Saturday, March 14, 2026

ஒற்றைச் சொல்லில் பண்பின் அடையாளம்!

DINAMANI. 14.03.2026

ஒற்றைச் சொல்லில் பண்பின் அடையாளம்!

உள்ளத்தின் ஆழத்திலிருந்து உண்மையாக உதிக்கும் "நன்றி' என்ற ஒற்றைச் சொல்லே நம் உயரிய பண்பின் அடையாளம். அதுவே மனிதநேயத்தின் உண்மையான இதயக்குரல்.

கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2026, 5:12 am


எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் "நாடற்றவன்' கட்டுரைத் தொகுப்பில் உள்ள "ஓ' என்ற கட்டுரை என்னை மிகவும் யோசிக்க வைத்தது. ஒருமுறை கவிஞர் முத்துலிங்கம் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார். அவருக்கு முன்னால் நின்ற ஒரு பெண்மணி பணம் எடுக்க நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார். அவருக்கு அடுத்து ஓர் இளம்பெண்ணின் முறை வந்தது; அந்தப் பெண் விரைவாகப் பணத்தை எடுத்துக்கொண்டு நகர்ந்துவிட்டார். இப்போது முத்துலிங்கத்தின் முறை வந்தபோது, அவரால் தனது அட்டையை உள்ளே செலுத்த முடியவில்லை. காரணம், அவருக்கு முன்பாக பணம் எடுத்துச் சென்ற இளம்பெண் தனது அட்டையை எடுக்காமலேயே சென்றிருந்தார்.

உடனே, அவர் அந்த அட்டையை எடுத்துக்கொண்டு வெளியே ஓடிவந்தார். அப்போது, தான் பணம் எடுப்பதைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை. அந்தப் பெண் காரில் அமர்ந்திருந்தாள். இவர் தன்னை நோக்கி ஓடி வருவதைக் கண்டு கார் கண்ணாடியை இறக்கினாள். முத்துலிங்கம் அவளிடம் அட்டையைக் கொடுத்தார். அவள் "ஓ' என்று மட்டும் சொன்னாளே தவிர, ஒரு "நன்றி' கூடச் சொல்லவில்லை. அவர் மீண்டும் சென்று வரிசையில் இணைந்து கொண்டார். அவர் தனது முறை வரும் வரை காத்திருக்க வேண்டும்.

அப்போது, அவருக்குத் தனது நண்பர் ஒருவரின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நினைவுக்கு வந்தது. அந்த நண்பருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்வதற்காக சுமார் 70 பேர் ஒன்று சேர்ந்து பணம் திரட்டிக் கொடுத்தார்கள். சிகிச்சைக்குப் பிறகு, அவர் முழுமையாகக் குணமடைந்து விட்டார். ஆனால், தனக்கு உதவிய அந்த 70 பேரில் ஒருவருக்குக் கூட அவர் நன்றி சொல்லவில்லை.

"அவருடைய இதயம் நிமிஷத்துக்கு 70 முறை துடிக்கிறது; அதில் ஒரு துடிப்பு எனக்குச் சொந்தமானது, அது நன்றியைச் சொல்லிக் கொண்டே இருக்கிறது' என்று முடித்திருப்பார்.

உண்மைதான், உலகில் நன்றியுணர்வு இல்லாத மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், நன்றி கூறுதல் என்பது வெறும் உதட்டு வார்த்தை அல்ல; அது மனித உறவுகளையும், மன நலத்தையும் மேம்படுத்தும் ஒர் உன்னதமான பண்பாகும்.

"உதவி வரைத்தன்று உதவி; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து' என்கிறது வள்ளுவம்.

ஒருவர் செய்த உதவி, எவ்வளவு பெரியது என்பதைப் பொருத்து கைம்மாறு செய்யக்கூடாது; உதவியைப் பெற்றவரின் நல்ல சால்பின் (பண்பின்) அளவே கைம்மாறு செய்ய வேண்டிய அளவாகும். சில நேரங்களில் கைம்மாறு கூட ஏதும் செய்ய வேண்டாம், "நன்றி' என்ற ஒற்றைச் சொல் மட்டும் போதும். அந்த உணர்வு ஒருவரைச் சிறந்த மனிதராக மாற்றும் வல்லமை வாய்ந்தது.

உதவி பெறாவிட்டாலும் கூட நன்றி சொல்பவர்கள் உண்டு. அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன், உள்நாட்டுப் போரின்போது மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார். ஆயிரக்கணக்கானோர் அவரிடம் உதவி கேட்டு தினமும் வந்தனர். ஒருமுறை வயதான பெண்மணி அவரைச் சந்திக்க வந்தார். லிங்கன் அவரிடம், "அம்மா, உங்களுக்கு என்ன உதவி வேண்டும்' என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்மணி, "நான் உங்களிடம் எதையும் கேட்க வரவில்லை. இவ்வளவு இக்கட்டான சூழலில் நாட்டை வழிநடத்தும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைச் சொல்லவே வந்தேன்' என்று கூறி சில உணவுகளைப் பரிசாக அளித்தார். இதைக் கேட்ட லிங்கன் கண் கலங்கினார்.

