Showing posts with label MGR. Show all posts
Showing posts with label MGR. Show all posts

Wednesday, July 6, 2016

எம்ஜிஆர் 100 | 99 - மூன்றெழுத்துக்குள் இருந்த மாமனிதம்!

‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் வெள்ளி விழாவில் அருமை அண்ணனும் அன்புத் தம்பியும்!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R.மீது மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்கூட அளப்பரிய அன்பும் மரியாதையும் மதிப்பும் உடையவர்களாக விளங்குகிறார்கள் என்றால், அதற்கு தமிழ் சமுதாயத்துக்கு அவர் ஆற்றிய தொண்டு முக்கிய காரணம். அப்படி எம்.ஜி.ஆர். மீது மதிப்பு வைத்துள்ளவர்களில் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த மூத்த தலைவரும் ஒருவர். அரசியல் மட்டுமின்றி இலக்கியமும் அவருக்கு அத்துபடி. இளையராஜாவின் ‘திருவாசகம்’ இசை வெளியீட்டு விழாவில் அவரது பேச்சைக் கேட்டு நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று விசில் அடித்தார். அந்த மூத்த தலைவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ!

படிக்கும் காலத்தில் நெல்லை மாவட் டத்தில் தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டி அருகே டூரிங் டாக்கீஸில் எம்.ஜி.ஆர். நடித்த ‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தை வைகோ பார்த்தார். படத்தில் எம்.ஜி.ஆரும் சின்னப்பா தேவரும் போடும் சிலம்பச் சண்டை வைகோவைக் கவர்ந்தது. வைகோவும் சிலம்பம் கற்றவர். எம்.ஜி.ஆரின் சிலம்ப வீச்சுக்காகவே அந்தப் படத்தை பலமுறை பார்த்திருக்கிறார். ‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆரின் வாள் வீச்சின் லாவகத்தைக் கண்டு வைகோ சொக்கிப் போனார்! ‘‘சண்டைக் காட்சிகளில் எல்லோரையும் விட எம்.ஜி.ஆர். சோபித்ததற்கு, தானாகவே அவர் மனதுக்குள் சிந்தித்து புதிய பாணிகளை வகுத்துக் கொண்டதுதான் காரணம்!’’ என்கிறார் வைகோ!

கல்லூரியில் முதுகலை படிப்புக்காக 1964-ம் ஆண்டு சென்னைக்கு வைகோ வந்தார். அந்த சமயத்தில் மலேசிய சுற்றுப் பயணத்தை முடித்து சென்னை திரும்பிய அறிஞர் அண்ணாவை ஏழு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அமரவைத்து ஊர்வலமாக அழைத்து வந்து வரவேற்பு அளித்தனர். ஊர் வலத்தை உடன் படிக்கும் மாணவர் களுடன் வைகோ பார்த்தார்.

அண்ணா இருந்த வண்டிக்கு முன் னால் சென்ற லாரியில் நின்றுகொண்டு, ரோஜாப்பூக்களை இறைத்தபடி பொன் னிறமாய் ஜொலித்த எம்.ஜி.ஆரை அப் போதுதான் வைகோ முதன்முதலில் பார்த் தார். அந்தக் காட்சி அவரது கண்களில் இருந்து இன்னும் அகலவில்லை.

1967-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர் தலை முன்னிட்டு சென்னை விருகம்பாக் கத்தில் நடந்த திமுக மாநாட்டில் பரங்கி மலைத் தொகுதியின் வேட்பாளராக எம்.ஜி.ஆர். பெயரை அண்ணா அறிவித்த போது விண்ணைப் பிளந்த கரவொலியில் வைகோவின் கரவொலியும் அடங்கும். சில நாட்களில் எம்.ஜி.ஆர். சுடப்பட்டார் என்ற செய்தி கேட்டு துடித்துப் போனார் வைகோ. ராயப்பேட்டை மருத்துவ மனைக்கு மாணவர்களுடன் விரைந்தார். ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த கூட்டத்தில் உள்ளே நுழையமுடிய வில்லை என்றாலும் எம்.ஜி.ஆரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்ற செய்தியால் ஆறுதல் அடைந்தார்.

அந்தத் தேர்தலில் விருதுநகர் தொகுதி யில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மாணவர் தலைவர் சீனிவாசன், எம்.ஜி.ஆரை மருத்துவமனையில் சந் தித்து ஆசிபெற்றார். அவருக்கு ஆதர வாக விருதுநகரில் வைகோ தீவிர பிரசாரம் செய்தார். ‘‘எம்.ஜி.ஆர். எப்படி இருக்கிறார்?’’ என்று ஏக்கத்தோடு கேட் கும் கிராம மக்களிடம், ‘‘நன்றாக இருக் கிறார். வெற்றி விழாவுக்கு வருவார்’’ என்று வைகோ கூறுவார். அவர் சொன்னதுபோலவே பிறகு, வெற்றி விழாவுக்கு எம்.ஜி.ஆர். வந்தார்!

1969-ம் ஆண்டு நெல்லை மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளராக வைகோ இருந்தபோது, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நெல் லைக்கு எம்.ஜி.ஆர். வந்தார். வைகோ ஏற்பாடு செய்திருந்த திமுக கொடியேற்று விழாவிலும் கலந்து கொண்டார்!

பின்னர், ஏற்பட்ட அரசியல் சூழல் களால் திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டபோது வைகோ மிகவும் வருந்தினார். என்றாலும், கட்சிப் பற்று காரணமாக திமுகவிலேயே இருந்துவிட் டார். 1978-ம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந் தெடுக்கப்பட்டார். அவையில் பேசும் போது எம்.ஜி.ஆரை அரசியல்ரீதியில் விமர்சித்திருக்கிறார்.

‘‘நாடாளுமன்ற நூலகத்தில் ஒரு நாள் நான் படித்துக் கொண்டிருந்தேன். டெல்லி வந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்கு நூலகத்தைக் காட்ட அதிமுக எம்.பி.க்கள் அழைத்து வந்தனர். அவ ரிடம் அதிமுக எம்.பி. மோகனரங்கம் என்னை சுட்டிக் காட்டினார். உடனே, மலர்ந்த முகத்துடன் என்னை நோக்கி வந்து கைகுலுக்கினார் எம்.ஜி.ஆர்! அவரை அரசியல்ரீதியாக விமர்சித்திருக் கிறேன். அது தெரிந்தும் அவர் என்னுடன் அன்பாக கைகுலுக்கியபோதுதான், எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்துக்குள் மாமனிதம் இருப்பதை உணர்ந்தேன்’’ என்று பூரிப்புடன் சொல்கிறார் வைகோ!

டெல்லிக்கு 1985-ல் வந்த இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே, ‘‘ஈழப் பிரச் சினை கொழுந்துவிட்டு எரிவதற்கு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.தான் காரணம்’’ என்று கூறினார். ‘‘மறுநாள் மாநிலங்களவையில் நான் பேசும்போது, ‘வெளி நாட்டுத் தலைவர்கள் இந்தியா வந் தால் இந்தியாவின் உள்நாட்டு அரசியல் பேசும் வழக்கம் இல்லை. நாம் தரும் விருந்தை சாப்பிட்டுவிட்டு மரியாதையாகப் போக வேண்டும். தமிழக முதல்வர் பற்றி ஜெயவர்த்தனே கூறியது அக்கிரமம். அவர் அருகில் இருந்த இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி பேசாமல் இருந்தது சகிக்க முடியாதது’ என்று பேசினேன். இது பத்திரிகைகளிலும் வந்தது’’ என்று வைகோ நினைவுகூர்கிறார்.

‘‘எம்.ஜி.ஆர். மீது எனக்கு திடீர் காதல் வந்திருப்பதாகக் கிண்டல் செய்த காங்கிரஸாருக்கு, ‘எங்களுக்குள் அரசியல் மோதல்கள் உண்டு. அதை தமிழக அரசியல் களத்தில் வைத்துக் கொள்வோம். ஆனால், எம்.ஜி.ஆர். எங்கள் முதல் அமைச்சர். அவரை இன்னொரு நாட்டுக்காரர், அதுவும் தமிழர்களுக்கு எதிரானவர் கண்டனம் செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது’ என்று பதிலளித்தேன்’’ என்று உணர்ச்சி மேலிட கூறுகிறார் வைகோ!

ஒரு காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், எம்.ஜி.ஆர். பற்றி தன்னிடம் கூறியதைக் கேட்ட பிறகு, எம்.ஜி.ஆரை அரசியல் ரீதியாகவும் விமர்சிப்பதை அடி யோடு நிறுத்திவிட்டதாக வைகோ கூறுகிறார்!

எம்.ஜி.ஆர். பற்றி வைகோவிடம் பிரபாகரன் அப்படி என்ன கூறினார்?

வரும் செவ்வாய்க்கிழமை நிறைவுப் பகுதியில் பார்ப்போம்.

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்




எம்.ஜி.ஆர். ஆட்சியில் பிற்படுத் தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 31 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது! பரம்பரையாக இருந்துவந்த மணியக்காரர், கர்ணம் பதவிகளுக்குப் பதிலாக, கிராம நிர் வாக அலுவலர் பதவியை உருவாக்கி சாதாரண மக்களும் அப்பதவிக்கு வர வழி செய்தார் எம்.ஜி.ஆர்.!

Thursday, June 30, 2016

எம்ஜிஆர் 100 | 97 - பொய்க்காலில் அல்ல, புகழ்க்காலில் நிற்கும் உயரம்!

எம்.ஜி.ஆருடன் ஜப்பான் டாக்டர் கானு.

M.G.R. திரையுலகில் நடிகர்கள், நடிகைகள், கவிஞர்கள் பலரையும் அறிமுகப்படுத்தியுள்ளார். தனது படங்களில் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்குவார். அவரது படங்கள் மூலம் அறிமுகமான எல்லோருமே திறமை மிக்கவர்களாக விளங்கினர். அப்படி அறிமுகமான கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர், முறையாகத் தமிழ் கற்று, பல சிறந்த பாடல்களை எழுதியுள்ள புலவர் புலமைப்பித்தன்!

படிக்கும் காலத்திலிருந்தே திராவிட இயக்கத்தின் தொண்டராக வாழ்க் கையைத் தொடங்கியவர் புலமைப் பித்தன். கோவையில் அரசியல் விரோ தத்தால் கொல்லப்பட்ட திமுக தொண்டர் ஒருவரின் குடும்பத்துக்கு நிதி வழங்க எம்.ஜி.ஆர். வந்தபோதுதான் புலமைப் பித்தன் அவரிடம் முதன்முதலில் பேசி னார். வசூலான தொகை போதாது என்று கருதிய எம்.ஜி.ஆர்., தனது சொந்தப் பணத்தில் இருந்து கணிசமான தொகையை இறந்தவரின் குடும்பத்துக்கு வழங் கியது புலமைப் பித்தனின் மனதில் இன்னும் பசுமையாக உள்ளது.

எம்.ஜி.ஆர். நடித்த ‘குடியிருந்த கோயில்’ படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ‘நான் யார், நான் யார், நீ யார்?... ’ என்ற கருத் தாழம் மிக்க அவரது முதல் பாடலே சூப்பர் ஹிட்டாக அமைந்தது. ‘அடிமைப் பெண்’ படத்தில் ‘ஆயிரம் நிலவே வா...’, ‘இதயக்கனி’ படத்தில், ‘நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற...’, ‘உழைக்கும் கரங்கள்’ படத்தில், ‘நாளை உலகை ஆளவேண்டும்...’ உட்பட பல பாடல்களை புலமைப்பித்தன் எழுதி இருக் கிறார்.

‘‘திரைத்துறையிலும் அரசியல் துறை யிலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அள வுக்கு இமயமாய் எம்.ஜி.ஆர். உயர்ந்தது பொய்க் காலில் வந்த உயரமல்ல; புகழ்க் காலில் நிற்கும் உயரம். எவ்வளவோ பேருக்கு அவர் உதவிகள் செய்திருக்கிறார். அதை எல்லாம் பட்டியல் போடுவது முடியாத காரியம்’’ என்று கூறும் புலமைப்பித்தனுக்கு சொந்த அனுபவமே உண்டு.

கோவை மாவட்டம் சூலூர் அருகே பள்ளபாளையம் கிராமத்தில் புலமைப் பித்தனின் குடும்பத்துக்கு சொந்தமான வீட்டை அவரது தந்தையும் அண்ணன் கள் இருவரும் சேர்ந்து 1967-ம் ஆண்டு அடமானம் வைத்து பணம் வாங்கினர். அடுத்த ஆண்டே அவரது தந்தை இறந்து போனார். 1971-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதிக்குள் கடனாக வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கத் தவறினால், கடன் கொடுத்தவருக்கே வீடு சொந்தமாகிவிடும்.

அப்போது, படங்களில் புலமைப் பித்தன் ஒருசில பாடல்கள் எழுதிக் கொண் டிருந்த காலம். பேர் இருந்த அளவுக்கு பணம் இல்லை. பல நாட்கள் தயக்கத் துக்குப் பின் ஒருநாள், வாஹினி ஸ்டுடி யோவில் படப்பிடிப்பு முடிந்து ஒப்பனை அறைக்குச் சென்ற எம்.ஜி.ஆருடன் கூடவே புலமைப்பித்தனும் சென்றார். அவர் ஏதோ சொல்ல நினைப்பதை குறிப்பால் உணர்ந்தார் எம்.ஜி.ஆர்.!

யாரையும், எதையும் உடனடியாக புரிந்து கொள்ளும் திறனும், கூர்ந்த கவ னிப்பும் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்த வரம். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட அவரது கூர்மைத் திறன் குறைய வில்லை. தனக்கு சிகிச்சை அளித்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டாக்டர் கானு என்பவருக்கு தங்கத்தில் சிறிய யானை சிலையை பரிசளிக்க எம்.ஜி.ஆர். முடிவு செய்தார்.

அதற்காக, சென்னையில் உள்ள நகைக் கடை ஒன்றில் தங்கத்தில் சிறிய யானை சிலை செய்யப்பட்டு எம்.ஜி.ஆரின் பார்வைக்கு அனுப்பப்பட் டது. அதை கவனித்துவிட்டு யானையின் தும்பிக்கையும் வாலும் ஏறக்குறைய ஒரே அளவில் இருப்பதாகவும் வாலை இன்னும் சற்று சன்னமாக மாற்றும் படியும் எம்.ஜி.ஆர். கூறினார். நகைக் கடையினர் ஆச்சரியத்தில் மூழ்கினர்! அந்த அளவுக்கு எதையும் கூர்மையாக, உடனே கிரகித்துவிடுவார்.

தன்னுடன் உள்ளே வந்த புலமைப் பித்தனைப் பார்த்து சிரித்தபடியே, ‘‘என்ன?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். தனது வீடு அடமானத்தில் இருப்பதை யும் குறிப்பிட்ட தேதிக்குள் பணம் கொடுக் கத் தவறினால் பூர்விக வீடு கையை விட்டுப் போய்விடும் என்பதையும் ஒருவழியாக திக்கித் திணறிக் கூறினார் புலமைப்பித்தன்!

‘‘நான் பணம் தருகிறேன்’’ அடுத்த விநாடி பதில் வந்தது எம்.ஜி.ஆரிடம் இருந்து! ‘‘இல்லண்ணே, நீங்க எனக்கு பாட்டு மட்டும் கூடுதலாக கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்’’ என்றார் புலமைப் பித்தன். ‘‘பாட்டும் தரேன், பணமும் தரேன். ஏன் நான் பணம் தரக்கூடாதா? உங்கள் கடமையில் எனக்குப் பங்கில்லையா? என்னை ஏன் நீங்க வேறாக நினைக் கணும்?’’ என்று அன்புடன் கடிந்து கொண்டார் எம்.ஜி.ஆர்.!

பின்னர், அவர் கொடுத்த பணத்தில் வீட்டை மீட்டு, அதற்கான பத்திரத்துடன் சென்னை திரும்பி படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரை புலமைப்பித்தன் சந் தித்தார். பத்திரத்தை அவர் காலடியில் வைத்து வணங்கக் குனிந்த புலமைப்பித்த னின் தோள்களை ஆதர வாகப் பற்றி எம்.ஜி.ஆர். அணைத்துக் கொண் டார். தன் பெற்றோர் வாழ்ந்த நினைவுச் சின் னத்தையும், இழக்க இருந்த கவுரவத்தையும் மீட்ட நிம்மதியில் புலமைப்பித்தன் கண்கலங்க நின்றார்!

அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய போது, ஆரம்ப காலத்தில் இருந்தே உடன் இருந்தவர்களில் புலமைப்பித்தனும் ஒருவர். எம்.ஜி.ஆர். முதல்வரான பின்னர், 1977-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி சட்டமேலவை உறுப்பினராக புலமைப்பித்தனை நியமித்தார். பின்னர், சட்டமேலவை துணைத் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

‘‘தன்னைப் போற்றியவருக்கு மட்டு மல்ல; தூற்றுவோருக்கும் தயங்காமல் உதவி செய்யும் பொன்மனம் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே சொந்தமானது’’ என்று நன்றியோடு நினைவுகூரும் புலமைப்பித்தனை, 1984-ம் ஆண்டு தமிழக அரசின் அரசவைக் கவிஞராக முதல்வர் எம்.ஜி.ஆர். நியமித்தார். பதவி யேற்பு நிகழ்ச்சியின்போது, புலமைப் பித்தன் பாடிய கவிதையில் எம்.ஜி.ஆரை வாழ்த்தி வரும் வரிகள் இவை...

