Tuesday, March 28, 2017

கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் கொடிக்கும் சின்னத்துக்கும் சிதறும் அதிமுக

By -திருமலை சோமு  |   Published on : 22nd March 2017 12:31 PM
AIADMKoffice
தமிழக அரசியல் வரலாற்றில், ஒரு மக்கள் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக பலர் வாழ்ந்து காட்டியுள்ளனர். இன்னும் மக்களின் மனதில் நினைவுகளாக வாழ்ந்து கொண்டும் இருக்கின்றனர்.

அப்படி பட்டியலிட்டு சொல்லப்பட வேண்டிய மிக முக்கியமான தலைவர்களில் ஒருவர்தான் எம்.ஜி.ஆர் என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்பட்ட எம்.ஜி.ராமச்சந்திரன். திரை உலகில் மக்கள் திலகம் என்று பட்டம் சூட்டிய அவர் அரசியல் ஏட்டில் சரித்திர நாயகனாகவே உலாவருகிறார். 

ஏழைகளின் இதய தெய்வமாக, விளங்கிய அவர் அறிஞர் அண்ணாவின் அன்பு தம்பியாக இருந்ததோடு அவர் மீது கொண்ட அபிமானத்தின் வெளிப்பாடாக அண்ணா திரவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கி தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார்.

எம்.ஜி.ஆர் தமிழக மக்களுக்கு வழங்கிய நலத்திட்டங்கள் மக்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றது. ஏழைகளின் பங்காளனாய், இரக்கத்தின் திருவுருவமாய் இருந்த எம்.ஜி.ஆர். இன்றும் தமிழக மக்களால் மறக்க முடியாத தன்னிகரற்ற தலைவராய் இதய தெய்வமாய் உள்ளார்.


புரட்சி தலைவர் என்ற புகழுக்கு மிகவும் பொருத்தமான அவர் தோற்றுவித்த அதிமுகவை அவர் வழிவந்த ஜெயலிதாவும் செவ்வனே கொண்டு சென்று புரட்சி தலைவி என்று பட்டமும் பெற்றார். ஆரம்ப கால கட்டத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானாலும் ஜெயலலிதாவுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் ஏகோபித்த ஆதரவு இருந்தது. ஜெயலலிதா கட்சிப் பொறுப்பை ஏற்றது முதல் அவர் காலம் வரையிலும் ஆட்சியிலும் கட்சியிலும் பல்வேறு கட்ட வளர்ச்சிப் பணிகளை செய்து தமிழக மக்கள் மனதில் நிலைப் பெற்ற தலைவரானர். எம்.ஜி.ஆரின் திட்டங்கள் போலவே ஜெயலலிதாவின் காலத்தில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலதிட்டங்கள் அத்தனைக்கும் பெரும் வரவேற்பு கிடைத்ததோடு அனைவராலும் அம்மா என்றே அழைக்கப்படலானார்.  


கடந்த 5 ஆண்டுகளில் முதல்வரின் மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் மக்களை நேரிடையாகச் சென்றதால் தான், 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே கட்சி ஆட்சியில் தொடரும் வகையில் தொடர் வெற்றி பெறமுடிந்தது என்பதும் உண்மையே. அதேசமயத்தில் துரதிர்ஷ்ட வசமாக, மக்களால் நான் மக்களுக்காவே நான் என்று சொல்லி கட்சியையும் ஆட்சியையும் நடத்தி வந்த ஜெயலலிதா காலமானார். இதையடுத்து தமிழக அரசு மற்றும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அதிமுகவிலும் வெகுஜனவிரோதப் போக்கு அதிகரித்து விட்டதாகவே கூறப்படுகிறது. 

மக்கள் விரும்பிய ஒரு தலைவரின் மரணம் குறித்து நீடிக்கும் மர்மம், முன்னுக்கு பின்னான அறிக்கைகள், ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட, ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தவர்களுக்கெல்லாம் மீண்டும் பதவி, இதனால் ஏற்பட்ட உட்கட்சி பூசல். கொஞ்சம் கொஞ்சமாக புகைந்து வெடிக்கத் தொடங்கியதால், அதிமுக சசிகலா அணி, அதிமுக ஓ. பன்னீர் செல்வம் அணி என இரண்டானது. இதுமட்டுமல்லாமல், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தான்தான் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு. நான் அதிமுகவை மீட்பேன் என்ற குரலோடு எழுந்து புதுக்கட்சி தொடங்கிய கொஞ்ச நாளிலேயே அவரது கணவருக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழ, தற்போது புதுக் கட்சி தொடங்குவதாக தீபா கணவரும் அறிவித்துள்ளார். 


இதற்கிடையில் எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியின் மகன் சந்திரன், அண்ணா எம்.ஜி.ஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்று ஒரு  புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இதையெல்லாம் பார்க்கும்போது ஒரு பெரியமலை வெடித்து சிதறும் போது சிறு சிறு துண்டுகள் ஆங்காகே விழும் இயல்பை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சிதறும் துண்டுகள் எல்லாம் தான்தான் மலை என்று தன்னை பிரகடனப்படுத்துவது என்பது எவ்வளவு நகைப்புக்குரியது. இரண்டாக பிளவுப்பட்டால் எது பெரியமலை என்று யோசிக்கலாம். இப்போது அதிமுகவை பொருத்தவரை விரும்பியோ விரும்பாமலோ பிளவு என்பது வெட்டவெளிச்சமாகி விட்டது. அதிமுக சசிகலா அணி, அதிமுக பன்னீர் செல்வம் அணி, என்ற இந்த இரண்டு பிளவுகளில் யார் மலை என்றுதான் உறுதி செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. 

