Wednesday, March 23, 2016

வயதான காலத்தில் பாதுகாப்பு

வயதான காலத்தில் பாதுகாப்பு

DAILY THALAYANGAM

மின்சார வயர்கள் செல்லும் சில இடங்களில் ‘‘இந்த இடத்தை தொட்டால் ஷாக் அடிக்கும்’’ என்று அபாய எச்சரிக்கை விடுக்கும் போர்டுகளை பார்க்க முடியும். அதுபோல தொழிலாளர் வருங்கால வைப்புநிதியை தொட்டால், அரசாங்கத்துக்கு நிச்சயமாக ‘ஷாக்’ அடிக்கத்தான் செய்கிறது. தனியார் நிறுவனங்களில் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு மாத பென்ஷன் கிடையாது. அவர்களுடைய ஓய்வுகாலத்துக்கு சேமிப்பு என்றால், அது அந்த நிறுவனம் தரும் பணிக்கொடையும், மாதாமாதம் அவர்கள் சேமிப்பில் சேர்ந்துகொண்டிருக்கும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதியும் மட்டுமே ஆகும். தொழிலாளர் வருங்கால வைப்புநிதி என்பது, ஒவ்வொரு மாத சம்பளத்திலும் தொழிலாளர்களின் பங்காக அதிகபட்சமாக 12 சதவீத தொகை எடுத்துக்கொள்ளப்படும். அவர்களை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனமும் அதே 12 சதவீதத்தை தன்பங்காக தொழிலாளர்களுக்கு அளிக்கும் இந்த 24 சதவீத தொகையும் வருங்கால வைப்புநிதியத்தில் ‘டெபாசிட்’ செய்யப்பட்டு, அதற்கு தற்போது 8.8 சதவீத வட்டியும் கொடுக்கப்படுகிறது.

இதுவரையில் பதவியில் இருந்து ஓய்வுபெறும்போது இந்த தொகையை எடுத்தால் அதற்கு வட்டி கிடையாது என்று இருந்தது. இந்த ஆண்டு மத்திய அரசாங்க பட்ஜெட்டில் திடீரென்று இதில் கைவைக்கும் வகையில், பதவியிலிருந்து ஓய்வுபெறும்போது இந்த தொகையை எடுக்கும் நேரத்தில் 40 சதவீத தொகைக்கு மட்டுமே வரி கிடையாது, மீதமுள்ள 60 சதவீத தொகை வேறு ஏதாவது பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டால் மட்டுமே வரி கிடையாது. இல்லையென்றால், வரி கட்டவேண்டும் என்ற அறிவிப்பு வந்தவுடன் நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு அலைகள் வீசியது. இதனால் பிரதமரே தலையிட்டதன்பேரில், இந்த வரிவிதிப்பு ரத்து செய்யப்பட்டது. அப்பாடா! என்று ஒரு வழியாக தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டநேரத்தில், இப்போது திடீரென்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, தொழிலாளர் வருங்கால வைப்புநிதியை எடுப்பதற்கான ஓய்வுகால வயது 55–லிருந்து 58 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அதற்கு முன்பாக இந்த நிதியை எடுக்கும் தொழிலாளர்கள் முழுத்தொகையையும் எடுக்கமுடியாது. தாங்கள் கட்டிய தொகையை மட்டும் வட்டியோடு பெற்றுக்கொள்ளலாம். தொழில் நிறுவனங்கள் கட்டிய தொகை 58 வயதாகும் போதுதான் வட்டியோடு அவர்களுக்கு திரும்பத்தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கும் பலத்த எதிர்ப்புகள் வெளிவந்துள்ளன.

தொழிலாளர்களின் சேமிப்பை அவர்கள் விரும்பும் நேரத்தில் எடுத்துக்கொள்வதற்கு உரிமை உண்டு. சிலர் அவசரத்தேவைக்காக இந்த பணத்தை எடுக்க நினைப்பார்கள். சிலர் வேலையிலிருந்து நிற்கும் நேரத்தில் ஏதாவது முதலீடு செய்வதற்கோ, அல்லது சுயதொழில் தொடங்குவதற்கோ இதை பயன்படுத்த நினைப்பார்கள். அவர்களுடைய உரிமையை இந்த அறிவிப்பு பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், தொழிலாளர் வைப்புநிதிக்கான விதியில் 3 ஆண்டுகள் செயல்படாமல் இருந்தால், அதற்காக வட்டி வழங்கப்படமாட்டாது என்று இருக்கிறது. ஆக, 45 வயதில் ஒருவர் பணியிலிருந்து விலகி, தன் பங்குதொகையை மட்டும் பெற்றுக்கொண்டால், அடுத்த 13 ஆண்டுகள் தொழில் நிறுவனங்கள் கொடுத்த நிதி தூங்கிக்கொண்டிருக்குமே?, இதற்கு வட்டி உண்டா என்று அறிவிக்கப்படவில்லையே? என்று தொழிலாளர்கள் தரப்பு வினாக்களை எழுப்புகிறது. ஆனால், வயதான காலத்தில் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு அவர்கள் சேமிப்பின் ஒரு பகுதியாவது நிச்சயமாக கைகொடுக்கும் என்ற வகையில் இந்த புதிய அறிவிப்பை வரவேற்கும் தொழிலாளர்களும் இருக்கிறார்கள். வருங்கால வைப்புநிதி என்பது, வங்கிகளில் போடும் சேமிப்பு கணக்குபோல அல்ல, நினைத்த நேரத்தில் எடுத்துக்கொள்வதற்கு இது எதிர்கால வாழ்விற்கு உத்தரவாதம் அளிக்கும் தொகை ஆகும். இந்த தொகையையும் எடுத்து ஒருவேளை பணம் செலவழிந்துவிட்டால், வயதான காலத்தில் யார் கை கொடுப்பார்கள்?. எனவே, இந்த அறிவிப்பை ஓய்வுகால நலனுக்காக வரவேற்கத்தான் வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024