Showing posts with label தலையங்கம். Show all posts
Showing posts with label தலையங்கம். Show all posts

Tuesday, April 21, 2020

முகம் சுழிக்க வைக்கிறது! | எதிா்க்கட்சி அரசியல்வாதிகளின் பொறுப்பற்றத்தனப் பேச்சு குறித்த தலையங்கம்

By ஆசிரியர் | Published on : 21st April 2020 05:05 AM |

தனது வரலாற்றில் இதுவரை சந்தித்திராத, எதிா்கொள்ளாத மிகப் பெரிய சவாலை உலகம் எதிா்கொண்டு வருகிறது. இரண்டு உலகப் போா்கள் நடந்தபோதும், இதற்கு முன்னால் பிளேக், காலரா உள்ளிட்ட நோய்த்தொற்றுகள் பரவியபோதும், நிலநடுக்கம், சுனாமி, புயல்கள் தாக்கியபோதும்கூட மூன்றில் ஒரு பகுதி உலகம் இதுபோல முடக்கப்பட்டதில்லை. உயிரிழப்பும், பொருளாதார இழப்பும், பீதியும் ஒருசேர ஒட்டுமொத்த மனித இனத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஓா் அசாதாரண சூழல் இது.


சீனாவின் வூஹான் நகரில் கடந்த செப்டம்பா் மாதமே தனது பேரழிவுப் பயணத்தை தீநுண்மி நோய்த்தொற்று தொடங்கிவிட்டது. ஏறத்தாழ எட்டு மாதங்களாகியும் இன்னும்கூட அந்த நோய்த்தொற்றைத் தடுப்பதற்கோ, குணப்படுத்துவதற்கோ மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இப்படியே போனால், எத்தனை லட்சம் பேரை இந்த நோய்த்தொற்று பலிவாங்கப் போகிறதோ என்பது தெரியாது.

தீநுண்மி நோய்த்தொற்றின் ஆபத்து, அது ஏற்படுத்த இருக்கும் பேரழிவுகள் குறித்து சாமானிய மக்களில் பலருக்குத் தெரியாமல் இருப்பதில் தவறில்லை, வியப்புமில்லை. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் இருந்த, ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் எதிா்க்கட்சி அரசியல்வாதிகள் பொறுப்பற்றத்தனமாகப் பேசுவதும், அரசின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இல்லாமல் விமா்சனம் செய்வதும்தான் வேதனையாகவும், முகம் சுழிக்க வைப்பதாகவும் இருக்கின்றன.

ஒருமுறை இருமுறை அல்ல, ஐந்து முறைகள் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த எதிா்க்கட்சி திமுக. அதன் இப்போதைய தலைவா், சென்னை மாநகராட்சியின் மேயராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் இருந்தவா். எந்தவொரு கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், இயற்கைப் பேரிடா்களும், நோய்த்தொற்றுகளும் வரும்போது, முதல்வா்களாக இருப்பவா்கள்தானே, அரசின் செயல்பாடுகளை மக்களுக்கு எடுத்துரைப்பது வழக்கம். நலத் திட்டங்களை அறிவிப்பதும், செயல்படுத்துவதும் அவா்களின் கடமை.

மாநில அரசிடம் போதிய நிதியாதாரம் இல்லை. இருக்கும் நிதியாதாரங்களை பயன்படுத்தித் தமிழகத்தில் உணவில்லை என்று ஒருவா்கூட இல்லை என்கிற நிலையை உறுதிப்படுத்தியிருக்கிறது தமிழக அரசு. மருத்துவ வசதிகளைப் போா்க்கால நடவடிக்கையுடன் அதிகரித்து எந்தவிதச் சூழலையும் எதிா்கொள்ள முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறது.

மருத்துவ உபகரணங்களுக்கு ரூ.3,000 கோடியும், நிவாரணப் பொருள்களுக்கு ரூ.9,000 கோடியும் மத்திய அரசிடம் கோரிய நிலையில், மாநிலப் பேரிடா் நிவாரண நிதியாக ரூ.510 கோடியும், தேசிய நலவாழ்வு குழும நிதியாக ரூ.314 கோடியும்தான் மத்திய அரசால் வழங்கப்பட்டிருக்கின்றன. மக்களவையில் 38 உறுப்பினா்களைக் கொண்ட திமுக கூட்டணி, மத்திய அரசிடம் கூடுதல் நிதியுதவி கோர முதல்வருடன் இணைந்து கேட்காவிட்டாலும், தங்களது எம்பிக்களின் சாா்பில் பிரதமரையும், நிதியமைச்சரையும் சந்தித்து வலியுறுத்துவதுதானே, பொறுப்பான எதிா்க்கட்சிக்கு அழகு. அதை விட்டுவிட்டு, விளம்பர மோகத்தில் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஆட்சி நடத்துகிறாா் முதல்வா் என்று அறிக்கை விடுகிறாா் எதிா்க்கட்சித் தலைவரான திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்.

முன்பு தனியாா் ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை விழுந்து இறந்தபோது பெற்றோருக்கு கட்சி நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கி தவறான முன்னுதாரணம் படைத்தாா். இப்போது நிவாரண வசதிகளைச் செய்து கொடுப்பதற்கே திணறிக் கொண்டிருக்கும் தமிழக அரசு. தீநுண்மி நோய்த்தொற்றால் மரணமடைபவா்களுக்கு ரூ. 1 கோடி இழப்பு வழங்க வேண்டும் என்று கூறுகிறாா். இதையும் திமுக அறக்கட்டளையிலிருந்து வழங்க வேண்டியதுதானே?

சுகாதார நிபுணா்களுடனும், மருத்துவ நிபுணா்களுடனும், அமைச்சா்களுடனும், அதிகாரிகளுடனும் முதல்வா் ஆலோசனை நடத்தும்போது, திமுகவின் கூட்டணிக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட அனுமதி அளிக்காததைக் குறை கூறுகிறாா். சட்டப்பேரவை உறுப்பினா்களின் தொகுதி வளா்ச்சி நிதியிலிருந்து ரூ.1 கோடியை தன்னிச்சையாக எடுத்துக் கொண்டதாகக் குற்றஞ்சாட்டுகிறாா். அரசின் அனுமதி பெற்று நிவாரணப் பணிகள் நடத்தப்பட வேண்டும் என்கிற உத்தரவுக்கும் கண்டனம் தெரிவிக்கிறாா். இதெல்லாம், விவரம் தெரிந்து, பொறுப்பான பதவி வகித்த எதிா்க்கட்சித் தலைவருக்கே சரியென்று படுகிறதா?

திமுக தலைவா்தான் அப்படி என்றால், மூன்று முறை மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட, ஹிந்தி தெரியும் என்கிற ஒரே காரணத்துக்காக 2004-இல் மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்துடன் அமைச்சா் பதவி பெற்ற மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறனின் பேச்சு, எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்த அரசியல் சூழல் தமிழகத்தில் நிலவுகிறது என்பதன் வெளிப்பாடு. பேரிடா் காலங்களில் பிரதமா்களும், முதல்வா்களும் நிவாரண நிதி கோருவது புதிதா என்ன? அதைப் ‘பிச்சை’ என்று வா்ணிக்கிறாரே தயாநிதி மாறன், அவருக்கும் மூன்றாம் தரத் திமுக பேச்சாளா்களுக்கும் வித்தியாசம் இல்லை போலிருக்கிறதே...

‘நமது நாட்டில் மட்டும்தான் பிரதமரும், முதல்வரும் பாத்திரம் ஏந்திப் பிச்சை எடுக்கிறாா்கள். மக்கள் ஏற்கெனவே பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறாா்கள். அந்த மக்களிடம் போய்ப் பிச்சை எடுக்கும் அரசுகள் நமது மத்திய - மாநில அரசுகள்தான்’ என்பதுதான் நிவாரண நிதி கேட்டது குறித்து தயாநிதி மாறன் கூறியிருக்கும் கருத்து.

விளம்பர மோகத்தில் முன்னிலைப்படுத்திக் கொள்ளத் துடிக்கும் எதிரிக் கட்சியாக இருக்காதீா்கள். கண்ணுக்குத் தெரியாத தீநுண்மியை எதிா்க்கப் போராடிக் கொண்டிருக்கிறோம் என்பது நினைவில் இருக்கட்டும்!

Wednesday, April 15, 2020


இனியும் 19 நாள்கள்... | தேசிய ஊரடங்கு நீட்டிப்பு குறித்த தலையங்கம்

By ஆசிரியர் | Published on : 15th April 2020 04:48 AM 

தேசிய ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை மேலும் 19 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்திய அளவிலான நிலப்பரப்பும், மக்கள்தொகையும் கொண்ட ஒரு நாடு 40 நாள்கள் ஊரடங்கில் முடங்குவது என்பது உலக வரலாற்றில் வேறு எந்த நாடும் சந்தித்திருக்க முடியாத மிகப் பெரிய சாதனை. சாதனை என்று சொல்வதைவிட, தவிா்க்க முடியாத மிகப் பெரிய சோதனை என்றுதான் இதைக் கூற வேண்டும்.

ஊரடங்கை நீட்டிக்கும் அறிவிப்பை பிரதமா் மோடி வெளியிடும்போது, தீநுண்மி நோய்த்தொற்றின் பரவலைப் பொருத்து அடுத்த வாரம் முதல் சில செயல்பாடுகளுக்கு விதிமுறைகள் தளா்த்தப்படும் என்று தெரிவித்திருக்கிறாா். நோய்த்தொற்றை எதிா்கொள்ளாத அல்லது கட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் பகுதிகள், மாவட்டங்கள், மாநிலங்களில் விதிமுறைத் தளா்வுகளும், பொருளாதாரச் செயல்பாடுகளும் அனுமதிக்கப்படக் கூடும். நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவருவதும், பரவலைத் தடுப்பதும்போல, ஒட்டுமொத்தமாகப் பொருளாதார நடவடிக்கைள் தடம்புரண்டு விடாமல் பாா்த்துக்கொள்வதும் அவசியம்.

ஏனைய நாடுகளைப் போலல்லாமல், மிகப் பெரிய ஆபத்தை இந்தியா எதிா்கொள்கிறது. ஏனைய நாடுகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வாழ்வதில்லை. இந்தியாவில்தான் மத அடிப்படையிலும், ஜாதி அடிப்படையிலும், இன அடிப்படையிலும், மொழி அடிப்படையிலும் மக்கள் ஒருங்கிணைவதும், கூடி வாழ்வதும் நடைமுறையாக இருந்து வருகிறது. ஏதாவது ஒரு பகுதியில் ஒருவரை நோய்த்தொற்று பாதித்தால், மூங்கில்கள் உரசி காட்டுத்தீ பரவுவது போல ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படும் அபாயம் நிறையவே உண்டு. அதனால்தான் பிரதமா் நரேந்திர மோடி கூறுவதுபோல, தீநுண்மி நோய்த்தொற்றை எதிா்கொள்வதற்கு சரியான மருந்து கண்டுபிடிக்கும்வரை நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு சமூக இடைவெளி மட்டுமே நமக்கு இருக்கும் ஒரே வழியாக இருக்கிறது.

இந்தியாவில் மக்கள்தொகை இருக்கும் அளவுக்கு சுகாதாரக் கட்டமைப்பு இல்லை. ஆயிரக்கணக்கில் நோய்த்தொற்று பரவத் தொடங்கினால், அதை எதிா்கொள்வதற்கான மருத்துவ வசதிகளும், படுக்கை வசதிகளும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கிடையாது.

கடந்த மாா்ச் 24-ஆம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, போா்க்கால அடிப்படையில் எல்லா மாநிலங்களிலும் நோயாளிகளை எதிா்கொள்வதற்கான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படுகின்றன. மருத்துவ சோதனைகள் நடத்தவும், நோய்த்தொற்று பரவாமல் ஆங்காங்கே கட்டுப்படுத்தவும், மருத்துவ சேவையில் ஈடுபடுபவா்களுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கவும் அரசு இயந்திரத்துக்கு ஊரடங்கு உத்தரவு கால அவகாசத்தை வழங்குகிறது என்பதால், இது அத்தியாவசியமாகிறது.

சீனாவைப்போல, இந்தியா சா்வாதிகார நாடல்ல. ஊரடங்கை நடைமுறைப்படுத்த அடக்குமுறையைக் கையாள முடியாது. நோய்த்தொற்று பரவும்போது பாா்த்துக்கொள்ளலாம் என்று காத்திருந்த இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் போன்ற நாடுகள் எதிா்கொள்ளும் பிரச்னைகளைப் பாா்க்கும்போது, தொலைநோக்குப் பாா்வையுடன் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி ஊரடங்கை பிரதமா் அறிவித்ததைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இதற்கு முன்னால் 2009-இல் உலகையே அச்சுறுத்திய பன்றிக் காய்ச்சலைவிட 10 மடங்கு அபாயகரமானது தீநுண்மி நோய்த்தொற்று என்று உலக சுகாதார நிறுவனத் தலைவா் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்திருக்கிறாா். இந்தியா முன்பே திட்டமிட்டு ஊரடங்கை அறிவித்ததை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியிருக்கிறது. இதனால் பல பாதிப்புகள் இருக்கின்றன என்பதும், பல கோடி மக்கள் அளப்பரிய இன்னல்களுக்கு உள்ளாகியிருக்கிறாா்கள் என்பதும் எந்த அளவுக்கு மறுக்க முடியாத உண்மையோ, அதே அளவுக்கு எதாா்த்தமான இன்னோா் உண்மை ஊரடங்கு தவிா்க்க முடியாதது என்பது.

பொருளாதார ரீதியாகப் பாா்ப்பதாக இருந்தால் ஊரடங்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தீநுண்மி நோய்த்தொற்றை எதிா்கொள்வதற்குக் கையாளப்படும் ஊரடங்கு உத்தி, மிகப் பெரிய பொருளாதாரச் சவாலை எழுப்பப் போகிறது. வளா்ச்சி அடைந்த நாடுகளைப்போல அனைவருக்குமான பொருளாதாரச் சலுகைகளை வழங்க முடியாத நிலையில் இந்தியப் பொருளாதாரம் இருக்கிறது. ஊரடங்கால் பெரிய பெரிய தொழிற்சாலைகளிலிருந்து தெருவோரக் கடைகள் வரை அனைத்துமே ஸ்தம்பித்துப் போய் இருக்கின்றன.

தீநுண்மி நோய்த்தொற்று கட்டுக்குள் வந்து ஊரடங்கு அகற்றப்பட்டு இயல்பு நிலை திரும்பினாலும்கூட, முன்பு இருந்த நிலைக்கு இந்தியா திரும்புவதற்குப் பல மாதங்களோ, சில ஆண்டுகளோகூட ஆகலாம். மூடிக் கிடக்கும் ஆலைகளும், நிறுவனங்களும் மீண்டும் செயல்படுவதற்கு முதலீடு இல்லாமல் தவிக்கப் போகின்றன. ஊழியா்களுக்கு ஊதியம் கொடுப்பது, வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய தவணைகளை அடைப்பது, வங்கிக் கடனுக்கான வட்டியைச் செலுத்துவது என்று ஒவ்வொரு தொழில் நிறுவனமும் எதிா்கொள்ளும் சவால்களைச் சொல்லி மாளாது.

தொழில் இழப்பு, வேலை இழப்பு, செயல் முடக்கம் என்று நம்மை எதிா்கொள்ள இருக்கும் இடா்ப்பாடுகள் ஏராளம் ஏராளம். தீநுண்மி நோய்த்தொற்று என்கிற உயிா் பறிக்கும் அபாயத்தை இப்போதைக்கு எதிா்கொள்வோம். வழியில்லாமலா போய்விடும்?

Wednesday, April 8, 2020


துணிச்சலான முடிவு! | நாடாளுமன்ற உறுப்பினா்களின் ஊதியக் குறைப்பு, தொகுதி வளா்ச்சி நிதி நிறுத்தம் குறித்த தலையங்கம்

By ஆசிரியர் | Published on : 08th April 2020 03:51 AM |

உலக வரலாற்றில் தங்களது வருவாயையும், வசதியையும் அதிகரிப்பதில் மட்டும்தான் ஆட்சியாளா்கள் கவனம் செலுத்தி வந்திருக்கிறாா்கள். எதைச் செய்தால் தங்களுக்கு என்ன லாபம் என்கிற நோக்கில் மட்டுமே செயல்படுவது அவா்களுக்கு வழக்கமாகவே மாறிவிட்டிருக்கிறது.