‘‘குழந்தையின் பல் பட்ட இடத்தில்

பால் மட்டும் சுரக்கும்

அன்னை இதயம் அவனது இதயம்!’’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம்


ஒருமுறை எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட கூட்டத்தில் பெண்களும் ஏராளமாகத் திரண்டனர். கூட்டத்தில் பேசி முடித்த பின், ‘‘ஆண்களுக்குத் தனியாக ஒரு விஷயம் சொல்லப்போகிறேன். பெண்கள் எல்லோரும் வெளியேறுங்கள்’’ என்றார். பெண்கள் அனைவரும் வெளியேறியபின், ‘‘இப்போது ஆண்களும் அமைதியாக வெளியேறலாம்’’ என்றார். புரியாமல் நின்ற கூட்டத்தைப் பார்த்து, ‘‘பெண்கள் நெரிசலில் சிக்கி அவதிப்படக் கூடாது என்பதற்குத்தான் அப்படிச் சொன்னேன்’’ என்று சிரித்தபடி எம்.ஜி.ஆர். கூறியதும், அவரது சமயோசிதத்தை ரசித்தபடி மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கூட்டத்தினர் கலைந்தனர்!

Tuesday, June 28, 2016

எம்ஜிஆர் 100 | 95 - கருணை உள்ளம் கொண்டவர்!

தான் வளர்த்த கரடிக் குட்டிக்கு எம்.ஜி.ஆர். உணவு கொடுக்கிறார்.

M.G.R. விலங்குகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். தன்னுடன் சண்டைக் காட்சிகளில் நடிக்கும் நடிகர்களுக்கு அடிபட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார். அதேபோல, விலங்குகளுக்கும்கூட ஆபத்து ஏற்படக் கூடாது என்று நினைப்பார். தன் வீட்டிலேயே சில விலங்குகளை வளர்த்து வந்தார்!

எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு அவரது படங்களில் வரும் சண்டைக் காட்சி கள் சர்க்கரைப் பொங்கல். அவ ருடன் சண்டைக் காட்சிகளில் நடித்த நடிகர்களில் ரசிகர்களால் மறக்க முடி யாதவர் ஜஸ்டின். ‘ரகசிய போலீஸ்’, ‘அடிமைப் பெண்’, ‘இதயக்கனி’, உட்பட எம்.ஜி.ஆரின் கடைசிப் படமான ‘மது ரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை பல படங்களில் ஜஸ்டின் நடித்துள்ளார். அவரது ஆஜானுபாகுவான தோற்றத் தையும் சண்டைக் காட்சிகளில் திறமை யையும் பார்த்த எம்.ஜி.ஆர்., தன்னுடைய பல படங்களில் பெரும்பாலும் தனித்தே மோதும் வாய்ப்பை ஜஸ்டினுக்கு வழங்கினார். அவை படத்தின் ‘ஹைலைட்’டாக இருக்கும்.

‘இதயக்கனி’ படத்தில் பெங்களூர் அரண்மனையில் ஜஸ்டினுடன் மோதும் சண்டைக் காட்சியின் இறுதியில், எம்.ஜி.ஆர். அடித்ததும் மாடிப் படிகளில் குப்புறப்படுத்தவாறே ஒவ்வொரு படியாக தடதடவென்று ஜஸ்டின் சறுக்கி விழும் காட்சி ரசிகர்களின் கைதட்டலைப் பெறும். இதுபோன்ற காட்சிகளில் நடிப் பவர்களுக்கு அடிபடாமல் இருப்பதற் கான உத்திகளை அவர்களுக்கு எம்.ஜி.ஆரே சொல்லிக் கொடுப்பார்!

அந்த அளவுக்கு நடிகர்கள் மீது அக் கறை கொண்டவர். அந்த அக்கறையால் தான், புகழ்பெற்ற தயாரிப்பாளரும் இயக்குநருமான கே.சுப்பிரமணியம் மற்றும் திரைத்துறை வல்லுநர்கள் சேர்ந்து 1950-ம் ஆண்டு உருவாக்கிய ‘தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை’ அமைப்பையும், பின்னர் உருவான ‘தென்னிந்திய துணை நடிகர்கள் சங்கம்’ என்ற அமைப்பையும் தொடர்ந்து, எம்.ஜி.ஆரின் முயற்சியால் 1952-ம் ஆண்டு ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ உருவானது. ஆரம்ப காலத்தில் அந்த சங்கம் இயங்க தன் வீட்டிலேயே ஒரு பகுதியை ஒதுக்கிக் கொடுத்ததோடு, பின்னர், இப்போது சென்னை தியாக ராய நகரில் உள்ள இடத்தை வாங்கு வதிலும் முக்கிய பங்காற்றினார். சுமார் 22 கிரவுண்டு உள்ள அந்த இடம் அப்போது 75 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்டது. வசூலான 35 ஆயிரம் போக மீதமுள்ள 40 ஆயிரம் ரூபாயை எம்.ஜி.ஆர். தனது சொந்தப் பணத்தில் இருந்து கொடுத்து உதவினார்!

ஒரு தாய், நான்கு குழந்தைகளை வைத்தபடி இருக்கும் நடிகர் சங்க இலச்சினையை உருவாக்கியதும் எம்.ஜி.ஆர்.தான்! அந்த இலச்சினை பொறித்த மோதிரத்தை நீண்ட காலம் அணிந்திருந்தார். நடிகர் சங்கத் தலைவராகவும் பதவி வகித்து அதன் வளர்ச்சிக்குப் பணியாற்றியுள்ளார்.

‘வேட்டைக்காரன்’ படத்தின் கிளை மாக்ஸில் 20 அடி உயரமான இடத்தில் இருந்து ஸ்டன்ட் நடிகர் கே.பி.ராம கிருஷ்ணன் கீழே விழ வேண்டும். அவர் விழும் இடத்தில் பாம்புகள் இருக்கும். ராமகிருஷ்ணனைப் பார்த்து எம்.ஜி.ஆர்., ‘‘கீழே மெத்தை போடச் சொல்லட்டுமா?’’ என்றார். ‘‘இல்லண்ணே, நான் பார்த்து குதிச்சுடறேன்’’ என்றார் ராமகிருஷ்ணன்.

பின்னர், எம்.ஜி.ஆர். கூறிய வார்த்தை கள், வாயில்லா ஜீவன்களையும் அவர் எப்படி நேசித்தார் என்பதைக் காட்டும். ராம கிருஷ்ணனிடம், ‘‘பாம்புகள் மேலே படாமல் பார்த்து குதிக்கணும். பாம்புகள் மேலே விழுந்தால் அவை செத்துடும், பாவம்’’ என்று கூறினார்.

‘நல்ல நேரம்’ படத்தில் எம்.ஜி.ஆர். நான்கு யானைகளை வளர்ப்பார். தினமும் படப்பிடிப்புக்கு வரும்போது யானைகளுக்காக நிறைய உருண்டை வெல்லம், கரும்பு, வாழைத் தார்கள் வாங்கி வந்து யானைகளுக்குக் கொடுப்பார். அவைகள் சாப்பிடுவதைப் பார்த்து ரசித்து மகிழ்வார்!

தனது வீட்டில் கரடிக் குட்டியையும் நாய்களையும் எம்.ஜி.ஆர். வளர்த்து வந்தார். கரடிக் குட்டி தினமும் காலையில் அவர் கையால்தான் ஃபீடரில் பால் குடிக் கும். தன் வீட்டில் வளரும் மிருகங்களை கவனிக்க தனியே ஒரு மருத்துவரையும் நியமித்திருந்தார். கரடிக்கு மூக்கில் சங்கிலி இணைக்க வசதியாக மருத்துவரின் உதவியுடன் துளையிட முயன்றபோது அது இறந்துவிட்டது. எம்.ஜி.ஆர். மிகவும் வேதனைப்பட்டார்.

வீட்டில் இரண்டு சிங்கங்களையே எம்.ஜி.ஆர். வளர்த்தார். ஒன்றின் பெயர் ராஜா. பெண் சிங்கத்தின் பெயர் ராணி. இதில் ராஜா என்ற சிங்கத்துடன்தான் ‘அடிமைப் பெண்’ படத்தில் கிளைமாக் ஸில் எம்.ஜி.ஆர். மோதுவார். அந்தக் காட்சியை அற்புதமாக படமாக்கினார். அது ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. ‘‘சிங்கத்தின் வாயை தைத்து விடலாம்’’ என்று சிலர் யோசனை கூறிய போது எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார். ராணி சிங்கம் ‘அடிமைப் பெண்’ படம் எடுக்கும் முன்பே இறந்துவிட்டது.

பின்னர், ராஜா சிங்கத்தை மிருகக் காட்சி சாலைக்கு எம்.ஜி.ஆர். கொடுத்து விட்டார். அங்கு சில ஆண்டுகளுக்குப் பின் முதுமையால் அது இறந்துவிட்டது. அந்த சிங்கத்தின் மேல் வைத்திருந்த பிரியத்தால் அதன் உடலை வாங்கி பாடம் செய்து வைத்திருந்தார். எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் எம்.ஜி.ஆரின் கருணை உள்ளத்துக்குச் சான்றாய், அவரது நினைவு இல்லத்தில் கண்ணாடிப் பேழைக்குள் இன்றும் கம்பீரமாக நிற்கிறான் ‘ராஜா’!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்




தமிழ்ப் படத்தில் முதன்முதலில் கான்டாக்ட் லென்ஸ் அணிந்து நடித்த ஹீரோ எம்.ஜி.ஆர்.தான்! ‘நாளை நமதே’ படத்தில் சங்கர் என்ற பாத்திரத்தில் வரும் எம்.ஜி.ஆர். கான்டாக்ட் லென்ஸ் அணிந்து நடித்திருப்பார்! ‘படகோட்டி’ படத்தில் படம் முழுவதும் செருப்பு அணியாமல் எம்.ஜி.ஆர். நடித்திருந்தார்!

Thursday, June 23, 2016

எம்ஜிஆர் 100 | 91 - ரசிகர்களுக்கு மதிப்பளித்து மகிழ்ச்சிப்படுத்தியவர்!


‘அடிமைப் பெண்’ படத்தின் வெற்றி விழாவின்போது மதுரை சிந்தாமணி திரையரங்கில் எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா, தியேட்டர் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, பண்டரிபாய்.

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. தனது திரைப்படங்களைக் காணவரும் ரசிகர்களை ஏமாற்றியதில்லை. உழைத்துக் களைத்து படம் பார்க்க வரும் மக்கள், படத்தைப் பார்த்துவிட்டு திருப்தியாக செல்லும் வகையிலேயே அவரது படங்கள் இருக்கும். பொழுதுபோக்கோடு நல்ல கருத்துக்களும் இருக்கும். படங்களில் மட்டுமின்றி; நிஜவாழ்விலும் தன்னைக் காணவரும் ரசிர்களுக்கு மதிப்பளித்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியவர் அவர்!

சாண்டோ சின்னப்பா தேவர் தயாரித்த ‘தேர்த் திருவிழா’ படத்தின் படப்பிடிப்பு கும்ப கோணம் அருகே ஏழு மைல் தொலை வில் காவிரி ஆற்றில் நடந்தது. படப் பிடிப்பு நடந்த சமயம் கோடைக்காலம். எம்.ஜி.ஆர். வந்திருப்பதை அறிந்து ஏராளமான மக்கள் கூடிவிட்டனர். ‘‘படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வந்து யாரும் தொல்லை செய்யக் கூடாது’’ என்று ஒலிப்பெருக்கி மூலம் எம்.ஜி.ஆர். அன்புக் கட்டளையிட்டார்.

அவர் வார்த்தைக்கு மதிப்பளித்து ஒருவர்கூட படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் அருகே செல்லவில்லை. கொதிக்கும் மணலில் நின்றபடியே தூரத்தில் இருந்து எம்.ஜி.ஆரைப் பார்த்து ரசித்தனர். வெயிலில் நிற்கும் மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள், மோர், தண்ணீர் கொடுக்க எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்தார். பத்து நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. தினமும் படப்பிடிப்பு முடிந்து கும்பகோணம் திரும்பும் வழியில் சாலையின் இரு புறமும் மக்கள் கூடி நின்று எம்.ஜி.ஆரை வாழ்த்தினர். மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் அன்பை வெளிப் படுத்தினர்.

படப்பிடிப்பு குழுவினர் கும்பகோணம் டி.எஸ்.ஆர். இல்லத்தில் தங்கியிருந்த னர். அங்கும் தினமும் வாசலில் ரசிகர்கள் திரண்டனர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற எம்.ஜி.ஆர். முடிவு செய்தார். படப்பிடிப்பின் கடைசி நாளன்று திறந்த வேனில் ஏறி நின்று ரசிகர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார். சக கலைஞர்களையும் கவுரவிக்கும் வகையில் அவர்களையும் வேனில் ஏறச் சொல்லி மக்களின் வாழ்த்துக்களை ஏற்கச் செய்தார்.

ஒரு ரசிகர் கூட்டத்தில் முண்டியடித்து முன்னேறினார். அவரை எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் தடுத்தனர். அதை கவனித்த எம்.ஜி.ஆர்., அந்த ரசிகரை அருகில் வரும்படி சைகை செய்தார். சின்னப்பா தேவர் அந்த ரசிகரை ‘அலாக்’காக தூக்கி வேன் மேலே ஏற்றினார். தன் கையில் வைத்திருந்த கடலைப் பொட்ட லத்தை எம்.ஜி.ஆரிடம் கொடுத் தார் அந்த ரசிகர். உடனேயே, ஒவ்வொரு கடலையாக வாயில் போட்டுக் கொள்ள ஆரம்பித் தார் எம்.ஜி.ஆர்.! உலகையே ஜெயித்துவிட்ட திருப்தி அந்த ரசிகரின் முகத்தில் ஜொலித்தது. இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் ஆர்ப்பரித்தது!

எம்.ஜி.ஆர். சொந்தமாக தயாரித்து, நடித்த ‘அடிமைப் பெண்’ திரைப்படம் 1969-ம் ஆண்டின் பிரம்மாண்டமான வெற்றிப் படம். மதுரை சிந்தாமணி திரையரங்கில் வெள்ளி விழா கொண்டாடியது. அந்த திரையரங்கில் நடந்த வெற்றி விழாவில் எம்.ஜி.ஆரும் சக கலைஞர்களும் கலந்து கொண்டனர். விழாவில் கலந்துகொள்வதற்காக மதுரை வந்த எம்.ஜி.ஆர்., பாண்டியன் ஓட்டலில் தங்கியிருந்தார். காலையில் இருந்தே ஓட்டல் முன் மக்கள் திரள ஆரம்பித்தனர்.

விழாவுக்கு எம்.ஜி.ஆர். புறப்பட்ட போது, பாண்டியன் ஓட்டலில் இருந்து சிந்தாமணி டாக்கீஸ் வரை இருபுறமும் மக்கள் திரண்டு நின்று வாழ்த்துக் கோஷங்களை எழுப்பினர். அதற்குமுன் தியேட்டர்களில் நடந்த நூறாவது நாள் விழாக்களில் நடிகர், நடிகைகள் கருப்பு கண்ணாடி ஏற்றிய காரில் செல்வார்கள். தியேட்டரில் இருப்பவர்கள் மட்டுமே அவர்களைப் பார்க்க முடியும்.

ஆனால், ‘அடிமைப் பெண்’ வெற்றி விழாவின்போது, பொதுமக்களும் பார்க்க வசதியாக எம்.ஜி.ஆர். திறந்த வேனில் வந்தார். தேர்தல் பிரசாரத் துக்கு தான் பயன்படுத்தும் வேனில் ஜெயலலிதா, பண்டரிபாய் ஆகியோரு டன் நின்று கொண்டே வந்தார். வழிநெடுக மக்களின் ஆர்ப்பாட்டமான வரவேற்பை கையசைத்தும், கும்பிட்டபடியும் ஏற்றுக் கொண்டார். ‘அடிமைப் பெண்’ படப்பிடிப் புக்காக ராஜஸ்தானுக்கு எம்.ஜி.ஆர். சென்றபோதுதான் அவருக்குத் தொப்பி அணியும் பழக்கம் ஏற்பட்டது. திரை யரங்குக்கு தொப்பி, கண்ணாடியுடன் வந்த எம்.ஜி.ஆரைப் பார்த்த ரசிகர்கள் எழுப்பிய கரவொலியிலும் உற்சாக ஆரவாரத்திலும் மதுரையே குலுங்கியது!

திரையரங்கில் மதியக் காட்சியிலும் பின்னர் மாலைக் காட்சியிலும் இடை வேளையின்போது மேடையில் எம்.ஜி.ஆர். தோன்றி நன்றி தெரிவித்துப் பேசினார். அவருடன் கைகுலுக்க போட்டியிட்ட ரசிகர்களுடன் கைகுலுக்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இதற்கு நடுவே, திரையரங்கு அலு வலகத்தில் அமர்ந்து ஊழியர்கள், பார்வையாளர்களை சந்தித்துப் பேசினார்.

தமிழ் திரையுலகின் தன்னிகரில்லா சூப்பர் ஸ்டார், செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர் என்பதையெல்லாம் தாண்டி எம்.ஜி.ஆரிடம் தூக்கலாக இருந்த குணம் மனிதாபிமானம்.

ஒவ்வொருவரையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். எப்போதும் உறுதியாக இருப்பார். சிந்தாமணி திரையரங்கிலும் அவரது மனிதநேயம் வெளிப்பட்டது. தியேட்டர் அலுவலகத்தில் அவர் அமர்ந்திருந்த போது, கடமையே கண்ணாக பாதுகாப்புக்கு நின்றுகொண்டிருந்த போலீஸாரை எம்.ஜி.ஆர். அழைத்தார். அவர்களுடைய பணி மற்றும் குடும்ப விவரங்களை அன்போடு கேட்டறிந்து கைகுலுக்கி வாழ்த்தினார். போலீஸாரின் முகங்கள் ஆயிரம் வாட்ஸ் விளக்காய் பிரகாசித்தது!

