சேலத்தில் இடபற்றாக்குறை : நெரிசலில் சிக்கி தவிக்கும் பழைய பஸ் ஸ்டாண்ட்
ஆங்கிலேயர் காலத்தில் இருந்து செயல்பட்டு வந்த சேலம் டவுன் பஸ் ஸ்டாண்டில் இருந்து பிற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. தொடர்ந்து காந்தி சிலை அருகே வெளியூருக்கு செல்லும் பஸ்கள் வந்து செல்லும் வகையில், திருவள் ளூர் பஸ் ஸ்டாண்ட் உருவாக்கப்பட்டது. இடநெருக்கடி காரணமாக கடந்த 1994ம் ஆண்டு, இங்கிருந்த பஸ் ஸ்டாண்ட், இடமாற்றம் செய்யப்பட்டு தற்போதுள்ள புதிய பஸ் ஸ்டாண்டாக உருவானது.அப்போது முதல், மாவட்டத்திற்குள் செல்லும் டவுன் பஸ்கள் வந்து செல்லும் இடமாக, சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் மாறியது. மாவட்ட கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் என, நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் சேலம் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றனர்.ஆனால் அவர்களுக்கான எந்தவித அடிப்படை வசதிகளும் பஸ் ஸ்டாண்டில் செய்து தரப்படவில்லை. டவுன் பஸ்களுக்கு என தனியாக பிரிக்கப்பட்டதில் இருந்து இதுவரை, ஒருமுறை கூட பழைய பஸ் ஸ்டாண்ட் நவீனப்படுத்தப்படவில்லை. பஸ்களை நிறுத்த போதிய இடமில்லை, பயணிகள் காத்திருக்க வசதியில்லை, நெரிசலால் ஏற்படும் போக்குவரத்து பிரச்னைகள், பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே வருவதில் டிரைவர்களுக்குள் அடிக்கடி ஏற்படும் தகராறு என பழைய பஸ் ஸ்டாண்டின் பிரச்னை பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதனிடையே கடந்த 2011ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின் போது, சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் குறித்த பல்வேறு வாக்குறுதிகளை, அதிமுக சார்பில் போட்டியிட்ட சவுண்டப்பன் தெரிவித்தார். பழைய பஸ் ஸ்டாண்ட் நவீனமயமாக்கப்படும், ஆட்கொல்லி பாலம் அருகே திருமணிமுத்தாற்றிற்கு மேற்கூரை அமைத்து அங்கு வாகன நிறுத்தும் இடம் உருவாக்கப்படும் என உறுதியளித்தார்.
தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று மேயராக பொறுப்பேற்ற சவுண்டப்பன், தனது முதல் பட்ஜெட்டிலேயே, இதற்கான தீர்மானத்தையும் நிறைவேற்றினார். ஆனால் அதன்பின்னர் பழைய பஸ் ஸ்டாண்ட் ஆய்வு, திட்ட மதிப்பீடு, திட்ட வரைவு அனுப்புதல் என எந்தவித ஆயத்த பணிகளிலும் ஈடுபடவில்லை. பஸ் ஸ்டாண்ட் நவீனமாக்கப்படும் என்ற உறுதி, வெறும் தீர்மான அளவிலேயே நின்றுவிட்டது. 5 ஆண்டுகள் முழுமையாக பதவியில் இருந்தும், பழைய பஸ் ஸ்டாண்டை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், மேயர் மீது பொதுமக்களும், வியாபாரிகளும் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: சேலம் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு அரசு, தனியார் மற்றும் மினிபஸ் என 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இதில், மகுடஞ் சாவடி, ஆட்டையாம்பட்டி, புது பஸ் ஸ்டாண்ட், ஜங்சன், அஸ்தம்பட்டி, கோரிமேடு போன்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ்களுக்கு மட்டும், பஸ் ஸ்டாண்டின் உள்புறத்தில் நிறுத்த இடம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் மற்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், வெளிப்புறமாக உள்ள குறுகலான இடங்களில் மட்டுமே நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். குறிப்பாக வாழப்பாடிக்கு செல்லும் பஸ்கள் வணிக வளாகத்திற்கு எதிரிலும், மல்லூர், ராசிபுரம் செல்ல வேண்டிய பஸ்கள் மணிக்கூட்டிற்கு முன்பாகவும் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். இந்த பஸ்களுக்கு வழியிலேயே இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால், நீண்ட நேரம் அங்கு நின்று செல்ல முடியாது. இதேநிலை தான் மினி பஸ்களுக்கும் ஏற்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மேயர் கொடுத்த வாக்குறுதி, கிணற்றில் போட்ட கற்களை போன்று அப்படியே உள்ளது. பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்தி நவீனப்படுத்தும் வரை இந்த பிரச்னை இருந்து கொண்டே தான் இருக்கும். எனவே ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும் பஸ்கள் அனைத்திற்கும் தனித்தனியாக நிரந்தர இடம் வழங்க வேண்டும். பயணிகள் காத்திருக்கவும், அவர்களுக்கான சுகாதார மற்றும் குடிநீர் வசதிகளும் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.
No comments:
Post a Comment