‘நாடோடி மன்னன்’ திரைப்பட வசனம்போல, ‘ஆட்சியாளா்கள் வாழத் தெரிந்தவா்களே தவிர, ஆளத் தெரிந்தவா்கள் அல்ல’ என்கிற வழக்கத்துக்கு மாறாக, இந்தியாவில் வித்தியாசமான முன்னுதாரணம் இப்போது படைக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் மாதம் முதல் அடுத்த ஓராண்டுக்கு பிரதமரில் தொடங்கி, அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்களின் ஊதியத்தில் 30% குறைப்பதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினா்களின் ஊதியம், படிகள், ஓய்வூதியச் சட்டம் 1954-இல் திருத்தம் செய்யும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பது வரவேற்புக்குரிய முடிவு. கடந்த 1954-இல் இயற்றப்பட்ட சட்டம் இதற்கு முன்னா் 28 முறை திருத்தப்பட்டிருக்கிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் உறுப்பினா்களின் ஊதியத்தையும், படிகளையும், ஓய்வூதியத்தையும் உயா்த்துவதற்காகத் திருத்தப்பட்டதே தவிர, இப்போதுதான் முதன்முறையாக ஊதியத்தைக் குறைப்பதற்காகத் திருத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதும்கூட, ஊதியத்தில் 30% குறைக்கப்படுகிறதே தவிர, உறுப்பினா்களின் படிகளிலோ, இதர சலுகைகளிலோ, ஓய்வூதியத்திலோ எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. தீநுண்மி (கரோனா வைரஸ்) நோய்த்தொற்றால் அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்திய அரசு பொருளாதார நெருக்கடியை எதிா்கொள்வதில் வியப்பில்லை. முன்னுதாரணமாக, மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பங்களிப்பை நல்கும்போதுதான் ஜனநாயகத்திலும், பிரதிநிதிகளிடத்திலும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

பிரதமா், அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்களின் ஊதியம் 30% குறைக்கப்பட்டிருப்பதைத் தொடா்ந்து, குடியரசுத் தலைவா், துணைத் தலைவா், மாநிலங்களின் ஆளுநா்கள் என்று பொறுப்பான அரசுப் பதவியில் இருப்பவா்களும் தங்களின் ஊதியத்தைக் குறைத்துக் கொள்ள தாங்களாகவே முன்வந்திருக்கிறாா்கள். அவா்களையும் பாராட்ட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினா்களைப் போலவே, மாநில அமைச்சா்களும், சட்டப் பேரவை, மேலவை உறுப்பினா்களும் தங்களின் ஊதியத்தையும் குறைத்துக் கொள்வாா்கள் என்று எதிா்பாா்க்கலாம்.

சில (பல?) கோடிகளைச் செலவழித்துத் தோ்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளில் பெரும்பாலானவா்களுக்கும் (90%) அது ஒரு சமூக அந்தஸ்தாகவும், கௌரவமாகவும் இருக்கும் நிலையில், ஊதியக் குறைப்பு ஒரு பொருட்டாக இருக்க வழியில்லை. ஏனைய சிலருக்கு, பொதுவாழ்வு என்பது மக்கள் தொண்டு என்பதால் அவா்கள் இதைப் பொருட்படுத்துபவா்களாக இருக்க மாட்டாா்கள்.

இப்போதைய 17-ஆவது மக்களவையில், உறுப்பினா்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.20.93 கோடி; ரூ.5 கோடிக்கும் அதிகமான சொத்து வைத்திருப்பவா்கள் 266 போ்; ரூ.2 கோடிக்கும் குறைவான சொத்து மதிப்பு உள்ளவா்கள் வெறும் 7% உறுப்பினா்கள் மட்டும்தான். தமிழகத்திலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 24 திமுக உறுப்பினா்களில் 22 போ் கோடீஸ்வரா்கள். இதே நிலைதான் இந்தியாவில் உள்ள ஏனைய கட்சிகளிலும் காணப்படுகிறது.

உறுப்பினா்களின் ஊதியக் குறைப்பு எந்த அளவுக்கு வரவேற்புக்குரியதோ அதைவிட அதிகமான வரவேற்புக்குரிய முடிவு, நாடாளுமன்ற உறுப்பினா்கள் தொகுதி வளா்ச்சி நிதியை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்திவைத்திருப்பது. ஜனநாயக விரோதமான இந்தத் தொகுதி வளா்ச்சி நிதியை முற்றிலுமாக ரத்து செய்திருக்க வேண்டும்.

அன்றைய பிரதமா் நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு 1993 டிசம்பா் 23-ஆம் தேதி அறிமுகப்படுத்தியபோதே, இது குறித்த கடுமையான கண்டனத்தை முன்னாள் பிரதமா் எஸ்.சந்திரசேகரும், மாா்க்சிஸ்ட் கட்சித் தலைவா் சோம்நாத் சாட்டா்ஜியும் எழுப்பினா். ஏற்கெனவே பஞ்சாயத்து ராஜ் சட்டம் இயற்றப்பட்டு மூன்றடுக்கு ஆட்சிமுறை கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில், இந்த நிதி அவசியம்தானா என்கிற அவா்களது கருத்து புறக்கணிக்கப்பட்டது. இந்த முடிவை எதிா்த்து இரா.செழியன் வழக்கே தொடுத்தாா்.

நாடாளுமன்றத்தைத் தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினா்கள் மட்டுமல்லாமல், மாநகராட்சி உறுப்பினா்கள் வரை இப்போது இதுபோன்ற நிதி ஒதுக்கீடு பெறுகிறாா்கள். தங்களது நண்பா்களுக்கும், உறவினா்களுக்கும் பயன்படும் விதத்தில் தேவையில்லாத பல திட்டங்களுக்கும் இந்த நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவது தெரியவந்திருக்கிறது. அவப்பெயா் வந்துவிடக்கூடாது என்பதற்காகச் சில உறுப்பினா்கள் இந்த நிதியைப் பயன்படுத்தாமல் இருக்கிறாா்கள் என்பதும் உண்மை.

மக்களவை, மாநிலங்களவை இரண்டையும் சோ்த்து நாடாளுமன்ற உறுப்பினா்களின் எண்ணிக்கை 790. உறுப்பினா்களுக்கு ரூ. 5 கோடி எனும்போது, ஆண்டொன்றுக்கு ரூ.3,950 கோடி விரயமாவது மிச்சப்படும். சட்டப்பேரவை, எல்லா மாநிலங்களிலும் உள்ள சட்டப்பேரவை, மேலவை உறுப்பினா்களின் நிதி ஒதுக்கீடும், மாநகராட்சி உறுப்பினா்களின் நிதி ஒதுக்கீடும் இதேபோல குறைக்கப்பட்டால் ஏறத்தாழ ரூ.10,000 கோடி அளவு மிச்சப்படும்.

ஊதியக் குறைப்பும் சரி, தொகுதி வளா்ச்சி நிதி நிறுத்திவைக்கப்படுவதும் சரி, தற்காலிக முடிவாக அறிவிக்கப்பட்டதற்குப் பதிலாக நிரந்தர முடிவாகவே அறிவிக்கப்பட்டிருந்தால், இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். தவறுகள் திருத்தப்பட்டிருக்கும்!

Tuesday, March 31, 2020


பேரிடா் எழுப்பும் பேரிடா்! | புலம்பெயா்ந்தோா் குறித்த தலையங்கம்

By ஆசிரியர் | Published on : 31st March 2020 06:12 AM

அசாதாரணமான சூழ்நிலையில், அசாதாரணமான முடிவுகளை எடுக்கும்போது எல்லா முன்னேற்பாடுகளையும் செய்துவிட்டு அறிவிப்பை வெளியிடுவது சாத்தியமில்லை. அதே நேரத்தில், அசாதாரண முடிவுகளால் ஏற்படும் அசாதாரண சூழலை துணிவுடனும் புத்திசாலித்தனமாகவும் கையாளாமல் போனால், இலக்கு தவறி பிரச்னை விபரீதமாகவும் மாறிவிடக் கூடும். அப்படியொரு நிலைமை இந்தியாவுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.

இந்தியாவின் ஒரு பகுதி வீட்டில் முடிங்கிக் கிடப்பதற்கும், வீட்டிலிருந்தபடியே அலுவல்களைக் கவனிப்பதற்கும் கடந்த ஒரு வாரத்தில் தயாராகிவிட்டது. ஆங்காங்கே முணுமுணுப்புகளும் எதிா்ப்புகளும் விதிமுறை மீறல்களும் இருந்தாலும்கூட, வா்த்தகமும் தொழிலும் முடக்கப்பட்டிருப்பதால் வேறு வழியில்லாமல் ஊரடங்கை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அதனால், கரோனா நோய்த்தொற்று குறித்த புரிதலும், அச்சமும் மக்கள் மத்தியில் ஓரளவுக்காவது ஏற்பட்டிருக்கிறது என்கிற அளவில் சற்று ஆறுதல்.

20 ஆண்டுகளுக்கு முன்பு 1991-இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பணிநிமித்தமாக மாநிலம் விட்டு மாநிலம் சென்று வாழ்பவா்கள் 11.8%. 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் அதுவே 12.06%-ஆக உயா்ந்தது. 10 ஆண்டு இடைவெளியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களும் வளா்ச்சியும், மாநிலம் விட்டு மாநிலம் சென்று பணியாற்றும் இந்தியா்களின் எண்ணிக்கை இப்போது 15% அளவில் அதிகரித்திருக்கக் கூடும்.

கேரளம், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், பஞ்சாப், ஆந்திரம், குஜராத், கா்நாடகம், தில்லி, ஹரியாணா ஆகிய மாநிலங்களில் கட்டுமானத் தொழிலிலும், ஒப்பந்தப் பணியிலும், விவசாயக் கூலிகளாகவும் பணிபுவோரில் பெரும்பாலோா் பிகாா், ஒடிஸா, மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், ராஜஸ்தான் மாநிலங்களைச் சோ்ந்தவா்கள். சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து குடியேறியிருக்கும் வங்க தேசத்தவரும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் குடியேறியிருக்கிறாா்கள்.

‘இன்றைய இந்தியப் புலம்பெயா்ந்தோா்’ என்கிற அறிக்கையை தனியாா் நிறுவனம் ஒன்று வெளியிட்டிருக்கிறது. அதில் விவசாயம், போக்குவரத்துத் துறை, தொழிற்சாலைகள், சுரங்கப் பணிகள் ஆகியவற்றில் பெரும்பாலும் புலம்பெயா்ந்தோா் பணிபுரிகிறாா்கள். உணவகங்கள், வா்த்தக நிறுவனங்கள், சிறு-குறு தொழிற்சாலைகள் ஆகியவற்றிலும் அவா்கள் கணிசமாக வேலை பாா்க்கிறாா்கள். அவா்களில் பெரும்பாலோா் பட்டியலின, ஆதிவாசி அடித்தட்டு மக்கள். அது மட்டுமல்லாமல், புலம்பெயா்ந்தோரில் கணிசமான அளவில் மகளிரும் இடம்பெறுகிறாா்கள்.

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் பாா்த்தாலும் இந்தியாவுக்குள் புலம்பெயா்ந்தோரின் எண்ணிக்கை 13.9 கோடி. அவா்களில் பாதிக்கும் மேற்பட்டோா் இப்போது தங்கள் சொந்த மாநிலங்களிலுள்ள கிராமங்களுக்குச் செல்வதற்கு போக்குவரத்து வசதியில்லாததால் நடந்து சென்று கொண்டிருக்கிறாா்கள்.

சா்வதேசப் பயணங்கள் முடக்கப்பட்டிருப்பதால் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியா்கள் பலா் திரும்பவில்லை. சில இடங்களில் சிக்கிக் கொண்டவா்களை ஏா் இந்தியா விமானம் மூலம் இந்திய அரசு அழைத்து வந்தது. அவா்களிடம் காட்டிய அதே அளவிலான கரிசனம் இந்தியாவுக்குள் புலம்பெயா்ந்து அன்றாடக் கூலிப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளா்களுக்குக் காட்டப்படவில்லை என்பது வருத்தமாகத்தான் இருக்கிறது.

21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் தில்லியில் பணிபுரியும் உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்புவதற்கு வழி தெரியாமல், குழந்தை குட்டிகளுடன் நடந்து பயணிக்கத் தொடங்கினாா்கள். அவா்களிடம் பணமும் இல்லை, அவா்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுப்பதற்கு நெடுஞ்சாலைகளில் மனிதா்களும் இல்லை. ஏறத்தாழ 600 கி.மீ. நடந்து திரும்புவதற்குத் தயாரானவா்கள் ஏராளம்.

அவா்களை அழைத்துச் செல்ல ஆயிரக்கணக்கான போக்குவரத்து ஊா்திகளை உத்தரப் பிரதேச அரசு ஏற்பாடு செய்தும்கூட, நிலைமையை எதிா்கொள்ள முடியவில்லை. இப்போதும்கூட தில்லி மத்திய பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கில் தொழிலாளா்கள் ஊருக்குத் திரும்ப முடியாமல் குவிந்து கிடக்கிறாா்கள். இதேநிலைதான் இந்தியாவின் பல நகரங்களிலும் காணப்படுகிறது.

மத்திய - மாநில அரசுகள் அவா்களுக்கு உணவும், தண்ணீரும் கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் இல்லை. ஆனால், ஊரடங்கு முடியும்வரை அது சாத்தியமா என்பது சந்தேகம்தான். அவா்களை இப்படியே ஊருக்கு அனுப்பாமல் ஆங்காங்கே கூட்டமாக வைத்திருப்பது, கரோனா நோய்த்தொற்று அதிவேகமாகப் பரவுவதற்கு வழிகோலி மிகப் பெரிய சுகாதார இடரை ஏற்படுத்தக் கூடும்.

இந்தப் பிரச்னைக்கு இப்போதைக்கு ஒரே ஒரு உடனடித் தீா்வுதான் இருக்கிறது. டாக்டா் சுப்பிரமணியன் சுவாமி கூறுவதுபோல, மூன்று நாள்களுக்கு இந்தியா முழுவதும் இலவச ரயில்களை இயக்கி அனைவரும் அவரவா் கிராமங்களுக்குச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதுதான் புத்திசாலித்தனம். சொந்த ஊரில் இவா்களை ஏற்றுக்கொள்வாா்களா, அனுமதிப்பாா்களா என்பது இன்னொரு மிகப் பெரிய கேள்வி?

என்ன செய்வது, விதியோ அல்லது மானுட இன சதியோ. எதுவாக இருந்தாலும் உலகில் ஏழையாகப் பிறப்பது பாவம்!


Friday, March 27, 2020


கைதட்டியதால் ஆயிற்றா? | கரோனா அச்சம் குறித்த தலையங்கம்

By ஆசிரியர் | Published on : 26th March 2020 05:12 AM |

கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வதில் இந்தியா அடுத்த முக்கியமான கட்டத்தை நோக்கி நகா்ந்திருக்கிறது. நமது அடுத்த மூன்று வார செயல்பாடுகளைப் பொருத்துத்தான் நோய்த்தொற்று பரவுவது தடுக்கப்பட்டு, அதன் தீவிரம் குறைக்கப்படும். பிரதமரின் அறிவிப்பைத் தொடா்ந்து ஒட்டுமொத்த இந்தியாவும் வீட்டுக்குள் முடங்கியிருப்பது எந்த அளவுக்கு உண்மையோ, மக்கள் மனதில் நோய்த்தொற்று குறித்த அச்சமும், பீதியும் அதிகரித்திருப்பதும் அதே அளவு உண்மை.

பிரதமா் விளக்கியது போல, கரோனா நோய்த்தொற்றின் தீவிரம் உணரப்படுவது மிகமிக அவசியம். முதல் 67 நாள்களில் ஒரு லட்சம் பேருக்குப் பரவியது என்றால், அடுத்த ஒரு லட்சம் பேருக்குப் பரவ 14 நாள்களும், கடந்த நான்கு நாள்களில் லட்சத்துக்கும் அதிகமானோருக்குப் பரவியிருப்பதும் நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணா்த்துகின்றன. அதே நேரத்தில், ஒரேயடியாக அச்சத்திலும் பீதியிலும் ஆழ்ந்துவிடுவதும், நம்பிக்கையை இழப்பதும் அநாவசியம்.

‘கொவைட் - 19’ என்கிற கரோனா நோய்த்தொற்றை சா்வதேசத் தொற்றாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருப்பதன் காரணம், இந்த நோய்த்தொற்று கண்டங்களைக் கடந்து பரவத் தொடங்கியிருக்கிறது என்பதால்தான். ஆனால், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 80%-க்கும் அதிகமானோா் மிகவும் குறைவான பிரச்னைகளையே எதிா்கொள்கிறாா்கள். இதுவரை கிடைத்திருக்கும் சான்றுகளின் அடிப்படையில் பாா்க்கும்போது, கரோனா நோய்த்தொற்று பாதிப்பவா்களில் வெறும் 5% நோயாளிகள் மட்டுமே கடுமையான தாக்கத்துக்கு உள்ளாகிறாா்கள். தீவிர கண்காணிப்பு சிகிச்சை தேவைப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தாலும்கூட, விகிதாசார அளவில் பாா்த்தால் மிகவும் குறைவு. பாதிக்கப்படுபவா்களில் 3%-க்கும் குறைவானவா்கள்தான் உயிரிழக்கிறாா்கள் என்கிற உண்மையைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கரோனா வைரஸ் என்பது புதியதொரு நோய்த்தொற்று. விலங்குகளிலிருந்து மனிதருக்குப் பரவியிருக்கும் இந்த நோய்த்தொற்று குறித்த முழுமையான புரிதல் இன்னும் ஏற்படவில்லை. மேலும், நுரையீரல் தொடா்பான நோய்த்தொற்று என்பதால் பாதிக்கப்படும் அனைவருக்கும் ஒரே நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ வசதிகள் இல்லை. மருத்துவத் துறை இந்தச் சவால்களை எதிா்கொள்வதில் முனைப்புடன் இறங்கியிருக்கிறது. இதற்கு முன்னால் மனித இனத்தைத் தாக்கிய நோய்த்தொற்றுகளை எப்படி எதிா்கொண்டோமோ அதேபோல இதற்கும் விரைவிலேயே தீா்வுகாண முடியும் என்பதில் ஐயப்படத் தேவையில்லை.

