By மு. செகசோதி
First Published : 27 May 2016 01:49 AM IST
பழம் ஓர் அற்புதமான இயற்கை உணவு. வெயிலில் வேக வைக்கப்படுகிறது. மழை, காற்று, பனி அனைத்தையும் பெற்றுக் கனிகிறது. கசப்பு, துவர்ப்பு, புளிப்பு ஆகிய சுவையுடைய காய்களை இனிப்புச் சுவையுடன் பழங்கள் தருகின்றன.
தென்றல் மெல்ல வீசுகிறது. மேற்கிலிருந்து வீசும் காற்றுக்கு ஏங்குகிறோம். இலைகள் அசைகின்றன. அப்போது மாம்பழங்கள் பொல பொல என உதிர்கின்றன. வைகாசி, ஆனி மாதங்களில் இது நடக்கும். மரத்திலேயே பழுத்த அந்தப் பழங்களின் சுவையே தனி.
பருவத்தால் அன்றிப் பழா என்பார் ஒளவையார். பழங்கள் பழுக்கும் வரை காத்திருக்க வேண்டும். வைகாசி மாதத்தில் வர வேண்டிய மாங்கனிகள் இப்போது கடைகளில் அழகு அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
அதன் இளமஞ்சள் அழகு யாரையும் கொள்ளை கொள்ளும். அறுத்துப் பார்த்தால் வெள்ளை வெள்ளையாய் இருக்கும். பிஞ்சுக் காய்கள் - கொட்டை முற்றாத அந்தக் காய்கள்- செயற்கை உரங்களால் பெரிய உருவங்களைப் பெற்றவை சாப்பிடுபவர் உடல் நலம் கெடுக்கும். குழந்தைகள் என்றால் பாதிப்பு மிகுதி.
கார்பைட் கற்கள் கொண்டு செயற்கை வண்ணத்தைப் பெறுகின்ற இந்த மாங்காய்கள் குறித்து செய்தி இதழ்களில் தொடர்ந்து படங்கள் வெளியிடப்பட்டு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டு வருகிறது. உணவுக் காப்பாளர் அவற்றைக் கைப்பற்றி அழித்ததாகச் செய்திகள் வருகின்றன. பழங்கள் என்ற பெயரில் விற்கப்படும் இவை உயிருக்கே ஆபத்தை விளைவிக்கின்றன.
கொடிய தண்டனை கொடுக்கப்பட்டால் அன்றிக் கடந்த இருபது ஆண்டுகளாகக் கையாளப்படும் இந்தக் குறுக்குவழி நிற்பதாக இல்லை. இப்போது காய்களை ஏற்றிவிடும் லாரிகளிலேயே கார்பைட் கற்கள் போடப்படுவதாகச் சொல்கிறார்கள்.
பழங்கள் சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. குழந்தைகள், முதல் பெரியவர்கள் வரை சாப்பிடக்கூடிய இயற்கையின் அற்புதம் பழங்கள். காயிலே புளிப்பதும், கனியிலே இனிப்பதும் அதன் அற்புதம். ஒருவருக்குக் குடல் சுத்தம் பெற்றால் நோய் இல்லை. குடல் சுத்தம், உடல் சுத்தம் என்பார்கள்.
மூல நோய் கொண்ட ஒருவர் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை. நண்பர் ஒருவர் பழங்களைச் சாப்பிடச் சொன்னார். இவரும் கிடைக்கும் பழங்களை யெல்லாம் வேறு உணவைக் குறைத்துச் சாப்பிட்டார். முப்பது நாள்களில் மூல நோய் காணாமல் போய்விட்டது.
சர்க்கரை நோய் கொண்டவர்கள் தவிர மற்றவர்கள் பழங்களை வெறுக்கக் காரணம் இல்லை. குளிர்காலத்தில் ஒவ்வாத பழங்களைத் தவிர்க்கலாம். மா, பலா, வாழை என்ற முக்கனிகள் நம் நாட்டின் தனிச்சிறப்பு.
வாழைப்பழம், வேதியியல் திரவம் தெளிக்கப்பட்டுப் பழுக்க வைக்கிறார்களாம். அது அனுமதிக்கப் பட்ட திரவமா? அதன் அளவு என்ன? அத்தகைய பழங்களைச் சாப்பிட்டால் பாதிப்பு வருமா?
