Monday, March 16, 2026

DINAMANI 

கடன் நெருக்கடியில் தமிழ்நாடு?

தமிழ்நாடு, உத்தர பிரதேசம் குறித்த சமீபத்திய ஒப்பீடுகள் தவறான புரிதலை ஏற்படுத்தியுள்ளதைப் பற்றி...


கடன் நெருக்கடியில் தமிழ்நாடு?

Updated On :16 மார்ச் 2026, 3:00 am


- முனைவர் ஏ.ஜே. ஹாஜா முகைதீன்

கடன் என்பது முதலீடுகளை மேற்கொண்டு வளர்ச்சியை அடைவதற்கு அரசுகள் பயன்படுத்தும் ஒரு கருவியாகும். மத்திய, மாநில அரசுகளின் கடன்கள் அதிகரித்து வருகின்றன. ஒரு மாநிலத்தின் கடன் அதிகரிக்கும் போது அதை நிதிச் சிக்கல் என்று கூற முடியாது. ஏனெனில், மாநிலத்தின் பொருளாதார வலிமையை கடன் எடுத்துக்காட்டுவதில்லை. கடனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடுவது அர்த்தமற்றதாகும். நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டம், கடன்களை வரம்பின்றி மாநில அரசுகள் வாங்குவதைத் தடுக்கிறது.

ஒரு மாநிலம் அதன் பொருளாதாரத் திறனுக்கு ஏற்றவாறுதான் கடன் வாங்க முடியும். ஒரு மாநிலத்தின் கடனை அதன் பொருளாதார வலிமையை எடுத்துக்காட்டும் குறியீடான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியுடன் (ஜிஎஸ்டிபி) ஒப்பிட்டுப் பார்த்து கடனை அணுக வேண்டும்.

ஓராண்டில் மாநிலத்தில் உற்பத்தியாகும் பண்டங்கள் சேவைகள் ஆகியவற்றின் மொத்த பணமதிப்பே ஜிஎஸ்டிபி. மாநிலத்தின் கடனை ஜிஎஸ்டிபியுடன் ஒப்பிடுவதே கடன் ஜிடிபி விகிதமாகும். இது மாநிலத்தின் பொருளாதார நிலையை மதிப்பீடு செய்வதற்கு சரியான அளவுகோலாகும்.

வரம்புக்குள் கடன் உள்ளதா என்பதை தீர்மானிக்க உதவுகிறது. மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு வாங்கியுள்ள கடன் தொகை அதிகமானதாக இருந்தாலும், அதை வைத்து அதன் நிதிநிலை மோசம் என்று கூற முடியாது. இரண்டு நபர்கள் தனித்தனியே ரூ10,000, கடன் வாங்கியுள்ள நிலையில், யாருடைய நிதி நிலை மோசமாக உள்ளது என்பதை அறிய அவர்களின் வருமானத்தை- கடனை திருப்பிச் செலுத்தும் திறனை ஒப்பிட்டுப் பார்த்தே கூற முடியும்

ஒரு லட்சம் ரூபாய் மாத வருமானம் பெறுபவருக்கு ரூ.10,000 என்பது எளிதில் சமாளிக்கக்கூடிய கடன். ஆனால், மாத வருமானம் பத்தாயிரம் உள்ளவருக்கு கடனை சமாளிப்பது கடினம். தமிழ்நாடு, உத்தர பிரதேசம் குறித்த சமீபத்திய ஒப்பீடுகள் தவறான புரிதலை ஏற்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டின் கடன் ரூ.9.29 லட்சம் கோடி. அதன் ஜிஎஸ்டிபி மதிப்பு ரூ.35.6 லட்சம் கோடி. கடன் ஜிடிபி விகிதம் 26% ஆகும். உத்தர பிரதேசத்தின் கடன் ரூ. 9.03 லட்சம் கோடி. அதன் ஜிஎஸ்டிபி மதிப்பு ரூ. 30.8 லட்சம் கோடி. கடன் ஜிடிபி விகிதம் 29 முதல் 30% ஆகும். 15-ஆவது நிதி ஆணையம் நிர்ணயித்துள்ள கடன் ஜிடிபி விகிதத்தின் உச்சவரம்பு 28.07 % ஆகும்.