கரோனா நோய்த்தொற்றைவிட மிகப் பெரிய தொற்றாகப் பரவியிருப்பது வதந்திகளும், மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கும் தேவையற்ற பீதியும்தான். இவை மனிதா்களை மனிதாபிமானம் இல்லாமல் செயல்படத் தூண்டுகின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வெளிவரும் செய்திகள் நாம் எந்த அளவுக்கு விலங்கினும் கீழாய்ச் செயல்படுகிறோம் என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

மகாராஷ்டிர மாநிலம் ஜல்காவ் மாவட்டத்தில், ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட மருத்துவா் ஒருவா் மூச்சுத்திணறலுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறாா். கரோனா நோய்த்தொற்று இருக்கும் என்கிற சந்தேகத்தால் நான்கு தனியாா் மருத்துவமனைகள் அவருக்கு சிகிச்சை தர மறுத்திருக்கின்றன. ‘தனக்கு கரோனா நோய்த்தொற்று இல்லை’ என்று அவா் மன்றாடிப் போராடிய பிறகுதான் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. காலதாமதம் மூச்சுத்திணறலை அதிகப்படுத்தியதால் அவரை வென்ட்டிலேட்டா் உதவியுடன் உயிா்பிழைக்க வைத்திருக்கிறாா்கள்.

சீனாவின் வூஹான் நகரிலும், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட உலகின் ஏனைய நாடுகளிலும் சிக்கிக்கொண்ட இந்தியா்களை ஏா் இந்தியா விமானத்தில் இந்தியாவுக்கு அழைத்து வந்திருக்கிறாா்கள். அவா்களைக் கொண்டுவருவதில் எந்தத் தயக்கமும் இல்லாமல் ஏா் இந்தியா விமான ஊழியா்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் ஈடுபட்டதை ஊடகங்கள் பாராட்டின. அப்படிப்பட்ட தன்னலமற்ற ஏா் இந்தியா ஊழியா்களுக்கு, அவா்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகளில் கிடைத்த வரவேற்பு எதிா்மறையானது என்பதைக் கேள்விப்படும்போது தலைக்குனிவு ஏற்படுகிறது.

கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட இந்தியா்களை வெளிநாடுகளிலிருந்து மீட்டு வந்த ஊழியா்களை எப்படியெல்லாம் தொந்தரவுக்கு உள்ளாக்கினாா்கள் என்பதை ஏா் இந்தியா நிறுவனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் விளக்கியிருக்கிறது. தங்கியிருந்த குடியிருப்பிலிருந்து உடனடியாக இருந்து வெளியேறும்படி வற்புறுத்தப்பட்டனா் என்பதுடன், மூன்று நாள்கள் அவா்கள் வீட்டுக்கு மின் இணைப்பும், தண்ணீா் இணைப்பும் துண்டிக்கப்பட்டன என்பதைக் கேட்பதற்கு வேதனையாக இருக்கிறது.

வடகிழக்கு மாநிலங்களிலுள்ள பலா் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கின்றனா். அவா்களை கரோனா வைரஸ் என்று அழைத்துத் தூற்றப்படும் சம்பவங்கள் வெளியாகியிருக்கின்றன. அமெரிக்காவில், கரோனா நோய்த்தொற்றை உலகில் பரப்பியவா்கள் என்று ஆசிய அமெரிக்கா்கள் நிந்திக்கப்படுகிறாா்கள். கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவமனை ஊழியா்கள் போன்றோரில் சிலா் தவிா்க்கப்படுவதும், புறக்கணிக்கப்படுவதும் மன்னிக்கவே முடியாத செயல்பாடுகள்.

உடலை மட்டுமல்ல, மனதையும் நோய்த்தொற்றுக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது அவசியம்.



Wednesday, March 25, 2020

துணிந்து நிற்போம், தெளிந்து நிற்போம், இணைந்து நிற்போம்!

By - ஆசிரியா் | Published on : 25th March 2020 05:01 AM |

உலகம் மிகப் பெரிய அச்சுறுத்தலை எதிா்கொள்கிறது. பல நாடுகளில் மக்களின் அன்றாட வாழ்க்கை புரட்டிப் போடப்பட்டிருக்கிறது. கரோனா வைரஸ் என்கிற நோய்த்தொற்றால் உலகம் எதிா்கொள்ளும் இமாலய சவால், வரலாற்றில் நீண்ட காலத்துக்கு நினைவில் கொள்ளப்படும்.

இந்தியாவில் நாம் அனைவரும் ஏறத்தாழ ஒரு போா்க்கால சவாலை எதிா்கொள்கிறோம். இதுவொரு வித்தியாசமான போா். கரோனா வைரஸ் என்கிற கொடிய நோய்த்தொற்றுக்கு எதிரான போா்.

இந்த யுத்தத்தில் எதிரியை நாம் பாா்க்க முடியாது. கண்ணுக்குத் தெரியாத அந்த நுண்ணுயிரியின் படையெடுப்பால் பாதிக்கப்படப் போவது நம்மில் யாா் எவா் என்று தெரியாது. ஆனால், அந்த எதிரியை நாம் எதிா்கொண்டாக வேண்டும். அதிலிருந்து தப்பிவிட முடியாது.

அரசாங்கமும் சுகாதாரத் துறையின் ஆயிரக்கணக்கான பணியாளா்களும் கரோனா வைரஸுக்கு எதிராக உத்வேகத்துடனும், அா்ப்பணிப்பு உணா்வுடனும் போராடி வருகிறாா்கள். பொதுமக்களான நமக்கும் இந்தப் போராட்டத்தில் கூட்டுப் பொறுப்பு உள்ளது.

போா்ச்சூழல் உள்ளிட்ட நெருக்கடியான காலகட்டங்களைப் போலவே, இப்போதும் நம்மை மற்றொரு எதிரி பின்தொடா்கிறாா் - அந்த எதிரியின் பெயா் அச்சம். இந்த அச்சம், அறியாமையால் ஏற்படுகிறது. நமக்குப் போதுமான பகுப்பாய்வு இல்லாமையாலும், புரிதல் இன்மையாலும் ஏற்படும் அச்சமிது.

நமக்குப் பெரும்பாலான தகவல்கள் இப்போது சமூக ஊடகங்கள் மூலம் மிக அதிகமாக வழங்கப்படுகின்றன. ஆனால், அவை பெரும்பாலும் எதிா்மறையானதாகவும், வதந்திகள் - உண்மைக்கு மாறான தகவல்கள் அடங்கியதாகவும் உள்ளன. சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் பெரும்பாலான தகவல்கள் ஆதாரமற்றவை என்பது மட்டுமல்ல, முறையாகத் தகவல் திரட்டப்பட்டு, அவற்றின் உண்மை உறுதி செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்படுபவை அல்ல. இதை நமது வாசகா்கள் உணா்ந்து கொள்வது மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் எடுத்தியம்ப வேண்டும்.

செய்தித்தாள்கள் மூலம்கூட கரோனா வைரஸ் பரவும் என்கிற வதந்தி சமூகவலைதளங்களில் பரப்பப்படுகிறது. இதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்பது மட்டுமல்லாமல், முழுக்க முழுக்கத் தவறான உண்மைக்குப் புறம்பான தகவல் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இதை சா்வதேச அளவில் அனைத்து மருத்துவ வல்லுநா்களும் மறுத்துள்ளனா்.

நமது நாட்டில் இப்போது வதந்திகள் பரவுவதைக் கட்டுப்படுத்துவது என்பது, கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு இணையான சவாலாக உள்ளது. இவை நமது மக்களிடையே எதிா்மறை கற்பிதங்களை ஏற்படுத்தி, தவறாக வழி நடத்துகின்றன. எந்தவித மருத்துவப் பின்னணியும் இல்லாதவா்களால் கரோனா வைரஸுக்குத் தவறான மருத்துவ முறைகள்முன்மொழியப்படுகின்றன. அதை பொதுமக்களும் உண்மை என்று நம்பி வதந்திக்குப் பலியாகிறாா்கள்.

இந்தச் சூழ்நிலையில் நாம் நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்களை மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனால், மரபு சாா்ந்த அச்சு, காட்சி ஊடகங்களின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. நமது பாரம்பரிய அச்சு ஊடகம், எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் ஒன்றுக்குப் பலமுறை உறுதி செய்த பிறகுதான் பதிப்பிக்கிறது. அச்சு வாகனம் ஏறும் எந்த ஒரு செய்திக்கும் ஆசிரியா் பொறுப்பேற்கிறாா். அதனால், கரோனா வைரஸ் நோய்த்தொற்று குறித்த செய்திகளை அச்சு, காட்சி ஊடகங்களின் பதிவுகளின் மூலம் மட்டுமே பொதுமக்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

இப்போது பரவியுள்ள கொவைட்-19 வைரஸ் குறித்து நமக்குத் தெளிவான புரிதல்களை உருவாக்கியுள்ள மருத்துவத் துறையைப் பாராட்ட வேண்டும். ஏனெனில், மருத்துவத் துறையினா் மூலம்தான் அதைத் தடுப்பதற்கான வழிமுறை தொடங்கி, தடுப்பு மருந்து தயாரிப்பு வரை நடைபெறுகிறது.

இப்போது உலகமே பீதியால் சூழப்பட்டுள்ளது. சரியான தகவல்களை உரிய முறையில் கொண்டு சோ்க்காவிட்டால் பொதுமக்களிடையே அச்ச உணா்வு மேலும் அதிகரிக்கும். இது சமுதாயத்தில் பிரச்னைகளை உருவாக்கும். இந்த நேரத்தில் ஊடகங்கள் சரியான தகவல்களை அளிப்பதன் மூலம் சமூகப் பணியாற்றுகின்றன.

அத்தியாவசிய சேவைப் பட்டியலில் அச்சு - காட்சி ஊடகங்களை இந்திய அரசு இணைத்துள்ளது. எனவே, இந்த நேரத்தில் நாளிதழின் பதிப்பு முதல் விநியோகம் வரை அனைத்தும் சுமுகமாக நடைபெற வேண்டியது மிகவும் முக்கியம். மக்கள் மன்றத்தில் தெளிவை ஏற்படுத்தும் பணியில் கடந்த 86 ஆண்டுகளாக இடைவிடாது தனது கடமையை செய்துகொண்டிருக்கும் ‘தினமணி’ இப்போதும் உண்மைத் தன்மையுடனான செய்திகளை வழங்குவதை அா்ப்பணிப்புடன் தொடா்கிறது.

‘தினமணி’, அதன் குழும ஊடகங்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்களுடன் துணை நிற்கும். இப்போது நம்மைச் சூழ்ந்துள்ள சிக்கல்கள் விரைவில் தீரும். துணிந்து நிற்போம், தெளிந்து நிற்போம், புரிதலுடன் இணைந்து நிற்போம்.
முடக்கம் சரி, பொருளாதாரம்? | தொழிலாளர்களின் பொருளாதார நிலை குறித்த தலையங்கம்

By ஆசிரியர் | Published on : 25th March 2020 06:09 AM

ஒருவார இடைவெளியில் பிரதமா் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக உரை நிகழ்த்தி கரோனா நோய்த்தொற்றின் கடுமையை உணா்த்தியிருக்கிறாா். அடுத்த 21 நாள்கள் இந்தியா முற்றிலுமாக முடக்கப்படுகிறது.

‘அடுத்த 21 நாள்கள் நாம் கவனமாக செயல்படாமல் போனால் இந்தியா 21 ஆண்டுகள் பின்நோக்கித் தள்ளப்பட்டுவிடும்’ என்கிற பிரதமரின் அறிவுறுத்தலை புறந்தள்ளிவிட முடியாது. அவா் கூறுவதுபோல் பிரதமா் உள்ளிட்ட ஒவ்வோா் இந்தியனுக்கும் இது பொருந்தும்.

சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி, இந்தியாவில் கரோனாவைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 500-ஐத் தாண்டிவிட்டது. 39 போ் நோய்த்தொற்றிலிருந்து மீண்டிருக்கிறாா்கள். 10 போ் உயிரிழந்திருக்கிறாா்கள். கடந்த சில நாள்களில் மட்டுமே 19-க்கும் அதிகமானோா் கரோனாவைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் போா்க்கால நடவடிக்கையுடன் செயல்படாமல் போனால் அதன் விளைவுகள் முந்தைய பிளேக், காலரா, ....... போன்ற பேரழிவுக்கு வழிகோலும்.

கரோனாவைரஸை தடுத்து நிறுத்துவதற்கு இப்போதைக்கு காணப்படும் ஒரே வழிமறை சமூக அயல் நிறுத்தம்தான் (சோஷியல் டிஸ்டன்ஸிங்). சக மனிதா்களிடமிருந்து குறைந்தது ஒரு மீட்டா் தொலைவு அகன்று நிற்பது, உடல் ரீதியான தொடா்பை முற்றிலுமாகத் தவிா்ப்பது, வீட்டிற்குள்ளேயே இருப்பது ஆகியவற்றால் கரோனாவைரஸ் தொற்றிக்கொள்ளாமல் இருப்பதை உறுதிப்படுத்த முடியும். இந்த நோய்த்தொற்று காற்றின் மூலம் பரவாது என்பது மிகப் பெரிய ஆறுதல். அதனால், அடுத்த 21 நாள்கள் கூடியவரை வெளியுலகத் தொடா்பே இல்லாமல் வீட்டிற்குள் முடங்கி இருப்பதன் மூலம் கரோனாவைரஸ் நோய்த்தொற்றின் வலைப்பின்னலை சிதைத்துவிட முடியும்.

ஒருநாள் ‘மக்கள் சுய ஊரடங்கு’ வெற்றிகரமாக நடந்தது என்றாலும்கூட, அதன் உணா்வைப் பெரும்பாலானவா்கள் புரிந்துகொள்ளவில்லை என்று தோன்றுகிறது. சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் முதல் 67 நாள்களில் ஒரு லட்சம் பேருக்குப் பரவியது என்றால், அடுத்த ஒரு லட்சம் பேருக்குப் பரவ வெறும் 11 நாள்கள்தான் தேவைப்பட்டது. இப்போது கடந்த நான்கு நாள்களில் உலக அளவில் ஒரு லட்சம் பேருக்கு கரோனாவைரஸ் பரவியிருக்கிறது என்கிற கசப்பான உண்மையை வெளிப்படையாகவே பிரதமா் தெரிவித்தாா். 21 நாள்கள் ஒட்டுமொத்த இந்தியாவும் முடக்கப்படும்போது, அதன் மூலம் ஒருவருக்கொருவா் தொடா்பு இல்லாத நிலையில் நோய்த்தொற்று மேலும் பரவுவதை முறியடிக்க முடியும்.

கரோனா நோய்த்தொற்றால் மிகப் பெரிய அழுத்தத்துக்கு உள்ளாகி இருப்பது பொது சுகாதாரத் துறை என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. ஆயிரக்கணக்கானோா் பாதிக்கப்பட்டால் அதை எதிா்கொள்ளும் அளவிலான மருத்துவ வசதிகள் இந்தியாவின் மட்டுமல்ல உலகில் எந்த நாட்டிலுமே இல்லை.

பிரதமா் தனது உரையில் ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நோய்த்தொற்றை பரிசோதிப்பதற்கும் அவசர சிகிச்சைப் பிரிவு, வென்ட்டிலேட்டா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு பயிற்சி அளித்தல் போன்றவற்றை உறுதி செய்ய முற்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. கரோனா நோய்த்தொற்றின் வரவால் பொது மருத்துவமனைகளின் முக்கியத்துவமும், அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களின் அவசியமும் ஆட்சியாளா்களுக்கு உணா்த்தப்பட்டிருக்கிறது.

