Monday, March 21, 2016

தோற்றவர் வென்றார்!

சொல் வேந்தர்
சுகி சிவம்

தோற்றவர் வென்றார்!

வெற்றி - தோல்விகளைப் பற்றி உலகம் வைத்திருக்கிற அபிப்ராயங்கள், அளவுகோல்கள் எப்போதும் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. உலகின் நடைமுறைகள், தோல்வியுற்றதாக அறிவித்தவர் வெற்றி பெற்ற வரலாறுகள் உண்டு. சில சமயம் சிலரது வெற்றிகளைப் புரிந்து கொள்ளும் சக்தியே உலகத்துக்கு இல்லாமல் போவதும் உண்டு. எனவே உலகம் அறிவிக்கின்ற வெற்றி - தோல்விகளைப் பற்றிக் கவலையே இல்லாமல் உழைப்பதும் வெற்றி பெறுவதும் மிக மிக முக்கியம்.

மராட்டிய மாநிலத்தில் தேர்வில் தேர்ச்சி பெறாதவனாக அறிவிக்கப்பட்ட மாணவன் ஒருவன் மறுகூட்டல் கேட்டபோது அதிர்ச்சி காத்திருந்தது. அவன்தான் மாநிலத்திலேயே முதலாவதாக மதிப்பெண் பெற்றவன். சில நாள்களில் வெற்றி, தோல்வி தலைகீழாகிவிட்டது. பிறரது அளவுகோல்களால் நிர்ணயிக்கப்படுகிற வெற்றி - தோல்விகளால் தயவுசெய்து பாதிக்கப்படாதீர்கள்.

சென்னை விவேகானந்தா கல்லூரியில் நான் பி.ஏ. பொருளாதாரம் படித்தபோது நடந்த நிகழ்ச்சி. மாணவர் தலைவர் தேர்தல். போட்டியிட்டு 32 ஓட்டுகள் குறைவாகப் பெற்று நான் தோல்வி அடைந்தேன். நான் அறிவும் விழிப்பும் பெற்றதற்கு மூல காரணம் அந்தத் தோல்வி. எத்தனையோ வகையில் அந்தப் பதவிக்குத் தகுதி எனக்கிருந்தும் நான் மாணவர்களால் நிராகரிக்கப்பட்டேன். பிறரது அங்கீகாரம் அல்லது அனுமதி பெறுகிற வெற்றி ஒரு வெற்றியே அல்ல என்று அப்போதுதான் நான் முடிவெடுத்தேன். என் வாழ்க்கை மாற்றம் அதனால் நிகழ்ந்தது. நமக்குள்ள தகுதியைப் புரிந்து கொள்கிற தகுதி பிறருக்கு இல்லை என்றால் நாம் என்ன செய்ய முடியும்?

அந்தத் தேர்தலில் நான் வெற்றி பெற்றிருந்தால் அரசியலுக்குப் போய் நிறைய ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருப்பேன். ஆனால் எழுத்தும் பேச்சும் சமூக விழிப்பும் என் வாழ்வாகித் தோல்வியே அற்ற வெற்றிகளை நான் இன்று சந்திக்கிறேன். தேர்தலில் என்னைத் தோல்வியுறச் செய்த என் நண்பர் அரசியல் கட்சிகளில் சிக்குண்டு அவதிப்பட்டார். சில ஆண்டுகளுக்கு முன் நான் அவரைச் சந்தித்தபோது கண்ணீருடன் என் கைகளைப் பிடித்துக் கொண்டு, ""தேர்தலில் நான் வெற்றி பெற்றேன். ஆனால் நீ வாழ்க்கையில் வெற்றி பெற்றாய்'' என்றார். எனவே வெளியில் நிர்ணயமாகும் வெற்றி - தோல்விகள் ஒரு பெரிய விஷயம் அல்ல என்று நான் புரிந்துகொண்டேன். நீங்கள்..?

பெருந்தலைவர் காமராஜர் இந்தியாவில் ஒரு தமிழனும் அடைய முடியாத பெரும் புகழ் அடைந்த தமிழன். இமயம் முதல் குமரி வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்த பல முதலமைச்சர்களையும் பிரதம மந்திரிகளையும் தன் உத்தரவுக்குக் கட்டுப்பட வைத்த வலிமையான காங்கிரஸ் தலைவர் அவர். அவர் மட்டுமே. அவருக்கு முன்னும் பின்னும் அப்படி ஒரு மக்கள் தலைவரைத் தமிழ் மண் கண்டதில்லை. பின்னும் இதுவரை ஒரு தலைவனைத் தமிழ் மண் தரவேயில்லை. ஆனால் அவரை அவரது விருதுநகர் மண்ணிலேயே ஒரு கல்லூரி மாணவர் தோற்கடித்தார். எப்படி முடிந்தது?

