Saturday, June 25, 2016

ஒவ்வொரு ஆண் பிள்ளைக்கும் வீட்டிலேயே நல்லொழுக்கம் கற்பிக்கப்பட்டால்.. ஏன் சாகிறார்கள் சுவாதிகள்?


ONE INDIA TAMIL

சென்னை: சென்னை ரயில் நிலையத்தில் காலை வேளையில் ஐடி பெண் ஊழியர் கொல்லப்பட்ட சம்பவம் பலரையும் பதைபதைக்கச் செய்திருக்கிறது. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, உலகம் முழுவதும் எங்கெங்கோ நடைபெறும் இத்தகைய பெண்களுக்கு எதிரான பலாத்காரம், கொலைகளுக்கு இது ஒரு உதாரணம் தான். சுவாதிக் கொலை செய்யப்பட்ட விதம் நம் நெஞ்சைப் பிசைகிறது. ஆனால், இங்கே நாம் யோசிக்க வேண்டிய முக்கிய விசயம், இத்தகைய கொடூரக் கொலைக் குற்றவாளிகள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல.

முக்கியக் கேள்வி...

நம் சக மனிதர்களாய் யாருக்கோ மகனாய், சகோதரனாய், கணவனாய், தகப்பனாய், நல்ல நண்பனாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான். பின் இவர்களுக்குள் இத்தகைய கொடூர எண்ணம் எப்படி முளைக்கிறது என்பது தான் நாம் இங்கே முக்கியமாய் ஆராய வேண்டியது.

நல்ல வளர்ப்பு... ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே..' இந்த பாடல் வரிகளில் குறிப்பிட்டுள்ளது போல், நல்ல குடிமகனை உருவாக்குவது அன்னையின் கைகளில் மட்டும் இல்லை, குடும்பம் மற்றும் சமுதாயத்தின் கைகளிலும் உள்ளது. வாழ்வதற்கான உரிமை..

. பெண் என்பவள் தன்னைப் போன்ற ரத்தமும், சதையும் சேர்ந்து உருவாக்கப்பட்ட சக மனுஷி, தன்னைப் போலவே அவளுக்கும் வாழ்வதற்கு அனைத்து உரிமைகளும் இருக்கிறது என்பதை இத்தகைய ஆண்கள் உணர வேண்டும். ஏமாற்றம்... இதற்காக அனைத்து ஆண்களையும் நாம் குற்றம் சாட்ட முடியாது. ஆனால், ஏமாற்றப்படும் போது அல்லது அதிக கோபப்படும்போது, ஆண்களே பெரும்பாலும் பெண்களை உடல் அளவில் இம்சிக்க முடிவு செய்கின்றனர். காரணம் உடல் அளவில் ஆணைவிட பெண் பலகீனமானவள் என்ற எண்ணம். பழி வாங்கும் நடவடிக்கை... இதன்காரணமாகவே ஒரு பெண்ணை பழிவாங்க அவர்கள் கையில் எடுக்கும் முக்கிய ஆயுதங்களாக பலாத்காரம், ஆசிட் வீசுதல், கொலை போன்றவை அமைந்து விடுகின்றன.

தன்னை ஏமாற்றிய ஆணை பழிவாங்கியதாக பெண்கள் மீது குற்றச்சாட்டுகள் குறைவே. ஆனால் ஆண் அதிரடியாக கத்தியைக் கையில் எடுக்கிறான். வஞ்சம்.. தன்னை ஏமாற்றிய அல்லது நிராகரித்த பெண்ணை வஞ்சம் தீர்க்கிறான். ஆணுக்கு பெண் இளைத்தவளில்லை என பெண்கள் ஒருபுறம் முன்னேறிக் கொண்டிருக்க, யாருக்கும் பயப்படாமல் அது பொது இடமாகக்கூட இருந்தாலும் பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்யத் துணிகிறான்.

உயிரின் வலி... மாதவிலக்கு, பிரசவம் என பல்வேறு வலிகளை, நிலைகளைக் கடப்பதாலேயோ என்னவோ பெண்ணுக்கு புரியும் உயிரின் வலி இங்கு கொலைகார ஆண்களுக்குப் புரிவதில்லை. அதிலும், தன் ஒருதலைக் காதலை நிராகரித்தாள் என்ற காரணத்திற்காகக் கூட பெண்களை கொல்கிறார்கள் என்பது மிகவும் வேதனையானது. தனது எதிர்கால வாழ்க்கைத் துணையை சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை கூடவா ஒரு பெண்ணுக்குக் கூடாது. ஷாக் தரும் வாக்குமூலம்... பலாத்காரம் செய்தபோது எங்களை எதிர்க்காமல் இருந்திருந்தால் கொலை செய்திருக்க மாட்டோம் என்ற பலாத்கார குற்றவாளியின் பேச்சு ரொம்பவே அதிர்ச்சி அளிக்கிறது. அப்படியானால் ஒரு பெண் தன்மீதான மற்றவர்களின் முடிவுக்கு எப்போதுமே அடிபணிந்து போக வேண்டும் என்ற மனப்போக்கு தான் இன்றைய சமூகத்தில் இலை மறை காயாக உள்ளதா?

புரிதல் வேண்டும்... இனி வரும் காலங்களில் இத்தகைய குற்றங்களைக் களைவதற்காக மந்திரச்சாவி நம் வீடுகளில் தான் உள்ளது. ஆம், பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம் எனச் சொல்வது போல, வீடுகளில் ஆண்களுக்கும் பெண்களைப் பற்றிய புரிதலை வளர்க்க வேண்டும். சிறு வயதிலிருந்தே மகன்களுக்கு பெற்றோர் பெண்களை மதிக்கும் குணத்தைக் கற்றுத் தர வேண்டும். அதுதான் அந்த சிறுவன், ஆணாக மாறும்போது பெண்களை மதிக்கும் நிலை உருவாக முக்கிய அடிப்படையாக அமையும்.

ரத்ததானம்.. மாதந்தோறும் ஆண் பிள்ளைகளையும் ரத்ததானம் செய்ய வைக்க பெற்றோர் பழக்கலாம். இதன்மூலம் ரத்தம் மற்றும் உயிரின் விலை அவர்களுக்குப் புரியும். அன்பால் வளரும் சமூகம் நிச்சயம் வன்முறைகளுக்கு துணை போகாது என நம்பலாம்.


Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/parents-should-teach-good-habits-their-children-256824.html

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024