M.G.R. பெண்களை தெய்வமாக மதிப்பவர். பொதுக்கூட்டங்களில் பேசும்போது, ‘‘என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தாய்மார்களே…’ என்று குறிப்பிட்டுவிட்டுத்தான் பேசத் தொடங்குவார். கூட்டங்களில் அவரை நாடி உதவி கோரும் பெண்களுக்கு உதவிகள் செய்வதுடன், பெண்களின் பாதுகாப்பிலும் மிகுந்த அக்கறை செலுத்துவார்.
நாகை மாவட்டம் மாயவரத்தில் எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட ஒரு பொதுக்கூட்டம். அவரது ஆட்சியில்தான் 1982ம் ஆண்டு மாயவரத்தின் பெயர் மயிலாடுதுறை என்று மாற்றப்பட்டது. இந்த சம்பவம் நடக்கும்போது அந்த ஊர் மாயவரம் என்றுதான் அழைக்கப்பட்டது. எம்.ஜி.ஆரைப் பார்த்து உதவி கோர, இரண்டு இளம் பெண்கள் மிகுந்த சிரமத்துடன் மேடை அருகே வந்து காத்திருந்தனர். அவர்கள் இரட்டையர்கள். ஒரே மாதிரி தோற்றம் கொண்டவர்கள். இதில் கொடுமை என்னவென்றால், இருவரும் ஒரே மாதிரி குறை உடைய மாற்றுத் திறனாளிகள்.
இரு பெண்களுக்கும் கால் ஊனம். கைகளை ஊன்றி தவழ்ந்தபடியே, மேடை அருகே வந்துவிட்டனர். மக்களின் வாழ்த்துக்களை ஏற்றவாறு, கையசைத்த படியே மேடைக்கு எம்.ஜி.ஆர். வந்தார். கூட்டம் முண்டியடித்து மேடை அருகே வர முயற்சித்தது. அந்த நெரிசலில் இரு பெண்களும் சிக்கிக் கொண்டனர். இதை எம்.ஜி.ஆர். கவனித்துவிட்டார். உதவியாளர்களிடம் சொல்லி அவர்களை அழைத்துவரச் சொன்னார். அந்தப் பெண்கள் இருவரும் எம்.ஜி.ஆரிடம், ‘‘ஐயா, உங்களிடம் உதவி கோர வந்திருக்கிறோம்’’ என்றனர். அவர்களை மேடையின் ஓரத்தில் காத்திருக்கச் சொன்னார்.
கூட்டத்தில் பேசி முடித்ததும் அந்த சகோதரிகளை எம்.ஜி.ஆர். அழைத்தார். அவர்களது நிலைகண்டு பரிதாபப்பட்டு, ‘‘உங்களுக்கு என்ன உதவி வேண்டும்? சொல்லுங்கள்’’ என்றார். அந்தப் பெண்கள், ‘‘ஐயா, வறுமையால் கஷ்டப்படுகிறோம். எங்களுக்குத் தையல் மெஷின் வாங்கிக் கொடுத்தால் நாங்க தொழில் செஞ்சு பிழைச்சுக்குவோம். அதுக்கு உதவி பண்ணுங்க’’ என்று கெஞ்சும் குரலில் கேட்டனர். உடனே, இரண்டு தையல் மெஷின்களை எம்.ஜி.ஆர். வாங்கி வரச் சொன்னார்.
தன்னிடம் உதவி கோருபவர்கள் தெளிவாகச் சொல்லாவிட்டாலும் அவர்களது தேவை என்ன என்பதை சரியாகப் புரிந்துகொண்டு உதவுபவர் எம்.ஜி.ஆர்.! தையல் மெஷின்கள் வாங்கி வருமாறு சொன்ன மறுவிநாடி ஓடோடிச் சென்ற உதவியாளர்களை அழைத்து, ‘‘காலில் தைக்கும் மெஷின் இல்லை. கையில் தைக்கும் மெஷின்’’ என்று தெளிவாகச் சொல்லி அனுப்பினார். அடுத்த அரை மணி நேரத்தில் இரண்டு புது தையல் மெஷின்கள் காரில் வந்து இறங்கின. அதுவரை காத்திருந்து தன் கையாலேயே அந்தப் பெண்களுக்கு தையல் மெஷின்களை எம்.ஜி.ஆர். வழங்கினார்.