உணர்ச்சி வசப்படுகிற மக்கள் தீர்மானிக்கிற வெற்றி - தோல்விகள் பெரிய விஷயமே அல்ல. அதை விளக்கியவர் பேரறிஞர் அண்ணா. ஒரு விழாவில் பேசிய ஒருவர், ""பெருந் தலைவர் காமராஜரைத் தோற்கடித்த திரு. சீனிவாசன்'' என்று பேசிய போது பேரறிஞர் அண்ணா குறுக்கிட்டு, ""தேர்தலில் வெற்றி பெற்ற சீனிவாசன் என்று சொல்லுங்கள். "பெருந்தலைவர் காமராஜரைத் தோற்கடித்த' என்று சொல்லாதீர்கள். அவரை ஒரு போதும் யாராலும் தோற்கடிக்க முடியாது. அவர் வெற்றியை வரலாறு சொல்லும்'' என்று கூறினார். வாழ்வின் வெற்றி - தோல்விகள் ஒரு சில சம்பவங்களின் வெற்றி - தோல்விகளையே அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்பதைத் தயவு செய்து விளங்கிக் கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்.

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தோற்கவில்லை என்பதை இந்திய வரலாறு சொல்கிறது. நண்பர் ஒருவர் சொன்ன இன்னொரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன். நண்பர் திருச்சியில் இருந்து நெல்லை செல்லும் தனியார் விரைவுப் பேருந்தில் பயணம் செய்திருக்கிறார். அவருக்குப் பக்கத்தில் இருந்த இருக்கையில் இருந்த பெரியவர் ஒருவர் கை கால் வலியால் அவதிப்படுகிறவர். பேருந்து எங்காவது நிற்காதா... கொஞ்சம் கையைக் காலை நீட்டிச் சோம்பல் தீர நடக்க மாட்டோமா என்று ஏங்கிப் புலம்பியிருக்கிறார். தனியார் பேருந்து... எனவே எங்கும் நிற்காமல் பேருந்து பறந்து போய்க் கொண்டே இருந்தது. முடிவில் ஓர் இடத்தில் இரவுக் கடை முன் பேருந்துகள் நிற்கும் இடத்தில் வண்டி நின்றது. ""ஐயா... ரொம்ப நேரமா இறங்கணும்னு சிரமப்பட்டீங்களே... இங்க இறங்கி நிக்கலாம் வாங்க...'' என்று பெரியவரை அழைத்திருக்கிறார். ""இது எந்த ஊருப்பா...'' என்றபடியே வெளியே எட்டிப் பார்த்த பெரியவர் ""சே... இங்க மனுஷன் இறங்குவானா?'' என்று மறுத்துவிட்டார். நண்பர் "ஏன்' என்று திகைத்தவுடன் பெரியவர், ""இது விருதுநகர். பெருந்தலைவரைத் தோற்கடிச்ச ஊருப்பா... இதுல கால் பட்டாக்கூடப் பாவம்'' என்றாராம்.

இப்போது புரிகிறதா? ஊரும் உலகமும் நிர்ணயித்த வெற்றி - தோல்விகளுக்கு அப்பாலும் சில வெற்றிகள் இருக்கின்றன. இன்னொன்று சொல்கிறேன். தத்ரூபமாகச் சிலை வடிக்கும் போட்டி ஒன்று நடந்தது. இரு சிற்பிகள் ஒரே மாதிரி இரு சிலைகளைச் செய்திருந்தனர். அவர்களுக்குள் கடும் போட்டி நிலவியது. நடுவர் குழு ஒருவரை வெற்றி பெற்றதாக அறிவித்தது. காரணமும் சொன்னது. ஒரு இளம்பெண் தலையில் திராட்சைப் பழக் கொத்துகளைச் சுமந்து செல்வது போல் சிலைகள் இருந்தன. ஒருவர் சிலையில் இருந்த திராட்சைக் கொத்துகளை நிஜம் என நம்பிக் காக்கைகள் கொத்த வந்தன. அதனால் அவர் வெற்றி பெற்றார் என்றனர் நீதிபதிகள்.

ஆனால் மற்றவர் செய்த சிலையில் இருந்த பெண்ணையும் அவர் கையில் இருந்த குச்சியையும் நிஜம் என்று பயந்த காக்கைகள் அந்தச் சிலை மீதிருந்த திராட்சைகளைக் கொத்தாமல் விட்டன. இது நீதிபதிகளுக்குப் புரியாமல் போய்விட்டது. அந்த நீதிபதியைப் பார்த்துக் காக்கைகள் தமக்குள் கேலியாகச் சிரித்தன. யாருடைய வெற்றி உண்மையான வெற்றி?

வெற்றி - தோல்விகள் வாழ்வின் ஓரிரு சம்பவங்களை மட்டுமே சார்ந்தவை அல்ல. அவை முழு வாழ்வையும் சார்ந்தவை. இதைப் புரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்!

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...