எம்.ஜி.ஆருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. ஆனால், பல தளங்களிலும் உள்ள விதவிதமான தனது ரசிகர்களை நேசித்து ரசித்தவர் எம்.ஜி.ஆர்.!

‘குடியிருந்த கோயில்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடங்கள். ஓட்டலில் நடனமாடி பாடும் கலைஞராக ஒரு பாத்திரம். அறிமுகக் காட்சியில் ‘என்னைத் தெரியுமா?...’ பாடலில் திரையரங்கில் இருக்கும் ரசிகர்களைப் பார்த்தபடி திரையில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் வரிகள்...

‘ஆஹா ரசிகன்... ஆஹா ரசிகன்,

நல்ல ரசிகன்... நல்ல ரசிகன்

உங்கள் ரசிகன்... உங்கள் ரசிகன்...!’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார், எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்




ஆண்களைப் போலவே ஏராளமான அளவில் எம்.ஜி.ஆருக்கு ரசிகைகளும் உண்டு. 1967-ம் ஆண்டு ‘காவல்காரன்’ படம் வெளியானபோது, படத்தைப் பார்க்க பெண்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையில் குளோப் திரையரங்கில் பெண்களுக்காகவே பிரத்தியேக காட்சி திரையிடப்பட்டது. குளோப் திரையரங்கில் முதன்முதலில் 100 நாட்கள் கடந்த தமிழ்ப் படம் ‘காவல்காரன்’!

Tuesday, June 21, 2016

எம்ஜிஆர் 100 | 90 - படுத்துக்கொண்டே நடித்தவர்!


மதுரை அவனியாபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மூதாட்டியின் குறைகளை பரிவோடு கேட்கிறார் எம்.ஜி.ஆர்.

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. பலருக்கும் எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறார். ஆனால், அவருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் குடும்பச் சொத்துக்களை விற்க முனைந்த தாய்மார்கள் உண்டு. எம்.ஜி.ஆரை தங்கள் மகனாகவே கருதிய மூதாட்டிகள், தங்கள் விவசாய நிலத்தில் அவர் காலடி பட்டால் மண்ணெல்லாம் பொன்னாய் விளையும் என்று நம்பினர்!

வரி பாக்கிகளுக்காக எம்.ஜி.ஆரின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட லாம் என்று வதந்திகள் பரவிய நேரம். திண்டிவனத்தில் ஆசிரியராக பணி யாற்றி வந்த இரா.ஷெரீப் என்பவர், எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதினார். ‘‘தங்கள் சொத்துக்கள் ஜப்தி செய்யப் படலாம் என்று வரும் செய்திகள் அறிந்து என்னைப் போலவே தங்களையும் தனது மகனாகக் கருதும் எனது தாய் மிகுந்த வருத்தமடைந்திருக்கிறார். குடும்பச் சொத்துக்களை விற்று தங்களுக்கு உதவச் சொன்னார். என் வீடு, மனை ரூ.40 ஆயிரம் விலைபோகும். அதை தங் களுக்கு அளிக்கிறேன். என் தாய் தங் களுக்காக உயிரைக்கூட தர சித்தமாக இருக்கிறார்’’ என்று கடிதத்தில் ஷெரீப் கூறியிருந்தார்.

எம்.ஜி.ஆர். தனது தாய் சத்யா அம்மையாரை தெய்வமாக மதிப்பவர். ராமாவரம் தோட்டத்து வீட்டில் தாய்க்கு சிறிய கோயிலே கட்டியிருந்தார். வெளியே புறப்படும் முன் தாயை வணங்கி விட்டுத்தான் புறப்படுவார். மற்ற தாய்மார் களையும் சொந்தத் தாய் போலவே கருதினார். ஷெரீப் எழுதிய கடித விவரங் களைப் பற்றியும் அந்தத் தாயைப் பற்றியும் ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளிவந்த தனது சுயசரிதையான ‘நான் ஏன் பிறந்தேன்’ தொடரில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

‘‘வயதான காலத்தில் அந்தத் தாய் தன் மக்களுடைய எதிர்காலத்துக்கு என் பதைப் பற்றி சிறிதேனும் கவலைப்படா மல் என்னுடைய கடனைத் தீர்க்க, தங் களின் சொத்துக்களை விற்க முடிவெடுத் தார்களே, அந்த மனித தெய்வத்தை நான் வணங்காதிருப்பது எப்படி? அந்தத் தாய் எனக்காக உயிரைத் தரவும் துணிந்து விட்ட நிலையில், நான் அவர்களுக்காக என் உயிரைத் தராவிடினும் உழைப்பை யாவது தரவேண்டாமா?’’ என்று எம்.ஜி.ஆர். எழுதியுள்ளார்.

தனக்காக அவர்கள் சொத்துக் களை விற்பதை ஏற்க எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார். பின்னர், அந்தத் தாயார் உடல் நலம் பாதிக்கப் பட்டுள்ளார் என்பதை கடிதம் மூலம் அறிந்து, திண்டிவனம் சென்றார். ஷெரீப்பின் வீட்டுக்குச் செல்வதற்காக சிறிய சந்துகளின் வழியே எம்.ஜி.ஆர். நடந்து சென்றார். தங்கள் சந்தில் எம்.ஜி.ஆர். நடந்து வருவதை நம்பமுடி யாத மக்கள் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று, ஓட்டமும் நடையுமாய் கூடவே சென்றனர். ஷெரீப்பின் வீட்டை அடைந்த எம்.ஜி.ஆரை, மூத்த மகனை கண்ட மகிழ்ச்சியுடன் படுக்கையில் இருந்தவாறே கண்ணீருடன் வரவேற் றார் அந்தத் தாய். அவரது கரங்களை ஆதரவாகப் பிடித்தபடி நலம் விசாரித்தார் எம்.ஜி.ஆர்.!

‘‘எங்கே உன்னைப் பார்க்காமலே செத்துப் போயிடுவேனோன்னு பயந் தேன். லெட்டர் போட்டவுடனே வந்துட் டியே. நல்லா இருப்பா…’’ என்று கண் கலங்கியபடி நெஞ்சு குளிர வாழ்த் தினார் ஷெரீப்பின் தாய். ‘‘அழாதீங் கம்மா. உங்களுக்கு ஒன்றும் இல்லை. சீக்கிரமே உடம்பு சரியாகி விடும்’’ என்று கண்ணீரைத் துடைத்தபடியே தேற்றிய எம்.ஜி.ஆர்., ஒரு கவரை அவரிடம் அளித்தார். அதில் பணம் இருப்பதைப் பார்த்துவிட்டு அதை ஷெரீப்பின் தாய் ஏற்க மறுத்தார்.

‘‘அம்மா. உங்களுக்கு கொடுக்க வேண்டியது என் கடமை. நீங்க என்னை மகனா நினைக்கிறது உண்மையா இருந்தா, மூத்த மகன் செய்யற இந்த சிறிய உதவியை ஏத்துக்கணும்’’ என்ற எம்.ஜி.ஆரின் வார்த்தையைத் தட்ட முடியாமல் மகிழ்ச்சியோடு பணத்தை வாங்கிக் கொண்டார் ஷெரீப்பின் தாயார். இது நடந்தது 1979-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம். பின்னர், ஓரளவு உடல் நலம் தேறிய அந்தத் தாயின் உடல் நிலை 1980-ம் ஆண்டு ஜனவரி மாதம் மோசமடைந்தது. எம்.ஜி.ஆருக்கு தந்தி அடித்தார் ஷெரீப். அப்போதும், திண்டிவனம் சென்று பார்த்தார் எம்.ஜி.ஆர்.! அந்த மகிழ்ச்சியிலேயே கண்ணை மூடினார் அந்தத் தாய்!

ஒருமுறை மதுரை அருகே எழுமலை என்ற கிராமத்தில் வேனில் எம்.ஜி.ஆர். சென்று கொண்டிருந்தபோது, ஒரு மூதாட்டி தன் இரு மகள்களுடன் குறுக்கே வந்து நின்றார். வேனில் இருந்து இறங் கிய எம்.ஜி.ஆர்., ‘‘என்னம்மா, உங் களுக்கு ஏதாவது உதவி தேவையா?’’ என்றார்.

அந்த மூதாட்டி, ‘‘மகராசா, உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். என் விவசாய நிலத் தில் உன் பாதம் படவேண்டும். ஒருமுறை நடந்துவிட்டு வா, அதுபோதும்’’ என்றார். சிரித்தபடியே அவரது கோரிக்கையை ஏற்ற எம்.ஜி.ஆர்., அருகே இருந்த நிலத்துக்குச் சென்று மூதாட்டியின் கரத்தைப் பற்றியபடியே சிறிது தூரம் நடந்தார். அந்த மூதாட்டி கண்களில் நீர்வழிய, ‘‘இதுபோதும் ராசா, இனிமே இந்த நிலத்தில் பொன்னு விளையும்’’ என்றார். எம்.ஜி.ஆரின் ஜிப்பா பையிலிருந்து பணக் கத்தை அந்தத் தாயின் கரங்களுக்கு இடம் மாறியது!

எம்.ஜி.ஆர்., கே.ஆர்.விஜயா நடித்த ‘நல்ல நேரம்’ திரைப்படத்தில் ‘நீ தொட்டால் எங்கும் பொன்னா குமே, என் மேனி என்னாகுமோ?…’ என்ற டூயட் பாடல் இடம்பெறும். மற்ற எம்.ஜி.ஆர். பட பாடல்களுக்கு இல்லாத சிறப்பு இந்தப் பாடலுக்கு மட்டுமே உண்டு.

வழக்கமாக, பாடல் காட்சிகளில் பார்ப் பவர்களுக்கு உற்சாகம் தொற்றிக் கொள் ளும் வகையில் எம்.ஜி.ஆர். ஆடுவார், ஓடுவார். ஆனால், இந்தப் பாடலில் வலைப் படுக்கையில் (நெட்) படுத்த படியே பாடி நடித்திருப்பார். முழு பாடல் காட்சியிலும் படுத்தபடியே நடித்த நடிகர் எம்.ஜி.ஆராகத்தான் இருப்பார்! ஓடி ஆடி நடிப்பதைவிட, படுத்துக் கொண்டே பாடல் காட்சியில் நடிப்பது கஷ்டம். ஆனாலும், படுத்துக் கொண்டே ஜெயித்தவருக்கு படுத்துக் கொண்டே நடிப்பது கஷ்டமா என்ன?

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார், எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்


தேவர் ஃபிலிம்ஸின் முதல் வண்ணப் படமான ‘நல்ல நேரம்’ 1972-ம் ஆண்டு வெளியாகி தமிழகம் முழுவதும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. சென்னையில் இரண்டு திரையரங்குகளில் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்தது. அதோடு, அந்த ஆண்டு வெளியான படங்களில் சென்னையில் சித்ரா, மகாராணி, மேகலா, ராம் ஆகிய 4 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி, சாதனை செய்த ஒரே படம் ‘நல்ல நேரம்’!

Monday, June 20, 2016

எம்ஜிஆர் 100 | 88 - கலைஞருக்கெல்லாம் வள்ளல்!

1973-ம் ஆண்டு திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலின்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மாயத்தேவர், எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவிக்கிறார். புகைப்படம் எடுப்பவர்களுக்கு வசதியாக அவரது கையை எம்.ஜி.ஆர். பற்றியிருப்பதைக் காணலாம்.

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
M.G.R. புகைப்படக் கலையில் ஆர்வம் கொண்டவர். கேமராவை கையாள்வதில் நிபுணர். புகைப்படம் எடுக்கும்போது படம் எடுப்பவர்களுக்கு அருமையாக போஸ் கொடுத்து ஒத்துழைப்பு அளிப்பதுடன், அவர்களின் நடைமுறை சிரமங்களையும் அறிந்தவர். ஸ்டில் கேமரா மட்டுமின்றி, படப்பிடிப்பு கேமராக்களின் கோணங்களையும் பெரும்பாலும் அவரே முடிவு செய்வார். அதனால்தான், எம்.ஜி.ஆரின் திரைப்படங்களைப் போலவே அவரது புகைப்படங்களும் ரசிக்க வைக்கின்றன!

பொதுவாக, தலைவர்களுடன் தொண்டர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்க மான ஒன்று. அந்த நேரத்தில் ஆர்வமாக எடுத்துக் கொள்வார்களே தவிர, தலை வரைப் பார்த்த மகிழ்ச்சியில் தங்களைப் புகைப்படம் எடுத்தது யார் என்றுகூட தெரியாமல் சென்றுவிடுவார்கள். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து பல பேரை படம் எடுத்துவிட்டு, தலைவர்களுடேனேயே புறப்பட்டுவிடும் புகைப்படக் கலைஞர் களும் யார், யாரை படம் எடுத்தோம்? யாரிடம் புகைப்படங்களைக் கொடுப் பது என்று தெரியாமல் தவிப்பார்கள். இதுபோன்று, புகைப்படக் கலைஞர்களி டம் கேட்பாரின்றி ஏராளமான புகைப் படங்கள் இருக்கும்.

ஒருமுறை தேர்தல் பிரசாரத்தின் போது மதுரைக்குச் சென்ற எம்.ஜி.ஆர்., அங்கு தங்கியிருந்தார். அவரைப் பார்க்க கட்சியினரும் தொண்டர்களும் குவிந்தனர். காலையில் எம்.ஜி.ஆர். சுற்றுப் பயணத்துக்கு புறப்படும்முன், தொண்டர்கள் குழுக்களாக அவர் இருந்த அறைக்குச் சென்று சந்தித்தனர். ஒரு குழுவினர் அவரோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டு அவரிடம் தெரிவித்தனர்.

அப்போது, அந்த அறையில் இருந்த புகைப்படக் கலைஞரிடம் எம்.ஜி.ஆர். படம் எடுக்கச் சொன்னார். படம் எடுத்து முடித்தபின் சுற்றுப் பயணம் செல்வதற் காக அறையில் இருந்து வெளியே வந்தார். அவருடன் கூடவே பிரசார நிகழ்ச்சிகளைப் படம் எடுப்பதற்காக புகைப்படக் கலைஞரும் புறப்பட்டார். தொண்டர்களும் எம்.ஜி.ஆரை வழி யனுப்ப வந்தனர்.

காரில் ஏறப்போகும் சமயம். புகைப் படக் கலைஞரைப் பார்த்து எம்.ஜி.ஆர்., ‘‘படம் எடுத்துக் கொண்டவர்களை உங்களுக்குத் தெரியுமா?’’ என்றார். ‘‘தெரியாது’’ என்று பதில் வந்தது. அதே போல, தொண்டர்களைப் பார்த்து, ‘‘உங்களை படம் எடுத்த இந்த போட்டோகிராபரின் அட்ரஸ் தெரி யுமா?’’ என்றார். திருதிருவென அவர்கள் முழித்ததே ‘தெரியாது’ என்ற பதிலைச் சொன்னது. புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர்., புகைப்படக் கலைஞரிடம் அவரது விசிட் டிங் கார்டை படம் எடுத்துக் கொண்டவர் களிடம் கொடுக்கச் சொன்னார். அவரது சமயோசிதத்தை அறிந்து தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினர். அவர்களைக் கையமர்த்திய எம்.ஜி.ஆர்., ‘‘மறக்காமல் புகைப்படங்களுக்கு உரிய பணத்தைக் கொடுத்து வாங்கிக்கொள் ளுங்கள்’’ என்று சொன்னதும் எழுந்த சிரிப்பொலி அந்தப் பகுதி முழுவதும் எதிரொலித்தது!

தலைவர்களுக்கு மாலை போடும்போது, மாலை அணிவிப்பவரின் கைகள் தலைவர்களின் முகத்தை மறைத்தபடி இருக்கும். அந்த நிலையில், படம் எடுக்க முடியாமல் புகைப்படக் கலைஞர்கள் தவிப்பார்கள். இதை எம்.ஜி.ஆர். அறிந்திருந்தார். அதனால், தனக்கு யாராவது மாலை போட்டால் தன் முகத்தை மறைக்காதபடி, அவரது கைகளை இறுகப் பிடித்துக் கொள்வார். புகைப்படக் கலைஞர்கள் திருப்தியாக படம் எடுத்து முடிந்த பிறகே மாலை போட்டவரின் கைகளை விடுவார்.

சந்தையில் எந்த புதிய கேமரா வந்தாலும் எம்.ஜி.ஆர். வாங்கி விடு வார். படப்பிடிப்பின் போது இயற்கை காட்சி களை படம் பிடிப்பார். புகைப்படம் நன்றாக அமைந்தால்தான், அதை எடுத்த கலை ஞர்களுக்கும் நல்ல பெயர். பார்ப்பவர் களையும் படம் கவரும். எந்தக் கோணத் தில் எப்படி எடுத்தால் படம் நன்றாக இருக் கும்? தான் எப்படி போஸ் கொடுக்க வேண் டும் என்பதெல்லாம் எம்.ஜி.ஆருக்கு அத்துபடி. பெரும்பாலும் கைகளை வெறுமனே தொங்கவிட்டபடி நிற்க மாட்டார். அது பார்க்க நன்றாக இருக் காது என்பதால், கைகளில் ஏதாவது பொருட்களையோ, பேப்பரையோ ஸ்டைலாக வைத்துக் கொண்டோ, தொண்டர்களை அணைத்தபடியோதான் போஸ் கொடுப்பார்.

