Thursday, March 30, 2017

அட! தமிழ்நாடு, கேரளாவுக்குத் தலைமைச் செயலர்கள் ஆன தமிழ்ச் சகோதரிகள்!

By DIN | Published on : 30th March 2017 02:17 PM |




சென்னை: பொதுவாகவே தலைமைச் செயலர்களின் நியமனங்கள் முக்கியத்துவம் பெறும். அதுபற்றிய செய்திகள் முக்கியச் செய்திகளில் இடம்பெறுவது புதிதல்ல.

ஆனால், கேரள அமைச்சரவை நேற்று நளினி நெட்டோவை, மாநில தலைமைச் செயலர் பதவிக்கு நியமித்து வெளியிட்ட செய்தி, மற்றொரு வகையிலும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

அதாவது, கேரள மாநில தலைமைச் செயலர் எஸ்.எம். விஜய் ஆனந்தின் பதவிக் காலம் மார்ச் 31ம் தேதியோடு நிறைவு பெறுவதால், புதிய தலைமைச் செயலராக நளினி நெட்டோ நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது உள்துறை கூடுதல் செயலராக இருக்கும் நளினி நெட்டோ, ஏப்ரல் 1ம் தேதி தலைமைச் செயலராக பதவி ஏற்கிறார். இவர் வரும் ஆகஸ்ட் மாதத்தோடு பணி நிறைவு பெறுகிறார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், நளினி நெட்டோவின் மாமாவின் மகள்தான் தமிழகத்தின் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன். இவர் கடந்த டிசம்பர் மாதம் தமிழக முதன்மைச் செயலராக பதவியேற்றுக் கொண்டார்.

மற்றொரு விஷயம் என்னவென்றால், நளினி நெட்டோ, வைத்தியநாதன், விஜய் ஆனந்த் ஆகியோர் 1981ம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள்.


ரிசர்வ் வங்கியின் 18வது ஆளுநராக இருந்த எஸ். வெங்கிடராமனின் மகள்தான் கிரிஜா வைத்தியநாதன். நாகர்கோயிலைச் சேர்ந்த வெங்கிடராமனின் சகோதரியின் மகள் தான் கேரள தலைமைச் செயலராகவிருக்கும் நளினி நெட்டோ.

தமிழகத்தின் தலைமைச் செயலராக இருந்த ராம மோகன ராவ்வின் பணி நீக்கத்தை அடுத்து, தமிழகத்தின் தலைமைச் செயலராக கிரிஜா வைத்தியநாதனை டிசம்பர் 22ம் தேதி தமிழக அரசு நியமித்தது. இதையடுத்து ஏப்ரல் 1ம் தேதி நளினி நெட்டோ தலைமைச் செயலர் பதவியை ஏற்றால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் அதுவும் சகோதரிகள் தமிழகம்,கேரள மாநிலங்களின் மிக முக்கியப் பொறுப்பில் இருக்கப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024