அதை நோக்கிதான் இரண்டு அணிகளுமே போராடுகிறது என்பதால் சிதறி விழுந்த சில துண்டுகளின் பிரகடனத்தை நாம் புறந்தள்ளிவிடலாம். ஆனால் இவற்றுக்கெல்லாம் மேல். அதிமுக என்ற இந்த மாபெரும் மலையை கட்டி எழுப்பிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டை கொண்டாட மறந்து விட்டு ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் இந்த புனிதர்களை என்னவென்று சொல்வது.


புரட்சி தலைவர் வழி வந்த ஜெயலலிதா இப்போது இருந்திருந்தால், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வீதி எங்கும் விழாக் கோலம் பூண்டிருக்கும். எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியை, கொடியை, சின்னத்தை கைப்பற்ற நினைக்கும் எவரும் அவரது கொள்கையையும், நூற்றாண்டு விழாவையும் கொண்டாட முன்வராதது ஏன் என்று, தன் இல்லங்களிலும் உள்ளங்களிலும் வைத்து எம்.ஜி.ஆரை பூஜிக்கும் அபிமானிகள், அடிமட்ட தொண்டர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 
எம்.ஜி.ஆர். தனது அரசியல் வாரிசாக ஜெயலலிதாவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், கோடிட்டுக் காட்டினார்.  அதுபோல் ஜெயலலிதாவும் தனது அரசியல் வாரிசு குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிட வில்லை என்றாலும் ஓ. பன்னீர் செல்வத்தை இரண்டு முறை முதல்வராக்கினார் என்பது நினைவுகூரத்தக்கது.

என்னதான் ஒருவரை இன்னொருவர் தன் அரசியல் வாரிசாகவோ கலையுலக வாரிசாகவோ அறிவித்தாலும் அவர் தன் சுய திறமையால் மட்டுமே மக்களின் அபிமானத்தை பெறமுடியும். தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் ஆதரவு என்பது கடந்த அரை நூற்றாண்டுகளாக கலையுலக பிரபலங்களுக்கே கிடைத்து வந்திருப்பதை நாம் அறிவோம். அந்த வகையில்தான் விஜயகாந்த் சரத்குமார், அரசியலுக்கு வந்தனர், ரஜினிகாத்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. 
தற்போது நடிகர் விஜய், அஜித் போன்றோர்களும் அரசியலுக்கு வருவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த காலகட்டத்தில் அஜித் அடுத்த முதல்வாரா என்று சமூக ஊடகங்களிலும் கேரளா, மற்றும் பஞ்சாப் செய்தி ஊடகங்களிலிலும் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. திரைப்பட பிரபலங்கள் மீது மக்கள் கொண்டுள்ள தீராத மோகம்தான் இதற்கு காரணம்.
அதே சமயத்தில் திரையுலகில் இருந்து வந்தாலும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் எந்த ஒரு ஜாதிக்கும் மதத்திற்குமான கட்சியாக, தலைவராக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இருந்ததுவே அவர்களின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது.  இனிவரும் காலங்களில் ஜாதி மத பாகுபாடு இன்றி பெரும்பாலானவர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தலைவரை அதிமுகவில் காண முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒரு வேளை சோ இப்போது இருந்திருந்தால் அப்படி ஒரு தலைவரை அதிமுகவிற்கு அடையாளம் காட்டியிருக்க கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அதேசமயத்தில் அண்ணாவின் கொள்கைளிலிருந்து திமுக தவறியதை ஏற்க முடியாமல்தான் எம்.ஜி.ஆர்.  திமுகவை விட்டு விலகி, நான் அண்ணா வழிவந்தவன், அண்ணாவின் கொள்கையை பின்பற்றுகிறவன் என்ற பிகடனத்தோடு அண்ணாதிமுகவை தொடங்கினார். அதுபோலவே கட்சியை, ஆட்சியை நடத்தியும் காட்டினார். இப்போது அந்த அண்ணா திமுகவுவில் அண்ணாவின் கொள்கையும், எம்.ஜிஆரின் கோட்பாடுகளும் இருக்கிறதா.. அல்லது காலமாற்றத்தினால் அவையெல்லாம் அவசியமற்றதாகிவிட்டதா. எம்.ஜி.ஆரை மறந்து விட்டு அவரின் இரட்டை இலை சின்னத்தை மட்டும் கையில் எடுத்துக் கொண்டால் வெற்றி பெற்றுவிட முடியுமா  என்ற கேள்வியும் அடிமட்ட தொண்டர்களிடம் எழுந்துள்ளது. 

ஒரு தேர்தல் வெற்றிக்கு சின்னமும், கட்சிப் பெயரும், பணப்பட்டுவாடா மட்டுமே காரணமாக இருந்துவிடமுடியாது. ஒரு பலம் பொருந்திய, மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற தலைவரும், அவரது கொள்கை கோட்பாடுகளும் மிக மிக அவசியமாகிறது. அதிமுகவிற்கு இன்றைய சூழலில் அப்படி ஒரு தலைவரைத்தான் மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.  
 
எனவே அண்ணாவையும் எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் மறந்து விட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அத்தனை எளிதாக வெற்றிப் பாதைக்கு இழுத்துச் செல்ல முடியாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
                                                                                    - திருமலை சோமு

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024