Monday, March 27, 2017


திருமலை - திருப்பதியில் அறை எடுத்துத் தங்கி சுவாமி தரிசனம் செய்வது எப்படி?
திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்பவர்களில் இரண்டு விதமானவர்கள் உண்டு. காலையில் கிளம்பி, திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு இரவே வீடு திரும்புபவர்கள் ஒருவகை. திருப்பதிப் பயணமா? கீழ்த்திருப்பதியில் ஒரு நாள்... மேல் திருப்பதியில் இரன்டு நாள் என மூன்று நாட்கள் தங்கிவிட்டு வந்தால்தான் மனதுக்கு நிறைவாக இருக்கும் என்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வருபவர்கள் இன்னொரு ரகம்.



''மலையிலேயே இரண்டு நாள் அறை எடுத்துத் தங்குனீங்களா? நாங்களும் அப்படி இருந்துட்டு வரணும்னு நினைப்போம் ஆனா, முடியறதில்ல. ரெண்டாவது நாங்க ரூம் புக் பண்ண போறப்ப எல்லாம் ரூம் இல்லேனு சொல்லிடுவாங்க''னு பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

திருமலையில் தேவஸ்தான அறையில் தங்கி, புஷ்கரணியில் குளித்து,வராகசாமி தரிசனம் செய்து, பின்னர் சுவாமிதரிசனம் செய்யவேண்டும். ஒரு நாளாவது இரவில் திருமலையில் தங்கி எம்பெருமானின் அருளைப் பெறவேண்டும் என எண்ணும் பக்தர்கள் ஏராளம்.

திருமலையில் அறை எடுத்துத் தங்கி சுவாமி தரிசனம் செய்வது எப்படி?

திருப்பதிக்குப் போவதென்று முடிவு செய்துவிட்டால், சிலநாட்களுக்கு முன்பாகவே முடிவெடுத்துவிடுங்கள். கீழ்திருப்பதி மேல் திருப்பதி (திருமலை) இரண்டு இடங்களிலுமே திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில், ஏராளமான அறைகள், முறையான பராமரிப்புடன் பக்தர்களின் தேவைக்காக கட்டப்பட்டுள்ளன. கீழ்த்திருப்பதியில் பஸ்ஸ்டாண்டுக்கு எதிர்புறம் 'சீனிவாசம் காம்ப்ளக்ஸ்' மாதவம் கெஸ்ட் ஹவுஸ் ஆகிய இரண்டு தேவஸ்தான விடுதிகள் உள்ளன.



திருப்பதி சென்ட்ரல் பஸ்-ஸ்டாண்ட் எதிர்புறம் உள்ள 'சீனிவாசம் காம்ப்ளக்ஸில் ரூ. 200, ரூ.400, ரூ.600 கட்டணத்தில் அறைகள் கிடைக்கின்றன. மாதவம் கெஸ்ட் ஹவுஸில் ரூ.800, ரூ.1000 கட்டணத்தில் அறைகள் கிடைக்கின்றன. இவை பாதுகாப்புடன் முறையாகப் பராமரிக்கப்பட்டும் வருகின்றன.




திருப்பதி ரெயில்வே ஸ்டேஷனின் எதிர்புறம் உள்ளது, விஷ்ணு நிவாஸம் காம்ப்ளக்ஸ். இங்கே, ரூ.300, ரூ.500, ரூ.800, ரூ.1300 ரூபாயில் அறைகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. கீழ்த்திருப்பதியில் ஏராளமான தனியார் விடுதிகளும் உள்ளன.
திருமலையில் அதாவது மேல் திருப்பதியில், கோவர்த்தன், சப்தகிரி, கருடாத்ரி, வராகசாமி கெஸ்ட் ஹவுஸ், ராம் பகிஜா, பத்மாவதி கெஸ்ட் ஹவுஸ் என ஏராளமான தேவஸ்தான விடுதிகள் உள்ளன.

இவற்றில் மட்டும் மொத்தம் ஆறு ஆயிரம் அறைகள் உள்ளன. மேல் திருப்பதியில் தனியார் விடுதிகள் எதுவும் கிடையாது. இங்கே, ரூ.50, ரூ.100, ரூ.150, ரூ.500, ரூ.600, ரூ.750, ரூ.1000, ரூ.1500, ரூ.2000 கட்டணத்தில் அவரவர் வசதிக்கேற்ப அறைகளைத் தேர்வு செய்து தங்கலாம். நாம் செலுத்தும் கட்டணத்துக்கேற்ப அறைகளில் வசதி வாய்ப்புகள் செய்யப்பட்டிருக்கும்.



இவற்றில் தங்க வேண்டுமென்றால், ஆன்லைனில் பதிவு செய்யவேண்டும். இல்லாவிட்டால், உங்கள் மாவட்டத்தில் இருக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் தம்பதியாகச் சென்று முன்பதிவுசெய்துகொள்ள வேண்டும். ஒருவர் மட்டும் தனிநபராகச் சென்று கேட்டால் , அறைகள் தரமாட்டார்கள்.

கோடைகால விடுமுறை என்பதால், பலரும் முன்பதிவு செய்வார்கள்.120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு தொடங்கிவிடும். உங்கள் பயணத்தை முன்பே திட்டமிட்டுக்கொள்ளுங்கள். சனி, ஞாயிறு, அரசு விடுமுறை இல்லாத நாட்களில் கூட்டம் சற்றுக் குறைவாக இருக்கும். குறிப்பாக செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் பயணத் திட்டத்தை வகுத்துக்கொண்டால் உங்கள் பயணம் இனிமையாகும்.

எஸ்.கதிரேசன்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024