எம்.ஜி.ஆரின் ஆஸ்தான புகைப்படக் கலைஞர் ஆர்.என். நாகராஜ ராவ். அவரது பெரும்பாலான படங்களுக்கு நாகராஜ ராவ்தான் ஸ்டில் போட்டோகிராபராக பணியாற்றியுள்ளார். முதல்முறை தமிழக முதல்வராக பதவியேற்றபின், தலைமைச் செயலகத்தில் முதல்வர் நாற்காலியில் எம்.ஜி.ஆர். அமர்ந்ததும் அவரது விருப்பப்படி முதலில் புகைப்படம் எடுத்தவர் நாகராஜ ராவ்!

‘நாடோடி மன்னன்’ திரைப்படம் எடுத்து முடிந்தபின், அதன் சிறப்புக் காட்சிக்கு நாகராஜ ராவையும் எம்.ஜி.ஆர். அழைத்திருந்தார். அப் போது, நாகராஜ ராவ் எம்.ஜி.ஆரிடம், ‘‘படம் நிச்சயம் அமோக வெற்றி பெற்று நூறு நாட்களுக்கு மேல் ஓடும்’’ என் றார். எம்.ஜி.ஆரும் மகிழ்ச்சியுடன், ‘‘நீங் கள் சொன்னது நடந்தால் ஆயிரம் ரூபாய் பரிசளிக்கிறேன்’’ என்றார். படம் பிரம் மாண்ட வெற்றிபெற்றது. தான் சொன் னதை நாகராஜ ராவே மறந்துவிட்டார். ஆனாலும், எம்.ஜி.ஆர். அவருக்கு நினைவுபடுத்தி ஆயிரம் ரூபாயை பரிசளித்தார். அந்த காலகட்டத்தில் பவுன் விலை ஏறத்தாழ நூறு ரூபாய்!

எம்.ஜி.ஆர். நடித்த ‘அரச கட்டளை’ படத்துக்கும் நாகராஜ ராவ்தான் புகைப் படக் கலைஞராக பணியாற்றினார். அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘என்னைப் பாட வைத்தவன் ஒருவன்…’ பாடலில் எம்.ஜி.ஆரைப் புகழ்ந்து எழுதப்பட்ட வரிகள் இவை…

‘அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்;

நல்ல கலைஞருக்கெல்லாம் வள்ளல், வள்ளல்!’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன், செல்வகுமார்




‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் விளம்பரத்துக்காக சாட்டையைச் சுழற்றுவது போல, அடிப்பது போல, சாட்டையை உடலைச் சுற்றி பிடித்தபடி என, இந்தத் தொடரின் ‘லோகோ’வில் இடம்பெற்றுள்ள படம் உட்பட விதவிதமாக எம்.ஜி.ஆர். போஸ் கொடுக்க, அந்தப் படங்களை எடுத்தவர் நாகராஜ ராவ். இதில் ஒரு விசேஷம், எம்.ஜி.ஆர். தனக்குத் தோன்றிய விதங்களில் தானாகவே யோசித்து கொடுத்த அட்டகாசமான போஸ்கள் அவை!

Sunday, June 19, 2016

எம்ஜிஆர் 100 | 89 - நடிகர் நலனில் அக்கறை கொண்டவர்!

எம்.ஜி.ஆருடன் கே.பி.ராமகிருஷ்ணன்


தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R.தன்னுடன் நடிக்கும் நடிகர்களின் நலனில் அக்கறை கொண்டவர். அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் சகோதரனைப் போல கவனித்து உதவிகள் செய்வார். சில தயாரிப்பாளர்கள் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படத்துக்கு மேல் எடுக்காமல் ஒதுங்கிவிட்டனர் என்று விமர்சனங்கள் உண்டு. தன் படங்கள் மூலம் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கும் லாபம், எல்லா கலைஞர்களுக்கும் பகிரப்பட வேண்டும் என்று அவர் நினைத்ததுதான் அதற்கு காரணம்!

எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான வட்டத் தில் இருந்தவர்களில் அவரது மெய்க்காவலரும் ஸ்டன்ட் நடிகரு மான கே.பி.ராமகிருஷ்ணனும் ஒருவர். 1949-ம் ஆண்டு பி.யூ.சின்னப்பா நடித்த ‘மங்கையர்க்கரசி’ படத்தில் கே.பி.ராம கிருஷ்ணன் சண்டைக் காட்சியில் நடித் தார். சென்னை கீழ்ப்பாக்கம் நியூடோன் ஸ்டுடியோவில் படப்பிடிப்பின்போது, பி.யூ.சின்னப்பாவை சந்திக்க வந்த எம்.ஜி.ஆருக்கு ராமகிருஷ்ணன் அறி முகமானார். பின்னர், ‘நாடோடி மன்னன்’ படத்தில் அவருக்கு எம்.ஜி.ஆர். வாய்ப் பளித்தார். ஏறத்தாழ 30 ஆண்டுகள் எம்.ஜி.ஆருடன் கூடவே இருந்தவர்.

‘ஒரு தாய் மக்கள்’ படத்தின் படப் பிடிப்பு சென்னை வடபழனியில் சாரதா ஸ்டுடியோவில் நடந்தது. எம்.ஜி.ஆருடன் ராமகிருஷ்ணன் மோதும் காட்சி பட மாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். அடித்ததும் ராமகிருஷ்ணன் அருகில் உள்ள குளத் தில் விழ வேண்டும். அப்படி, விழுந்த போது குளத்தில் தண்ணீர் குறைவாக இருந்ததால், அதில் ராமகிருஷ்ணன் குதித்தபோது கணுக்காலில் எலும்பு முறிந்துவிட்டது. எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘‘அண்ணே, கால் உடைஞ்சு போச்சு’’ என்று கத்தினார் ராமகிருஷ்ணன்.

படத்தின் தயாரிப்பாளர் எலும்பு முறி வுக்கு சிகிச்சை அளிக்க ராமகிருஷ் ணனை புத்தூருக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார். அதை எம்.ஜி.ஆர். ஏற்கவில்லை. ராமகிருஷ்ணனை தன் காரிலேயே பூந்தமல்லி நெடுஞ்சாலை யில் உள்ள கே.ஜே.மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். ராமகிருஷ்ணனுக்கு தைரியம் சொன்னதோடு, ஒருநாள் விட்டு ஒருநாள் அவரைப் பார்க்க வருவார். சிகிச்சைக்கான செலவை தயாரிப்பாளரை ஏற்கச் சொல்லா மல், ரூ.37 ஆயிரத்தை எம்.ஜி.ஆரே கொடுத்தார். அதோடு, ராமகிருஷ்ண னின் குடும்பச் செலவுக்காக ரூ.10 ஆயிரமும் கொடுத்தார்.

இதைவிடவும் முக்கியமான ஒன்று. ‘‘ராமகிருஷ்ணன் குணமடைந்து வந்து, அவர்தான் மீண்டும் இந்தக் காட்சியில் நடிக்க வேண்டும். அதுவரை செட்டை கலைக்க வேண்டாம்’’ என்று எம்.ஜி.ஆர். சொல்லிவிட்டார். அதன்படியே, அந்த செட் மூன்று மாதங்களுக்கு அப்படியே இருந்தது. எம்.ஜி.ஆர். நினைத்திருந்தால் வேறு ஸ்டன்ட் நடிகர்களை வைத்து அந்தக் காட்சியை எடுத்திருக்கலாம். ஆனால், உடன் நடிக்கும் கலைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர் எம்.ஜி.ஆர்.! அவர் விருப்பப்படியே, ராமகிருஷ்ணன் குணமாகி வந்ததும், குளத்தில் நிறைய தண்ணீர் ஊற்றப் பட்டு சண்டைக் காட்சி மீண்டும் படமாக்கப்பட்டது.

மற்ற நடிகர்களுக்கு, குறிப்பாக உயிரைப் பணயம் வைத்து நடிக்கும் ஸ்டன்ட் நடிகர்களுக்கு தயாரிப்பாளர்கள் நியாயமான ஊதியத்தைக் கொடுக் காமல் இருப்பதை எம்.ஜி.ஆர். அனுமதிக்க மாட்டார். அவர் நடித்த ஒரு படத்தில் சண்டைக் காட்சியில் ராமகிருஷ்ணன் நடித்திருந்தார்.

அந்தத் தயாரிப்பாளரிடம் சென்று 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் வேண்டும் என்று ராமகிருஷ்ணன் கேட்டார். ‘‘சண்டைக் காட்சியில் நடிக்க 5 ஆயிரமா? 3,500 ரூபாய் வாங்கிக் கொள்’’ என்றார் தயாரிப்பாளர். ராமகிருஷ்ணன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் வந்துவிட்டார். எம்.ஜி.ஆரை சந்தித்து விஷயத்தைக் கூறினார். அதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட எம்.ஜி.ஆர்., ‘‘என்னிடம் சொன்னதாக காட்டிக் கொள்ளாதே. நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்றார்.

பின்னர், தன்னை சந்தித்த தயாரிப் பாளரிடம், ‘‘இந்த ராமகிருஷ்ணன் இருக்காரே, என் பேரை சொல்லி சம்பளம் அதிகமாக கேட்பார்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். தயாரிப்பாளரின் முகம் மலர்ந்தது. ‘‘ஆமாண்ணே…’’ என்று மேற்கொண்டு பேச முயன்றவரைத் தடுத்து, ‘‘நீங்க அவர்கிட்ட எதுவும் பேசாதீங்க. 20 ஆயிரம் ரூபாய்க்கு மேலே ஒரு பைசா கூட கொடுக்காதீங்க. மேலே கேட்டால் என்கிட்டே சொல்லுங்க’’ என்றார். தயாரிப்பாளருக்கு மெல்லவும் முடியவில்லை, முழுங்கவும் முடிய வில்லை. எம்.ஜி.ஆரே சம்பளம் நிர்ணயித்த பிறகு, அதைத் தட்ட முடியுமா? ராமகிருஷ்ணனுக்கு 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்க மறுத்த அதே தயாரிப்பாளர் பிறகு, 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். தான் மட்டுமே லாபம் சம்பாதிக்க நினைக்கும் தயாரிப்பாளர்களை எம்.ஜி.ஆர். இப் படிப் படுத்துவது வழக்கம்!

ஜெயந்தி ஃபிலிம்ஸ் சார்பில் கனக சபை செட்டியார் தயாரித்த வெள்ளி விழா படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘மாட்டுக்கார வேலன்’. நூறாவது நாளையொட்டி நடந்த படத்தின் வெற்றி விழாவின்போது எம்.ஜி.ஆர். ஆலோசனையின்படி, கலை ஞர்களுக்கு ஒரு பவுன் மோதிரத்தை தயாரிப்பாளர் பரிசாக அளித்தார். ‘ஜெயந்தி ஃபிலிம்ஸ்’ என்பதை குறிக்கும் வகையில், ‘ஜே. எஃப்’ என்ற ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அந்த மோதிரத்தை ராமகிருஷ்ணன் இன்னும் அணிந்துள்ளார்.

‘சிரித்து வாழவேண்டும்’ படத்தில் ‘உலகமெனும் நாடக மேடையில் நானொரு நடிகன்…’ என்ற பாடல் காட்சி இடம்பெறும். கீழ்க்கண்ட வரிகளை எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும்போது தியேட்டர் அதகளப்படும்.

‘சிலர் ஆடிடும் ஆட்டம் முடிவதற்கே

நான் ஆடியும் பாடியும் நடிப்பது

என் ஆசையும் தேவையும் நல்லவர் எல்லாம்

நலமாய் வாழ்ந்திட நினைப்பது…’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார், எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்


எம்.ஜி.ஆர். நடித்து சடையப்ப செட்டியார் தயாரிப்பில், தர் இயக்கத்தில் 1977-ம் ஆண்டு வெளியான படம் ‘மீனவ நண்பன்’. படத்தில் கே.பி.ராமகிருஷ்ணனும் நடித்துள்ளார். ‘‘இந்தப் படத்துக்காக எம்.ஜி.ஆருக்கு அதிகபட்சமாக ரூ.45 லட்சம் சம்பளம் தரப்பட்டது. அதுவரை தென்னகத்தில் வேறு எந்த ஹீரோவுக்கும் அவ்வளவு சம்பளம் கொடுக்கப்படவில்லை. இப்போது அந்த தொகை பல கோடிகளுக்கு சமம்’’ என்று நினைவுகூர்கிறார் ராமகிருஷ்ணன்!

Thursday, June 16, 2016

எம்ஜிஆர் 100 | 87 - பெண்களை தெய்வமாக மதித்தவர்!

அரசு விழா ஒன்றில் ஏழைப் பெண்ணுக்கு தையல் மெஷின் வழங்குகிறார் எம்.ஜி.ஆர்.

M.G.R. பெண்களை தெய்வமாக மதிப்பவர். பொதுக்கூட்டங்களில் பேசும்போது, ‘‘என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தாய்மார்களே…’ என்று குறிப்பிட்டுவிட்டுத்தான் பேசத் தொடங்குவார். கூட்டங்களில் அவரை நாடி உதவி கோரும் பெண்களுக்கு உதவிகள் செய்வதுடன், பெண்களின் பாதுகாப்பிலும் மிகுந்த அக்கறை செலுத்துவார்.

நாகை மாவட்டம் மாயவரத்தில் எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட ஒரு பொதுக்கூட்டம். அவரது ஆட்சியில்தான் 1982ம் ஆண்டு மாயவரத்தின் பெயர் மயிலாடுதுறை என்று மாற்றப்பட்டது. இந்த சம்பவம் நடக்கும்போது அந்த ஊர் மாயவரம் என்றுதான் அழைக்கப்பட்டது. எம்.ஜி.ஆரைப் பார்த்து உதவி கோர, இரண்டு இளம் பெண்கள் மிகுந்த சிரமத்துடன் மேடை அருகே வந்து காத்திருந்தனர். அவர்கள் இரட்டையர்கள். ஒரே மாதிரி தோற்றம் கொண்டவர்கள். இதில் கொடுமை என்னவென்றால், இருவரும் ஒரே மாதிரி குறை உடைய மாற்றுத் திறனாளிகள்.

இரு பெண்களுக்கும் கால் ஊனம். கைகளை ஊன்றி தவழ்ந்தபடியே, மேடை அருகே வந்துவிட்டனர். மக்களின் வாழ்த்துக்களை ஏற்றவாறு, கையசைத்த படியே மேடைக்கு எம்.ஜி.ஆர். வந்தார். கூட்டம் முண்டியடித்து மேடை அருகே வர முயற்சித்தது. அந்த நெரிசலில் இரு பெண்களும் சிக்கிக் கொண்டனர். இதை எம்.ஜி.ஆர். கவனித்துவிட்டார். உதவியாளர்களிடம் சொல்லி அவர்களை அழைத்துவரச் சொன்னார். அந்தப் பெண்கள் இருவரும் எம்.ஜி.ஆரிடம், ‘‘ஐயா, உங்களிடம் உதவி கோர வந்திருக்கிறோம்’’ என்றனர். அவர்களை மேடையின் ஓரத்தில் காத்திருக்கச் சொன்னார்.

கூட்டத்தில் பேசி முடித்ததும் அந்த சகோதரிகளை எம்.ஜி.ஆர். அழைத்தார். அவர்களது நிலைகண்டு பரிதாபப்பட்டு, ‘‘உங்களுக்கு என்ன உதவி வேண்டும்? சொல்லுங்கள்’’ என்றார். அந்தப் பெண்கள், ‘‘ஐயா, வறுமையால் கஷ்டப்படுகிறோம். எங்களுக்குத் தையல் மெஷின் வாங்கிக் கொடுத்தால் நாங்க தொழில் செஞ்சு பிழைச்சுக்குவோம். அதுக்கு உதவி பண்ணுங்க’’ என்று கெஞ்சும் குரலில் கேட்டனர். உடனே, இரண்டு தையல் மெஷின்களை எம்.ஜி.ஆர். வாங்கி வரச் சொன்னார்.

தன்னிடம் உதவி கோருபவர்கள் தெளிவாகச் சொல்லாவிட்டாலும் அவர்களது தேவை என்ன என்பதை சரியாகப் புரிந்துகொண்டு உதவுபவர் எம்.ஜி.ஆர்.! தையல் மெஷின்கள் வாங்கி வருமாறு சொன்ன மறுவிநாடி ஓடோடிச் சென்ற உதவியாளர்களை அழைத்து, ‘‘காலில் தைக்கும் மெஷின் இல்லை. கையில் தைக்கும் மெஷின்’’ என்று தெளிவாகச் சொல்லி அனுப்பினார். அடுத்த அரை மணி நேரத்தில் இரண்டு புது தையல் மெஷின்கள் காரில் வந்து இறங்கின. அதுவரை காத்திருந்து தன் கையாலேயே அந்தப் பெண்களுக்கு தையல் மெஷின்களை எம்.ஜி.ஆர். வழங்கினார்.

அதைப் பெற்றுக்கொண்ட சகோதரி கள் இருவரும் கண்ணீருடன், ‘‘ஐயா, நீங்க தெய்வம்யா’’ என்றனர். அவர்களது கண்ணீரைத் துடைத்த எம்.ஜி.ஆர்., ‘‘நான் மனுஷன்தாம்மா; தெய்வம் இல்லே. இந்த நிலைமையிலும் உழைச்சுப் பிழைக்கணும்னு நினைக்கிற நீங்க நல்லா இருக்கணும்!’’ என்று சொல்லி வாழ்த்திவிட்டு, அவர்களுக்கு தலா ரூ.2,000 அன்பளிப்பாகக் கொடுத்தார்!

