7,00,000+ வாசகர்கள் | 10,00,000+ தலைப்புகள் | ரூ.10,00,00,000+ விற்பனை
புதிய தாள்களின் வாசனையுடன் வந்திறங்கிய புத்தகங்களுடன் நடந்த புத்தகக் காட்சி திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. தென்னிந் தியப் புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் சார்பில், சென்னைத் தீவுத் திடலில் ஜூன் 1 தொடங்கி 13 நாட்கள் நடந்த 39-வது புத்தகக் காட்சி பதிப்பாளர்கள், வாசகர்கள், வணிகர்கள் என்று பலதரப்பினருக்கும் பலன் தந்தது என்றே சொல்ல வேண்டும்.
சுமார் இரண்டு லட்சம் சதுர அடிப் பரப்பளவில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான புத்தகக் காட்சியில் 700க்கும் மேற்பட்ட பதிப்பாளர் களுடன் ஊடகங்களும் பங்கேற்றன. ஏறத்தாழ 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் 5 கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்களும், கல்வி தொடர்பான குறுந்தகடுகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. நான்கு ஏ.டி.எம்-கள், மருத்துவ உதவிக்காக 108 ஆம்புலன்ஸ் வசதி, விசாலமான வாகன நிறுத்தம் ஆகிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. புத்தகக் காட்சியின் அரங்குகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்குத் தனிச் செயலி போன்ற புதுமைகளும் இடம்பெற்றன. இந்த அறிவுலகக் கொண்டாட்டத்துக்குச் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்திருந்தனர்; முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கூட்டம், விற்பனை இரண்டுமே 60%-70% அளவுக்கே இருந்தது என்றாலும் சென்னைக்கு இந்தக் கோடைப் புத்தகக் காட்சி புதிது.
“வழக்கத்துக்கு மாறாக ஜூன் மாதம் நடத்தப்பட்டது, தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டது, கடும் வெயில் போன்ற பல தடைகளையும் எதிர்கொண்டே இந்தப் புத்தகக் காட்சி நடந்தது. எனினும், தடைகளைப் பெருமளவில் தாண்டியிருக்கிறோம். குறிப்பாக, பெண்கள், குழந்தைகள் அதிக அளவில் வந்திருந்தார்கள். இளைஞர்கள் கூட்டமும் அதிகம். வழக்கமாக நட்சத்திரப் பேச்சாளர்களை வைத்துதான் நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த முறை புத்தகம், கலாச்சாரம் தொடர்பான விவாத நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுசெய்திருந்தோம். திரண்ட கூட்டம் ஏமாற்றவில்லை. தீவுத் திடலில் பேருந்துகள் நின்று செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முக்கியமான ஆங்கிலப் பதிப்பகங்களுக்குக் குறைந்த வாடகையில் அரங்குகளை ஒதுக்கியிருந்தோம். கன்னடம், இந்தி போன்ற மொழி அரங்குகளுக்கும் குறைந்த வாடகைதான். இந்த முறை ‘மின் நூல்’ பதிப்பகங்களுக்கு முதல் முறையாக அரங்குகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதேபோல், அயலகத் தமிழ் எழுத்தாளர்களுக்கான சிறப்பு அரங்காக சிங்கப்பூர் அரங்கு அமைந்தது. சில குறைகள் இருந்தாலும், மொத்தத்தில் திருப்திகரமாகவே இருந்தது புத்தகத் திருவிழா!” என்று தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் காந்தி கண்ணதாசன் குறிப்பிட்டார்.
ஒரு அறிவுலகத் திருவிழா நடத்துவதற்கான வாய்ப்பையும் யோசனையையும் நமக்கு இந்தப் புத்தகக் காட்சி சுட்டிக்காட்டியிருக்கிறது என்பது கூடுதல் விசேஷம்!
This comment has been removed by a blog administrator.
ReplyDelete