எம்ஜிஆர் 100 | 97 - பொய்க்காலில் அல்ல, புகழ்க்காலில் நிற்கும் உயரம்!
தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
M.G.R. திரையுலகில் நடிகர்கள், நடிகைகள், கவிஞர்கள் பலரையும் அறிமுகப்படுத்தியுள்ளார். தனது படங்களில் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்குவார். அவரது படங்கள் மூலம் அறிமுகமான எல்லோருமே திறமை மிக்கவர்களாக விளங்கினர். அப்படி அறிமுகமான கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர், முறையாகத் தமிழ் கற்று, பல சிறந்த பாடல்களை எழுதியுள்ள புலவர் புலமைப்பித்தன்!
படிக்கும் காலத்திலிருந்தே திராவிட இயக்கத்தின் தொண்டராக வாழ்க் கையைத் தொடங்கியவர் புலமைப் பித்தன். கோவையில் அரசியல் விரோ தத்தால் கொல்லப்பட்ட திமுக தொண்டர் ஒருவரின் குடும்பத்துக்கு நிதி வழங்க எம்.ஜி.ஆர். வந்தபோதுதான் புலமைப் பித்தன் அவரிடம் முதன்முதலில் பேசி னார். வசூலான தொகை போதாது என்று கருதிய எம்.ஜி.ஆர்., தனது சொந்தப் பணத்தில் இருந்து கணிசமான தொகையை இறந்தவரின் குடும்பத்துக்கு வழங் கியது புலமைப் பித்தனின் மனதில் இன்னும் பசுமையாக உள்ளது.
எம்.ஜி.ஆர். நடித்த ‘குடியிருந்த கோயில்’ படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ‘நான் யார், நான் யார், நீ யார்?... ’ என்ற கருத் தாழம் மிக்க அவரது முதல் பாடலே சூப்பர் ஹிட்டாக அமைந்தது. ‘அடிமைப் பெண்’ படத்தில் ‘ஆயிரம் நிலவே வா...’, ‘இதயக்கனி’ படத்தில், ‘நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற...’, ‘உழைக்கும் கரங்கள்’ படத்தில், ‘நாளை உலகை ஆளவேண்டும்...’ உட்பட பல பாடல்களை புலமைப்பித்தன் எழுதி இருக் கிறார்.
‘‘திரைத்துறையிலும் அரசியல் துறை யிலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அள வுக்கு இமயமாய் எம்.ஜி.ஆர். உயர்ந்தது பொய்க் காலில் வந்த உயரமல்ல; புகழ்க் காலில் நிற்கும் உயரம். எவ்வளவோ பேருக்கு அவர் உதவிகள் செய்திருக்கிறார். அதை எல்லாம் பட்டியல் போடுவது முடியாத காரியம்’’ என்று கூறும் புலமைப்பித்தனுக்கு சொந்த அனுபவமே உண்டு.
கோவை மாவட்டம் சூலூர் அருகே பள்ளபாளையம் கிராமத்தில் புலமைப் பித்தனின் குடும்பத்துக்கு சொந்தமான வீட்டை அவரது தந்தையும் அண்ணன் கள் இருவரும் சேர்ந்து 1967-ம் ஆண்டு அடமானம் வைத்து பணம் வாங்கினர். அடுத்த ஆண்டே அவரது தந்தை இறந்து போனார். 1971-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதிக்குள் கடனாக வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கத் தவறினால், கடன் கொடுத்தவருக்கே வீடு சொந்தமாகிவிடும்.
அப்போது, படங்களில் புலமைப் பித்தன் ஒருசில பாடல்கள் எழுதிக் கொண் டிருந்த காலம். பேர் இருந்த அளவுக்கு பணம் இல்லை. பல நாட்கள் தயக்கத் துக்குப் பின் ஒருநாள், வாஹினி ஸ்டுடி யோவில் படப்பிடிப்பு முடிந்து ஒப்பனை அறைக்குச் சென்ற எம்.ஜி.ஆருடன் கூடவே புலமைப்பித்தனும் சென்றார். அவர் ஏதோ சொல்ல நினைப்பதை குறிப்பால் உணர்ந்தார் எம்.ஜி.ஆர்.!
யாரையும், எதையும் உடனடியாக புரிந்து கொள்ளும் திறனும், கூர்ந்த கவ னிப்பும் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்த வரம். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட அவரது கூர்மைத் திறன் குறைய வில்லை. தனக்கு சிகிச்சை அளித்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டாக்டர் கானு என்பவருக்கு தங்கத்தில் சிறிய யானை சிலையை பரிசளிக்க எம்.ஜி.ஆர். முடிவு செய்தார்.