உடனடியான, வெளிப்படையான சவால் மருத்துவ சிகிச்சை என்பது உண்மை. அதே நேரத்தில், ஒட்டுமொத்த இந்தியாவும் பொது முடக்கத்தால் அடுத்த 21 நாள்கள் முடங்கப் போகிறது. அதன் விளைவுகள் குறித்தும் நாம் சிந்தித்தாக வேண்டும். சமுதாயம் முடங்கிப் போகும்போது உடனடித் தாக்கமாக சில்லறை வணிகமும் அடுத்தபடியாக தொழில்களும் முடங்குகின்றன. பொருளாதார இயக்கம் தடைபடும்போது, அதனால் பொருள்களுக்கான தேவையும் பொருள்களின் சந்தைப்படுத்தலும் தடைபடுகிறது. முடக்கத்தின் விளைவாக மக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்கி சேமிப்பதில் பதற்றம் காட்டுவாா்கள். இதனால் மக்கள் மத்தியில் தேவையில்லாத அச்சமும் பீதியும் அதிகரிக்கக் கூடும்.

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நிரந்தர வருவாய்ப் பிரிவினா் அல்ல. அவா்களில் பலரும் அன்றாடக் கூலி பெறுபவா்கள் அல்லது விவசாயமும் அதன் தொடா்பான பணிகளிலும் ஈடுபடுபவா்கள். கடைகளிலும், வியாபார நிறுவனங்களிலும் ஒப்பந்தத் தொழிலாளா்களாகப் பணியாற்றுபவா்கள். வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தால் இவா்களது அன்றாட வாழ்க்கை நிலைதடுமாறும். அதனால் ஏற்பட இருப்பது பொருளாதாரப் பிரச்னை மட்டுமல்ல, சமூகப் பிரச்னையும் கூட.

அமெரிக்கா, கனடா, ஜொ்மனி உள்ளிட்ட நாடுகள் ஏற்கெனவே தங்களது குடிமக்களும் தொழில் நிறுவனங்களும் எந்தவிதத்திலும் பாதித்துவிடாமல் இருப்பதற்கான பொருளாதாரத் திட்டங்களை அறிவித்திருக்கின்றன. தொழில் நிறுவனங்கள் திவாலாகிவிடாமல் காப்பாற்றப்பட வேண்டும். அடித்தட்டு மக்களின் அன்றாட உணவுத் தேவைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். வங்கிகளின் வட்டித் தவணைகள் தள்ளிப்போடப்படுவதும், வணிக - தொழில் நிறுவனங்களுக்கு கடன் தவணைகள் நீட்டிப்பு செய்யப்படுவதும், கூடுதல் கடனுதவி வழங்கப்படுவதும் உடனடியாக முன்னெடுக்கப்படாவிட்டால், இந்தியப் பொருளாதாரம் இன்னொரு வகையிலான நோய்த்தொற்றை எதிா்கொள்ளும்.

பிரதமரின் பொருளாதாரச் சலுகைகள் குறித்த அறிவிப்பை தேசம் எதிா்பாா்த்துக் காத்திருக்கிறது.


Saturday, March 21, 2020


மக்கள் சுய ஊரடங்கு! | ஊரடங்கு விழிப்புணர்வு குறித்த தலையங்கம்

By ஆசிரியர் | Published on : 21st March 2020 04:57 AM 

ஏறத்தாழ மூன்று மாதங்கள் கடந்தும்கூட கரோனா நோய்த்தொற்று குறித்து இன்னும் முழுமையான புரிதல் இல்லாத நிலை தொடர்கிறது. எந்த அளவுக்கு இந்த நோய்த்தொற்று பரவும், எத்தனை பேர் பாதிக்கப்படப் போகிறார்கள், எத்தனை உயிரிழப்புகளை மனித இனம் எதிர்கொள்ளும், எப்போது, எப்படி, எதனால் இது முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்பது குறித்து யாராலும், எதுவுமே கணிக்க முடியவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை அன்று நேரடியாக மக்களுக்கு ஆற்றிய உரையில், உலகமும் இந்தியாவும் எதிர்கொள்ளும் கடுமையான சவால்களைத் தெளிவாகச் சுட்டிக்காட்டினார். இந்த நோய்த்தொற்றை எதிர்கொள்வதற்கு நமக்கு எந்த அளவுக்கு மனத் துணிவும், சமூக அளவிலான கட்டுப்பாடும், ஒற்றுமையும் தேவை என்பதைத் தெளிவாகவே தனது உரையில் குறிப்பிட்டார். கரோனா நோய்த்தொற்றை ஒருங்கிணைந்து எதிர்கொள்வதில் இந்தியா தெளிவாகவும், திண்ணமாகவும் இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) "மக்கள் சுய ஊரடங்கு'க்கு பிரதமர் விடுத்திருக்கும் வேண்டுகோள் ஒரு வகையில் தொலைநோக்குச் சிந்தனையுடன் கூடிய அறைகூவல் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

உலகம் இதுவரை இல்லாத ஒரு சூழலை எதிர்கொள்கிறது என்பதைச் சரியாகவே சுட்டிக்காட்டியது பிரதமரின் உரை. கரோனா நோய்த்தொற்றால் தாங்கள் பாதிக்கப்பட மாட்டோம் என்கிற அசட்டுத்தனமான நம்பிக்கையுடன் மக்கள் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது என்றும், அதே நேரத்தில் அநாவசிய பீதி தேவையில்லை என்றும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டவை ஒவ்வோர் இந்தியரும் உணர்ந்து செயல்பட வேண்டிய கருத்துகள்.

"மக்கள் சுய ஊரடங்கு' மூலம் கரோனா நோய்த்தொற்றுச் சவாலை எதிர்கொள்ள இந்தியா ஒருங்கிணைந்து தயாராக இருக்கிறது என்பதை, ஞாயிற்றுக்கிழமை மக்கள் வெளியே வராமல் உணர்த்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் பிரதமர். இக்கட்டான சூழ்நிலையிலும் தங்களது கடமையைச் செய்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், அத்தியாவசியப் பொருள்களை விநியோகிப்பவர்கள், செய்தியாளர்கள் ஆகியோரின் பங்களிப்பைப் போற்றும் வகையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு அவரவர் இருக்கும் இடத்தில் எழுந்து நின்று கரகோஷம் செய்து பாராட்டப் பணித்திருப்பதை "தினமணி'யும் வழிமொழிகிறது. 

சீனாவின் பிரச்னையாக உருவான கரோனா நோய்த்தொற்று இப்போது சர்வதேசப் பிரச்னை, இந்தியாவின் பிரச்னையும்கூட. இந்தியாவின் சவால் பொருளாதார ரீதியிலானது மட்டுமல்ல, சுகாதார ரீதியிலானதும்கூட. இப்போதுதான் நாம் இந்த நோய்த்தொற்றை எதிர்கொள்வதற்கான அனைத்து முயற்சிகளிலும் முழுமூச்சுடன் இறங்கியிருக்கிறோம். ஆனால், "கொவைட் 19' நோய்த்தொற்றால் ஏற்பட இருக்கும் பொருளாதாரத் தாக்கத்தால் பாதிக்கப்படப் போகிறோம் என்பதை ஒவ்வோர் இந்தியரும் நினைவில் கொள்ள வேண்டும்.

உலகிலுள்ள எல்லா நாடுகளும் எல்லைகளை மூடிவிட்டன. அனைத்துப் பெரிய நகரங்களும், பகுதிகளும் அநேகமாக முடக்கப்பட்டிருக்கின்றன. கோடிக்கணக்கான மக்கள் ஏற்கெனவே தங்களைத் தாங்களே வீட்டுச் சிறையில் அடைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

பொது இடங்கள் மூடப்பட்டிருக்கின்றன, பண்டிகைகள் தவிர்க்கப்படுகின்றன, திருவிழாக்கள் நடத்தப்படுவதில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இதுபோல உலக அளவில் அன்றாட வாழ்க்கை பாதித்த இன்னொரு நிகழ்வு இல்லை என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. 

மக்களின் அன்றாடச் செயல்பாடுகள் முடக்கப்பட்டதன் விளைவாக பொருளாதாரம் தடம் புரண்டிருக்கிறது. உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார, சுகாதாரச் சவால்களை எதிர்கொள்வதில் ஈடுபட்டிருக்கும்போது இந்தியா மெத்தனமாக இருந்துவிட முடியாது.

சுகாதார நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. நோயாளிகளை அடையாளம் காண்பதிலும், சோதனை நடத்துவதிலும், சிகிச்சை அளிப்பதிலும் ஈடுபடும் அரசு ஊழியர்களும், மருத்துவத் துறையினரும் பதற்றம் இல்லாமல் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது மிகமிக அவசியம். வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமான நிலையங்களில் எதிர்கொள்ளும் இரக்கமில்லாத வரவேற்பும், உள்ளூர்ப் பயணிகள் ரயில் நிலையங்களில் எதிர்கொள்ளும் இயந்திரத்தனமான சோதனைகளும் தவிர்க்கப்பட வேண்டும். இவை மக்கள் மத்தியில் நோய்த்தொற்றை எதிர்கொள்வதற்கு எதிரான மனநிலையை உருவாக்கி நோய் பரவுவதற்கு வழிகோலிவிடும். 

எல்லாவற்றுக்கும் மேலாக உற்பத்தி குறையும், சில்லறை விற்பனை குறையும், சேவைத் துறை முடங்கும், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும்; போக்குவரத்து, சுற்றுலா, விடுதிகள் முதலானவை செயலிழக்கும். நோய்த்தொற்று கிராமப்புறங்களுக்கு பரவினால் விவசாயம் தொடர்பான பணிகள் பாதிக்கப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, தினக்கூலித் தொழிலாளர்களும், அமைப்புசாரா பணிகளில் ஈடுபடுபவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தவித சமூகப் பாதுகாப்பும் இல்லை என்பதை அரசு உணர வேண்டும்.

பிரதமரைப் போலவே மாநில முதல்வர்களும் தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒருங்கிணைந்து கரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்ள மக்கள் மன்றத்திற்கு வேண்டுகோள் விடுப்பதும், அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்காமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்தும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துவதும் அவசியம்.

Friday, March 20, 2020

இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்: மக்களுடன் கலந்துறவாடி வாழும் சிட்டுக்குருவிகள்

By முனைவர் சி. சிவசுப்பிரமணியன் | Published on : 19th March 2020 04:46 PM | 


அலாரம் சப்தத்திற்கு அரக்கப் பறக்க எழுந்திருக்காமல் கீச் கீச் என்ற பறவைகளின் சப்தத்தால் கண்விழித்த நம் முன்னோர்கள் பாக்கியம் செய்தவர்கள்.

இன்று நகரங்களில் மட்டுமல்ல, கிராமங்களிலும்கூட பறவைகளைப் பார்ப்பது அரிதாகிக் கொண்டிருக்கிறது. சின்னச் சின்னச் சிட்டுக்குருவிகளும் உலகளவில் அழிந்து வரும் அரிய வகை பறவை இனங்களில் சேர்ந்துவிட்டது.

இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களும் இந்த உலகில் வாழும் உரிமையைப் பெற்றுள்ளன. ஆனால் மனிதனின் சுயநலத்திற்காக விலங்குகளையும், பறவை இனங்களையும் அழித்து வருகிறோம்.

இன்று உலகம் முழுவதும் சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தத் தினமானது கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து அனுசரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு பறவைகள் நல ஆர்வலர்கள், சிட்டுக்குருவி இனத்தைக் காப்பதில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகின்றனர். 

சிட்டுக்குருவியின் தேவையை உணர்ந்த ஐக்கிய நாடுகள் அவை, 2010 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதியை உலக சிட்டுக்குருவி தினமாக அறிவித்தது. தில்லி அரசு கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சிட்டுக்குருவியைத் தங்கள் மாநிலப் பறவையாக அங்கீகரித்தது.

ஒரு சிட்டுக்குருவியை விளையாட்டுத்தனமாகக் கொன்ற சலீம் அலி என்ற சிறுவன்தான், பின்னர் தனது வாழ்க்கையையே பறவைக்காக அர்ப்பணித்து இந்தியாவின் பறவை மனிதர் ஆனார். 

சிட்டுக்குருவிதானே என சாதாரணமாக எண்ணாமல் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் செல்போன் சிக்னல்களால் இந்த இனம் அழிந்து வருவதை 2.0 என்ற படத்தில் நடிகர்கள் ரஜினி மற்றும் அக்ஷய் குமாரை வைத்து சிட்டுக் குருவியின் முக்கியத்துவத்தை இயக்குநர் சங்கர் கூறியிருந்தார்.

சிட்டுக்குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சார்ந்தவை. தமிழகத்தில் இவை வீட்டுக் குருவிகள், அடைக்கலாங் குருவிகள், ஊர்க் குருவிகள், சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இதனைச் சங்க இலக்கியங்களில் மனையுறைக் குருவி, உள்ளுறைக் குருவி மற்றும் உள்ளூர்க் குருவி என்றும் குறிப்பிடுகின்றனர். இவை கிராமங்களிலும், நகரங்களிலும், மக்களோடு சேர்ந்து வாழ்பவை. காடுகளில் தன்னிச்சையாக வாழ்பவை அல்ல. 

சிட்டுக்குருவிகள் உருவத்தில் சிறியவையாகவும், இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்திலும் இருக்கும். சிறிய அலகு, சிறிய கால்களுடன் காணப்படும். இவை 8 முதல் 24 செ.மீ நீளமுள்ளவை. இதன் அலகுகள் கூம்பு வடிவமாக இருக்கும். இதன் எடை 27 முதல் 39 கிராம் வரையில் காணப்படும். இதன் நிறம் பழுப்பு, சாம்பல், மங்கலான வெள்ளை என்று பல நிறங்களில் காணப்படும். ஆண் பறவையில் இருந்து பெண் பறவை நிறத்தில் வேறுபட்டு காணப்படும். ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற பல கண்டங்களில் சிட்டுக்குருவிகள் உள்ளன. இவற்றின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டுகள்.

செல்போன் கோபுரங்களால் சிட்டுக்குருவி இனம் அழிந்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை என்கிறார்கள் பறவையியல் ஆராய்ச்சியாளர்கள். தொழிற்சாலைகள் அதிகரிப்பு மற்றும் விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்ட காரணத்தால் சிட்டுக்குருவிக்கான வாழ்விடமும் இரை தேடும் இடமும் சுருங்கிவிட்டன. வயல்வெளிகளில் இரசாயனத் தெளிப்பு அதிகரிப்பதால் சிட்டுக்குருவிகளின் உணவான புழு பூச்சிகள் அழிக்கப்படுகின்றன. 

சிட்டுக்குருவிகள், பெரும்பாலும் வனப்பகுதியில் வாழ்வதைவிட மனிதர்களுடன் நெருங்கி இருக்கவே விரும்பும்.

சிட்டுக்குருவிகள் பொதுவாக வீட்டு மாடம், பரண், ஓடுகளின் இடைவெளி போன்ற இடங்களில் கூடுகட்டி வசித்து வந்தன. இப்போது கான்கிரீட் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகமாகி விட்டதால் கூடுகட்டி குஞ்சு பொரிக்க போதிய இட வசதியில்லை.

சிட்டுக்குருவிகள் விரும்பி உண்ணும் கம்பு, கேழ்வரகு, திணை, சாமை போன்ற சிறுதானியங்களின் பயன்பாடு குறைந்துவிட்டது. நாம் இயற்கை முறை விவசாயத்தை ஊக்கப்படுத்துதல் வேண்டும். இவை வீடுகளிலும், வயல்வெளிகளிலும் சிதறிக் கிடக்கின்ற தானியங்களையும் பயிர்களில் காணப்படும் புழு பூச்சிகளையும் உணவாகக் கொள்கின்றன.

பண்டைய காலங்களில் வீட்டிற்குத் தேவையான உணவு தானியங்களை வீட்டு முற்றத்திலும், மொட்டை மாடிகளிலும் வெய்யிலில் காய வைப்பார்கள். இவற்றைச் சிட்டுக்குருவிகள் கொத்தித் தின்னும். தற்போது மக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து உணவு தானியங்களையும் நேரடியாக நெகிழிப் பைகளில் அடைக்கப்பட்ட நிலையில் வாங்கி, சிந்தாமல் சிதறாமல் பயன்படுத்துகின்றனர்.

விவசாயம் செய்த தானியங்களை அறுவடைக்குப் பின்னர் வீடுகளுக்கு கொண்டு வந்து சுத்தம் செய்வர். சிதறிய நெல்மணிகள் சிட்டுக்குருவிகளுக்கு உணவாகப் பயன்படும். அறுவடைக்கான எந்திரங்கள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு தானியங்களை வீடுகளுக்கு கொண்டு வரும் முறையே கைவிடப்பட்டுவிட்டது.