"இத்தனை ஆண்டுகளில் எதையும் எதிர்பார்க்காமல் நன்றி சொல்ல வந்த முதல் நபர் நீங்கள்தான்' என்றார் அவர். உயர் பதவியில் இருப்பவர்களுக்கு நாம் நன்றி சொன்னால், அது அவர்களுக்குச் சாமரம் வீசியதுபோல ஒரு மகிழ்ச்சியைத் தரும்; அவர்களைச் சலிப்படையாமல் தடுத்து வேலையைத் தொடர உற்சாகப்படுத்தும். தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்குத் தன்னால் இயன்றவரை உதவுபவர்கள், அவர்கள் நன்றி கூறத் தவறும்போது மட்டும் கொஞ்சம் வருத்தப்படுவார்கள். அந்த வருத்தம் அவர்கள் மனதுக்குள் ஓர் ஓரமாய் அமர்ந்து கொள்ளும்.

எனக்குத் தெரிந்த ஒருவரின் குணம் அதிசயமானது. அவர் தன்னுடன் பழகியவர்கள் விளிம்பு நிலையில் இருப்பதைத் தெரிந்து கொண்டால், ஓடிப்போய் அவர்களுக்குப் பண உதவி செய்வார். என்றைக்கோ தனக்கு ஒரு கோப்பை தேநீர் வாங்கி கொடுத்தவரை, தேடிப்போய் பணம் கொடுப்பார். அந்தச் செயல் அவருக்கு எல்லை இல்லாத மகிழ்ச்சியைத் தருகிறது. அவர் அவர்களின் நன்றியை எதிர்பார்த்துச் செய்வதில்லை. உதவும்போது அது தன் கடமை என்று நினைப்பது மனதுக்கு இதமளிக்கிறது; ஓர் ஆத்ம நிறைவைத் தருகிறது என்பது அவர் வாதம்.

"நான் நானாகவே வளர்ந்தேன், எனக்கு யாரும் உதவவில்லை' என்று பெருமையாகக் கூறிக்கொள்ளும் மனிதர்கள் இங்கே அதிகம். ஆனால், உண்மையில், நம் ஒவ்வொருவரின் வெற்றிக்குப் பின்னாலும், நாம் அனுபவிக்கும் வசதிகளுக்குப் பின்னாலும் பலரின் உழைப்பு மறைந்துள்ளது. நமக்குப் பின்னால் நின்று மறைமுகமாக உதவிய அந்த நபர்களுக்கு நாம் எப்படி நன்றி சொல்வது? நாம் இன்னொருவருக்கு உதவி செய்ய முன்வருவதே, அவர்களுக்குச் செய்யும் உண்மையான நன்றிக்கடனாகும். இப்படி ஒருவருக்கொருவர் சங்கிலித் தொடராக உதவிக் கொண்டே இருந்தால் மனிதம் தழைக்கும்.

அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தினமும் தனக்குத்தானே இவ்வாறு சொல்லிக் கொள்வாராம். "என்னுடைய அகம் மற்றும் புற வாழ்க்கை, தற்போது வாழும் மற்றும் மறைந்த பல மனிதர்களின் கடும் உழைப்பால் உருவானது. நான் அவர்களிடமிருந்து பெற்ற அதே அளவு அன்பையும் உழைப்பையும் பிறருக்குத் திருப்பித் தர நான் கடுமையாக உழைக்க வேண்டும்'.

சிலர் தங்களுக்குக் கிடைக்கும் உதவியைத் தங்களின் உரிமை என்று தப்புக் கணக்கு போடுகிறார்கள். இன்னும் சிலர் பிறகு நன்றி சொல்லிக்கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுவிட்டு, காலப்போக்கில் அதை மறந்தே போய்விடுகிறார்கள். உதவி செய்தவர்களுக்கு அந்தச் செயலின் சூடு ஆறுவதற்குள் நன்றி சொல்லிவிட வேண்டும்.

நம் அன்றாட வாழ்வில் உணவகத்தில் உணவு பரிமாறுபவர், அலுவலகத்தில் மின்தூக்கி இயக்குபவர், தேநீர் கொண்டு வருபவர், வாடகை வாகனத்திலிருந்து இறங்கும்போது அந்த ஓட்டுநர் எனப் பலரைச் சந்திக்கிறோம். இத்தகைய எளிய மனிதர்களிடம் புன்முறுவலுடன் "நன்றி' சொன்னால், அவர்கள் மனம் அந்த விநாடியில் மத்தாப்பாய் மலரும். அவர்கள் நம்மை மனதார வாழ்த்துவார்கள். மிக எளிதாக நாம் அவர்களின் மனதில் அன்பால் இடம் பிடித்து விடலாம். குழந்தைகளுக்கு இந்த நற்பண்பை சிறுவயதிலேயே பெற்றோர் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போதுதான், அது அவர்களின் மனதில் வேர் பிடித்து நிற்கும். அதைக் கற்றுக் கொடுக்காததே அனைத்து அலட்சிய மனப்பாங்குக்கும் அடிப்படைக் காரணம்.