அதற்காக, சென்னையில் உள்ள நகைக் கடை ஒன்றில் தங்கத்தில் சிறிய யானை சிலை செய்யப்பட்டு எம்.ஜி.ஆரின் பார்வைக்கு அனுப்பப்பட் டது. அதை கவனித்துவிட்டு யானையின் தும்பிக்கையும் வாலும் ஏறக்குறைய ஒரே அளவில் இருப்பதாகவும் வாலை இன்னும் சற்று சன்னமாக மாற்றும் படியும் எம்.ஜி.ஆர். கூறினார். நகைக் கடையினர் ஆச்சரியத்தில் மூழ்கினர்! அந்த அளவுக்கு எதையும் கூர்மையாக, உடனே கிரகித்துவிடுவார்.
தன்னுடன் உள்ளே வந்த புலமைப் பித்தனைப் பார்த்து சிரித்தபடியே, ‘‘என்ன?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். தனது வீடு அடமானத்தில் இருப்பதை யும் குறிப்பிட்ட தேதிக்குள் பணம் கொடுக் கத் தவறினால் பூர்விக வீடு கையை விட்டுப் போய்விடும் என்பதையும் ஒருவழியாக திக்கித் திணறிக் கூறினார் புலமைப்பித்தன்!
‘‘நான் பணம் தருகிறேன்’’ அடுத்த விநாடி பதில் வந்தது எம்.ஜி.ஆரிடம் இருந்து! ‘‘இல்லண்ணே, நீங்க எனக்கு பாட்டு மட்டும் கூடுதலாக கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்’’ என்றார் புலமைப் பித்தன். ‘‘பாட்டும் தரேன், பணமும் தரேன். ஏன் நான் பணம் தரக்கூடாதா? உங்கள் கடமையில் எனக்குப் பங்கில்லையா? என்னை ஏன் நீங்க வேறாக நினைக் கணும்?’’ என்று அன்புடன் கடிந்து கொண்டார் எம்.ஜி.ஆர்.!
பின்னர், அவர் கொடுத்த பணத்தில் வீட்டை மீட்டு, அதற்கான பத்திரத்துடன் சென்னை திரும்பி படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரை புலமைப்பித்தன் சந் தித்தார். பத்திரத்தை அவர் காலடியில் வைத்து வணங்கக் குனிந்த புலமைப்பித்த னின் தோள்களை ஆதர வாகப் பற்றி எம்.ஜி.ஆர். அணைத்துக் கொண் டார். தன் பெற்றோர் வாழ்ந்த நினைவுச் சின் னத்தையும், இழக்க இருந்த கவுரவத்தையும் மீட்ட நிம்மதியில் புலமைப்பித்தன் கண்கலங்க நின்றார்!
அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய போது, ஆரம்ப காலத்தில் இருந்தே உடன் இருந்தவர்களில் புலமைப்பித்தனும் ஒருவர். எம்.ஜி.ஆர். முதல்வரான பின்னர், 1977-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி சட்டமேலவை உறுப்பினராக புலமைப்பித்தனை நியமித்தார். பின்னர், சட்டமேலவை துணைத் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
‘‘தன்னைப் போற்றியவருக்கு மட்டு மல்ல; தூற்றுவோருக்கும் தயங்காமல் உதவி செய்யும் பொன்மனம் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே சொந்தமானது’’ என்று நன்றியோடு நினைவுகூரும் புலமைப்பித்தனை, 1984-ம் ஆண்டு தமிழக அரசின் அரசவைக் கவிஞராக முதல்வர் எம்.ஜி.ஆர். நியமித்தார். பதவி யேற்பு நிகழ்ச்சியின்போது, புலமைப் பித்தன் பாடிய கவிதையில் எம்.ஜி.ஆரை வாழ்த்தி வரும் வரிகள் இவை...
‘‘குழந்தையின் பல் பட்ட இடத்தில்
பால் மட்டும் சுரக்கும்
அன்னை இதயம் அவனது இதயம்!’’
- தொடரும்...
படங்கள் உதவி: ஞானம்
ஒருமுறை எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட கூட்டத்தில் பெண்களும் ஏராளமாகத் திரண்டனர். கூட்டத்தில் பேசி முடித்த பின், ‘‘ஆண்களுக்குத் தனியாக ஒரு விஷயம் சொல்லப்போகிறேன். பெண்கள் எல்லோரும் வெளியேறுங்கள்’’ என்றார். பெண்கள் அனைவரும் வெளியேறியபின், ‘‘இப்போது ஆண்களும் அமைதியாக வெளியேறலாம்’’ என்றார். புரியாமல் நின்ற கூட்டத்தைப் பார்த்து, ‘‘பெண்கள் நெரிசலில் சிக்கி அவதிப்படக் கூடாது என்பதற்குத்தான் அப்படிச் சொன்னேன்’’ என்று சிரித்தபடி எம்.ஜி.ஆர். கூறியதும், அவரது சமயோசிதத்தை ரசித்தபடி மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கூட்டத்தினர் கலைந்தனர்!
No comments:
Post a Comment