Monday, June 27, 2016

புதிய வீடியோ ஆதாரம் சிக்கியது: 8 நிமிடத்தில் சுவாதியை தீர்த்து கட்டி தப்பி ஓடிய கொலையாளி இன்னும் 4 நாட்களில் கைது செய்துவிடுவோம் என போலீசார் தகவல்

சென்னை,

8 நிமிடத்தில் சுவாதியை தீர்த்து கட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிய குற்றவாளியை இன்னும் 4 நாட்களில் கைது செய்துவிடுவோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

சுவாதி

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த 24–ந் தேதி காலையில் கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் சுவாதியை மர்ம ஆசாமி ஒருவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார். அவர் யார்? எதற்காக சுவாதியை கொலை செய்தார்? என்பது தொடர்ந்து மர்மமாகவே நீடித்து வருகிறது.

ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லாததால், கொலையாளியை பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை. ஆனால் அதே சமயம், ரெயில் நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை அன்று (24–ந் தேதி) மாலையிலேயே போலீசார் வெளியிட்டனர்.

அதன்பின்னர், பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கிய ரெயில்வே போலீசார், அந்த குற்றவாளிக்கும், சுவாதிக்கும் என்ன சம்பந்தம்? என்பது குறித்து குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய வீடியோ காட்சி

இந்த நிலையில், நேற்று இந்த கொலை சம்பவம் தொடர்பாக புதிய வீடியோ காட்சி ஆதாரத்தை போலீசார் அதிகாரபூர்வமாக வெளியிட்டனர். அந்த காட்சியில் இடம்பெற்றிருக்கும் நபரும், கடந்த 24–ந் தேதி போலீசார் வெளியிட்ட சந்தேகப்படக்கூடிய நபரின் உருவப்படமும் ஒத்துப்போகிறது.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் வந்த சந்தேகப்படக்கூடிய மர்மநபரின் உருவப்படத்தை தனியாக எடுத்து அதை பெரிதாக்கி அவரை அடையாளம் தெரிகிற வகையில் படத்தை போலீசார் தயார் செய்து விட்டதாகவும், இன்னும் 4 நாட்களில் அவனை பிடித்துவிடுவோம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

6.35 மணிக்கு...

சுவாதியை கொலை செய்த குற்றவாளி இவர் தான் என்பதை உறுதி செய்யும் வகையில் நேற்று கிடைத்த வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றது. நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தை ஒட்டியுள்ள சாலையில் காலை 6.32 மணிக்கு குற்றவாளி என்று சந்தேகப்படக்கூடிய அந்த நபர் தலையை கீழே குனிந்தபடி நடந்து வருகிறார்.

சுவாதியை அவருடைய தந்தை ரெயில் நிலையத்தில் இறக்கிவிட்ட நேரம் காலை 6.35 மணி, இந்த இடைப்பட்ட நேரத்தில் தான் அந்த கொலையாளி ரெயில் நிலையத்துக்குள் சென்றிருக்க வேண்டும். சுவாதி 6.35 மணிக்கு ரெயில் நிலையத்துக்குள் வந்ததும், தான் எப்போதும் ஏறும் பெண்கள் பெட்டியின் அருகே உட்கார சென்றுள்ளார்.

சுவாதி அந்த இடத்தில் தான் உட்காருவார் என்று ஏற்கனவே வேவு பார்த்து வைத்திருந்த குற்றவாளி, அதே இடத்தில் அரிவாளுடன் காத்து கொண்டு இருந்துள்ளார்.

கொலையாளி ஓட்டம்

கொலையாளி ஏற்கனவே திட்டம் தீட்டியது போல் அதே இடத்தில் உட்கார வந்த சுவாதியை, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை கொண்டு கொலையாளி சரமாரியாக வெட்டி இருக்கிறார். ரத்தம் பீறிட்டு வர கீழே விழுந்த சுவாதி துடி துடிக்க உயிரிழந்தை உறுதியும் செய்துள்ளார்.

பின்னர், ரெயில் நிலையத்துக்குள் பயணிகள் அதிகம் வரத்தொடங்கி இருக்கின்றனர். மேலும், அதே நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்றும் வேகமாக வந்துள்ளது. இதை பார்த்த கொலையாளி, தன்னை யாராவது அடையாளம் கண்டுவிடுவார்களோ? என்ற அச்சத்தில் அங்கிருந்து ஓட தொடங்குகிறார்.

சுமார் 8 நிமிடத்தில்...

சுவாதியை 2–வது நடைமேடையில் வைத்து கொலை செய்யும் அந்த மர்மஆசாமி, 6.43 மணிக்கு முதலாவது நடைமேடையில் வெட்ட பயன்படுத்திய அரிவாளை கையில் வைத்து கொண்டு ஓடுகிறார். மொத்தத்தில் கொலையாளி சுமார் 8 நிமிடத்தில் சுவாதியை தீர்த்துக்கட்டிவிட்டு அங்கிருந்து சென்று இருக்கிறார்.

கொலைக்கு பயன்படுத்திய அந்த அரிவாளை நுங்கம்பாக்கம்–கோடம்பாக்கம் இடையே தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில் வைத்து விட்டு, அதன் அருகே இருந்த சுற்றுச்சுவரை தாவி குதித்து தப்பி சென்று இருக்கிறார்.

4 நாட்களில் பிடித்துவிடுவோம்

தற்போது அந்த வீடியோ காட்சியில் பதிவான அந்த நபர் தான் இந்த கொலையை செய்துள்ளார் என்பது இந்த வீடியோ மூலம் தெளிவாக தெரிகிறது. வீடியோ காட்சியில் பதிவான அந்த நபரின் உருவப்படத்தை பெரிதாக்கி, அதில் முகம் தெளிவாக தெரியும் அளவுக்கு தயார் செய்து வருகிறோம்.

அந்த படத்தை வைத்து குற்றவாளியை இன்னும் 4 நாட்களில் பிடித்துவிடுவோம். அவன் வெளிநாடுகளுக்கோ அல்லது வெளியூருக்கோ செல்லவில்லை. தான் செய்த சம்பவத்தை நினைத்து பயந்து சென்னைக்குள் தான் சுற்றிக்கொண்டு இருக்கிறான்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், கொலை செய்யப்பட்ட சுவாதிக்கு சொந்த ஊர் ஸ்ரீரங்கம் என்பதால், திருச்சி ரெயில்வே போலீசார் நேற்று சென்னை நுங்கம்பாக்கம், சூளைமேட்டில் உள்ள சுவாதியின் வீட்டில் அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் துக்கம் விசாரித்து விட்டு, அவர்களிடம் விசாரணையும் நடத்தினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024