கடவுள் எப்போதும் சொர்க்கத்தில் மட்டுமே இருப்பதில்லை; அவர் நமக்கு உதவுவதற்காக பல நேரங்களில் சாதாரண மனித வடிவில் வருவதுண்டு. ஆகவே, நமக்கு இக்கட்டான நேரத்தில் உதவுபவர்கள் கடவுளின் பிரதிநிதிகளாகவே இருக்கக்கூடும். இத்தகைய உயர்ந்த எண்ணம் உள்ளத்தில் உதித்தால், நம் உதடுகள் தானாகவே நன்றியை உதிர்க்கும். "நன்றி' என்பது வெறும் வார்த்தையல்ல. அதைச் சொல்லால் சொன்னால் அது ஒரு கடமை; அதைச் செயலில் காட்டினால் அது ஒரு பெருமை; ஆனால், அதை வாழ்நாள் முழுவதும் நினைவில் சுமந்தால் அதுவே மிகப் பெரிய அறம்!

வாய் திறந்து நன்றி சொல்லக்கூடத் தேவையில்லை; மெளனத்தாலேயேகூட நன்றி சொல்ல முடியும். ஈரமான விழிகளும், இதயபூர்வமான சிறு புன்னகையும், அழுத்திப் பிடிக்கும் கைகளும் அதைக் கூறிவிடும். பெற்று வளர்த்த பெற்றோருக்குப் பிள்ளைகள் தங்களின் செயல்கள் மூலம் நன்றி கூறலாம். ரத்த உறவு இல்லை என்றாலும், "உடுக்கை இழந்தவன் கைபோல' ஓடி வந்து உதவும் நட்புக்கு நம் உள்ளத்தில் எப்போதும் ஒரு தனி இடம் இருக்க வேண்டும். நம் துன்பத்தைத் துடைக்க ஓடிவந்த கால்களையும், கண்ணீரைத் துடைத்த கைகளையும், நமக்காக வருந்திய கண்களையும் நாம் எப்படி மறக்க முடியும்?

1885-ஆம் ஆண்டில் ஜோசப் மெய்ஸ்டர் என்ற ஒன்பது வயது சிறுவனை வெறிநாய் கடித்துவிட்டது. அப்போது தடுப்பூசி, பரிசோதனை நிலையிலேயே இருந்தது. ஆனால், லூயி பாஸ்டர் துணிந்து அந்தச் சிறுவனுக்குத் தடுப்பூசி போட்டு அவனைக் காப்பாற்றினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தச் சிறுவன் வளர்ந்து பாஸ்டர் நிறுவனத்திலேயே காவலாளியாகப் பணியில் சேர்ந்தான். இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மானிய நாஜிக்கள் படை பாரிûஸக் கைப்பற்றின. அவர்கள் லூயி பாஸ்டரின் நினைவகத்தைச் சிதைக்க முயன்றனர். தன் உயிரைக் காப்பாற்றிய அந்த மாமனிதரின் நினைவிடத்தைச் சேதப்படுத்த விடக்கூடாது என்பதற்காக, ஜோசப் மெய்ஸ்டர் அங்கேயே தற்கொலை செய்துகொண்டார்.

இப்படியும் சில மனிதர்கள் இந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள். நன்றி என்பது நாம் வாங்கிய கடனுக்கான வட்டி அல்ல; அது மனித மாண்புக்கான ஓர் அங்கீகாரம். நம் வாழ்வைச் செதுக்கும் ஒவ்வொருவருக்கும் நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். நாம் பெற்ற உதவிக்கு ஈடாகப் பொன்னும் பொருளும் கொடுக்கத் தேவையில்லை; உள்ளத்தின் ஆழத்திலிருந்து உண்மையாக உதிக்கும் "நன்றி' என்ற ஒற்றைச் சொல்லே நம் உயரிய பண்பின் அடையாளம். அதுவே மனிதநேயத்தின் உண்மையான இதயக்குரல்.

கட்டுரையாளர்:

பேராசிரியர்.

No comments:

Post a Comment

ஒற்றைச் சொல்லில் பண்பின் அடையாளம்!

DINAMANI. 14.03.2026 ஒற்றைச் சொல்லில் பண்பின் அடையாளம்! உள்ளத்தின் ஆழத்திலிருந்து உண்மையாக உதிக்கும் "நன்றி' என்ற ஒற்றைச் சொல்லே நம...