அதைப் பெற்றுக்கொண்ட சகோதரி கள் இருவரும் கண்ணீருடன், ‘‘ஐயா, நீங்க தெய்வம்யா’’ என்றனர். அவர்களது கண்ணீரைத் துடைத்த எம்.ஜி.ஆர்., ‘‘நான் மனுஷன்தாம்மா; தெய்வம் இல்லே. இந்த நிலைமையிலும் உழைச்சுப் பிழைக்கணும்னு நினைக்கிற நீங்க நல்லா இருக்கணும்!’’ என்று சொல்லி வாழ்த்திவிட்டு, அவர்களுக்கு தலா ரூ.2,000 அன்பளிப்பாகக் கொடுத்தார்!
திமுகவில் எம்.ஜி.ஆர். இருந்த காலம். அவரது நெருங்கிய நண்பரும் படத் தயாரிப்பாளருமான சாண்டோ சின்னப்பா தேவரின் இல்லத் திருமணம் கோவையில் நடைபெற்றது. அதில் எம்.ஜி.ஆர். கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பரிசளித்துவிட்டு வந்தார். பின்னர், ஒரு கூட்டத்திலும் கலந்துகொண்டார். பேசிக் கொண்டிருக்கும்போதே, திடீரென தனது உதவியாளர்களைப் பார்த்தார். கூட்டத்தில் குறிப்பிட்ட இடத்தைப் பார்த்துவிட்டு, உதவியாளர்களை மீண்டும் பார்த்தார். எம்.ஜி.ஆருடைய பார்வையின் பொருள் அவர்களுக்குப் புரியும். சத்தம் போடாமல் கூட்டத்தில் மக்களோடு கலந்த உதவியாளர்கள், குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றனர். அங்கிருந்த ஒரு வாலிபரைப் பிடித்தனர். அங்கேயே அந்த வாலிபரை நிறுத்தி வைக்குமாறு எம்.ஜி.ஆர். சைகை செய்தார்.
கூட்டம் முடிந்த பின், அந்த வாலிபரை உதவியாளர்கள் அழைத்து வந்தனர். ‘‘கூட்டத்திலே வந்து அசிங்கமா பண்றே? உன்னோடு அக்கா, தங்கைகள் பிறக்கலையா?’’ என்று கேட்டவாறே வாலிபரை ஓங்கி கன்னத்தில் அறைந்தார் எம்.ஜி.ஆர்.! பொறி கலங்கிப் போய் நின்ற வாலிபரிடம் ‘‘இனிமேல் இப்படி நடப்பியா?’’ என்று ஆத்திரம் பொங்கக் கேட்டார். ‘‘சத்தியமா இனி இப்படி நடந்துக்க மாட்டேன். என்னை மன்னிச்சுடுங்க’’ என்று கெஞ்சிய வாலிபரிடம், ‘‘இனிமே என் கூட்டம் எங்கு நடந்தாலும் உன்னை நான் பார்க்கக் கூடாது. ஓடு இங்கிருந்து…’’ என்று விரட்டினார். விட்டால் போதும் என்று வாலிபர் ஓடி மறைந்தார்.
விஷயம் என்னவென்றால், கூட்டத் தில் அந்த வாலிபர் தன் அருகே நின்று கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்திருக்கிறார். எம்.ஜி.ஆரின் பார்வை யிலிருந்துதான் எதுவும் தப்பாதே. அதை கவனித்துவிட்டு அந்த வாலிபரை பிடிக்கச் சொல்லி புத்தி புகட்டியிருக்கிறார்!
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்து 1967-ம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றிபெற்ற படம் ‘காவல்காரன்’. அதில் எம்.ஜி.ஆருக்கு ரகசிய போலீஸ் அதிகாரி பாத்திரம். அவரது பணி குறித்து யாருக்கும் தெரியாது. அவரது நடவடிக்கைகள் ஊகிக்க முடியாதபடி இருப்பதைக் கண்டு ஜெயலலிதா, ‘‘ஆமா, நீங்க யாரு?’’ என்று கேட்பார். அப்போது, எம்.ஜி.ஆர். தனக்கே உரிய ஸ்டைலில் பாடி நடிக்கும் அருமையான பாடல் இது...
‘அடங்கொப்புரானே சத்தியமா
நான் காவல்காரன்
நீ ஒப்புக் கொள்ள மறுத்தாலும்
நான் காவல்காரன்!’
- தொடரும்...
படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்
No comments:
Post a Comment