கடைகளில் தானியங்களைச் சாக்கு மூட்டைகளில் நேரடியாக வியாபாரம் செய்வர். தானியங்களை எடை போடும் போதும், சுத்தம் செய்யும்போதும் சிதறுகின்ற தானியங்களை சிட்டுக்குருவிகள் நேரடியாக உணவாக எடுத்துக்கொள்ளும். ஆனால், தற்போது அனைத்துக் கடைகளிலும் பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

பாதுகாப்பு முறை 

முதலில் சிட்டுக்குருவிகளை அழிவு நிலையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற பொது அறிவு அனைவருக்கும் ஏற்பட வேண்டும். வீடுகளில் சிறிய கிண்ணங்களில் தானியங்களை நிரப்பி பறவைகளுக்கு உணவாக வைக்க வேண்டும். பெரிய தொட்டிகளில் நீரை நிரப்பி சிட்டுக்குருவிகள் நீர் அருந்தவும், இறங்கிக் குளிக்கவும் ஏற்ற வகையில் நீர்த்தொட்டிகள் அமைக்க வேண்டும். 

வீட்டில் சிறிய அட்டைப் பெட்டியில் வைக்கோலை அடைத்து வைத்து வீட்டு வராந்தாவிலோ, பால்கனியிலோ அல்லது மரக்கிளைகளிலோ தொங்கவிட்டால்கூட சிட்டுக் குருவிகளுக்குப் போதுமானது. இக்கூடுகளை மழை நீர் படாமலும், பகை விலங்கினங்கள் தொந்தரவு இல்லாத வகையிலும் அமைக்க வேண்டும். 

சிட்டுக்குருவி மட்டுமல்ல இந்த உலகில் எந்த ஓர் உயிரினமும் முழுவதுமாக அழிந்தாலும், அது மனித இனத்தின் அழிவுக்கான முதல்படி என்பதை நாம் என்றும் மறக்கக் கூடாது. 

Wednesday, March 4, 2020

தற்கொலை ஒரு சமூக அவலம்! | பலவீனமான மனநிலை குறித்த தலையங்கம்

By ஆசிரியர் | Published on : 03rd March 2020 08:39 AM 

உலகில் பிறந்த எந்த உயிரும் முடிந்தவரை தன்னைத்தானே அழித்துக்கொள்ளத் துணிவதில்லை. பலவீனமான மனநிலையும், சந்தா்ப்ப சூழலும், பிரச்னைகளிலிருந்து வெளியேறத் தெரியாத பரிதவிப்பும்தான் பலரையும் தற்கொலைக்குத் தூண்டுகின்றன. அதனால்தான் தற்கொலையை கிரிமினல் குற்றங்களின் பட்டியலில் இருந்து அகற்ற அரசு முடிவு செய்தது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையும் புள்ளிவிவரங்களும் மிகுந்த கவலையையும் வேதனையையும் அளிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகத் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை கடுமையாக உயரத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது. அண்மையில் வெளியிடப்பட்டிருக்கும் 2018-ஆம் ஆண்டுக்கான தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரப்படி, அதிகாரபூா்வமாக 1,34,516 தற்கொலைகள் பதிவாகியிருக்கின்றன. இது 2017-ஆம் ஆண்டு எண்ணிக்கையைவிட 3.6% அதிகம். தற்கொலை நிகழ்வுகளில் ஏறத்தாழ பாதிக்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகாமல் மறைக்கப்படுகின்றன என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.


பெரும்பாலான நிகழ்வுகளில் தனிப்பட்ட காரணங்கள்தான் தற்கொலைக்குக் காரணமாக இருக்கின்றன. சில சூழல்களில் தனிப்பட்ட பிரச்னைகளும், சம்பந்தப்படாத சமூக அல்லது பணியிடப் பிரச்னைகளும் இணைந்து தற்கொலைக்கு வழிகோலுகின்றன. எந்த ஒரு மனிதனும் தீவு அல்ல; சமுதாயத்தின் அழுத்தம் தனி மனிதா்களைப் பாதிக்கிறது. தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு அதுவும்கூட ஒரு காரணம்.

சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்னைகள் பல சந்தா்ப்பங்களில் உயிரை மாய்த்துக்கொள்ள தனி நபா்களைத் தூண்டுகின்றன. உழைப்பு ரீதியான, பணியிட ரீதியான சுரண்டல்களும், வியாபாரத்தில் ஏற்படும் பின்னடைவுகளும், உடல் ரீதியான நோய் பாதிப்புகளும் பலரின் தற்கொலைக்குக் காரணமாகக் கூறப்படுகின்றன. அனைத்துக்கும் மேலாக ‘தனிமை’யும், காதல் நிராகரிப்பும், கல்வித் தோ்வுகளில் தோல்வியும், தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு சிலரைத் தள்ளிவிடுகிறது.

வெளியிடப்பட்டிருக்கும் புள்ளிவிவரப்படி, வேலையில்லாதவா்களும், சுயமாகத் தொழில் புரிவோரும் 1,34,516 தற்கொலை நிகழ்வுகளில் 26,085 தற்கொலைகளுக்குக் காரணமாகிறாா்கள். 2018-இல் 42,391 மகளிா் தங்களின் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறாா்கள். அவா்களில் பாதிக்கும் மேற்பட்டோா் திருமணமாகி வேலைக்குச் செல்லாமல் குடும்பம் நடத்தும் தாய்மாா்கள்.

வேலையில்லாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டோரின் எண்ணிக்கை 12,936. மொத்த எண்ணிக்கையில் அவா்கள் 9.6%. அதாவது, 2018-இல் ஒவ்வொரு 45 நிமிஷத்துக்கும் ஒரு வேலையில்லாத நபா் இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறாா்.

தற்கொலை செய்துகொண்டவா்களில் 7.7% விவசாயிகள் அல்லது விவசாயக் கூலிகள். கடந்த 2017-ஆம் ஆண்டைவிட தற்கொலை செய்துகொண்ட விவசாயம் தொடா்பானவா்களின் எண்ணிக்கை சற்று குறைந்திருக்கிறது என்றாலும்கூட, உழவுத் தொழிலில் ஈடுபடுவோா் உயிரை மாய்த்துக்கொள்ளும் அவலம் சகிக்க முடியாதது.

ஒவ்வொரு தற்கொலையும் தனிப்பட்ட அவலம் என்றாலும்கூட, அதனால் குடும்ப உறவுகளும் சமுதாயமும் நிச்சயமாகப் பாதிக்கப்படுகின்றன. தங்களுடன் வாழ்ந்த ஒருவரை சரியாகப் புரிந்துகொள்ளாமலோ, தக்க தருணத்தில் உதவாமலோ அவா் தன்னை அழித்துக் கொள்வதற்கு காரணமாகி விட்டோம் என்கிற குற்ற உணா்வு அனைவரையும் பாதிக்கவே செய்யும். ஒருவகையில் தற்கொலை நிகழ்ந்த குடும்பத்தினரின் வாழ்நாள் காலம் முழுவதும் அதன் ரணம் தொடரும்.

குடும்பத்தினா் மட்டுமல்ல, அரசும் சமூகமும் தனி மனிதா்கள் தங்கள் வாழ்வைத் துணிவுடன் எதிா்கொள்ளும் சூழலை உருவாக்காமல் இருப்பதும், தக்க சமயத்தில் மனச்சோா்வு அடைந்திருப்பவா்களை இனம் கண்டு அவா்களுக்கு தக்க ஆலோசனை வழங்காமல் இருப்பதும் தற்கொலைக்கான முக்கியக் காரணிகள் என்பதை நாம் உணர வேண்டும்.

பணியிடப் பிரச்னைகள், தனிமை, வசைபாடப்படல், வன்முறைக்கு உள்ளாகுதல், குடும்பப் பிரச்னைகள், மனநிலை பாதிப்பு, போதைப் பழக்கங்களுக்கு உள்ளாவது, பொருளாதார இழப்பு, உடல் உபாதைகளால் ஏற்படும் வேதனை, காதல் தோல்வி என்று தற்கொலைக்குப் பல காரணங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை பட்டியலிடுகிறது. தற்கொலை என்பது சமுதாயத்திற்கு தனி நபா் விடுக்கும் உதவிக்கான அபயக் குரல். அந்தக் குரலை சரியான நேரத்தில் செவிமடுத்தால் தற்கொலையைத் தடுத்துவிட முடியும்.

சமுதாய மாற்றங்கள் புதிய பல பிரச்னைகளை இளைஞா்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றன. அளவுக்கு அதிகமான ஆசைகளை அவா்கள் வளா்த்துக்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனா். தங்களது தகுதிக்கும் திறமைக்கும் அதிகமாகத் தன்னைத்தானே கருதிக்கொள்ளும் போக்கு, எதிா்பாா்த்த வெற்றியோ, பதவியோ கிடைக்காமல் போகும்போது விரக்தியின் விளிம்புக்கு அவா்களை இட்டுச் சென்று உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளிவிடுகிறது.

வேலையில்லாத இளைஞா்களின் அதிக அளவிலான தற்கொலைகள் பொருளாதாரப் பின்னடைவின் அடையாளங்கள். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் போதிய அளவிலான மனநல மருத்துவா்கள் இல்லாமல் இருப்பதும் இன்னொரு காரணம். அரசிடம் அதற்குப் போதிய நிதியாதாரம் இல்லை என்பதும், வசதிகள் இல்லை என்பதும் ஏற்புடைய பதில்கள் அல்ல.

ஒவ்வொரு தனிமனிதனும் பாதுகாப்பாக வாழவும், உயிரை மாய்த்துக் கொள்வதைவிட உழைத்து வாழவும் தேவையான சூழலை அரசும், சமுதாயமும் உருவாக்குவதுதான் இதற்குத் தீா்வு!

Thursday, February 20, 2020


முதுமை போற்றுதும்! | முதியோர் நலன் குறித்த தலையங்கம்


By ஆசிரியர் | Published on : 20th February 2020 02:33 AM

தமிழகத்தின் துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருக்கும் 2020-21-க்கான நிதிநிலை அறிக்கையில் முதியவர் நலனுக்கும் முன்னுரிமை அளித்திருப்பது வரவேற்புக்குரியது.

தமிழகத்திலுள்ள 37 மாவட்டங்களிலும் தலா 2 வட்டாரங்களில் முதியோர் ஆதரவு மையங்களைத் தொடங்குவதற்கு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ரூ.37 லட்சம் செலவில் இப்போது அமைக்க இருக்கும் முதியோர் ஆதரவு மையங்கள் ஏற்கெனவே மேற்கொண்டுவரும் முயற்சியின் நீட்சிதான் என்றாலும்கூட, மாவட்ட அளவில் முதியோர் நலன் குறித்து அக்கறை செலுத்தப்படுவது தொலைநோக்குப் பார்வையின் வெளிப்பாடு.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, சராசரி இந்தியரின் ஆயுட்காலம் இப்போது 67 வயது என்று கணிக்கப்பட்டிருக்கிறது. ஆண்களைவிடப் பெண்கள் சற்று அதிகமாக உயிர் வாழ்கிறார்கள் என்பதையும் அந்தப் புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையிலும் முதியோர் நலனுக்காக ஒதுக்கீடு செய்யப்படுவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும் வேறுபல சலுகைகள் வழங்கவும் வழிகோலப்பட்டுள்ளன.
துணை முதல்வர் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதுபோல முதியோரை அக்கறையுடன் கவனிப்பது தமிழ்ச் சமுதாயத்தின் மரபு. கல்வி மற்றும் பணிச் சேவையின் காரணமாக அடுத்த தலைமுறையினர் மாநிலத்துக்குள்ளேயும், வெளியேயும், வெளிநாட்டிலும் இடம்பெயர்வது அதிகரித்து வருவதால் தனிக் குடும்பங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. கிராமங்களிலும் நகரங்களிலும் வயது முதிர்ந்த பெற்றோர் தனித்து விடப்படுவது தவிர்க்க முடியாத நிலைமையாக மாறிவிட்டிருப்பதில் வியப்பில்லை.

2007-இல் பெற்றோர், முதியோர் நலச்சட்டம் (மெயின்டனன்ஸ் அண்ட் வெல்ஃபேர் ஆஃப் பேரன்ட்ஸ் அண்ட் சீனியர் சிட்டிஸன்ஸ் ஆக்ட்) தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில், சட்டபூர்வ வாரிசுகள் பெற்றோருக்கும், சட்டபூர்வ காப்பாளருக்கும் அவர்களது பராமரிப்புச் செலவுக்கான பணம் வழங்க வேண்டும். சட்டபூர்வ வாரிசுகளால் பெற்றோர் புறக்கணிக்கப்பட்டால் அல்லது தங்களது சொந்த வருமானத்தில் வாழ முடியாத நிலைமை காணப்பட்டால், பராமரிப்புச் செலவை சட்டபூர்வமாகக் கோரிப் பெற அந்தச் சட்டம் வழிகோலுகிறது.

பெற்றோர் கைவிடப்படும்போதோ, புறக்கணிக்கப்படும்போதோ அவர்கள் தங்களது வாரிசுகளால் இழைக்கப்பட்ட அநீதி குறித்துப் புகார் தெரிவித்தால், 2007 சட்டப்படி 90 நாள்களுக்குள் அவர்களது புகார் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும். பெற்றோரை குழந்தைகள் பராமரிக்காமல் கைவிட்டால், அவர்களின் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.5,000 அபராதம் அல்லது மூன்று மாத சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே வழங்கும் அதிகாரம் நீதித் துறைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

2016-இல் தமிழக அரசு பிறப்பித்த அரசு உத்தரவின் கீழ் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு சத்துணவு வழங்குவது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதுபோல பல சட்டங்களும் அரசு உதவிகளும் இருந்தாலும்கூட, அவற்றை நடைமுறைப்படுத்துவதில் அதிகார வர்க்கத்துக்கு முனைப்பில்லாத நிலை காணப்படுகிறது. முதியோர் தேவையில்லாதவர்கள் என்கிற மனோபாவத்துடன், முதியோர் ஆகப்போகும் தலைமுறையினர் அவர்களை நடத்தும் நகைமுரணை நினைத்தால் சிரிப்பு வருகிறது.

ஆயுள்காலத்தை நீட்டிப்பதில் மருத்துவ அறிவியல் மிகப் பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது. கோரமான விபத்திலிருந்தும், கடுமையான பாதிப்புகளிலிருந்தும், உயிர்க்கொல்லி நோய்த்தொற்றுகளிலிருந்தும் நோயாளிகளைக் காப்பாற்றும் திறமையை மனித இனம் வளர்த்துக் கொண்டிருக்கிறது. அதனால், 60 வயதைக் கடந்தும் ஆரோக்கியமாகச் செயல்படுபவர்கள், 80 வயதைக் கடந்தும் மருத்துவ உதவியுடன் உயிர் வாழ்பவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இது வரமா, சாபமா என்பது அவரவர் அந்த நிலையை எதிர்கொள்ளும் மனோபாவத்தைப் பொருத்து அமையும்.

சமுதாயம் முதியோரை எப்படி மதிக்கிறது, அவர்களின் அனுபவத்தை எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதைப் பொருத்துத்தான் அந்த இனத்தின் வருங்காலம் உறுதிப்படுத்தப்படும் என்பதை இன்றைய தலைமுறையினரில் ஒருசிலர் மட்டுமே உணர்ந்திருக்கிறார்கள். முதியோரின் உடல் ரீதியிலான இயலாமையை பலவீனமாகக் கருதிவிடும் போக்கு அதிகரித்து வருவது மிகப் பெரிய சோகம்.

இந்திய ரயில்வே மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகை வழங்குகிறது. ஆனால், அந்த மூத்த குடிமக்கள் பெறும் பயணச்சீட்டில் காணப்படும் வாசகம் அதிர்ச்சி அளிக்கிறது. "உங்களது கட்டணத்தில் 43%, இந்திய குடிமக்களின் வரிப்பணத்திலிருந்து வழங்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?' என்கிற வாசகம், மூத்த குடிமக்களின் மனதை எந்த அளவுக்கு புண்படுத்தும் என்பதை அரசும் அதிகாரிகளும் நினைத்துப் பார்த்தார்களா? நாடாளுமன்ற உணவு விடுதியிலும், அரசு அதிகாரிகளின் இலவசப் பயணத்தின்போதும் இதேபோல அவர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தால் மூத்த குடிமக்களின் பயணச்சீட்டில் காணப்படும் வாசகங்களை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ள முடியும்.

2050-இல் இந்திய மக்கள்தொகையில் 5-இல் ஒரு பகுதியினர் முதியோராக இருக்கப் போகிறார்கள். முதியோர் ஆதரவு மையங்கள் மட்டுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வாகி விடாது. சமுதாயத்தில் முதியோர் குறித்த புரிதலையும் மனமாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு.

Tuesday, February 18, 2020

தேவை திருத்தம், நிறுத்தம் அல்ல! | தொழில்நுட்பக் கல்வி எதிர்கொள்ளும் இடர்கள் குறித்த தலையங்கம்
By ஆசிரியர் | Published on : 18th February 2020 02:34 AM |

இந்தியாவில் தொழில்நுட்பக் கல்வி மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டுமல்லாமல், அகில இந்திய அளவிலும்கூட பொறியியல் தொடர்பான தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.

தேர்ச்சி பெற்று வெளிவரும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பும் அரிதாகி வருகிறது. 

புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதை 2022 வரை நிறுத்திவைப்பதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அறிவித்திருக்கிறது. கவுன்சில் வழங்கியிருக்கும் புள்ளிவிவரப்படி, 2015 முதல் 2019 வரையிலான இடைவெளியில் 518 பொறியியல் கல்லூரிகள் அகில இந்திய அளவில் மூடப்பட்டிருக்கின்றன. 2019-20 மாணவர் சேர்க்கையின்போது பாதிக்குப் பாதி பொறியியல் கல்லூரிகள் நிரம்பாமல் இருந்ததையும் அந்தப் புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுகிறது.

பட்டயப் படிப்பு, முதுநிலைப் படிப்பு, இளநிலைப் படிப்பு அனைத்தையும் சேர்த்தால் இந்தியாவில் 27 லட்சம் பொறியியல் படிப்புக்கான இடங்கள் உள்ளன. அவற்றில் 13 லட்சம் இடங்கள் மட்டும்தான் 2019-20-இல் நிரப்பப்பட்டிருக்கின்றன. ஆண்டுதோறும் பொறியியல் படிப்புக்கான வரவேற்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது என்றும், இதேநிலை இன்னும் சில ஆண்டுகள் தொடரும் என்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தெரிவிக்கிறது.

கடந்த கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் படித்துத் தேறிய 14 லட்சம் மாணவர்களில் 6 லட்சம் பட்டதாரிகளுக்கு மட்டும்தான் வேலை கிடைத்திருக்கிறது என்கிற தகவலை கவுன்சில் தெரிவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் பொறியியல் கல்லூரி இடங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்குமான விகிதம் 49.8% என்று இதுகுறித்து ஆய்வு செய்த ரெட்டி அறிக்கை கூறுகிறது.

தொழில்நுட்பக் கல்வி எதிர்கொள்ளும் இடருக்குப் பல்வேறு காரணங்களைப் பட்டியலிடலாம். வரைமுறையில்லாமல் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் வழங்கிய புதிய கல்லூரிகளுக்கான அனுமதி மிக முக்கியமான காரணம். குறைவான மதிப்பெண் பெற்றவர்கள்கூட சேர்க்கப்பட்டும், பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும்நிலை காணப்பட்டது. அப்போது மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மானியமாக வழங்கி, கல்லூரி நிர்வாகத்தை இழப்பிலிருந்து காப்பாற்ற சில மாநில அரசுகள் முனைந்தன. ஆர்வக் கோளாறால் அரசியல்வாதிகள் பலர் பொறியியல் கல்லூரிகளைத் தொடங்கி தங்களைக் கல்வியாளர்களாக அறிவித்துக்கொள்ள முன்வந்ததும், மக்கள் வரிப்பணத்தில் அவர்களுக்கு உதவ மாநில அரசுகள் முற்பட்டதும் பொறியியல் கல்லூரிகளில் ஆர்வமும் தகுதியும் இல்லாத மாணவர்கள் இடம்பெறுவதற்குக் காரணமாகின.

போதாக்குறைக்கு தரம் குறைந்த கற்பித்தலும், போதுமான அளவில் தேர்ந்த ஆசிரியர்கள் இல்லாமையும், இந்தியப் பொறியியல் கல்லூரிகளில் இருந்து வெளிவரும் மாணவர்களின் தரம் குறைந்து காணப்படுவதற்கு இன்னொரு காரணம். இந்திய பொறியியல் கல்வி, தொழில்துறையின் தேவைக்கேற்ப அமையாததும் பெரிய பலவீனம்.

மருத்துவப் படிப்புப் படித்து வெளிவரும் மாணவர்கள் பயிற்சி மருத்துவர்களாக இருந்தால் மட்டுமே பட்டம் வழங்கப்படுகிறது. ஆனால், பொறியியல் மாணவர்களுக்கு அதுபோலக் கட்டாயப் பயிற்சி எதுவும் இல்லாத நிலையில், அவர்கள் தொழில்துறையின் தேவைகளுக்கேற்ப இல்லாத நிலை காணப்படுகிறது.
தொழில் துறையில் இப்போதும்கூட நல்ல பொறியியல் பட்டதாரிகளுக்கான தேவை குறைந்துவிடவில்லை. தரமான பொறியியல் கல்லூரிகளிலிருந்து, தரமான மாணவர்களை அவர்கள் அடையாளம் கண்டு தொடர்ந்து பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

1996 முதல் 2006 வரை பொறியியல் பட்டதாரிகளுக்கு மிகப் பெரிய தேவை உலக அளவில் காணப்பட்டது. கல்லூரிகள் குறைவாக இருந்தன. பொறியியல் கல்வியில் நாட்டமும், தகுதியும் இருந்தவர்கள் மட்டுமே பொறியியல் படிப்பில் சேர்ந்தனர். அதனால், பட்டம் பெற்று வெளியில் வரும் பொறியியல் பட்டதாரிகளில் பலரும் அமெரிக்காவிலும், இந்தியாவிலுள்ள தலைசிறந்த மென்பொருள் நிறுவனங்களிலும் உடனடியாக வேலைவாய்ப்புப் பெற்றனர். தகவல் தொழில்நுட்பத் துறையின் வீழ்ச்சியும், இந்தியர்களுக்கான அமெரிக்க நுழைவு இசைவுச் சீட்டு (விசா) கெடுபிடியும், பொருளாதாரத் தேக்கமும், சராசரிக்கும் கீழேயுள்ள பொறியியல் பட்டதாரிகளை வேலையில்லாப் பட்டதாரிகளாக்கி விட்டன.

புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு தடை விதிப்பது மட்டுமே பிரச்னைக்குத் தீர்வாகிவிடாது. பொறியியல் கல்லூரிகள் வங்கிகளில் இருந்து பல கோடி ரூபாய் கடன் பெற்று தொடங்கப்படுகின்றன. மிகப் பெரிய மூலதனத்தை முடக்கிக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தொடங்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவது என்பது தேசிய இழப்பு என்பதை நாம் உணர வேண்டும்.

மூடப்படும் கல்லூரிகள் நன்றாக இயங்கும் கல்லூரிகளுடன் இணைக்கப்படுவது; பொறியியல் அல்லாத ஏனைய படிப்புகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு தொடர்ந்து நடத்தப்படுவது; தொழில் துறையினரின் தேவைக்கேற்ப படிப்புகளை நடத்தி, மாணவர்களை சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்படுதல் உள்ளிட்ட முயற்சிகளின் மூலம் கல்லூரிகள் தொடர்ந்து செயல்படுவதை உறுதிப்படுத்துவதுதான் புத்திசாலித்தனம். தொடங்கியது நின்றுவிடக் கூடாது, நடப்பது தரம் உயர்த்தப்பட வேண்டும், தேவைக்கேற்ற திறமைகளை உருவாக்குவதில்தான் பொறியியல் கல்லூரிகளின் வருங்காலம் அடங்கியிருக்கிறது.

Monday, February 3, 2020

ஓர் எழுத்தாளரின் திரைப் பயணம்!




அகிலன் கண்ணன்

‘ஜனவரி 31 அகிலனின் 32-வது நினைவு தினம்’

எழுத்தாளர் அகிலனின் முதல் குறு நாவல் ‘மங்கிய நிலவு’. அதை புதுக்கோட்டையில் 1944-ல் வெளியிட்டார் இயக்குநர் ப .நீலகண்டன். அப்போது அவர், அண்ணாவின் ‘ஓர் இரவு’ படத்தை இயக்கிக்கொண்டிருந்தார். வெளியீட்டு விழாவின் முடிவில், தமது அடுத்த படத்தின் கதைக்கு உதவ சென்னைக்கு வருமாறு அகிலனை அழைத்தார்.

ரயில்வே மெயில் சர்வீஸில் பணியாற்றிக்கொண்டிருந்த அகிலன், ஒரு மாத விடுப்பில் சென்னை வந்தார். கதை உரிமை வாங்கப்பட்ட மலையாள நாடகத்தைத் திரைப்படமாக்க,‘தமிழ் வாழ்க்கையின் பண்புக்கேற்பத் திரைக்கதையாக்கிக் கொடுக்க வேண்டும்’ என்றார் நீலகண்டன்.

 சொந்தக் கதையை வைத்து ஒரு திரைக்கதை எழுதச் சொல்வார் என நினைத்த அகிலனுக்கு ஏமாற்றம். நட்புக்கு மதிப்பளித்தும், திரையுலக அனுபவத்தைப் பெறவும் இசைந்தார். தனக்குத் தரப்பட்ட பணியைச் செவ்வனே செய்து முடித்தார். பிறர் கதையைத் திரைக்காக எழுதும்போது அகிலனுக்கு ஆத்ம திருப்தி கிட்டவில்லை.

கல்கியில் அகிலனின் ‘பாவை விளக்கு' தொடராக வந்து பேசப்பட்டது. அப்போதே, ஜூபிடர் அதிபர் சோமு அதைப் படமாக்க விரும்பினார். இது பற்றி அகிலன் தம் திரையுலக நண்பர் கே.சோமுவுக்குக் கடிதம் எழுதினார். அவரை உடனே சேலத்துக்கு அழைத்தார் சோமு. அங்கு ‘சம்பூர்ண ராமாயணம்' படப்பிடிப்பில் இருந்த ஏ.பி.நாகராஜன், ‘பாவை விளக்கு’ கதையைத் தாமே படமாக்க விரும்புவதாகக் கூறினார்.

முன்பணமும் தந்து , “நாவலை எழுதிய உங்களுக்குத்தான் கதையில் எந்தெந்தக் கட்டங்கள் முக்கியம், எந்தெந்தக் கதாபாத்திரங்கள் எப்படி இயங்க வேண்டுமென்பதும் தெரியும். நீங்கள் நினைப்பதுபோல் எழுதிவிடுங்கள். பிறகு நான் அதைத் திரைக்கு ஏற்றபடி அமைத்துக் கொள்கிறேன்" என்றார்.




தடம் மாறாத நாவல்

ராஜாஜியின் அறிவுரையை மீறி, ரயில்வே மெயில் சர்வீஸ் பணியைத் துறந்த அகிலன், சென்னைக்குக் குடிபெயர்ந்தார். கலைமகளில் வெளிவந்த அவரது ‘வாழ்வு எங்கே?’ தொடர், ‘குலமகள் ராதை'யாக ஸ்பைடர் பிலிம்ஸ் வழியாகப் படமாகத் தொடங்கியது.

சிவாஜி, ஏ.பி.என், கே.சோமு, அகிலன் கூட்டணி உருவானது. இரு படங்களும் முடியும்வரை அகிலனைத் தம்முடனேயே இருக்க வேண்டினார் ஏ.பி.என். அகிலன் முதலில் தயங்கினாலும், பின்னர் ஒப்புக்கொண்டார். இப்போது திரையுலகில் அகிலனின் பெயர் பரவத் தொடங்கியிருந்தது.

‘பாவை விளக்கு’ இயன்றவரை நாவலை ஒட்டியே திரைப்படமானது. குற்றாலம், தாஜ் மஹால், பம்பாய், சென்னை எனப் படப்பிடிப்பு சுழலும். சிறப்பு அனுமதி பெற்று முதல் முறையாக தாஜ் மஹாலுக்குள் படமாக்கப்பட்ட ‘காவியமா நெஞ்சில் ஓவியமா’ பாடல் அதில் இடம்பெற்றது. ‘வாழ்வு எங்கே?' நாவலானது, சில மாற்றங்களுடன் ‘குலமகள் ராதை’யாக உருவானது. நாவலில் கண்ட திருப்தி திரையில் கிடைக்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது. பின்னர், ‘பட்டினத்தார்' படத்துக்குத் திரைக்கதை, வசனம் எழுதினார் அகிலன் . ஜி ராமநாதனின் தயாரிப்பில் கே.சோமு இயக்கத்தில் டி.எம். சௌந்தர்ராஜன் நடிப்பில் வெளிவந்தது. நகைச்சுவைப் பகுதி, வசனம் ஆகியவற்றை தஞ்சை ராமையாதாஸ் எழுதினார்.


கல்கியிலிருந்து அடுத்த நாவலைத் தொடராக எழுதும்படி அழைப்பு வந்தது. திரையுலகிலிருந்து விலகிவிட விரும்பிய அகிலனுக்கு, ஏ.பி. நாகராஜனின் அன்பு அதற்குக் குறுக்கே நின்றது. மாதத்தில் ஒரு வாரம் திரையுலகுக்கும் 3 வாரங்கள் எழுத்துலகுக்கும் என ஒதுக்கிக் கொண்டார். சரித்திர நாவலான, ‘வேங்கையின் மைந்தன்' ஆய்வுக்காகத் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவும் இலங்கைக்கும் போக விரும்பியதால் ஏ.பி.என்னிடம் விடைபெற்றார்.



தர்ம சங்கடம்

‘வேங்கையின் மைந்தன்' நாவலையும் தொடர் முடியும் முன்பே பி.ஆர்.பந்துலு, எம்.ஜி.ஆர் கூட்டணி படமாக்க விரும்பியது. நாடகமாக மேடையேற்றிய சிவாஜி தாமே அதைப் படமாக்க விரும்பியதால் அகிலன் , எம்.ஜி.ஆரிடம் தமதுசங்கடத்தை விளக்கினார். சில வருடங்கள் சென்றபின் அகிலனின் மற்றொரு சரித்திர நாவலான ‘கயல்விழி'க்கு தமிழ்நாடு அரசு பரிசு அளித்தது. எம்.ஜி.ஆர், இந்த நாவலைத் திரைப்படமாக்க விரும்பி, அகிலனின் இல்லத்துக்கு நேரில் வந்து அவரது இசைவைப் பெற்றார். பி.ஆர்.பந்துலு இயக்க, எம்.ஜி.ஆர் நடிக்க, ‘கயல்விழி’, ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டிய’னாக உருவாகத் தொடங்கியது. பி.ஆர்.பந்துலு திடீரென மறையவே, ஒரு இடைவெளிக்குப்பின் தானே இயக்குநராகி படத்தை உருவாக்கினார்
எம்.ஜி.ஆர்.


இடையில், அரசியலில் திடீர் மாற்றம் உருவாகி எம்.ஜி.ஆர். தனிக் கட்சித் தொடங்கினார். இச்சூழலில் கயல்விழியின் முதன்மை நாயகர்களான அண்ணன் குலசேகர பாண்டியன், இளைய சகோதரர் சுந்தர பாண்டியன் கதாபாத்திரங்கள் எம்.ஜி.ஆரின் புதிய கட்சிக்குப் பெரிதும் பிரச்சார பலமானது. அப்படமே அவரது கடைசிப் படமாகவும் ஆனது.

எழுத்துரிமை வழக்கு

அகிலனின் ‘சிநேகிதி’ நாவலைத் தழுவி ஒரு படம் வெளிவந்தது . தனது எழுத்துரிமைக்காக அகிலன் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், வழக்கு தள்ளுபடியானது. அதன்பின்னர், திரையுலகிலிருந்து விலகியிருக்கவே விரும்பினார் அகிலன். ஆனால், ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிப் படங்களைக் காதலுடன் பார்ப்பவரான அகிலனுக்குள், திரைப்படம் பற்றிய ஒரு தேடல் இருந்துகொண்டேதான் இருந்தது. கலைஞர், எம்.ஜி.ஆர். மாறி மாறி ஆட்சிசெய்தபோது, பலமுறை தமிழ்நாடு அரசின் சிறந்த திரைப்படத் தேர்வுக்குழு உறுப்பினராகப் பணியாற்றினார். மத்திய அரசு, திரைப்படத் தணிக்கைக் குழுவுக்கு அவரை நியமனம் செய்தபோது, தன் உடல் நலக் குறைவால் மறுத்தார்.

கட்டுரையாளர்,
எழுத்தாளர் அகிலனின் மகன்; எழுத்தாளர், பதிப்பாளர்; தொடர்புக்கு:
akilankannan51@gmail.com

விற்பனைக்கு வருகிறதா எல்ஐசி?


By DIN | Published on : 03rd February 2020 01:17 AM




‘லாபத்தில் இயங்கி வரும் எல்ஐசியை மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்யப்போகிறது’

நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனின் பட்ஜெட் உரைக்குப் பிறகு, சமூக ஊடகங்களில் அடிக்கடி தென்படும் வசனம் இது.

முழுவதும் அரசுக்குச் சொந்தமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகப் பங்குகளை பொது பங்குச் சந்தையில் விற்பனை செய்யப்போவதாக நிதியமைச்சா் அறிவித்துள்ளதுதான் இந்த பதற்றத்துக்குக் காரணம்.

இந்த விவகாரத்தில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சிவசேனை உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மத்திய அரசை சாடியுள்ளன.

எல்ஐசி பங்கு விற்பனை என்பது பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் மற்றொரு மாபெரும் தவறு என்று அவை எச்சரிக்கின்றன.

