Monday, June 20, 2016

நாய்க்கறி திருவிழாவுக்கு சீன மக்கள் எதிர்ப்பு: நிரந்தர தடை விதிக்க 64% பேர் ஆதரவு

சீனாவின் யூலின் நகரில் நடைபெறும் நாய்க்கறி திருவிழாவுக்கு கொண்டு செல்லப்படும் நாய்கள் | (கோப்புப் படம்)

சீனாவில் நாய்க்கறி திருவிழா நடத்துவதற்கு, பெரும்பான்மை சீன மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் இத்திருவிழாவுக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என, 64 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சீனாவின் குவாங்சி மாகாணத்தில் உள்ள யூலின் நகரில் வருடாந்திர நாய்க்கறி திருவிழா இன்று நடைபெறுகிறது. பல்வேறு இடங்களில் இருந்து, 10,000-க்கும் மேற்பட்ட நாய்களை கொண்டுவந்து, அவற்றை வெட்டி கறியாக்கி சாப்பிட்டு மகிழ்வதே இத்திருவிழாவின் நோக்கம்.

சீன பாரம்பரியத்தின் ஒரு பகுதி என்றும், உள்ளூர் கலாச்சாரம் எனக் கூறியும், 2009-ம் ஆண்டுக்குப் பிறகு, இத்திருவிழா சர்வதேச அளவில் விளம்பரப்படுத்தப்பட்டது. எனினும், அண்மைக்காலமாக இத்திருவிழாவுக்கு சீன மக்களே எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர்.

திருவிழா இன்று நடைபெறும் நிலையில், சீனாவைச் சேர்ந்த விலங்குகள் நல அறக்கட்டளை ஒன்றின் சார்பில் பொதுமக்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், கருத்து கேட்கப்பட்ட, 16 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களில், 64 சதவீதம் பேர் நாய்க்கறி திருவிழாவுக்கு நிரந்தரமாக தடை விதிக்க ஆதரவு தெரிவித் தனர்.

யூலின் நகர மக்களே இத்திருவிழாவை ரசிக்கவில்லை என்பது இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்தது. அதுமட்டுமின்றி, 69 சதவீதம் பேர், இதுவரை தாங்கள் நாய்க் கறி சாப்பிட்டதில்லை எனக் கூறியுள்ளனர்.

‘ஆக, உள்ளூரில் வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கே நாய்க்கறி சாப்பிட பிடிக்கவில்லை. இத்திரு விழாவை வியாபாரிகள் சிலர் சர்வதேச வர்த்தகமாக்க முயற்சிப்பதாக தெரிகிறது’ என, கருத்துக்கணிப்பு நடத்திய அறக்கட்டளை இயக்குனர் கின் ஜியோனா குறிப்பிட்டார். மேலும், கருத்துக்கணிப்பில் பங்கு பெற்ற பலரும், இத்திருவிழா சர்வதேச அளவில் சீனாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024