோம். அவை குறித்த கருத்தரங்குகளும், கண்காட்சிகளும் நடத்தப்படுகின்றன.
பொதுத் தேர்தல்
எங்களின் நிலையைப் புரிந்து உதவும் ஒரு கட்சிக்காகக் காத்திருக்கிறோம். மந்திரிகள், மக்கள் நலப் பணிகளுக்கும், தங்களுக்கும் சம்பந்தமே இல்லாதது போல நடந்துகொள்கிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடத்தில் இருக்கும் எங்கள் இனத்தை, பழங்குடியினர் இனத்தில் சேர்க்கக் கோரி தொடர்ந்து போராடி வருகிறோம்.
எதிர்காலத் திட்டம்
நரிக்குறவர்கள் இடையே கல்வியின்மை இல்லை என்ற நிலை வரவேண்டும். கல்வி கற்றால்தான் அடிப்படை சுகாதாரத்தையும், நாகரிகத்தையும் அவர்களால் கற்றுக் கொள்ள முடியும். அதுவரை நானும், என்னுடைய பெற்றோர்களும் அவர்களுக்காக உழைத்துக்கொண்டுதான் இருப்போம்!"
கம்பீரமாக விடை கொடுக்கிறார் நரிக்குறவப் பெண், இல்லை பட்டதாரிப்பெண் ஸ்வேதா!
No comments:
Post a Comment