தமிழ்நாட்டின் கடன் ஜிடிபி விகிதம் 26.07% மட்டுமே. உத்தர பிரதேசத்தின் மக்கள்தொகை 19 கோடி. தமிழ்நாட்டின் மக்கள்தொகை 7 கோடி. தமிழ்நாட்டைவிட உத்தர பிரதேசத்தின் மக்கள்தொகை 2.7 மடங்கு அதிகம். ஆனாலும், குறைந்த மனித வளத்தைக் கொண்டு அதிகம் உற்பத்தி செய்து கடன் ஜிடிபி விகிதத்தை உத்தர பிரதேசத்தைவிட குறைவாகவே தமிழகம் வைத்திருக்கிறது. மாநிலத்தின் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான பொருளாதார வலிமையைக் கணக்கிடுவதற்கு தனிநபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி (தனிநபர் சராசரி வருமானம்) உதவுகிறது.

ஒரு மாநிலத்தின் மொத்த உற்பத்தியின் பண மதிப்பை மாநிலத்தின் மக்கள்தொகையால் வகுத்துக் கிடைப்பதே தனி நபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி. அந்த வகையில், தமிழ்நாட்டின் தனி நபர் சராசரி வருமானம் ரூ.3,61,619. ஆனால், உத்தர பிரதேசத்தில் ரூ1,08,572. தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் உத்தர பிரதேசத்தைவிட 3.3 மடங்கு அதிகம்.

நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டத்தின்படி ஒரு மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவீதத்துக்குள் இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை மூன்று சதவீதத்தை ஒட்டியே உள்ளது. இதன் மூலம் "நீதி ஆயோக்' மற்றும் நிதி ஆணையம் நிர்ணயித்த வரம்புக்குள்ளாகவே நிதிப் பற்றாக்குறையை தமிழகம் வைத்துள்ளது.

வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் செலவுகளுக்கான வருவாயில் நான்கில் மூன்று பங்கை தனது வரி மற்றும் வரி அல்லாத ஆதாரங்களில் இருந்து பெறுகிறது. மீதி ஒரு பங்கை மட்டுமே மத்திய அரசிடமிருந்து பெறுகிறது. ஆனால், உத்தர பிரதேச அரசு தனது வருமானத்துக்கு பாதிக்கும் மேல் மத்திய அரசை சார்ந்துள்ளது.

வாங்கப்படும் கடன்கள் வளர்ச்சிக்கான கடன்களாகவும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு உண்டான ஆதார வளங்களை அதிகரிப்பதாக இருந்தால் எவ்விதப் பிரச்னையும் இல்லை. தமிழ்நாடு அரசின் கடன்கள் பெரும்பாலும் சமூக நலத் திட்டங்களுக்காகவும் வளர்ச்சிக்கான மூலதன செலவுகளுக்காகவும் வாங்கியவையாகும். உற்பத்தி, சேவைத் துறைகளின் வளர்ச்சி கூடுதல் கடன்களை வாங்குவதற்கு தமிழ்நாடு அரசுக்கு உதவுகிறது.

கரோனா பெருந்தொற்று நெருக்கடியைச் சமாளிக்க மாநிலங்களை கூடுதலாக கடன் வாங்க மத்திய அரசு அனுமதித்ததும் தமிழ்நாடு அரசின் கடன் அதிகரித்ததற்கு ஒரு முக்கிய காரணம். தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் ரூ.54,000 கோடி (13%) கல்விக்காக செலவிடப்படுகிறது. சுகாதாரத்துக்கு ரூ.20,000 கோடி (5%) செலவிடப்படுகிறது. சாலைப் போக்குவரத்து, குடிநீர் விநியோகம், நகர்ப்புற வளர்ச்சி, உள்கட்டமைப்பு, தொழில் வழித்தடங்கள் ஆகியவற்றுக்காக ரூ.57,000 கோடி செலவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மேற்கண்ட செலவினங்களுக்காக தமிழ்நாடு தொடர்ந்து கடன் வாங்கி வருகிறது. இதன் விளைவாக, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து இடைநிற்றல் குறைந்துள்ளது. தேசிய மனித வளர்ச்சி குறியீடான 0.64-ஐ தாண்டி தமிழ்நாட்டின் மனித வளர்ச்சி குறியீடு 0.69-ஆக உள்ளது.

No comments:

Post a Comment

Declare assets online by Oct, TN govt tells staff

Declare assets online by Oct, TN govt tells staff  Julie.Mariappan @timesofindia.com 11.09.2026 Chennai: Tamil Nadu govt has made it mandato...