திமுகவில் எம்.ஜி.ஆர். இருந்த காலம். அவரது நெருங்கிய நண்பரும் படத் தயாரிப்பாளருமான சாண்டோ சின்னப்பா தேவரின் இல்லத் திருமணம் கோவையில் நடைபெற்றது. அதில் எம்.ஜி.ஆர். கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பரிசளித்துவிட்டு வந்தார். பின்னர், ஒரு கூட்டத்திலும் கலந்துகொண்டார். பேசிக் கொண்டிருக்கும்போதே, திடீரென தனது உதவியாளர்களைப் பார்த்தார். கூட்டத்தில் குறிப்பிட்ட இடத்தைப் பார்த்துவிட்டு, உதவியாளர்களை மீண்டும் பார்த்தார். எம்.ஜி.ஆருடைய பார்வையின் பொருள் அவர்களுக்குப் புரியும். சத்தம் போடாமல் கூட்டத்தில் மக்களோடு கலந்த உதவியாளர்கள், குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றனர். அங்கிருந்த ஒரு வாலிபரைப் பிடித்தனர். அங்கேயே அந்த வாலிபரை நிறுத்தி வைக்குமாறு எம்.ஜி.ஆர். சைகை செய்தார்.

கூட்டம் முடிந்த பின், அந்த வாலிபரை உதவியாளர்கள் அழைத்து வந்தனர். ‘‘கூட்டத்திலே வந்து அசிங்கமா பண்றே? உன்னோடு அக்கா, தங்கைகள் பிறக்கலையா?’’ என்று கேட்டவாறே வாலிபரை ஓங்கி கன்னத்தில் அறைந்தார் எம்.ஜி.ஆர்.! பொறி கலங்கிப் போய் நின்ற வாலிபரிடம் ‘‘இனிமேல் இப்படி நடப்பியா?’’ என்று ஆத்திரம் பொங்கக் கேட்டார். ‘‘சத்தியமா இனி இப்படி நடந்துக்க மாட்டேன். என்னை மன்னிச்சுடுங்க’’ என்று கெஞ்சிய வாலிபரிடம், ‘‘இனிமே என் கூட்டம் எங்கு நடந்தாலும் உன்னை நான் பார்க்கக் கூடாது. ஓடு இங்கிருந்து…’’ என்று விரட்டினார். விட்டால் போதும் என்று வாலிபர் ஓடி மறைந்தார்.

விஷயம் என்னவென்றால், கூட்டத் தில் அந்த வாலிபர் தன் அருகே நின்று கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்திருக்கிறார். எம்.ஜி.ஆரின் பார்வை யிலிருந்துதான் எதுவும் தப்பாதே. அதை கவனித்துவிட்டு அந்த வாலிபரை பிடிக்கச் சொல்லி புத்தி புகட்டியிருக்கிறார்!

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்து 1967-ம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றிபெற்ற படம் ‘காவல்காரன்’. அதில் எம்.ஜி.ஆருக்கு ரகசிய போலீஸ் அதிகாரி பாத்திரம். அவரது பணி குறித்து யாருக்கும் தெரியாது. அவரது நடவடிக்கைகள் ஊகிக்க முடியாதபடி இருப்பதைக் கண்டு ஜெயலலிதா, ‘‘ஆமா, நீங்க யாரு?’’ என்று கேட்பார். அப்போது, எம்.ஜி.ஆர். தனக்கே உரிய ஸ்டைலில் பாடி நடிக்கும் அருமையான பாடல் இது...

‘அடங்கொப்புரானே சத்தியமா

நான் காவல்காரன்

நீ ஒப்புக் கொள்ள மறுத்தாலும்

நான் காவல்காரன்!’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்

Tuesday, June 14, 2016

எம்ஜிஆர் 100 | 85 - 'அடைந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி'

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

எம்ஜிஆர் 100 | 85 - 'அடைந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி'



M.G.R. நடித்த ஆரம்ப கால படங்களில் நம்பியாருக்கும் முன்னதாக வில்லன் வேடங்களில் நடித்தவர் அவர். ‘ஹா...ஹா... ஹா..’ என்ற அதிரடி சிரிப்பிலேயே கலங்கடித்தவர். எம்.ஜி.ஆர். நடித்த ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில்தான் முதன்முதலாக இந்த இடிச்சிரிப்பை அவர் வெளிப்படுத்தினார். அதற்கு கிடைத்த பலத்த வரவேற்பால், பின்னர், அதுவே அவரது தனி முத்திரை ஆனது. அந்த சிரிப்புக்கு சொந்தக்காரர் பி.எஸ்.வீரப்பா.

1939-ம் ஆண்டு வெளியான ‘மணிமேகலை’ என்ற படத் தில் வீரப்பா அறிமுகமானார். 1946-ம் ஆண்டு ஜூபிடர் பிக்சர்ஸின் ‘ முருகன்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித் திருந்தார். அந்தப் படத்தில் வீரப்பாவும் நடித்துள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட நட்பு இறுதிவரை நீடித்தது. எம்.ஜி.ஆரின் கடைசி படமான ‘மது ரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ உட்பட பல படங்களில் வீரப்பா நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். நடித்த ‘நாம்’ படத்தை ஜூபிடர் பிக்சர்ஸுடன் சேர்ந்து மேகலா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தில் கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் பங்குதாரர்களாக இருந்தனர். படத்துக்கு திரைக்கதை, வசனம் கருணாநிதி. படத் தில் வரும் வில்லன் பாத் திரத்துக்கு வீரப்பாவை எம்.ஜி.ஆர். சிபாரிசு செய்தார். ‘நாம்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு முற்போக் கான இளைஞர் வேடம். படத்தில் எம்.ஜி.ஆரின் வீட் டுக்கு வீரப்பா தீ வைத்துவிடுவார். இதில் எம்.ஜி.ஆரின் முகம் உருக்குலைந்து விடும். முகம் பாதிக்கப்பட்டாலும் கண்கள் தெரியும். தீயில் வெந்த முகத் தோடு இரவில் நடமாடும் அவரைப் பார்த்து பேய் நடமாடுவதாக ஊரில் வதந்தி பரவும். எம்.ஜி.ஆரின் அழகான முகத்தை பார்க்கவே ரசிகர்கள் விரும்பு வார்கள் என்பதை இந்தப் படம் உணர்த்தியது. படம் நல்ல கதை யம்சத்துடன் எம்.ஜி.ஆரின் சிறப்பான நடிப்போடு அமைந்திருந்தாலும் அவரை வெந்துபோன முகத்தோடு பார்க்க ரசிகர்கள் விரும்பவில்லை.

வீரப்பாவின் தமிழ் உச்சரிப்பும் ஏற்ற இறக்கத்துடன் அவர் பேசும் பாங்கும் மக்களைக் கவர்ந்தன. எம்.ஜி.ஆர். நடித்து 1957-ம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றி பெற்ற ‘மகாதேவி’ படத்தில் ‘‘அடைந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி’’ என்ற வீரப்பாவின் வசனம் இன்றளவும் பிரபலம். அந்தப் படத்தில் வீரப்பாவின் பெயர் கருணாகரன். சந்தர்ப்பவசத்தால், வீரப்பாவின் விருப்பத்துக்கு மாறாக, இளவரசியாக வரும் நடிகை எம்.என்.ராஜத்தை அவருக்கு கட்டாய மாக திருமணம் செய்துவைத்து விடுவார் கள். திருமணம் முடிந்து வீரப்பாவை ‘‘அத்தான்...’’ என்று எம்.என்.ராஜம் அழைப்பார். ஆத்திரத்தை அடக்கியபடி வேதனை கலந்த சிரிப்போடு வேண்டா வெறுப்பாக, ‘‘அப்படிச் சொல்... சத்தான இந்த வார்த்தையிலே கருணாகரன் செத்தான்’’ என்று வீரப்பா கூறும்போது தியேட்டரில் எழும் சிரிப்பலை அடங்க சில நிமிடங்கள் பிடிக்கும்.

படங்களில் வாள் வீச்சில் எம்.ஜி.ஆருக்கு ஈடு கொடுத்து வீரப்பா சண்டையிடுவார். எம்.ஜி.ஆரிடம் உள்ள ஒரு விசேஷ குணம், எந்த பாத்திரத்தில் எந்தக் காட்சியில் நடித்தாலும் சரி, சுற்றிலும் நடப்பவற்றில் ஒரு கண் வைத்திருப்பார். ‘ஜெனோவா’ படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆருக் கும் வீரப்பாவுக்கும் ஆக் ரோஷமான வாள் சண்டை. இந்தக் காட்சியில் நடித்துக் கொண்டிருக்கும்போது, பள்ளத்தில் உருண்டுவிழ இருந்த வீரப்பாவை எம்.ஜி.ஆர். பிடித்து இழுத்து சரியான நேரத்தில் காப்பாற்றியதால் அவர் உயிர் பிழைத்தார். இதை வீரப்பா பலமுறை நன்றி யோடு கூறியுள்ளார்.

‘விக்கிரமாதித்தன்’ படத்தில் வீரப் பாவை கொல்ல வரும் கூட்டத் திடம் இருந்து அவரை எம்.ஜி.ஆர். காப்பாற்றுவார். அதற்கு நன்றி தெரிவித்துவிட்டு எம்.ஜி.ஆரைப் பற்றி வீரப்பா விசாரிப்பார். விவரங்களைத் தெரிந்து கொண்டபின், அவர் சொல் லும் வார்த்தைகளால் தியேட்டரில் எழும் கரவொலியால் காது கிழியும். எம்.ஜி.ஆர். பற்றி வீரப்பா சொல் வார்... ‘‘உலகத்துக்குத் தேவையான மனிதர்!’’

அந்த வசனத்தை உறுதிப்படுத்துவது போல மட்டுமல்ல; தன்னை அவமதிப்ப வர்களை எம்.ஜி.ஆர். எப்படி தண்டிப்பார் என்பதற்கும் ஒரு சுவையான சம்பவம். அவர் சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த காலங்களில் ஜூபிடர் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்த மான நெப்டியூன் ஸ்டுடியோவில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டார். எம்.ஜி.ஆருக்கு சிறிய வேடம்.

ஒரு காட்சியில் நடித்து முடித்து விட்டு அடுத்த ‘ஷாட்’டுக்கு கூப்பிடும் வரை வெளியே உட்கார்ந்திருப்பார். எங்காவது சென்றால், தேடும்போது ஆள் இல்லாவிட்டால் வாய்ப்புகள் போய்விடும் என்பதால் இடத்தைவிட்டு நகரமாட்டார். ஒருநாள் அப்படி உட் கார்ந்திருந்தபோது, அந்த ஸ்டுடியோ வில் பணியாற்றிய அப்பன் என்ற பெயர் கொண்ட பணியாளர் ஒருவர், ஒரு கூஜாவையும் டம்ளரையும் எடுத்துக் கொண்டு சென்றார். எம்.ஜி.ஆருக்கு கடுமையான தாகம். பணியாளர் அப்பனைப் பார்த்து, ‘‘அண்ணே, குடிக்க கொஞ்சம் தண்ணி’’ என்று கேட்டார். அதற்கு அப்பன் எரிச்சலுடன், ‘‘இருய்யா, பெரிய நடிகர்களுக்கு ஜூஸ் கொண்டுபோறேன். நீ வேற’’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். அதன் பின்னரும் எம்.ஜி.ஆருக்கு அவர் தண்ணீர் கொண்டுவரவில்லை.

சில ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். தமிழ்த் திரையுலகின் நம்பர் ஒன் கதாநாயகனாக உயர்ந்ததோடு, அதே நெப்டியூன் ஸ்டுடியோவையே விலைக்கு வாங்கி அதற்கு தன் தாயின் பெயரை வைத்தார். எம்.ஜி.ஆருக்கு தண்ணீர் கொடுக் காமல் அலட்சியப்படுத்திய பணியாளர் அப்பன், அதே ஸ்டுடியோவில்தான் பணியாற்றி வந்தார். அவ ருக்கு இப்போது எம்.ஜி.ஆர். முதலாளி!

ஸ்டுடியோவில் அப்பனைப் பார்த்த எம்.ஜி.ஆர்., அவரை அருகில் அழைத் தார். பழைய சம்பவங்கள் மனதில் ஓட, ‘வேலை போச்சு’ என்ற நினைப் புடன் கண்கலங்கியபடியே கும்பிட்ட வாறு எம்.ஜி.ஆரிடம் வந்தார் அப்பன். ‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். ‘‘இரு நூறு ரூபாய்’’ பலவீனமான குரலில் அப்பனிடம் இருந்து பதில் வந்தது.

‘‘இந்த மாதம் முதல் உங்களுக்கு நானூறு ரூபாய் சம்பளம்’’ என்று அப்பனின் தோள்களைத் தட்டி புன்முறுவலுடன் கூறிய எம்.ஜி.ஆரின் கால்களில் விழுந்து அழுதார் அப்பன். அவரைத் தூக்கி அணைத்தபடி தேற்றினார் எம்.ஜி.ஆர்.!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்




எம்.ஜி.ஆர். நடித்த ‘ஆனந்த ஜோதி’ படத்தை பி.எஸ்.வீரப்பா தயாரித்தார். நடிகை தேவிகா எம்.ஜி.ஆருடன் நடித்த ஒரே படம் இது. படத்தில் தேவிகாவின் தம்பியாக பள்ளிச் சிறுவனாக கமல்ஹாசன் நடித்திருப்பார்.

Sunday, June 12, 2016

எம்ஜிஆர் 100 | 84 - தமிழ் வளர்த்தோன்!


தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

1986-ம் ஆண்டு சென்னையில் நடந்த விழாவில் தமிழறிஞர் அ.ச.ஞானசம்பந்தனுக்கு கலைமாமணி விருதை முதல்வர் எம்.ஜி.ஆர். வழங்குகிறார். உடன் அப்போதைய ஆளுநர் எஸ்.எல். குரானா, அப்போதைய நிதி அமைச்சர் நெடுஞ்செழியன்.


M.G.R.தமிழில் ஆழ்ந்த புலமை கொண்டவர் என்பதோடு, மிகுந்த தமிழ்ப் பற்றும் கொண்டவர். தன்னை உயர்த்தியது தமிழும் தமிழ்நாடும்தான் என்பதை பெருமிதத்தோடு சொல்வார். தமிழுக்காக உழைத்தவர்களின் பெயர்கள் நிலைத்து நிற்க வழி செய்தார்!

1974-ம் ஆண்டு பிப்ரவரியில் பாண்டிச்சேரியில் சட்டப் பேரவைக்கும் நாடாளு மன்றத்துக்கும் தேர்தல் நடந்தது. எம்.ஜி.ஆர். தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றார். மாஹே என்ற இடத்தில் பிரசாரக் கூட்டம். அந்தப் பகுதியில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம். மக்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டு எம்.ஜி.ஆர். பேசத் தொடங்கினார். அவரது பேச்சை இடைமறித்து, மலையாளத்தில் பேசு மாறு கூட்டத்தில் இருந்த பெரும்பாலோர் கேட்டுக் கொண்டனர். எம்.ஜி.ஆருக்கு வந்ததே கோபம்!

‘‘எனக்கு நன்றாகத் தெரிந்த மொழி தமிழ் மட்டும்தான். சிறுவயதில் நாடக மேடை மூலம் தமிழ் கற்றுக் கொண்டேன். வெளியில் மட்டுமின்றி, வீட்டிலும் தமிழில்தான் பேசுவேன். நான் வளர்ந்து, புகழ்பெற்று, இன்று உங்கள் முன் நிற்பதற்கு என்னை அரவணைத்து ஆளாக்கிய தமிழகம் தான் காரணம். எனவே, தமிழில்தான் பேசுவேன். விருப்பம் உள்ளவர்கள் என் பேச்சைக் கேட்கலாம். விருப்பம் இல்லாதவர்கள் இங்கிருந்து சென்று விடலாம்’’ என்று எம்.ஜி.ஆர். பொரிந்து தள்ளினார். பின்னர், வாய் திறக்காத கூட்டத்தினர் அவரது தமிழ் உணர்வைக் கண்டு வியந்தனர்.

இந்தத் தேர்தலில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம்... பாண்டிச்சேரி சட்டப் பேரவையின் மொத்தமுள்ள 30 தொகுதி களில் அதிமுக 12 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதன் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்திரா காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் அதன் கூட்டணிக் கட்சியான ஸ்தாபன காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. திமுக 2 தொகுதிகளில் வென்றது. பாண்டிச்சேரி மக்களவைத் தொகுதியில் அதிமுகவின் பாலா பழனூர் வெற்றி பெற்றார்.

புதுவை முதல்வராக அதிமுகவைச் சேர்ந்த ராமசாமி பதவியேற்றார். நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு கவிழ்ந்தாலும், தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி அகில இந்திய அளவில் பேசப்பட்டது. அந்த சமயத் தில் கோவை மேற்கு சட்டப்பேரவை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் செ.அரங்கநாயகம் வெற்றி பெற்று தமிழகத்தில் அதிமுகவின் முதல் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றார்.

தமிழுக்கு தொண்டாற்றி ‘முத்தமிழ் காவலர்’ என்று போற்றப்பட்டவர் கி.ஆ.பெ. விசுவநாதம். நீதிக்கட்சியிலும் பணியாற்றியுள்ளார். நீதிக்கட்சியின் சார்பில் பனகல் அரசர் சர்.ராமராய நிங்கார் 1921-ம் ஆண்டு முதல் 1926-ம் ஆண்டுவரை சென்னை ராஜதானியின் முதல்வராக இருந்தார். அப்போதெல்லாம், மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டுமென்றால் அந்த மாணவன் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது.

