Thursday, March 30, 2017

என்ன செய்யப் போகிறோம்?

By ஆசிரியர்  |   Published on : 29th March 2017 01:41 AM 

தில்லி ஜந்தர் மந்தரில் கடந்த 15 நாட்களாக நடைபெற்றுவரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் குறித்து தேசிய ஊடகங்கள் தற்போதுதான் விழித்துக் கொண்டிருக்கின்றன. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வரிசைகட்டித் தங்களது ஆதரவைத் தெரிவிக்க ஜந்தர் மந்தர் நோக்கி விரைகிறார்கள்.

த.மா.கா. தரப்பில் ஜி.கே. வாசன் குடியரசுத் தலைவரிடமும், தி.மு.க. தரப்பில் திருச்சி சிவா, நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடமும், ஆளும் அ.தி.மு.க. தரப்பில் தம்பிதுரை நரேந்திர மோடியிடமும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்த அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துச் சென்று முறையிட்டிருக்கிறார்கள். இதனால் பிரச்னை தீர்ந்துவிடப் போவதில்லை என்பது அவர்களுக்கும் தெரியும், விவசாயிகளுக்கும் தெரியும், தில்லியில் உள்ள தலைவர்களுக்கும் தெரியும்.

கடந்த ஆண்டு வடமேற்குப் பருவமழை பொய்த்துவிட்டது. அதனால் ஒட்டுமொத்த இந்தியாவும் வறட்சியை எதிர்நோக்கியது. ஏனைய மாநிலங்களில் ஓரளவுக்காவது நதிநீர் கிடைக்கிறது. தமிழகத்தின் நிலைமை அதைவிட மோசம். காவிரியிலும் போதிய அளவு நீர் கிடைக்கவில்லை, தென்மேற்குப் பருவ மழையும் பொய்த்துவிட்டது. அதனால் கடந்த 100 ஆண்டுகளில் காணாத வறட்சியைத் தமிழகம் எதிர்கொள்கிறது. இப்படியொரு நிலைமையைத் தமிழகம் சந்திக்க இருக்கிறது என்பதைக் கடந்த 5.1.17-இல் 'வேளாண் இடர்ப்பாடு!' என்கிற தலையங்கத்தில் விரிவாகவே குறிப்பிட்டிருந்தோம்.

வடகிழக்குப் பருவமழை காலத்தில் சராசரியாக 440 மி.மீ. மழை கிடைக்கப் பெறுவது வழக்கம். கடந்த ஆண்டு வெறும் 169.3 மி.மீ. மழை மட்டுமே கிடைக்கப் பெற்றது. அதனால் தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 21 மாவட்டங்கள் 60%-க்கும் குறைவாகவே மழைநீர் பெற்றிருக்கின்றன. 1876-க்குப் பிறகு இந்த அளவுக்குக் குறைவாக வடகிழக்குப் பருவமழை இருந்தது இப்போதுதான்.

பருவமழைதான் பொய்த்துவிட்டது. காவிரி நீராவது கிடைத்ததா என்றால் அதுவும் இல்லை. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி கடந்த ஜூன் - டிசம்பர் காலகட்டத்தில் தமிழகத்திற்கு நியாயமாக 179 டி.எம்.சி. காவிரி நீர் தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கர்நாடகம் நமக்குத் தந்திருக்கும் மொத்த நீரே வெறும் 66.60 டி.எம்.சி. மட்டுமே. தங்களுக்கே தண்ணீர் இல்லாதபோது எப்படித் தருவது என்று கை விரித்துவிட்டது கர்நாடகம்.
காவிரி டெல்டா பகுதி வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. ஏறத்தாழ 50 லட்சம் ஏக்கரிலான பயிர்கள் கருகி, சாகுபடி செய்த 30 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி இயற்கை பொய்க்கும் என்பதை உணர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா, குறுவை சாகுபடிக்காக 54 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான குறுவை சாகுபடித் திட்டத்தையும், சம்பா சாகுபடிக்காக 64 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவிலான சம்பா சாகுபடித் திட்டத்தையும் ஏற்கெனவே அறிவித்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், டெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள 12.86 லட்சம் ஏக்கர் நிலத்தில், 11.01 லட்சம் ஏக்கர் நிலத்திலுள்ள பயிர் காப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க, தமிழக அரசு ரூ.2,247 கோடி ஒதுக்கி இருக்கிறது. இதன்மூலம் பயிர் வாரியாக விவசாயிகளுக்கு ரூ.3,000 முதல் ரூ.7,000 வரை நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக வறட்சி நிலைமை குறித்து ஆய்வு செய்ய, கடந்த ஜனவரி மாதம் மத்தியக் குழு தமிழகம் முழுவதும் பயணம் செய்தது. தமிழகம் 99% வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாக இங்கிருந்து செல்லும்போது அந்தக் குழு தெரிவிக்கவும் செய்தது. ஆனால் தில்லி சென்று இந்தக் குழுவினர் செய்த பரிந்துரைப்படி, தமிழகத்திற்கு ரூ.2,090 கோடி மட்டும்தான் வறட்சி நிவாரணமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறைத்து மத்திய அரசு அறிவித்திருக்கும் நிவாரணத் தொகை வெறும் ரூ.1,748 கோடி மட்டுமே.
நிவாரணம், இழப்பீடு, காப்பீடு, கடன் தள்ளுபடி இவையெல்லாம் விவசாயிகளின் துயர் துடைக்கும் முயற்சிகள். விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்ப்பதால் மட்டுமே நிலைமையை எதிர்கொண்டதாகி விடாது. விவசாயம் பொய்க்கும்போது, விவசாயத்தை நம்பி வாழும் கூலித் தொழிலாளர்களின் நிலை என்ன என்பதையும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். சங்கம் வைத்து விவசாயிகள் அவர்
களது பிரச்னைகளை முன்வைப்பது போல, விவசாயத்தை நம்பி வாழும் கூலித் தொழிலாளர்கள் தங்கள் நிலைமையை எடுத்துரைக்க வழியில்லை. விவசாயிகள் தற்கொலை என்று தெரிவிக்கப்படுவதில் பெரும்பாலானவை விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலைதான் என்பதை நாம் உணர்வதில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுப்பது, விவசாயிகளின் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்வது, தமிழக நதிகளை இணைப்பது, வறுமை காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு அளிப்பது, தேசிய, தென்னக நதிகளை இணைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் விவசாயிகள் சங்கத்தினர் பி. அய்யாக்கண்ணு தலைமையில் தலைநகர் தில்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது, தமிழகத்தின் பிரச்னையை ஓரளவுக்கு தேசிய அளவில் வலியுறுத்த வழிகோலியிருக்கிறது. இதனாலேயே, மிகப்பெரிய அளவில் மத்திய அரசு உதவி கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்க முடியாது.

தமிழகம், இருக்கும் நீரை எப்படி சாமர்த்தியமாக பயன்படுத்த முடியும் என்பதையும், நிலத்தடி நீரைப் பாதுகாப்பது, கடல்நீர் சுத்திகரிப்புக்கு முயற்சிப்பது போன்றவற்றையும் மையப்படுத்தி வருங்காலத் திட்டங்களை வகுப்பதுதான் தொலைநோக்குப் பார்வையாக இருக்க முடியும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024