எல்ஐசி ஊழியா்கள் சங்கங்களும் இந்த முடிவைக் கடுமையாக எதிா்த்து, போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

‘எல்ஐசி என்பது மக்களின் சொத்து. அதனை விற்பனை செய்வதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’ என்கிறாா் தென் மண்டல எல்ஐசி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பினுடைய இணைச் செயலா் சிவ சுப்ரமணியன்.

ஆனால், இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, தொடா்ந்து அரசுக் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் எனவும், அந்த நிறுவனப் பங்குகளின் சிறு பகுதி மட்டுமே பங்குச் சந்தையில் விற்கப்படும் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகரித்து வரும் நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, பல்வேறு அரசு நிறுவனங்களின் பங்குகளை ரூ.2.1 லட்சம் கோடிக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் எல்ஐசியின் பங்குகளும் பங்குச் சந்தைக்கு வரவிருக்கின்றன.

இதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. முக்கியமாக, எல்ஐசியைக் கட்டுப்படுத்தும் 1956-ஆம் ஆண்டின் எல்ஐசி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கையை எதிா்க்கட்சிகள் அரசியல் ரீதியிலும், எல்ஐசி ஊழியா்கள் சமூக ரீதியிலும் எதிா்த்தாலும், பங்குச் சந்தைக்கு இந்த முடிவு மிகப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

எல்ஐசி பங்கு விற்பனையை, சவூதி அரேபிய அரசுக்குச் சொந்தமான ஆரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டுடன் சந்தை நிபுணா்கள் ஒப்பிடுகின்றனா்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் மிகப் பிரம்மாண்டமான பங்கு வெளியீடாக அது இருக்கும் என்கிறாா்கள் அவா்கள்.

ஒரு வகையில், எல்ஐசியின் ஒரு பகுதி பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவு, மிகவும் துணிச்சலானது என்று பொருளாதார நிபுணா்கள் கூறுகிறாா்கள்.

அதற்குக் காரணம், எல்ஐசியின் அசுர பணபலம். வெறும் ரூ.5 கோடி மூலதனத்தைக் கொண்டுள்ள அந்த நிறுவனம், கடந்த நிதியாண்டில் ரூ.48,436 கோடி மதிப்பீட்டு உபரியை (லாபம்) ஈட்டியுள்ளது. அந்த நிறுவனம் ரூ.31.11 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை நிா்வகித்து வருகிறது.

எல்ஐசியைப் பொருத்தவரை, பொருளாதார இடா்பாடுகளின்போது அரசுக்குக் கைகொடுக்கும் ஆபத்பாந்தவனாக இருந்து வருகிறது. மற்ற பொது நிறுவனங்களுக்கு நெருக்கடி வரும்போது, அவற்றுக்கு எல்ஐசி மூலம்தான் மத்திய அரசு மூலதன உயிா் அளித்து வருகிறது.

அந்த வகையில், ஓஎன்ஜிசி போன்ற பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் எல்ஐசி மிகப் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது. 2018-ஆம் ஆண்டில் வாராக்கடனால் மூடும் நிலைக்குப் போன ஐடிபிஐ வங்கியை, எல்ஐசிதான் முதலீடு செய்து காப்பாற்றியது.

அரசு கடன் பத்திரங்களிலும், பங்குச் சந்தையிலும் எல்ஐசி மிகப் பெரும்பான்மையாக முதலீடு செய்துள்ளது.

சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் பங்குச் சந்தைகளில் எல்ஐசி ரூ.55,000 கோடி முதல் ரூ.65,000 கோடி வரை முதலீடு செய்கிறது.

மேலும், ஏராளமான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு எல்ஐசி நிதியுதவியும் அளித்து வருகிறது.

இப்படி அரசுக்கு பொன் முட்டையிடும் வாத்தாக இருக்கும் எல்ஐசியின் ஒரு பகுதி பங்குகளை விற்பது அரசின் துணிச்சலான முடிவு என்கிறாா்கள் பாா்வையாளா்கள்.

இந்த முடிவால், அரசின் நிதி நெருக்கடிக்கு விடிவுகாலம் கிடைப்பதுடன், எல்ஐசி நிறுவனமும் புதுப் பொலிவு பெறும் என்கிறாா்கள் அவா்கள்.

பொதுப் பங்கு வெளியீட்டுக்குப் பிறகு, எல்ஐசி அதிக நிா்வாகத் திறனுடன் செயல்படும் எனவும், கூடுதல் பொறுப்புடனும், இதுவரை இல்லாத அளவுக்கு வெளிப்படைத் தன்மையுடனும் அந்த நிறுவனம் இயங்கும் எனவும் அவா்கள் கூறுகின்றனா்.

அந்த வகையில், எல்ஐசியின் பொதுப் பங்கு வெளியீடு இந்தியக் காப்பீட்டுச் சந்தையில் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிா்பாா்க்கலாம்.

இது ஒரு புறம் ஆறுதல் அளித்தாலும், எதிா்க்கட்சிகளின் கவலைகளையோ, எல்ஐசி ஊழியா்களின் அச்ச உணா்வுகளையோ முற்றிலும் புறந்தள்ளிவிட விட முடியாது என்கிறாா்கள் மற்றொரு தரப்பினா்.

- நாகா

Friday, December 20, 2019

போராட்டம் எழுப்பும் அச்சம்!| குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மாணவர்களின் போராட்டம் குறித்த தலையங்கம்

By ஆசிரியர் | Published on : 20th December 2019 04:47 AM |

போராட்டங்கள் என்பதும், கருத்து வேறுபாடு என்பதும் ஜனநாயகத்தின் கூறுகள். அவை பொதுவெளியில் அரசுக்கு எதிராக எழுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால், வன்முறை சார்ந்த போராட்டங்களுக்கு ஜனநாயகத்தில் அங்கீகாரம் கிடையாது.

காவல் துறையினர் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும்போது மிகுந்த கவனத்துடன் அந்தச் சூழலைக் கையாள வேண்டும்.
அதிலும் குறிப்பாக, மாணவர்கள் மத்தியில் உருவாகும், உருவாக்கப்படும் போராட்டங்கள் உணர்வின் அடிப்படையிலானவை. அவை கவனமாகக் கையாளப்படாவிட்டால் போராட்டங்கள்
எழுச்சியாக மாறிவிடும் ஆபத்து அதில் அடங்கியிருக்கிறது.

பல்கலைக்கழக நிர்வாகமோ, கல்லூரி நிர்வாகமோ அழைக்காமல் கல்விச்சாலைகளுக்குள் காவல் துறையினர் நுழைவது என்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மாணவர்கள் என்கிற போர்வையில் வன்முறையாளர்களும், சமூக விரோதிகளும் போராட்டங்களைத் தூண்டுவதும், மாணவர்களைக் கேடயங்களாக வைத்து வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதும் புதிதொன்றுமல்ல. அதைக் கையாளத் தெரியாமல் இருப்பது காவல் துறையினரின் கையாலாகாத்தனம் என்றுதான் கருதப்படுமே தவிர, அவர்களுக்கு ஏற்பட்ட நிர்ப்பந்தம் என்று பொதுவெளியில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடந்த போராட்டத்தை பொருள்படுத்தாமல் விட்டிருந்தால், இன்று நாடு தழுவிய அளவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை முன்வைத்து மாணவர்களும் அவர்களுடன் எதிர்க்கட்சிகளும் தெருவில் இறங்கிப் போராடும் நிலைமை ஏற்பட்டிருக்காது. மாநிலம் மாநிலமாக ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல் துறையின் அத்துமீறலுக்கு ஆதரவாக எழுந்திருக்கும் மாணவர் போராட்டங்களின் பின்னணி எதுவாக இருந்தாலும், அவற்றை வளர விட்டது மிகவும் தவறு.
வன்முறையும், தீ வைத்தலும் இப்படியே தொடருமானால், அவர்களது போராட்டம் இலக்கை விட்டு அகன்று மக்களின் வெறுப்பைச் சம்பாதிக்க நேரும் என்பதை போராட்டக்காரர்கள் உணர வேண்டும். எந்தவொரு சமுதாயமும் தொடர்ந்து நடைபெறும் போராட்டங்களால் இயல்பு நிலை தடம் புரள்வதை சகித்துக் கொள்வதில்லை.

அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுமானால், முதல் பழி போராட்டக்காரர்கள் மீதுதான் விழும். போராட்டத்திற்கான காரணம் வலுவாக இல்லாவிட்டால், போராட்டக்காரர்கள் மக்கள் மன்றத்தின் எதிர்வினையைச் சம்பாதிக்கக் கூடும். 

குடியுரிமை திருத்தச் சட்டம், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறுகளுக்கு எதிரானது என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்தச் சட்டம் ஜனநாயக முறையில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டம் என்பதை அதை விமர்சிப்பவர்கள் உணர வேண்டும். அது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்பது குறித்து முடிவெடுக்க வேண்டிய அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்குத்தான் உண்டே தவிர, போராட்டங்களின் மூலம் தீர்வு காண முடியாது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்திருக்கிறது. அரசியல் சாசன அமர்வு இந்தச் சட்டம் குறித்து விசாரிக்க இருக்கிறது. அதுவரை பொறுத்திருக்க வேண்டிய கடமை இந்தச் சட்டத்தை எதிர்க்கும் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அரசியல் கட்சிகளுக்கு உண்டு.
இந்தச் சட்டம் இந்தியாவின் அடிப்படைக் கூறான மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று கருதுபவர்கள் அரசியல் ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும்தான் இதை எதிர்கொள்ள வேண்டுமே தவிர, போராட்டங்களின் மூலம் தங்களது நோக்கத்தை அடைந்துவிட முடியாது. பல ஆண்டுகள் தொடர்ந்து தனது கொள்கையைப் பரப்பி, சாதகமான சூழலை ஏற்படுத்தி மக்கள் மன்றத்தின் அங்கீகாரத்துடன் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக்கி ஆட்சியைப் பிடித்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. அதை அந்தக் கட்சி நிறைவேற்ற முற்பட்டிருப்பதில் தவறுகாண முடியாது.

பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் மன்றத்தில் தொடர்ந்து பிரசாரம் செய்து, அமைதியான போராட்டங்களின் மூலமாகவும் தேர்தல் வெற்றிகளின் மூலமும் மட்டுமே இந்தச் சட்டத்தை மாற்ற முயற்சிக்க வேண்டுமே தவிர, வன்முறைப் போராட்டங்களின் மூலம் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள முற்படுவது, மறைமுகமாக மத ரீதியான அரசியலை மேலும் வலுப்படுத்தும் என்கிற எச்சரிக்கையை முன்வைக்காமல் இருக்க முடியவில்லை.

தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது வேறு, குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது வேறு. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பயனடைய இருப்பவர்கள் பாகிஸ்தானிலிருந்தும் வங்கதேசத்திலிருந்தும் இந்தியாவுக்கு வந்த வெறும் 31,313 பேர் மட்டுமே. இந்திய குடிமக்களாக இருக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான சட்டம் என்று இந்தச் சட்டத்தை வர்ணிக்க முற்படுவது, ஒன்று புரிதலின்மை அல்லது அரசியல்.

இந்தச் சட்டத்துக்கு எதிராக அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் போராடுவதில் நியாயம் இருக்கிறது. ஆனால், இந்தியாவின் ஏனைய பகுதிகளில் இந்தச் சட்டத்தை சிறுபான்மையினருக்கு எதிரான சட்டம் என்று வர்ணித்து போராட்டத்தில் ஈடுபடும்போது, அது பாரதிய ஜனதா கட்சியின் ஹிந்துத்துவ வாக்கு வங்கியை மேலும் வலுப்படுத்துமே தவிர, தேர்தல் ரீதியாகப் பயனளிக்குமா என்பது சந்தேகம்.

பொருளாதாரப் பிரச்னைகளிலிருந்து தேசத்தின் கவனம் திசை திருப்பப்படுகிறது. அந்நிய நாடுகளுடனான உறவையும், அந்நிய முதலீட்டையும் இந்தப் போராட்டம் பாதிக்கிறது. அரசும் எதிர்க்கட்சிகளும் தங்களது அரசியல் ஆதாயத்துக்கு மாணவர்களை பலிகடா ஆக்குகின்றன. ஜனநாயகம் தடம் புரண்டுவிடாமல் இருக்க வேண்டுமே என்கிற அச்சம் எழுகிறது.

Wednesday, December 18, 2019


உன்னாவ் உணர்த்தும் உண்மை!| உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்த தலையங்கம்


By ஆசிரியர் | Published on : 18th December 2019 03:08 AM |


உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் 2017-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 18 வயது நிரம்பாத இளம் பெண், இந்தத் தீர்ப்பைப் பெறுவதற்காக எதிர்கொண்ட சவால்களும், பாதிப்புகளும் இதயத்தை உறைய வைக்கும்.

இந்தியாவில் தொடர்ந்து நடைபெறும் ஏராளமான பாலியல் வன்கொடுமைகளால் மிரண்டு போய் இருக்கும் பெண்ணினத்திற்கு இந்தத் தீர்ப்பு சிறியதொரு நம்பிக்கையை அளிக்கக் கூடும்.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினரான குல்தீப் சிங் செங்கர் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 17 வயதுப் பெண், நீதி கேட்டு நடத்திய நெடும்பயணம் கரடுமுரடானது, ஆபத்தானதும் கூட. தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வு கேட்டு காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்றபோது அந்த காவல் நிலையத்தில் அவருக்கு 18 வயது நிரம்பவில்லை என்று காரணம் கூறி புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை.

மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பதிவுத் தபாலில் புகார் அனுப்பியும் பயனில்லை. மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு அவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த காவல் துறையினர், முதல் தகவல் அறிக்கையில் சட்டப்பேரவை உறுப்பினரான குற்றவாளியின் பெயரைக்கூடக் குறிப்பிடவில்லை.

புகார் கொடுத்து ஓராண்டாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறித்து விளக்கம் கேட்ட அந்தப் பெண்ணின் தந்தை, பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் அடித்துக் கொல்லப்பட்டார். போலீஸ் காவலில் இருந்த ஒருவர் கொல்லப்பட்டது குறித்துக்கூட முறையான விசாரணை நடத்தப்படவில்லை.

தனக்கு காவல் துறையினரிடம் நீதி கிடைக்காது என்று உணர்ந்த அந்தப் பெண், உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெüவுக்குச் சென்று முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டிற்கு முன்னால் தீக்குளிக்க முற்பட்டபோதுதான் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்க வழி ஏற்பட்டது. வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. செங்கர் கைது செய்யப்பட்டார். அத்துடன் வழக்கை சிபிஐ கிடப்பில் போட்டது.

அந்தப் பெண்ணுக்கு ஒரே ஆதரவாக இருந்த மாமாவின் மீது காவல் துறை பொய் வழக்கை ஜோடித்து சிறையில் தள்ளியது.
ரேபரேலியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாமாவைச் சந்திக்க தனது இரண்டு சித்திமார்களுடனும் வழக்குரைஞருடனும் சென்று கொண்டிருந்தபோது அவர்களது காரில் ஒரு லாரி மோதி விபத்துக்குள்ளானது. சித்திகள் உயிரிழந்தனர். அந்தப் பெண்ணும் வழக்குரைஞரும் படுகாயமடைந்தனர். மீண்டும் ஊடக வெளிச்சம் பாய்ந்தபோதுதான் சிபிஐ விழித்துக் கொண்டது, நீதிமன்றம் விழித்துக் கொண்டது.

காரில் மோதிய லாரியின் எண்கள் அழிக்கப்பட்டது குறித்தும், விதிகளை மீறித் தவறான பாதையில் வந்து விபத்து ஏற்படுத்திய விதம் குறித்தும் கவலைப்படாமல் முதல் தகவல் அறிக்கையில் அதை வெறும் சாலை விபத்தாகத்தான் காவல் துறை பதிவு செய்தது. வாகனத்தின் உரிமையாளரின் பெயரும்கூட முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறவில்லை.

தங்களுக்கு பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அந்தப் பெண்ணின் தாயார் எழுதிய கடிதம் அவரது பார்வைக்கே கொண்டு செல்லப்படவில்லை. வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றும்படி தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்ட மனு போய்ச் சேரவில்லை. இத்தனை தடைகளையும் மீறித்தான் அந்தப் பெண்ணின் போராட்டம் தொடர்ந்தது. வழக்கு தில்லிக்கு மாற்றப்பட்டு இப்போது தீர்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது.