பனகல் அரசரை கி.ஆ.பெ. விசுவ நாதம் சந்தித்து, ‘‘ஆங்கிலமும் தமிழும் படித்தவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் தரவேண்டும்’’ என்று வலியுறுத்தி வெற்றி பெற்றார். அதன் பின்னர்தான், பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் மருத்துவக் கல்லூரி வாயிலை மிதிக்க முடிந்தது. பனகல் அரசர் நினைவாகத்தான் சென்னை சைதாப்பேட்டையில் ‘பனகல் மாளிகை’யும் தியாகராய நகரில் ‘பனகல் பூங்கா’வும் அமைந்துள்ளன.

கி.ஆ.பெ. விசுவநாதத்துக்கு தமிழுக்கு என்று ஒரு தனிப் பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும் என்று விருப் பம். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது அவரிடம் தனது விருப்பத்தைச் சொன்னார். உடனடியாக அதற்கு எம்.ஜி.ஆர். மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். கி.ஆ.பெ.விசுவநாதத் தையே அதற்கான திட்டங்களை தயாரிக் கும்படி எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்ட தோடு, ஒரு குழுவையும் அமைத்து அதற்கு அவரையே தலைவராகவும் நியமித்தார். அப்படி எம்.ஜி.ஆர். ஆட்சியில் 1981-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப் டம்பர் 15-ம் தேதி உருவாக்கப் பட்டதுதான் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்.

தமிழறிஞர் டாக்டர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் குடும்பத்தாருடன் எம்.ஜி.ஆருக்கு நல்ல தொடர்பு உண்டு. தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் அண்ணன் சதாவதானி தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர். ஒரே நேரத்தில் நூறு செயல்களை கவனித்து, நினைவில் நிறுத்தி பின்னர், அவற்றை சரியாக வெளிப்படுத்துபவர்களை ‘சதாவதானி’ என்று போற்றுவர். அப்படிப்பட்ட ஆற்றல் மிக்கவர் கிருஷ்ணசாமி பாவலர். அவர் எழுதிய ‘கதர் பக்தி’, ‘நாகபுரி கொடிப்போர்’ உள்ளிட்ட தேசிய மற்றும் சமூக சீர்த்திருத்த நாடகங்களில் சிறுவயதில் நாடக மேடைகளில் எம்.ஜி.ஆர். நடித்துள்ளார்.

அவரது சகோதரரான தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் மறைவுக் குப் பிறகு அவரது திருவுருவச் சிலையை, அவர் துணைவேந்தராகப் பணியாற்றிய மதுரைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார். மதுரை பல்கலைக்கழகத்துக்கு 1978-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்டியதும் எம்.ஜி.ஆர்.தான்!

தனது இறுதிமூச்சு வரை தமிழுக் காகவே முழங்கியவர் தேவநேயப் பாவாணர். அவருக்கு எம்.ஜி.ஆருடன் நல்ல நட்பு உண்டு. 1981-ம் ஆண்டு மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி தமிழுக்கு எம்.ஜி.ஆர். சிறப்பு சேர்த்தார். மாநாட்டில் பாவாணரின் பேச்சை எம்.ஜி.ஆர். ஆர்வமுடன் கேட்டார். தேவநேயப் பாவாணர் தமிழில் மட்டுமின்றி பல மொழிகளிலும் தேர்ச்சி மிக்கவர்.

உலகில் உள்ள எத்தனை மொழி களுக்கு தமிழ் மூலமொழியாக விளங்குகிறது என்பதையும் எத்தனை மொழிச் சொற்களுக்கு தமிழே வேர்ச் சொல்லாக விளங்குகிறது என் பதையும் ஆதாரபூர்வமான கருத்துக் களுடன் பாவாணர் சுவைபடப் பேசிக் கொண்டே போனார். சாப்பாட்டு நேரமும் கடந்துவிட்டது. சாப்பாட்டையும் மறந்து அவரது பேச்சை எம்.ஜி.ஆர். ரசித்துக் கேட்டார். கூட்டமும் ஆர்ப்பரித்தது. ஒருமணி நேரத்துக்கும் மேல் பாவாணரின் சொல்மாரி தொடர்ந்தது.

அன்றைய தினமே எதிர்பாராத அந்த சோகமும் நடந்தது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மதுரை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். சில நாட் களில் நோயின் தாக்கத்தால் தமிழின் மேன்மைக்காக ஒலித்த அவரது பேச்சு மட்டுமல்ல; மூச்சும் அடங்கியது. இது எம்.ஜி.ஆரை மிகவும் பாதித்தது. தேவநேயப் பாவாணரின் பெயர் நிலைத்து நிற்கும் வகையில் மாவட்ட நூலகங்களுக்கு அவரது பெயரை சூட்ட முதல்வர் எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார்.

‘‘தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை’’ என்று முழங்கியவர் புரட்சிக் கவிஞர்!

அதற்கு செயல்வடிவம் கொடுத்தவர் புரட்சித் தலைவர்!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்




சுதந்திரப் போராட்ட வீரரும் தமிழ் அறிஞருமான ம.பொ.சி. எழுதிய, ‘விடுதலைப் போரில் தமிழகம்’ நூலை நாட்டுடமை யாக்கி, அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை செய்த தற்காக ம.பொ.சி.க்கு எம்.ஜி.ஆர். நிதி வழங்கினார்!

Tuesday, June 7, 2016

ஆஸ்திரேலிய இயக்குநரின் பாராட்டு

எம்ஜிஆர் 100 | 80 - ஆஸ்திரேலிய இயக்குநரின் பாராட்டு

‘நான் ஏன் பிறந்தேன்’ படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆரை ஆஸ்திரேலிய தயாரிப்பாளரும் இயக்குநருமான ஜான் மெக்கலம் (வலது) சந்தித்தபோது எடுக்கப்பட்ட படம். அருகில் மணியன் உள்ளார்.

M.G.R. தான் நடிக்கும் படங்களின் கதை அமைப்பை ஒட்டி பாத்திரத்துக்கேற்ப, அதன் தேவைக்கேற்ப நடிப்பார். பெரும்பாலும் ஆக் ஷன் படங்களில் நடித்ததால், அவருடைய அற்புதமான நடிப்புத் திறன் பெரிதும் கவனிக்கப்படாமல் போனது.
எம்.ஜி.ஆர். தனக்கென்று நடிப்பில் தனிப் பாணியை உருவாக்கி முத்திரை பதித்தவர். மு.க.முத்து உட்பட பல நடிகர்கள் அவரது பாணியைப் பின்பற்றி நடித்தார்களே தவிர, அவர் யாருடைய பாணியையும் பின்பற்றியதில்லை. ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் கோழையாகவும் வீரனாகவும் இரண்டு வேடங்களில் எம்.ஜி.ஆர். நடித்திருப்பார். அதில் ராமு என்ற பெயரில் கோழையாக வரும் பாத்திரத்தின் அறிமுகக் காட்சியில் இருந்து கடைசியில் அவருக்கு வீரம் வரும்வரை, முகத்தில் ஒருவித பயம் இருந்து கொண்டே இருக்கும். பயத்தின் வெளிப்பாடாக நெஞ்சுக்கு நேரே இரு கைகளையும் கோர்த்தபடி உடல் மொழியை வெளிப்படுத்தி இருப் பார்.
நம்பியாருக்கு பயந்து வீட்டைவிட்டு வெளியேறி ஓட்டலுக்கு எம்.ஜி.ஆர். சாப்பிட வருவார். இரண்டு இட்லி வாங்கி ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்ட பின், சுற்றிலும் எல்லோரையும் பார்த்தபடி ஒரு அசட்டு சிரிப்பு சிரிப்பார் பாருங்கள். வெளி உலகில் பயமின்றி சுதந்திரமாக அவர் சாப்பிடும் முதல் இட்லி அது என்பதை அந்த சிரிப்பிலேயே உணர்த்தி இருப்பார்.
‘பெற்றால்தான் பிள்ளையா?’ படத்தில், தான் எடுத்து வளர்க்கும் குழந்தையிடம், ‘‘நீ வளர்ந்து பெரிய வனாகி விமானத்தில் வந்து இறங்கும் போது நான் கூட்டத்தில் நிற்பேன். என்னை கவனிக்காமல் போய்விடுவாய்’’ என்று எம்.ஜி.ஆர். பரிதாபமாக சொல்லும் காட்சி கண்கலங்க வைக்கும். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
நகைச்சுவைக் காட்சிகளிலும் எம்.ஜி.ஆர். பிய்த்து உதறுவார். நகைச் சுவைப் படமான ‘சபாஷ் மாப்பிளே’ படத்தை பேரறிஞர் அண்ணா பார்த்து விட்டு, ‘‘சபாஷ் எம்.ஜி.ஆர்!’’ என்று பாராட்டினார். சண்டை, நடனக் காட்சி களில் கேட்கவே வேண்டாம். உடன் நடிப்பவர்களை ‘ஓவர் டேக்’ செய்யும் முனைப்பு எம்.ஜி.ஆரிடம் இருக்காது. கதைக்கேற்ப, அந்தந்தப் பாத்திரத்தின் தன்மைக்கேற்ப அளவோடு, மென்மை யாக, இயல்பான நடிப்பை வெளிப் படுத்துவார்.
இப்போதெல்லாம் ‘இயற்கையான நடிப்பு’ என்று பரவலாக பேசப்படுகிறது. அதை அந்தக் காலத்திலேயே செய்தவர் எம்.ஜி.ஆர்.! அவரது இயற்கையான நடிப்பு வெளிநாட்டவர்களையும் கவர்ந் தது. அதனால்தான் ஆஸ்திரேலியாவின் பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான ஜான் மெக்கலம், ‘‘இயற்கையாக நடிக் கும் இந்திய நடிகர் எம்.ஜி.ஆர்.’’ என்று பாராட்டினார். சென்னை வந்தபோது எம்.ஜி.ஆரை சந்தித்துப் பேசிய மெக்கலம், பின்னர் அவருடன் சேர்ந்து கூட்டாக படம் தயாரிக்கப் போவதாகவும் அறிவித்தார். பிறகு, அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கி அரசியலில் பிஸியானதால் அது நிறைவேறவில்லை.
‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் நடித்ததற் காக, 1971-ம் ஆண்டுக்கான நாட்டின் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருதுக்கு எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சமயத்தில் ‘இதய வீணை’ படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென் றிருந்தார். காஷ்மீர் வானொலி அவரிடம் பேட்டி கண்டது. ‘பாரத்’ விருது பற்றிய கேள்விக்கு தனது வழக்கமான அடக் கத்தோடு எம்.ஜி.ஆர். பதிலளித்தார். ‘‘நான் இதை எதிர்பார்த்தவன் இல்லை. செய்தியை மனதில் பதிய வைத்துக் கொள்ளவே எனக்கு கொஞ்ச நேரம் பிடித்தது. இப்படி ஒரு பட்டம் எனக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல் இருந்த காரணத்தால், இதை நம்பு வதற்கே சிறிது நேரம் ஆனது’’ என்றார்.
காஷ்மீர் வானொலிக்கு பேட்டியளிக் கும்போது, உருது மொழியிலேயே பதிலளித்தார். அதற்காக, அந்த மொழி சொற்களின் உச்சரிப்பைக் கேட்டுப் பயின்று உருதுவில் பதிலளித்து காஷ்மீர் மக்களை வியப்பில் ஆழ்த்தினார்.
கொல்கத்தாவில் நடந்த விழாவில் எம்.ஜி.ஆருக்கு ‘பாரத்’ விருதை அப்போதைய மேற்கு வங்க முதல்வரும் ‘தேசபந்து’ சி.ஆர்.தாஸின் பேரனுமான சித்தார்த்த சங்கர் ரே வழங்கினார்.
‘வணிக ரீதியிலான ‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு எப்படி ‘பாரத்’ விருது கொடுக்கலாம்?’ என்று சர்ச்சை எழுந்தது. விருது வழங்கப்பட்டதற்காக சென்னை உட்லண்ட்ஸ் ஓட்டலில் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் எம்.ஜி.ஆருக்கு பாராட்டு விழா நடந்தபோது அவர் இதற்கு பதிலளித்தார்.
‘‘இந்த விருதுக்கு நான் தகுதியில்லை என்று கூறுபவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ‘பாரத்’ விருது 1971-ம் ஆண்டுக்கு மட்டும்தான். என் வாழ்க்கை முழுவதும் நான் இந்தியத் துணைக் கண்டத்தின் சிறந்த நடிகன் என்ற பொருளில் அல்ல. கலைக்கு ஒரு வரையறையை யாருமே நிர்ணயித்துவிட முடியாது. இதைப் புரிந்துகொண்டால் பொறாமைக்கும் அதிர்ச்சிக்கும் ஏமாற்றத்துக்கும் இடமே கிடையாது’’ என்று எம்.ஜி.ஆர். பேசினார்.
1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக இருந்த நேரத்தில் துப்பாக்கிச் சூட்டில் மாணவர் பலியானதால் அப்போது தனக்கு மத்திய அரசு அளித்த ‘பத்ம  ’ விருதை ஏற்க மறுத்ததாகவும் இப்போது அந்த நிலை இல்லை என்றும் எம்.ஜி.ஆர். தெரி வித்தார். மேலும், ‘நாடோடி மன்னன்’ படத்தை எகிப்து நாட்டு படவிழாவுக்காக வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டதன்பேரில் மத்திய அரசுக்கு அனுப்பியதாகவும் ஆனால், கடைசி நேரத்தில் படம் தேர்வு செய்யப்படவில்லை என் றும் ‘‘நான் என்ன தவறு செய்தேன்?’’ எனவும் அந் தக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர். உருக்கமாகக் கேள்வி எழுப்பினார்.
அந்தப் பேச்சு பின்னர், ‘எம்.ஜி.ஆரின் தீர்க்க தரிசனம்’ என்ற பெயரில் அவர் குத்துவிளக்கு ஏற்றுவது போன்ற முகப்பு படத்துடன் ஒருமணி நேரம் ஓடக்கூடிய ஒலிநாடாவாக வெளிவந்தது.
திமுக அரசின் பரிந்துரையின் பேரில்தான் எம்.ஜி.ஆருக்கு ‘பாரத்’ விருது வழங்கப்பட்டதாக அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய பிறகு, அரசியல்ரீதியில் விமர்சனங்கள் எழுந்தன. சர்ச்சைகள் தொடர்வதை விரும்பாத எம்.ஜி.ஆர்., விருதை திருப்பி அனுப்பினார்.
‘பாரத்’ விருது பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் மட்டுமல்ல; அதைத் திருப்பிய முதல் நடிகரும் அவர்தான் என்று எம்.ஜி.ஆரின் பெயரை வரலாறு தன் பக்கங்களில் பொறித்துக் கொண்டது!
எம்.ஜி.ஆரின் இயற்கையான நடிப்பை பாராட்டி ஜான் மெக்கலம் கருத்து தெரிவித்த நாளிதழ் செய்தி.
நடித்த ‘ரிக்ஷாக்காரன்’ படம் வெளியானபோது, மக்களை கவரும் வகையில், அதுவரை இல்லாத புதுமையான விளம்பர உத்தி பயன்படுத்தப்பட்டது. படத்தின் விளம்பர நோட்டீஸ்கள் ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்டன.

Saturday, June 4, 2016

எம்ஜிஆர் 100 | 79 - தொண்டருக்கும் தொண்டர்!


சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். உணவு பரிமாறுகிறார்.

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R.கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், அன்றாடப் பணிகளில் அவருக்கு உதவி புரியவும் பாதுகாப்புக்கும் உதவியாளர்களும் பாதுகாவலர்களும் உண்டு. எம்.ஜி.ஆர். எள் என்றால் எண்ணெயாய் நிற்கும் ஆற்றல் மிக்கவர்கள் அவர்கள். அப்படிப்பட்ட பணியாளர்களின் தேவைகளை, குடும்பத்துக்கான உதவிகளை முழுமையாக கவனித்து உதவி செய்வதற்கென்று ஒருவர் உண்டு. அவர் எம்.ஜி.ஆர்.!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் ஒரு முறை மாணவ, மாணவிகளின் கலாசார விழா. அதற்கு சிறப்பு விருந் தினராக எம்.ஜி.ஆரை அழைத்திருந்த னர். விழாவில் அவர் கலந்து கொண்டு பேசினார். உடற்கூறுகள் பற்றி, தான் அறிந்து வைத்திருந்தவை குறித்து அருமையாக உரையாற்றினார். ‘இத்தனை பணிகளுக்கும் நடுவே, இதை எல்லாம் படித்துத் தெரிந்து கொள்ள இவருக்கு எப்படி நேரம் கிடைக்கிறது?’ என்று பேச்சைக் கேட்டவர்கள் வியந்தனர்.

‘‘மருத்துவப் படிப்பை முடித்து மருத்துவராக தொழில் செய்பவர்கள் சேவை மனப்பான்மையோடு குறிப்பாக, ஏழைகளுக்கும் கிராமப்புற மக்களுக்கும் பணியாற்ற வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆர். வேண்டுகோள் விடுத்து விட்டு, தனக்கே உரிய அடக்கத்தோடு சொன்னார்… ‘‘மருத்துவம் படிக்காத என்னை சிறப்பு விருந்தினராக ஏன் அழைத்தார்கள்? என்று தெரியவில்லை. ஒரு காரணம் மட்டும் புரிகிறது. என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்புதான் அது. அந்த அன்புள்ளத்தோடு எதிர் காலத்தில் நீங்கள் சமூகத்துக்கு பணி யாற்ற வேண்டும்’’ என்று பலத்த கர கோஷத்துக்கிடையே பேசி முடித்தார்.

எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்து ஒரு கூடை நிறைய ஆப்பிள் பழங்களை மாணவர்கள் அவருக்கு அளித்தனர். அதைப் பெற்றுக் கொண்டு படப்பிடிப் பில் கலந்து கொள்வதற்காக வாஹினி ஸ்டுடியோவுக்கு சென்றார். அங்கு, தன் காரில் இருந்த ஆப்பிள் கூடையை எடுத்து வரச் சொல்லி, படப்பிடிப்பு தளத்தில் இருந்த எல்லா பணியாளர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கச் செய்தார். மருத் துவக் கல்லூரி விழாவில் அன்பைப் பற்றி பேசிய எம்.ஜி.ஆருடைய அன்புள்ளத்தின் வெளிப்பாடு இது.

தென்ஆற்காடு மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் எம்.ஜி.ஆர். சென்றார். வழியில் பல இடங்களில் மக்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு, நிகழ்ச்சிக்கு தாமதமாகவே சென்றார். அவசரப் பணிகள் காரணமாக, குறித்த நேரத்துக்குள் அவர் சென்னை திரும்பி யாக வேண்டும். நிகழ்ச்சியை முடித் துக் கொண்டு காரில் ஏறிப் புறப்படும் முன் உதவியாளர்களைப் பார்த்து, ‘‘சாப்பிட்டீர்களா?’’ என்று கேட்டார். எல் லோரும் ஒரே குரலில் ‘‘சாப்பிட்டு விட்டோம்’’ என்றனர்.

காரின் சக்கரங்கள் சென்னையை நோக்கி சுழலத் தொடங்கின. நகரத் தைக் கடந்து சாலையில் கார் வேகமாகச் செல்கிறது. திடீரென, ‘‘காரை ஓரமாக நிறுத்து’’ என்று எம்.ஜி.ஆரின் குரல் கடுமையாக ஒலிக் கிறது. ‘ஏன்?’ என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருந்தாலும், எம்.ஜி.ஆர். சொன்னதைச் செய்தே பழக்கப் பட்ட உதவியாளர் கள் காரணம் கேட்க வில்லை. என்றாலும், அவரது குரலில் இருந்த கடுமை அவர்களுக்குள் கலவரத்தை ஏற்படுத்தியது. சாலையோரமாக கார் நின்றது.

உதவியாளர்களைப் பார்த்து உரிமை கலந்த கோபத்தோடு, ‘‘உங்கள் வாடிய முகங்களைப் பார்த்தாலே நீங்கள் எல்லோரும் சாப்பிடவில்லை என்று தெரிகிறது. நான் விரைவில் சென்னை திரும்ப வேண்டும் என்பதற் காக, என்னிடம் சாப்பிட்டதாக சொல்லி யிருக்கிறீர்கள். ஏன் பொய் சொல்கிறீர் கள்?’’ என்று இரைந்தார். குட்டு வெளிப்பட்டதில் அந்த உண்மையான பணியாளர்கள் ஊமைகளாய் நின்றனர்.

அவர்களது நிலைமையை எம்.ஜி.ஆர். புரிந்து கொண்டார். அவரது குரலில் இருந்த தந்தையின் கண்டிப்பு, இப்போது தாயின் கருணையாய் சுரந்தது. ‘‘இந்த நிகழ்ச்சியை நடத்தியவர் கள் என்னை வரவேற்று உபசரிக்கும் ஆர்வத்தில் உங்களை கவனித்திருக்க முடியாது. நான் புறப்படத் தாமத மாகிவிடும் என்பதற் காக சாப்பிட்டுவிட்ட தாக நீங்கள் பொய் சொன்னால் எனக் குத் தெரியாதா? நான் சந்தேகப் பட்டுதான் அங்கிருந்தவர் களிடம் இட்லி களை பொட்டலங் களாக கட்டச்சொல்லி வாங்கி வந்தேன். மர நிழலில் போய் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்’’ என்று சொல்லி, தான் கொண்டுவந்த பார்சலை எடுத்து உதவியாளர்களிடம் கொடுத்தார்.

நெகிழ்ந்துபோன உதவியாளர்கள், எம்.ஜி.ஆரிடம் இருந்து பார்சலை வாங்கிக் கொண்டு ஜமுக்காளத்தை விரித்து அமர்ந்து சாப்பிடத் தொடங் கினர். நெய் மணக்கும் காரமான மிளகாய்ப் பொடி தடவிய இட்லி அவர்களுக்கு அமிர்தமாய் இனித்தது. சீக்கிரம் புறப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இட்லிகளை விழுங் கியவர்களில் ஒருவருக்கு விக்கல். எம்.ஜி.ஆரிடம் இருந்து பார்சலை வாங்கிவந்த அவசரத்தில் தண் ணீரை எடுத்துவர அவர்கள் மறந்து விட்டனர்.

அப்போது, தண்ணீர் வைத்திருந்த ஜாடியையும் டம்ளர்களையும் ஏந்தியபடி இரு கரங்கள் நீள்கின்றன. உதவியாளர்கள் நிமிர்ந்து பார்த்தால், எம்.ஜி.ஆரேதான்! எல்லோருக்கும் டம்ளர்களில் பொறுமையாக தண்ணீரை ஊற்றி வைக்கிறார். அவரை உப சரிக்க லட்சோப லட்சம் பேர் காத்திருக்கும்போது, அந்த மாமனிதர் தங்களுக்கு பசியாற உணவு தந்து, தாகம் தீர்க்க தண்ணீரும் கொடுத்து பணி செய்வதைக் கண்ட உதவியாளர்களின் கண்கள் பனித்தன.

எம்.ஜி.ஆர். தலைவர் மட்டுமல்ல; தொண்டருக்கும் தொண்டர்!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்


ஜூபிடர் நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டுடியோவை எம்.ஜி.ஆர். வாங்கி அதற்கு தனது தாயாரின் பெயரை சூட்டி ‘சத்யா ஸ்டுடியோ’ ஆக்கினார். தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய ஸ்டுடியோவில் தொழிலாளர்களை பங்குதாரர்களாக்கி, லாபத்தை அவர்களுக்கு பகிர்ந்து அளித்த முதலாளி… இல்லை, இல்லை, முதலாளி என்ற பெயரில் வாழ்ந்த தொழிலாளி எம்.ஜி.ஆர்.!

Friday, June 3, 2016

எம்ஜிஆர் 100 | 78 - எடுத்துக்கொண்ட கடமைக்கே முதலிடம்!

மு.க.முத்து நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’ படப்பிடிப்பை தொடங்கி வைக்க வந்த எம்.ஜி.ஆரை கைகுலுக்கி வரவேற்கிறார் இன்று 93-வது பிறந்தநாள் காணும் கருணாநிதி.

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. அரசியலில் வெற்றி பெற்றதற்கு அவர் ஒரு சினிமா நடிகர் என்பது மட்டுமே காரணம் அல்ல. அதுதான் காரணம் என்றால் அரசியலில் ஈடுபட்ட நடிகர்கள் எல்லோருமே வெற்றி பெற்றிருக்க வேண்டுமே? அரசியலில் மற்ற நடிகர்களுக்கு கிடைக்காத வெற்றியும் புகழும் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே கிடைத்ததற்கு காரணம், அவரது அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு. தாங்க முடியாத துக்கத்தைக்கூட மறைத்துக் கொண்டு அரசியலில் உழைத்தவர் அவர்.

1962-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல். அதற்கு முந் தைய தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்ட திமுக பதி னைந்து தொகுதிகளில் வென்றது. எனவே, இந்தத் தேர்தலில் காங்கிரசின் வியூகம் பலமானதாக இருந்தது. காஞ்சி புரத்தில் பேரறிஞர் அண்ணாவை எதிர்த்து பஸ் முதலாளி நடேச முதலியார் களமிறக்கப்பட்டார். 1957-ம் ஆண்டு தேர்தலில் குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, இம்முறை தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டார்.

தமிழகம் முழுவதும் திமுகவை ஆதரித்து இரவு பகல் பார்க்காமல் எம்.ஜி.ஆர். தீவிர பிரசாரம் மேற்கொண் டார். இப்போது இருப்பதைப் போல இரவு பத்து மணிக்குள் பிரசாரத்தை முடிக்க வேண்டும் என்ற தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு எல்லாம் அப்போது கிடை யாது. தேர்தல் நேரங்களில் ஒரு இடத் துக்கு மாலையில் எம்.ஜி.ஆர். பிரசாரத் துக்கு வருவதாக அறிவிக்கப்படும். வழிநெடுக மக்களின் வரவேற்பால் கூட்டத்துக்கு வர தாமதமாகி, அதிகாலையில் எம்.ஜி.ஆர். வந்த நிகழ்ச்சிகள் உண்டு. அதுவரையில் கூட்டம் கலையாமல் இருக்கும்.

எம்.ஜி.ஆரின் இரண்டாவது மனைவி சதானந்தவதி காசநோயால் பல ஆண்டு களாக பாதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை மோசமாக இருந்தது. அந்தச் சூழலிலும், திமுகவுக்காக எம்.ஜி.ஆர். பிரசாரம் செய்து கொண்டிருந்தார். குறிப்பாக, தஞ்சாவூர் தொகுதியில் தனது நண்பரான கருணாநிதி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையான பிரசாரம் மேற்கொண்டார். ஒரே நாளில் நாற்பதுக்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்களில் பேசினார்.

தஞ்சாவூரில் எம்.ஜி.ஆர். வேனில் பிரசாரம் மேற்கொண்ட போது, வயல்களில் வேலை செய்த விவசாயிகள், பெண்கள் அவரைப் பார்த்து ஓடி வந்தனர். அவர் களிடம் எம்.ஜி.ஆர். நலம் விசாரித்து விட்டு, ‘‘யாருக்கு ஓட்டுப் போடுவீங்க?’’ என்று கேட்டதற்கு, ‘‘ஐயாவுக்குத்தான் ஓட்டு போடுவோம்’’ என்று பதிலளித்தனர். எம்.ஜி.ஆர். மகிழ்ச்சியுடன் புறப்பட்டார். செல்லும் வழிகளில் எல்லாம் ‘‘ஐயாவுக் குத்தான் எங்கள் ஓட்டு’’ என்று மக்கள் கூறவே, அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

ஏனென்றால், எம்.ஜி.ஆரை கிராமப் புறங்களில் வயதில் சிறியவர்கள் ‘தலைவரே’ என்றும் ‘அண்ணே’ என்றும் அழைப்பார்கள். முதியவர்களும் பெண்களும் ‘சாமி’ எனவும் ‘மகராசா’ என்றும்தான் அழைப்பார்கள். ‘இது என்ன புதிதாக ஐயா என்று அழைக்கிறார்களே?’ என்று எம்.ஜி.ஆருக்கு சந்தேகம். மீண்டும் ஒரு இடத்தில் மக்களை சந் தித்தபோது, ‘‘ஐயாவுக்கு ஓட்டு’’ என்று சொன்னவர்களிடம் ‘‘யாரை சொல்கிறீர் கள்?’’ என்று கேட்ட எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சி. மக்களால் குறிப்பிடப்பட்ட அந்த ‘ஐயா’… பரிசுத்த நாடார்!

தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே புதுஆற்றின் கரை ஓரத்திலிருந்து சிறிது தூரம் சென்றால் ‘யாகப்பா டாக்கீஸ்’ வரும். அந்த தியேட்டரில் எம்.ஜி.ஆர். நடித்த ‘மதுரை வீரன்’ உட்பட அவரது பல படங்கள் வெளியாகி நூறு நாட்கள் ஓடியுள்ளன. யாகப்ப நாடார் என்ற செல்வந்தரின் பெயரால் அமைந்திருந் தது அந்த திரையரங்கம். இப்போது அந்த தியேட்டர் மூடப்பட்டுவிட்டது. யாகப்ப நாடாரின் மகன்தான் பரிசுத்த நாடார். செல்வாக்கான குடும்பம். அவர்தான் கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர். அவரை ‘ஐயா’ என்று மக்கள் அழைப்பது வழக்கம். அவருக்கு ஆதரவாகத்தான் எம்.ஜி.ஆர். ஓட்டு கேட்க வந்துள்ளார் என்று கிராம மக்கள் நினைத்தனர்.

சுதாரித்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., அதன்பிறகு வழியில் மக்களை சந்திக் கும்போது, ‘‘நான் திமுக வேட்பாளர் கருணாநிதிக்கு ஓட்டு கேட்டு வந்திருக் கிறேன். நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு போட வேண்டும்’’ என்று வலியுறுத்திக் கூறினார். கடும் போட்டி யில் அந்தத் தேர்தலில் கருணாநிதி வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு எம்.ஜி.ஆரின் தீவிர பிரசாரம் முக்கிய காரணமாக இருந்தது என்று சொன்னால் மிகையல்ல. ஏனெனில், அந்தக் காலகட்டத்தில் தஞ்சாவூரில் காங்கிரஸுக்கு, குறிப்பாக பரிசுத்த நாடாருக்கு இருந்த செல்வாக்கு அப்படிப்பட்டது.

தஞ்சாவூரில் தேர்தல் பிரசாரத்தின் போது வேனில் எம்.ஜி.ஆர். சென்று கொண்டிருந்தார். அவரது வேனைத் தொடர்ந்து பின்னாலேயே வேகமாக வந்து கொண்டிருந்தது ஒரு கார். அரசியல் விரோதிகள் தாக்க வருகிறார் களோ என்று எம்.ஜி.ஆருடன் இருந்தவர் களுக்கு சந்தேகம். இருந்தாலும் ‘‘என்னதான் நடக்கிறது பார்ப்போம். காரை நிறுத்து’’ என்று டிரைவரிடம் எம்.ஜி.ஆர். கூறினார்.

எந்த நிலைமை வந்தாலும் சந்திக்க எம்.ஜி.ஆரும் உடனிருந்தவர்களும் தயாரானபோது, பின்னால் வேகமாக வந்து நின்ற காரிலிருந்து இறங்கியவர் நடிகர் கே.கண்ணன்! பதற்றத்துடன் இறங்கிய அவர் இடிபோன்ற செய்தியை சொன்னார். சென்னையில் எம்.ஜி.ஆரின் மனைவி சதானந்தவதி இறந்துவிட்டார் என்ற செய்திதான் அது. கண்கலங்கிய எம்.ஜி.ஆரிடம் இருந்து சில நிமிடங்கள் பேச்சே இல்லை. அப்படியே உடைந்துபோய் உட்கார்ந்துவிட்டார்.

தயங்கியபடியே அவரிடம், ‘‘சென் னைக்கு திரும்பலாம்’’ என்று சொன்ன உதவியாளர்களிடம், ‘‘இல்லை. இன்று இரவு பிரசார பொதுக்கூட்டம் இருக் கிறது. நான் போகவில்லை என்றால் கட்சியினரும் மக்களும் ஏமாந்துவிடுவார்கள். பொதுக்கூட்டம் முடிந்தபின் அப்படியே கிளம்பிவிடலாம்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். அதன் படியே இரவில் கூட்டத்தில் பேசி விட்டு பதினொரு மணிக்கு மேல் சென்னை புறப்பட்டார். கூட் டத்தில் பேசி முடிக்கும்வரை தனது மனைவி இறந்த விஷயம் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.!

பொது வாழ்க்கை என்று வந்து விட்ட பிறகு... குடும்பம், உறவு, பிரிவுகளைவிட, எடுத்துக் கொண்ட கடமைக்கே முதலிடம் என்பதை, இதைவிடத் தெளிவாக எப்படி ஒரு தலைவர் உலகத்துக்குக் காட்ட முடியும்?



1967 மற்றும் 71-ம் ஆண்டுகளில் பரங்கிமலை தொகுதியிலிருந்து இரண்டு முறை சட்டப்பேரவைக்கு எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுக்கப்பட்டார். 1972-ம் ஆண்டு பரங்கிமலை தொகுதி எம்எல்ஏ-வாக எம்.ஜி.ஆர். இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினருக்கான அடையாள அட்டை.

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார், எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்


1962-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எம்.ஜி.ஆர். போட்டியிடவில்லை. தமிழகம் முழுவதும் திமுகவுக்காக பிரசாரம் செய்தார். அந்தத் தேர்தலில் திமுக 50 இடங் களில் வென்றது. எம்.ஜி.ஆரின் உழைப்பை பாராட்டி அவருக்கு எம்.எல்.சி. பதவி அளித்து மகிழ்ந்தார் பேரறிஞர் அண்ணா!

எம்ஜிஆர் 100 | 77 - நரிக்குறவர்கள் அன்பு


‘இதயக்கனி’ படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆரை ஒரு இளைஞர் முத்தமிடுகிறார். மற்றொரு இளைஞர் மெய்மறந்து எம்.ஜி.ஆரை வணங்குகிறார்.

எம்ஜிஆர் 100 | 77 - நரிக்குறவர்கள் அன்பு


M.G.R. மீது ரசிகர்களும் அடித்தட்டு மக்களும் தங்கள் உயிரையே வைத்திருந்தனர். இது ஏதோ கண்மூடித்தனமான பக்தியால் திடீரென ஒரே நாளில் ஏற்பட்டது அல்ல. அந்த அளவுக்கு ரசிகர்களையும் சாதாரண மக்களையும் எம்.ஜி.ஆர். நேசித்தார். சில நேரங்களில் அவர்கள் தன்னிடம் வரம்பு மீறி நடந்து கொண்டாலும் அதை அவர்களின் அன்பின் வெளிப்பாடாகவே எடுத்துக் கொள்வார்.

எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயக்கனி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் முகத் துவார பகுதியில் எடுக்கப்பட்டன. அது வரை எந்தப் படங்களிலும் இடம்பெறாத அபூர்வ லொகேஷன் அது. அதேநேரம், மனித நடமாட்டத்தை அதிகம் பார்க்க முடியாத, மீனவர்களேகூட அப்போது போக அஞ்சிய இடம். எம்.ஜி.ஆர். வந்திருப்பதை அறிந்து அங்கும் மக்கள் வந்துவிட்டனர்.

அந்தக் காட்சியில் எம்.ஜி.ஆர். மாறு வேடத்தில் இருப்பார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, இரண்டு இளைஞர் கள் எம்.ஜி.ஆரை காண வேண்டும் என்ற ஆவலில் தண்ணீரில் குதித்து நீந்தி அவர் இருந்த இடத்துக்கு வந்துவிட்டனர். அந்த இளைஞர்களை அழைத்த எம்.ஜி.ஆர்., அவர்களிடம் நலம் விசாரித்தார். அப் போது, ஒரு இளைஞர் எதிர்பாராமல் எம்.ஜி.ஆரை கட்டிக்கொண்டு முத்தமிட்டார். கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் அந்த இளைஞரின் அன்பை எம்.ஜி.ஆர். ஏற்றுக்கொண்டார்.

அந்தப் புகைப்படம்தான் எத்தனை உணர்வுகளை வெளிப்படுத்துகிறது! எம்.ஜி.ஆரை முத்தமிடும் இளைஞரின் முகமே தெரியவில்லை. அந்த அளவுக்கு அன்பின் வெளிப்பாடாய் ஆழமாக தன் முத்தத்தை பதிக்கிறார். அருகில் நிற்கும் இளைஞர் எம்.ஜி.ஆரைப் பார்த்த பரவசததில் கும்பிட்ட கையை கீழிறக்காமல் சிரித்தபடி அவரை பார்த்துக் கொண்டே நிற்கிறார். நீரில் நீந்தி வந்த தன் அடையாளமாக அவர் அணிந்துள்ள டிராயர் தண்ணீரில் நனைந்து உடலோடு ஒட்டியுள்ளது. முத்தமிடும் ரசிகரை அணைத்தபடி அவரது அன்பு மழையில் திளைக்கும் எம்.ஜி.ஆரின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம். அன்பு மனங்களின் சந்திப்பு, சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி; பார்ப்பவர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுப்பப்பட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்து சமீபத்தில்தான், நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நரிக்குற வர் இன மக்கள் மீது எம்.ஜி.ஆர். மிகுந்த அன்பு கொண்டவர். ‘ஒளி விளக்கு’ படத் தில் ‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க…’ பாடலில் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் நரிக்குறவர்கள் வேடத்தில் ஆடிப் பாடுவர்.

அந்தப் பாடலின்போது நடனத்தில் எம்.ஜி.ஆர். கலக்கியிருப்பார். தியேட்ட ரில் ஆடாதவர்கள் குறைவு. அந்தப் பாடல் காட்சியில் நடிப்பதற்காக நரிக்குறவர் இன மக்களை வரவழைத்து, அவர்களை ஆடச் சொல்லி கவனித்து எம்.ஜி.ஆர். பயிற்சி எடுத்துக் கொண்டார். ‘நவரத் தினம்’ படத்தில் ‘குருவிக்கார மச்சானே…’ பாடல் காட்சியிலும் எம்.ஜி.ஆரின் மூவ்மென்ட்ஸ் அற்புதமாக இருக்கும்.

எம்.ஜி.ஆர். கொண்டாடிய ஒரே பண்டிகை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை. அன்றைய தினம், கட்டுக் கட்டாக பணத்தை வைத்துக் கொண்டு, தன்னைக் காண வருவோருக்கெல்லாம் கைக்கு வரும் பணத்தைக் கொடுத்து மகிழ்வார். ஒருமுறை பொங்கல் நாளில் ஏராளமான நரிக்குறவர்கள் எம்.ஜி.ஆரை காண, அவரது ராமாவரம் தோட்டத்துக்கு வந்தனர். எம்.ஜி.ஆரை கண்டதும் உற்சாகக் கூச்சலிட்டனர். அவர் களை அருகே வருமாறு அழைத்த எம்.ஜி.ஆர்., கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் பணம் கொடுத்தார். அவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள், அவர் எவ்வளவோ தடுத்தும் அவரது காலில் விழுந்து வணங்கினர்.

நரிக்குறவர் இன மக்களை எந்தவித பேதமும் இல்லாமல் எம்.ஜி.ஆர். கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். அவர்களது குழந்தைகளை வாங்கிக் கொஞ்சினார். சமூகத்தில் அடித்தளத்தில் இருக்கும் தங்கள் மீது அவர் காட்டிய பாசத்தையும் அன்பையும் பார்த்து வந்தவர்கள் கண்கலங்கினர்.

வயதில் மூத்த நரிக்குறவர் ஒருவர், வெற்றிலை போட்ட வாயுடன் எம்.ஜி.ஆரை கட்டியணைத்து முத்தமிட் டார். அவரது உதடுகளின் அடையாளம் எம்.ஜி.ஆரின் கன்னத்தில் பதிந்துவிட் டது. இதை எதிர்பாராத எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் வேகமாகப் பாய்ந்து அவரை விலக்க முற்பட்டனர். அவர் களைத் தடுத்த எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே, ‘‘விடுங்கப்பா, அவங்க அன்பை இப்படிக் காட்டுறாங்க. இதில் தவறு ஒன்றுமில்லை’’ என்று சாதாரண மாகக் கூறினார். இதன் தொடர்ச்சி யாக மறுநாள் நடந்ததுதான் வேடிக்கை.

முதல்நாள் எம்.ஜி.ஆரை பார்த்துவிட் டுச் சென்ற நரிக்குறவ சமூக மக்கள் மறுநாளும் கூட்டமாக வந்துவிட்டனர். படப்பிடிப்புக்கு கிளம்பிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அவர்களிடம் விசாரித்தார். முதல்நாள் அவரை முத்தமிட்ட அந்த நரிக் குறவர், ‘‘உங்க தயவால என் சபதம் நிறை வேறிடுச்சு சாமி’’ என்றார். ‘‘என்ன சபதம்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டதற்கு, ‘‘உங் களை யாரும் தொடமுடியாதுன்னு எங்க கூட்டத்தினர் சொன்னாங்க. அவர்களிடம் உங்களை முத்தமிட்டு காட்டுறேன்னு சபதம் செய்தேன். ஜெயிச்சுட்டேன். என்னை மன்னிச்சுடுங்க சாமி’’ என்று கூறினார்.

அதைக் கேட்டு சிரித்த எம்.ஜி.ஆர்., ‘‘பரவாயில்லை. இனிமேல் இதுபோன்று வேறு யாரையும் முத்தமிடுவதாக சபதம் செய்யாதே. வம்பா போயிடும்’’ என்று சொல்லி, பணியாளர்களை அழைத்து, வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு போடச் சொல்லிவிட்டு படப்பிடிப்புக்கு புறப்பட்டார்.

மேற்கண்ட இரண்டு நிகழ்ச்சிகளின் போதும் எம்.ஜி.ஆர். முதல்வராக வில்லை. தமிழ்த் திரையுலகின் நம்பர் ஒன் ‘ஹீரோ’வாக இருந்தார். என்றாலும் புகழ்மிக்க ஒரு நடிகரிடம் ரசிகர்களும் மக் களும் இந்த அளவுக்கு உரிமை எடுத்துக் கொள்ள முடியுமா? முதல்வரான பிறகும் அவரது இந்த எளிமையாக பழகும் குணம் மாறவில்லை என்பதுதான் எம்.ஜி.ஆரின் தனிச்சிறப்பு.

‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் பாடல் இது:

‘உலகமெனும் நாடக மேடையில்

நானொரு நடிகன்;

உரிமையுடன் வாழ்ந்திடும் வாழ்க்கையில் உங்களில் ஒருவன்!’




பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது நடந்த உலகத் தமிழ் மாநாட்டையொட்டி, தமிழகம் வந்த குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேனை அவர் பிச்சாவரம் அழைத்துச் சென்று இயற்கை காட்சிகளைக் காட்டினார். ‘இவ்வளவு அழகிய இடத்தை சுற்றுலாத் தலமாக மாற்றலாமே?’ என்று அண்ணா விரும்பினார். பின்னர், எம்.ஜி.ஆர். முதல்வரானபின் பிச்சாவரம் சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டது.

Wednesday, June 1, 2016

எம்ஜிஆர் 100 | 76 - கொடுத்தது கோடிகள்!


எம்ஜிஆர் 100 | 76 - கொடுத்தது கோடிகள்!

‘நாடோடி மன்னன்’ படத்தில் இரட்டை வேடங்களில் எம்.ஜி.ஆர். தோன்றும் காட்சி.
M.G.R. உதவி செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டால் நேரம், காலம் பார்க்க மாட்டார். தான் எவ்வளவுதான் கடினமான பணியில் இருந்தாலும் தேவைப்படும் நபருக்கு சரியான நேரத்தில் உதவி செய்யக் கூடியவர். அதிலும் வசதியுடன் வாழ்ந்து பின்னர் நொடித்துப் போனவர் என்றால் அவர்களுக்கு உதவும்வரை அவர் மனம் அமைதி அடையாது.,

அந்த உதவி இயக்குநரின் பெயர் கோபாலகிருஷ்ணன். பல படங் களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். ‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு உதவியாக இருந்தவர். வேறு பல படங்களுக்கும் உதவி இயக்குநராக இருந்துள்ளார். நல்ல நிலையில் இருந்தவர், காலச் சூழலில் நொடித்துப் போனார். சென்னை நங்கநல்லூரில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் சிரமப்பட்டு வந்தார்.

கிடைத்த சிறிய வேலைகளை செய்து குடும்பத்தினரின் பசியாற்றுவதே அவ ருக்கு பெரும்பாடாக இருந்தது. வீட்டு வாடகையைக்கூட அவரால் கொடுக்க முடியவில்லை. சில மாதங்கள் வாடகை பாக்கி இருந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் பொறுமை இழந்தார். ஒருநாள், வீட்டில் உள்ள தட்டுமுட்டு சாமான்களை எடுத்து வெளியே வீசி விட்டு வீட்டையும் உரிமையாளர் பூட்டி விட்டார். நிர்க்கதியாக நின்ற குடும்பத் தினரை நெருங்கிய நண்பர் வீட்டில் விட்டுவிட்டு தனது உறவினர்கள், நண் பர்களிடம் உதவி கேட்டார் கோபால கிருஷ்ணன். அவருக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே.

என்ன செய்வது என்று தெரியாத நிலையில், கோபாலகிருஷ்ணனுக்கு எம்.ஜி.ஆரின் நினைவு வந்தது. பல ஆண்டுகளாக எம்.ஜி.ஆரோடு அவ ருக்கு தொடர்பு இல்லை. தன்னை எம்.ஜி.ஆர். நினைவில் வைத்திருப்பாரா? நினைவில் இருந்தாலும் நெருக்கம் இல் லாத நிலையில் உதவி செய்வாரா? என்று அவருக்கு சந்தேகம். இருந்தாலும், கடைசி முயற்சியாக எம்.ஜி.ஆரை பார்த்துவிடலாம் என்று அவரைத் தேடிச் சென்றார்.

அப்போது, வாஹினி ஸ்டுடியோவில் ‘பட்டிக்காட்டு பொன்னையா’ படப்பிடிப் பில் எம்.ஜி.ஆர். இருந்தார். படப்பிடிப்பு முடியும்வரை காத்திருந்தார் கோபால கிருஷ்ணன். படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த எம்.ஜி.ஆர்,, சோகத் துடன் நின்றிருந்த கோபாலகிருஷ்ணனை பார்த்ததும் அடையாளம் கண்டுகொண் டார். அகமும் முகமும் மலர அவரை அழைத்து நலம் விசாரித்தார்.

கோபாலகிருஷ்ணனின் முகத்தையும் உடையையும் பார்த்தே அவரது நிலை மையை எம்.ஜி.ஆர். தெரிந்துகொண் டார். அவர் அன்போடு விசாரித்ததைப் பார்த்து, கோபாலகிருஷ்ணனுக்கு அது வரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்தது. அவரை சமாதானப்படுத்தி எம்.ஜி.ஆர். ஆறுதல் கூறினார். ஆசு வாசப்படுத்திக் கொண்டு, தனது நிலை மையையும் குடும்பத்தினரை நண்பர் வீட்டில் விட்டுவிட்டு வந்திருப்பதையும் குமுறித் தீர்த்தார் கோபாலகிருஷ்ணன்.

அதைக் கேட்டு துடித்துப்போன எம்.ஜி.ஆர்., ‘‘உங்கள் நிலைமையை ஏன் முன்பே என்னிடம் தெரிவிக்கவில்லை?’’ என்று அவரை அன்போடு கடிந்து கொண் டார். ‘‘வாடகை பாக்கி எவ்வளவு?’’ என்று கேட்டார். ‘‘மூவாயிரம் ரூபாய்’’ என்று பதிலளித்தார் கோபாலகிருஷ்ணன். அவரை சாப்பிட வைத்து கைச்செலவுக்கு சிறிது பணம் கொடுத்ததுடன், தனது உதவியாளர்களிடம் அவரது வீட்டு முக வரியை கொடுத்துவிட்டு போகச்சொன் னார். எம்.ஜி.ஆரை கோபாலகிருஷ்ணன் பார்த்தது பிற்பகலில். அன்று மாலை முதல் பலத்த மழை பெய்தது.

‘எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டோம். எப்படியும் உதவி கிடைக்கும்’ என்ற நம்பிக்கையில் கொட்டும் மழையிலும் பூட்டப்பட்டிருந்த தனது வாடகை வீடு முன்பு தாழ்வாரத்தில் ஒடுங்கியபடி அமர்ந்து, சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன்.

அவரது நம்பிக்கை வீண்போக வில்லை. அவர் வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளி ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்தவர்கள் எம்.ஜி.ஆரின் உதவி யாளர்கள். தன்னைப் பற்றி அவர்கள் விசா ரிப்பதை அறிந்து, ஓடோடிச் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் கோபாலகிருஷ்ணன். அவரிடம் எம்.ஜி.ஆர் கொடுக்கச் சொன்னதாக பேப்பரில் சுற்றப்பட்ட ஒரு பொட்டலத்தை உதவியாளர்கள் கொடுத்தனர்.

‘‘இதில் பத்தாயிரம் ரூபாய் இருக் கிறது. வாடகை பாக்கியான மூவாயிரம் ரூபாய் போக மீதிப் பணத்தை உங் களையே வைத்துக்கொள்ளச் சொன் னார்’’ என்று கோபாலகிருஷ்ணனிடம் எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் தெரி வித்தனர். நன்றிப் பெருக்கில் மழை யுடன் போட்டியிட்டபடி, கோபால கிருஷ்ணனின் கண்களில் இருந்து ஆனந் தக் கண்ணீர் கொட்டியது. பின்னர், அவ ருக்கு சில வாய்ப்புகளும் கிடைத்தன. இது எம்.ஜி.ஆரின் உதவிதான் என்று தெரிந்து கொண்டார் கோபாலகிருஷ்ணன்.

இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால், அன்றிரவு வெகுநேரம் வரை எம்.ஜி.ஆர். சாப்பிடாமல் இருந்தார். தனது உதவியாளர்கள் திரும்பி வந்து, ‘‘கோபாலகிருஷ்ணனிடம் பணத்தை கொடுத்துவிட்டோம்” என்று தெரிவித்த பிறகுதான் சாப்பிடச் சென்றார்.

எம்.ஜி.ஆர். நடித்த ‘அரச கட்டளை’ படம், பல மாற்றங்கள் செய்யப்பட்டு, துப் பாக்கிச் சூடு சம்பவத்தால் எம்.ஜி.ஆர். பல மாதங்கள் நடிக்க முடியாமல் இருந்து, பின்னர், 1967-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தல் முடிந்து தாமதமாக வெளியானது. படத்தில், ‘‘அண்ணா... அண்ணா... என்று நாங்கள் அழைக்கும் காலம் போய் மன்னா... மன்னா... என்று அழைக்கும் காலம் வரப்போகிறது’’ என்ற வசனம் இடம்பெறும். அதாவது, பேர றிஞர் அண்ணா விரைவில் முதல் அமைச் சர் ஆவார் என்பதை விளக்குவதுபோல வசனம். ஆனால், படம் வந்தபோது அண்ணா முதல்வராகவே ஆகிவிட்டார்.

இந்தப் படத்தில், கவிஞர் வாலி எழுதி, பி.சுசீலாவின் இனிமையான குரலில் ‘என்னைப் பாட வைத்தவன் ஒருவன், என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்…’ என்ற அருமையான பாடல் உண்டு. படத்தில் ஜெயலலிதா பாடுவது போல காட்சி. எம்.ஜி.ஆரின் ஈகை குணத்தைப் புகழும் பின்வரும் வரிகள் வரும்போது, தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரம் கூரையைப் பிளக்கும்.

‘அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை

அந்த வாசலில் காவல்கள் இல்லை

அவன் கொடுத்தது எத்தனை கோடி

அந்தக் கோமகன் திருமுகம் வாழி…வாழி!’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்


‘அரச கட்டளை’ படத்தை எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ர பாணியின் மகன் ராமமூர்த்தி தயா ரித்தார். சக்ரபாணி இயக்கினார். பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன் என எம்.ஜி.ஆர். பட முக்கிய வில்லன் கள் எல்லோரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

NEWS TODAY 22.04.2024