திராட்சைப் பழங்கள் பிஞ்சு தொடங்கிப் பழம் ஆகும் வரை பூச்சித் தாக்குதல் இல்லாமல் இருக்க நச்சுக் கொல்லிகளால் தொடர்ந்து மூழ்கடிக்கப்படுகின்றன. சப்போட்டா ஒரு சிறந்த பழம். அதைப் பிஞ்சிலேயே பழுக்க வைப்பதால் உள்ளே கருப்பு நிறமாக இருப்பதைக் காணலாம்.
வெள்ளரி பழுத்தவுடன் வெடித்துவிடும். அதன் தோல் எளிதாக உரித்து எடுத்துவிடலாம். எத்தனை நாள் ஆனாலும் வெடிக்காத வெள்ளரிப்பழம் மலைபோல் குவிக்கப்பட்டுக் கிடப்பதைப் பார்த்தீர்களா? பப்பாளி ஏன் பழுப்பதில்லை? ஆப்பிள் மேல் மெழுகு தடவப் படுகிறதாம்.
காசு நிறைய இருக்கிறது. விலை கொடுக்கத் தயாராக இருக்கிறோம். எனினும், நல்ல பொருள் கிடைக்க வேண்டுமே? எலுமிச்சை, கொய்யா, ஆரஞ்சு, நெல்லி -இவற்றைப் பழுக்க வைக்கக் குறுக்கு வழிகள் தோன்றியதாகத் தெரியவில்லை.
பப்பாளி கண்ணுக்குச் சிறந்தது. ஏ விட்டமின் நிறைந்தது. நாவல்பழம் அரிய மருந்து. இவை எல்லாம் இயற்கையாய்க் கிடைத்தால்தான். வான் உயரத்தில் ஏணி போட்டு, பூச்சிக் கொல்லி தெளிக்கப்படாதது பனை ஒன்றுதான். அதனால் நுங்கு துணிந்து சாப்பிடலாம். கலப்படம் இல்லையெனில் பதனீர் நல்லது.
செக்கச் செவேர் என வெட்டி வைக்கப்பட்டுள்ள தர்ப்பூசணியைக் கண்டு வீட்டிற்கு வாங்கிச் சென்று அதை வெட்டிப் பார்க்க அது வெள்ளை நிறத்தில் இருந்தால் அந்த ஏமாற்றம் தாங்க முடியாது. சில நாள்கள் பொறுத்தால் காய்கள் கனிந்து விடும். அதுவரை காவல், பாதுகாப்புச் செலவு யார் தருவார்கள்?
வாழை வாழவும் வைக்கும், தாழவும் வைக்கும் என்பார்கள். பழுக்கும் வரை காத்திருந்தால் ஒரு சூறைக் காற்று வந்தால் சேதம் சொல்ல முடியாது. ஒரு பெரிய லாரியைத் தோப்பில் நிறுத்தினால் அந்த லாரியை நிரப்பப் பிஞ்சுகளும் தேவை. பழுத்த பழங்களைக் கொண்டு வந்தால் சேதம் ஆகிவிடும். இவையெல்லாம் விற்பவர்கள் சொல்லக்கூடும். ஓரளவு பழுத்த நிலையில் செங்காய்களைக் கொண்டு வரலாம். அவை சந்தைக்கு வரும்போது கனிந்துவிடும்.
இந்த நாட்டில் எந்தச் சட்டம் சரியாக அமலாக்கப்பட்டுள்ளது? இவ்வாறு காய்களை வெவ்வேறு வகையில் பழம்போல் காட்டச் செய்வது கலப்படச் சட்டத்திற்குப் பொருந்தாது என்று நினைக்கிறேன். ஒவ்வொரு பழத்தையும், சோதனை செய்து நமக்கு நீதி கிடைக்க எந்த அதிகாரி இருக்கிறார்?
எனவே விற்பனையாளர்களே.. சில்லரை பாருங்கள். ஆனால், எல்லோருடைய உடல் நலத்தையும் சிதற விடாதீர்கள். சற்றே பொறுமை கொள்ளுங்கள்.
வாங்குபவர்களே.. விற்பனையாளர்களைக் கேளுங்கள். எந்த முறையில் பழங்கள் பழுக்கின்றன என்று? செயற்கை முறையில், நச்சுப் பொருள்களால் உருவாக்கப்படும் போலிப் பொருள்களைப் புறக்கணியுங்கள். மாற்றம் விரைவில் வரும்.
No comments:
Post a Comment