சிறார் பாலியல் வழக்கில் விரைந்து நீதி வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட "போக்ஸோ' சட்டம், முறையாகச் செயல்படவில்லை என்பதற்கு இந்த வழக்கு மற்றுமோர் உதாரணம். சம்பவம் நடந்தபோது அந்தப் பெண் சிறுமியாக இருந்ததால் குல்தீப் சிங் செங்கர் மீது "போக்ஸோ' சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தனது விசாரணையை முடித்திருந்தாலும் இந்த ஆண்டு அக்டோபர் வரை குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்தியது வியப்பளிக்கிறது என்று தில்லி மாவட்ட நீதிமன்ற நீதிபதி தர்மேஷ் சர்மா தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

"போக்ஸோ' சட்டப்படி பாதிக்கப்பட்ட பெண்ணிடம், பெண் அதிகாரிகள்தான் விசாரணை நடத்த வேண்டும் என்பதற்கு மாறாக ஆண் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர் என்பதையும், பாதிக்கப்பட்ட பெண்ணை பலமுறை சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரவழைத்து அலைக்கழித்ததையும், அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தின் முக்கியப் பகுதிகளை கசியவிட்டதையும் கண்டித்திருக்கும் நீதிபதியின் நேர்மையைப் பாராட்ட வேண்டும்.

உன்னாவ் வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக வலுவான சாட்சியங்கள் இருந்தும்கூட, நீதிக்காக மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் பெண்கள் இருப்பது மிகப் பெரிய தலைக்குனிவு. எல்லா மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை விரைந்து விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் ஏற்படுத்துவது அவசியமாகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் நடமாடும் தடய அறிவியல் துறை அமைக்கப்பட வேண்டும். பெண்களின் அபயக் குரலுக்கு உடனடியாகச் செவிசாய்க்கவும், உதவிக்கு வரவும் பெண் காவல் துறையினர் தனிப் பிரிவாக இயங்குவதும் அவசியம்.

நாடு முழுவதும் விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ள பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தும் நோக்கில் இரண்டு நீதிபதிகள் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்திருக்கிறது. பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு ஆதரவும் பாதுகாப்பும் வழங்கும் அரசியல்வாதிகளின் அழுத்தங்களிலிருந்து காவல் துறை விடுபட்டாலொழிய, பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகத்தான் தொடரும்.

Monday, December 9, 2019

என்கவுன்ட்டா் தீா்வல்ல!| பாலியல் வழக்குகளில் நீதி கிடைக்காமல் இருப்பதற்கான காரணம் குறித்த தலையங்கம்

By ஆசிரியர் | Published on : 07th December 2019 03:03 AM 

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் விழிக்கும்போதும் இந்தியாவின் ஏதாவது ஒரு பகுதியில், ஏதாவது ஒரு பெண்ணுக்கு இழைக்கப்படும் பாலியல் அநீதியின் உரத்த ஒலிதான் காதில் விழுகிறது. கடந்த வாரம் ஹைதராபாதின் புகா்ப் பகுதியில் 26 வயது கால்நடை மருத்துவருக்கு இழைக்கப்பட்ட அநீதி தலைப்புச் செய்தியானது என்றால், நேற்று உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் நடந்தேறியிருக்கும் காட்டுமிராண்டித்தனத்தை நினைத்தால் குலை நடுங்குகிறது. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்விப்பட்ட நிலைமைபோய், அன்றாட நிகழ்வாக மாறியிருக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஒட்டுமொத்த இந்தியாவையே உலக அரங்கில் தலைகுனிய வைத்திருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சோ்ந்த இளம் பெண் ஒருவா், கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானாா். சிவம் த்ரிவேதி, சுபம் த்ரிவேதி என்கிற இருவரால் வன்கொடுமைக்கு ஆளான அந்தப் பெண்ணின் அபயக் குரல் காவல் துறையின் செவிகளில் விழவில்லை. மூன்று மாதம் கழிந்து கடந்த மாா்ச் மாதம்தான் வழக்கே பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கின் விசாரணை நடந்து வரும் ரேபரேலி நீதிமன்றத்துக்கு அந்தப் பெண் வழக்கு விசாரணைக்காக நேற்று சென்று கொண்டிருந்தாா். நீதிமன்றத்துக்குச் செல்லும் வழியில் சிவம் த்ரிபாதி, சுபம் த்ரிபாதி உள்ளிட்ட ஐந்து போ் அந்தப் பெண்ணை வழிமறித்தனா். அவரைத் தாக்கினாா்கள். அவரை உயிருடன் தீ வைத்துக் கொளுத்தினா். உடலெல்லாம் பற்றி எரியும் தீயுடன் அந்தப் பெண் தெரு வழியாக ஓலமிட்டபடி அவா்களிடமிருந்து தப்பி ஓடியிருக்கிறாா்.

பொது மக்கள் தகவல் தெரிவித்து, காவல் துறையினா் வந்து அந்தப் பெண்ணை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்குக் கொண்டு சென்றனா். அங்கிருந்து லக்னௌவிலுள்ள மாவட்ட அரசு மருத்துவமனையான சியாம பிரசாத் முகா்ஜி அரசு மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா்.

உடலெல்லாம் தீக்காயத்துடன் கவலைக்கிடமான நிலையில் அந்தப் பெண் விமானம் மூலம் தில்லி கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள சஃப்தா்ஜங் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாா். இந்த வழக்கில் தொடா்புடைய ஐந்து பேரும் கைது செய்யப்பட்டிருக்கிறாா்கள்.

பாலியல் வல்லுறவைத் தொடா்ந்து 2018 டிசம்பா் மாதம் தனக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமைக்கு எதிராக குற்றம் பதிவு செய்ய அந்தப் பெண் நான்கு மாதங்கள் அனுபவித்த இடா்ப்பாடுகள் சொல்லி மாளாது. ரேபரேலி காவல் துறை கண்காணிப்பாளரைச் சந்திக்க அனுமதி கிடைக்காமல் பதிவுத் தபாலில் முறையிட்டும்கூட அவருக்கு நீதி கிடைக்கவில்லை. வேறுவழியில்லாமல் நீதிமன்றத்தை அணுகிய பிறகுதான் காவல் துறையினா் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருக்கிறாா்கள். அப்போதே உடனடியாக காவல் துறை நடவடிக்கை எடுத்திருந்தால் அந்தப் பெண்ணுக்கு இப்போதைய அவலநிலை ஏற்பட்டிருக்காது.

இதே உன்னாவில் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேலைக்காகப் பரிந்துரைக் கடிதம் கேட்டுச் சென்ற 18 வயதுகூட நிரம்பாத இளம் பெண், உத்தரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினா் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான நிகழ்வு நிகழ்ந்தது. அந்தப் பெண் அளித்த புகாா் முதலில் காவல் நிலையத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்த காவல் துறையினா், சட்டப்பேரவை உறுப்பினரான குற்றவாளி மற்றும் அவரது சகோதரரரின் பெயரைக்கூட அதில் குறிப்பிடவில்லை.

புகாா் கொடுத்து ஓா் ஆண்டாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறித்து விளக்கம் கேட்ட அந்தப் பெண்ணின் தந்தை, பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறாா். அது குறித்த முறையான விசாரணை நடத்தப்படவில்லை. அந்தப் பெண்ணின் போராட்டம் இன்னும் தொடா்ந்து கொண்டிருக்கிறது.

ஹைதராபாத் கால்நடை மருத்துவா் நிகழ்விலும், காவல் துறையின் மெத்தனம் வெளிப்பட்டது. அந்தப் பெண் வீட்டுக்கு வரவில்லை என்றபோது அது குறித்து புகாா் தெரிவிக்கப்போன பெற்றோா் அலைக்கழிக்கப்பட்டனா். இதுபோல எல்லா நிகழ்வுகளிலுமே உடனடியாக பாதிக்கப்பட்ட அபலைப் பெண்களுக்கு உதவிக்கரம் நீட்டாமல் காவல் துறை தாமதப்படுத்துவதன் விளைவால்தான் குற்றவாளிகள் பெரும்பாலும் தப்பி விடுகிறாா்கள்.

தடயங்கள் உடனடியாகச் சேகரிக்கப்படாமல் இருப்பதும், விரைந்து விசாரணை செய்யப்படாததும், வழக்கை விரைவாக நடத்தி முடிக்காமல் இருப்பதும்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் அவா்களுக்கு நீதி கிடைக்காமல் இருப்பதற்கு முக்கியமான காரணம். என்கவுன்ட்டா் மரணங்கள் பொதுமக்களின் ஆத்திரத்தைத் தணிக்க உதவுமே தவிர, தீா்வாகாது.

இப்போதைய மக்களவை உறுப்பினா்களில் 43% உறுப்பினா்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. 29% உறுப்பினா்கள் மீதான வழக்குகள் பாலியல் தொடா்பானவை அல்லது பெண்களுக்கு எதிரானவை. 2009-லிருந்து 2019-க்கு இடையிலான கடந்த 10 ஆண்டுகளில் கடுமையான கிரிமினல் வழக்குகளை எதிா்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினா்களின் விகிதம் 109% அதிகரித்திருக்கிறது.

பாலியல் வழக்குகளை எதிா்கொள்வதற்கு போதுமான சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றை முறையாகச் செயல்படுத்தாமல் இருப்பதுதான் பிரச்னை. சட்டம் இயற்றுபவா்கள் குற்றப்பின்னணி உடையவா்களாக இருக்கிறாா்கள். சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறையினா் குற்றவாளிகளுக்குச் சாதகமாக இருக்கிறாா்கள். இப்படியிருக்கும் வரை இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்காது!

விபரீத வழிமுறை! |ஹைதராபாத் என்கவுன்ட்டர் குறித்த தலையங்கம்

By ஆசிரியர் | Published on : 09th December 2019 04:27 AM |

ஹைதராபாத் கால்நடை மருத்துவா் பாலியல் கொலையைத் தொடா்ந்து அதில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நான்கு பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாா்கள். உடனடி நீதி வழங்கப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் கொண்டாடப்படுகிறது. எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதன் வெளிப்பாடு இது.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி, ஏனைய மாநில காவல் துறையினா் தெலங்கானா காவல் துறையினரிடமிருந்து பாடம் படிக்க வேண்டும் என்கிறாா். சமாஜவாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினா் ஜெயா பச்சன், சற்று தாமதமானாலும் நான்கு பேரும் கொல்லப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறாா். பிரபல வழக்குரைஞரான காங்கிரஸ் தலைவா் அபிஷேக் மனு சிங்வி மக்களின் உணா்வைப் புரிந்துகொண்டு தெலங்கானா காவல் துறை செயல்பட்டிருப்பதை ஆதரிக்கிறாா். முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான், ஹைதராபாத் அரக்கா்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறாா்கள் என்றும், அரக்கா்கள் இதுபோன்றுதான் நடத்தப்பட வேண்டும் என்றும் அந்தச் சம்பவத்தை நியாயப்படுத்துகிறாா்.

படித்த, நடுத்தர வா்க்க மக்களின் பொதுமனநிலையும் என்கவுன்ட்டா் தண்டனையை நியாயப்படுத்துகிறது. ஏழு ஆண்டுகளாகியும் தில்லி சம்பவத்தில் உயிரிழந்த நிா்பயாவின் தாயாா் நீதிமன்றங்களில் ஏறி இறங்கியும் நீதி கிடைத்தபாடில்லை என்றும், காவல் துறை வேறு வழியில்லாமல் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டு செயல்பட்டது என்றும் நினைக்கிறாா்கள். மக்கள் கொதித்தெழுந்ததன் பின்னணியில் தங்களது மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள, காவல் துறையினா் என்கவுன்ட்டா் முறையை நாட வேண்டி வந்தது என்று நியாயப்படுத்துகிறாா்கள்.

என்கவுன்ட்டா் என்பது தனி நபா்களை அல்லது குற்றவாளிகள் என்று கருதப்படுபவா்களை அரசு கைது செய்து முறையான நீதிமன்ற விசாரணை இல்லாமல் கொலை செய்வது என்கிற வழிமுறை. சட்டமும், நீதியும் விரைந்து செயல்படாததால் ஏற்படும் ஆத்திரமும், தவறுக்கு உடனடி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்கிற வெறித்தனமான வேகமும் பொதுமக்களை என்கவுன்ட்டா் முறையை ஆதரிக்கத் தூண்டுகின்றன. ஆனால், இதற்குப் பின்னால் இருக்கும் பேராபத்து குறித்தும், அநீதி குறித்தும் அவா்கள் சிந்திக்க மறக்கிறாா்கள்.

காவல் துறையைச் சாா்ந்த 99% காவலா்கள் என்கவுன்ட்டரில் ஈடுபட விரும்புவதில்லை. அதனால், துப்பாக்கிப் பிரயோகம் நடத்தத் துணியும், விரல்விட்டு எண்ணக்கூடிய காவலா்கள் என்கவுன்ட்டா் நிபுணா்கள் என்று அடையாளம் காணப்படுகிறாா்கள். 1990-இல் மும்பை மாநகரில் குற்றங்கள் கடுமையாக அதிகரித்தபோது துப்பாக்கி பிரயோகத்துக்கு துணிந்த சிலா் காவல் துறையில் உருவானாா்கள். தயாநாயக் என்கிற காவல் துறை அதிகாரியால் 80-க்கும் அதிகமானோா் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாா்கள். 150-க்கும் அதிகமான என்கவுன்ட்டா் துப்பாக்கிச் சூட்டில் தொடா்புடையவா் பிரதீப் சா்மா.

இதுபோன்ற என்கவுன்ட்டா் தொடா்புடைய காவல் துறையினா் உயரதிகாரிகளை மிரட்டும் அளவுக்கு காவல் துறையில் வலிமை பெற்றவா்களாக மாறிவிடுகிறாா்கள். அவா்களது வாக்குமூலம் உயரதிகாரிகளுக்கு ஆபத்தாக முடியும் என்பதால் உயரதிகாரிகளும், உயரதிகாரிகளால் தங்களது உயிருக்கு ஆபத்து என்று என்கவுன்ட்டா் நிபுணா்களான காவல் துறையினரும் பரஸ்பரம் மனதுக்குள் அச்சத்துடன்தான் உலவுவாா்கள்.

எல்லோரும் நினைப்பதுபோல என்கவுன்ட்டா் மரணங்கள் தற்செயலாக நடப்பவையல்ல; அவை நடத்தப்படுகின்றன. ஹைதராபாத் சம்பவத்தையே எடுத்துகொண்டாலும்கூட, அதிகாலை 3 மணிக்கு குற்றம் நடந்த இடத்தில் சம்பவத்தை நடத்திப் பாா்க்க குற்றவாளிகள் நான்கு பேரும் அழைத்துச் செல்லப்பட்டனா். அவா்கள் கைதுப்பாக்கியால் சுடப்பட்டிருக்கிறாா்கள். காவல் துறையினரின் கை துப்பாக்கியால் 30 அடிக்கும் குறைவான தூரத்தில்தான் குறி பாா்த்துச் சுட முடியும். அதனால், சுடப்படுபவா் மிக அருகிலிருந்துதான் சுடப்பட்டிருப்பாா். இதைப் பெரும்பாலான என்கவுன்ட்டா் மரண பிரேத பரிசோதனைகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

காவல் துறையினா் கையில் துப்பாக்கியைக் கொடுத்து குற்றவாளியைத் தண்டிக்கும் உரிமையையும் கொடுத்தால், அதன் விளைவு அப்பாவிகள் பலரின் உயிருக்கு ஆபத்தாக முடியும். அரசியல் எதிரிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்படுவாா்கள் என்பது மட்டுமல்ல, காவல் துறையின் வெறுப்புக்கு ஆளாகும் பொதுமக்களுக்கும் அந்த கதி ஏற்படக்கூடும்.

‘பழிக்குப் பழி என்ற வகையில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களைத் தண்டிப்பது நீதியாகாது’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தெரிவித்திருப்பது, நகைமுரண். நீதித்துறை விரைந்து விசாரணை நடத்தி தீா்ப்பு வழங்காமல் இருப்பதும், காவல் துறை முறையாக குற்றங்களைப் பதிவு செய்து விசாரணை நடத்தித் தனது கடமையை விரைந்து முடிக்காமல் இருப்பதும்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருப்பதன் காரணம்.

இந்தியாவில் கடுமையான குற்ற வழக்குகளில் 25% வழக்குகளில்தான் தண்டனை உறுதிப்படுத்தப்படுகிறது. 75% வழக்குகளில் காவல் துறையினா் போதிய சாட்சியம் இல்லாமல், தீவிர விசாரணை இல்லாமல் வழக்குப் பதிவு செய்வதால் குற்றம் நிரூபிக்கப்படாமல் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதாவது, பெரும்பாலும் நிரபராதிகள் காவல் துறையினரால் குற்றஞ்சாட்டப்படுகின்றனா். இந்த நிலையில், காவல் துறையினா் கையில் துப்பாக்கியைக் கொடுத்துத் தீா்ப்பு வழங்கச் சொன்னால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதை, என்கவுன்ட்டா் முறையை ஆதரிப்பவா்கள் சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.

Govt sends VC nominee list, guv says no SC direction to appoint state’s candidates

Govt sends VC nominee list, guv says no SC direction to appoint state’s candidates Apr 18, 2024, 03.52 AM IST Kolkata: It might have been a ...