பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களிடம் நிருபர்கள் பொதுவாகக் கேட்கிற கேள்வி: நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்? நான் உயிரோடு, துடிப்பாக இருக்க விரும்புகிறேன் என்று யாராவது சொல்லியிருப்பர்களா தெரியாது! சொன்னால், அது ஏனோதானோ பதிலாக இருக்க பெரும்பாலும் வாய்ப்பில்லை. காரணம், அதில் அவர்களது அடுத்த 30, 40 ஆண்டு வாழ்க்கைச் சுருக்கமே, அணுகுமுறையே அடங்கிவிட வாய்ப்பிருக்கிறது.
ஐம்பது வயதில் கைநிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும்போதே பதவி உயர்வு உரிய நேரத்தில் வரவில்லை என்று காரணம் சொல்லி, வயதான பெற்றோரையும் குடும்பத்தையும் நிர்கதியில் விட்டுத் தற்கொலை செய்து கொள்ளும் ஆட்களைப் பார்க்கிறோம்.
ஆனால், இதற்கு முன்பு பெற்ற நான்கைந்து பதவி உயர்வால் எவ்வளவு மனநிறைவு, எவ்வளவு நாள் பெற்றோம், அது எத்தனை நாள் நீடித்தது என்று அவர்கள் ஒரு நொடி திரும்பிப் பார்ப்பதில்லை. அந்தப் பக்கம், பதவி உயர்வு பெற்று பழக்கப்படாத இடத்தில் விழிபிதுங்கி நொந்து நூலாகிக் கொண்டிருக்கும் தம் நண்பர்களையும் பார்ப்பதில்லை. சம்பளம் அதிகம், அதிகாரம் அதிகம், மற்றவர்களை உருட்ட, மிரட்ட வாய்ப்புகள் அதிகம்.. இதுதான் மனநிறைவுக்கும் முன்னால் நிற்கிறது.
நவீன உலகில் மனஉளைச்சல், முறிவு ஆகியவை அதிகம் என்று சொல்லி நிறைய மருத்துவ, மனோதத்துவ மருந்து சொல்கிறார்கள். நானும் எனக்குத் தெரிந்த, ஆனால், கண்டிப்பாக வேலை செய்யும் ஒரு மருந்து சொல்கிறேன். இதற்கு ஆகும் செலவு வெறும் 10 ரூபாய் தான்.
உங்கள் வீட்டின் அருகில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து தாம்பரத்திற்கோ சென்னை கடற்கரைக்கோ "ரிடர்ன் பயணச்சீட்டு' ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து, வெறுமனே வண்டிக்கு உள்ளேயும் வெளியேயும் கூர்ந்து கவனியுங்கள்.
பல்வேறு உடல்குறைகளையும் பொருள்படுத்தாமல் பர்பியும் சீப்பும் பெல்ட்டும் விற்பவர்கள், கூவம், அடையாறு போன்ற ஆறு, ஏரிக்கரைகளில் குப்பையோடும் பன்றிக் குட்டிகளோடும் வாழும் ஆயிரக்கணக்கான குடிசைவாசிகள், பிச்சைக்காரர்கள், உடல், மனநிலை குன்றியவர்கள், இடுப்பில் கைக் குழந்தை, கையைப் பிடித்துக் கொண்டு இன்னொன்று, தலையில் ஒட்டடைக் குச்சியுடன் பிரதி தினம் காலை முதல் மதியம் வரை தெருக்களில் விற்பனைக்கு இறங்கும் சாதனைப் பெண்மணிகள், ரெண்டு கிலோ, மூன்று கிலோ பொருள்களையே கனக்குது, நீதூக்கி வா என்று சொல்கிற நாகரிகத்தில் ஒரு சாணை பிடிக்கும் எந்திரத்தை இயல்பாக தோளில் நாய்க்குட்டி மாதிரி தூக்கிக் கொண்டு தெருத் தெருவாக அலையும் இஸ்லாமிய நண்பர், பன்னாட்டு நிறுவனத்தின் 15-ஆவது மாடியைக் கட்ட கல், மண் தூக்கும் சித்தாள்கள், கொத்தனார்கள் போன்ற இவர்களையெல்லாம் ஒரு தடவை பார்த்துவிட்டுத் திரும்பி வாருங்கள்.
நீங்கள் தற்கொலை எண்ணத்தை இத்தனைநாள் சுமந்ததற்காக உங்கள் மேல் நீங்களே காறித்துப்பிக் கொள்ளவில்லை என்றால் என்னைக் கேளுங்கள்.
இன்னொரு சம்பவமும் இணையத்தில் பேசப்பட்டது. சில மாதங்களாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடுமையான வறட்சி. நகரத்தில் உள்ளவர்கள் பிழைத்துக் கொள்கிறார்கள். வழக்கம்போல் கிராமவாசிகள் 200 அடி, 300 அடி கிணறெல்லாம் வற்றிப்போய் இரண்டு பிளாஸ்டிக் குடங்களுடன் பல மைல்கல் நடந்துவந்து ரயில் நிலையங்களில் தவம் கிடக்கிறார்களாம்.
ஏதாவது ரயில் வந்ததோ இல்லையோ அத்தனை பேரும் ரயில் பெட்டிகளின் கழிவறைக்குள் புகுந்து கிடைக்கிற சுத்த, அசுத்த நீர் எதுவாக இருந்தாலும் ரயில் நிற்கிற நான்கைந்து நிமிடங்களுக்குள் பிடித்துக் கொள்கிறார்களாம். குடிப்பது முதல் கை-கால் கழுவுவது வரை அவர்களுக்கு அதுதான் அன்றைக்கு.
மரணம் பிடரியைப் பிடித்து அழுத்தத்தான் செய்கிறது. ஆனால், வாழ வேண்டும் என்கிற வெறி அவர்களை உயிருடன் விட்டுவைத்திருக்கிறது. ஆக, உயிர்த் துடிப்புள்ள விஷயங்களையே பாருங்கள், கேளுங்கள், யோசியுங்கள்.
நல்ல பல விஷயங்களை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் தனிமனிதன். நான் வேண்டுமானால் நம்பிக்கையுடன் வாழ்வேன். மற்றவர்கள் தற்கொலை செய்துகொள்வதை நான் எப்படி தடுப்பது என்ற கேள்வி உங்களுக்குள் வரலாம்.
வாழ வேண்டும் என்ற எண்ணம் பவித்திரமானது என்ற நினைப்பை உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் விதைத்தாலே போதுமானது.
விழுப்புரம் மாவட்டம் தனியார் சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் அடிப்படை வசதி கல்லூரியில் இல்லை என்று சொல்லி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்களே. அதன்பின், நாடு முழுதும் கல்லூரி வசதிகள் எவ்வளவு அதிகரிக்கப்பட்டன?
மாற்றாக, ஒரு செயல் வீரரின் சாகசம் பாருங்கள். திருவாரூர் மாவட்ட காளாச்சேரி மேற்கு கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஆனந்த். நான்காண்டுகளுக்கு முன்பு வரை அவர் இருக்கிற 300 வீடுகளில் சிறுவர், முதியவர் என்று வயது வித்தியாசம் பாராமல் தற்கொலைகள் அதிகம். 10 ஆண்டில் 100-க்கும் மேற்பட்ட தற்கொலைகள்.
2009-இல் அவர் அந்த கிராமத்திற்கு அடியெடுத்த பிறகு நாடகம், விழிப்புணர்வு பிரசாரம், பேரணி, மக்கள் சந்திப்பு, குறைகேட்கும் நேரம் என்று செய்து நான்கு ஆண்டுகளில் ஒரு தற்கொலை இல்லாதது மட்டுமன்றி வாழ்க்கை, சிந்திக்கும் திறன் என்று கிராமத்தில் எல்லாவகையிலும் முன்னேற்றம்.
தனி மனிதர், வெறும் பள்ளி ஆசிரியரால் இது முடிந்தது என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறதா?
ஸ்ரீதர்சாமா
No comments:
Post a Comment