சுவாதி கொலையும், போலீசின் ‘’எல்லை பிரச்சனையும்’’
ஆர். மணி
சென்னையைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் சாஃப்ட்வேர் இன்ஜினியர் சுவாதி கொலை வழக்கு விசாரணை ரயில்வே போலீசிடமிருந்து ஒரு வழியாக சென்னை போலீசுக்கு மாற்றப்பட்டு விட்டது. இதற்கான உத்தரவை தமிழக டிஜிபி அசோக் குமார் திங்கட்கிழமை பிறப்பித்து விட்டார். இது வழக்கமானதோர் நடைமுறைதான் என்று கூறுகின்றன காவல்துறை வட்டாரங்கள்.
அதற்குள் இது ரயில்வே போலீசின் திறமையின்மையை காட்டுகிறது என்ற அளவில் செய்திகள் ஊடகங்களில் வந்தது தவறானது என்று கூறுகின்றனர் ரயில்வே போலீசில் பணிபுரிபவர்கள். இரண்டு விதமான ரயில்வே போலீஸ் அமைப்புகள் இருக்கின்றன.
ஒன்று மத்திய அரசின் ரயில்வே பாதுகாப்பு படை அதாவது ரயில்வே புரடொக்ஷன் ஃபோர்ஸ் (ஆர்பிஎஃப்). இதனது வேலை ரயில்வே சொத்துக்களை பாதுகாப்பது. மற்றொன்று கவர்ன்மெண்ட் ரயில்வே போலீஸ் (ஜிஆர்பி).
இது முழுக்கவும், தமிழக போலீசின் ஒரு அங்கம் .. அதாவது சிபிசிஐடி, சிலை கடத்தல் தடுப்பு போன்றதோர் ஒரு அங்கம். ஜிஆர்பி யின் வேலை, ரயில்வே ஸ்டேஷன் காம்பவுண்டுக்கள் நடக்கும் குற்றங்களை விசாரிப்பது, பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது போன்றது. வழக்கமாக ஒரு ரயில்வே ஸ்டேஷனில் கொலை நடந்தால் அது சாதாரணமான கொலை வழக்காக இருந்தால் ஜிஆர்பி யே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து வழக்கை நடத்தும். சமீபத்தில் இரண்டாண்டுகளுக்கு முன்பு தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு ரவுடி வெட்டிக் கொல்லப் பட்ட வழக்கில் ஜிஆர்பி தான் வழக்கை விசாரித்து, குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்து, சம்மந்தப் பட்டவர்களுக்கு தண்டனையும் வாங்கிக் கொடுத்திருக்கிறது.
ஆனால் அதிகப்படியான முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் விசாரணையை ஜிஆர்பி சம்மந்தப்பட்ட உள்ளூர் போலீசிடம் ஒப்படைத்து விடுகிறது. இது போலத்தான் ஆணவக் கொலைக்கு ஆளான கோகுல்ராஜ் விசாரணையை திருச்செங்கோடு போலீசிடம் ஜிஆர்பி ஒப்படைத்தது. அதுவேதான் ஸ்வாதி கொலை வழக்கிலும் விசாரணை ஜிஆர்பியிடம் இருந்து நுங்கம்பாக்கம் போலீசிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.
இதற்கு காரணம், ஜிஆர்பி யிடம் சொற்ப அளவிலான அதிகாரிகளும், போலீசாருமே பணியில் இருக்கின்றனர். ஒரு டிஜிபி, ஒரு டிஐஜி, இரண்டு எஸ்.பி க்கள் தான் இருக்கின்றனர். இதுதவிர ஓரளவுக்கு டிஎஸ்பிக்கள் உள்ளனர். இதற்கடுத்த நிலையில் இருக்கும் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாரின் எண்ணிக்கையும் குறைவு. ஆகவே இது முக்கியமான கொலைகளில், ஜிஆர்பி விசாரணைக்கு குந்தகமானதாக இருக்கிறது.
ஒரு கொலையில் சம்மந்தப்பட்டதாக கருதப்படும் சிலர் வேறு வேறு ஊர்களில் இருந்தால் அவர்களை கண்டறிவதும், விசாரிப்பதும் ஜிஆர்பி யால் சுலபத்தில் முடியாத காரியம். அதனாலேயே விசாரணை சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு மாற்றப் படுகிறது. இது வழக்கமான நடைமுறைதான்.
ஆனால் ஸ்வாதி விஷயத்தில் நடந்த கொடுமை அவர் கொல்லப் பட்டு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வரையில் அவரது உடலில் ஒரு துணியைக் கூட போர்த்தாமல் இருந்த விவகாரம். காரணம் யார் இதனை செய்வது என்பதுதான். ‘' சம்பவ இடத்திற்கு சில நிமிடங்களில் வந்த சென்னை போலீசார் இதனை செய்திருக்க வேண்டும். அல்லது ஜிஆர்பி போலீசார் இதனை செய்திருக்க வேண்டும். யாருடையை கட்டுப்பாட்டில் இந்த இடம் வருகிறது, யார் இந்த கொலையை விசாரிக்க போகிறார்கள் என்ற குழப்பம் அல்லது குடுமி பிடி சண்டையின் காரணத்தால் இரண்டு தரப்பும் இதனைச் செய்யவில்லை. இதனைத் தான் திங்கட்கிழமை சென்னை உயர்நீதி மன்றம் கேட்டிருக்கிறது'' என்று கூறுகிறார் தமிழக அரசு வழக்கறிஞர் ஒருவர்.
தானாக முன் வந்து இந்த விசாரணையை மேற்கொண்ட உயர்நீதி மன்ற அமர்வு, இது சம்மந்தமாக வந்த ஒரு ஆங்கில நாளிதழின் கட்டுரையை மேற்கோள் காட்டி இதனை கேட்டிருக்கிறது. அதன் பின்னர்தான் விசாரணை சென்னை போலீஸூக்கு மாற்றப் பட்டிருக்கிறது. ‘'இரண்டு மணி நேரம் கொலையுண்ட பெண்ணின் உடல் துணி கூட போர்த்தப் படாமல் இருந்திருக்கிறது. இறந்து போனவர்களுக்கும் கண்ணியம் இருக்கிறது'' என்று அப்போது நீதிமன்றம் கூறியிருக்கிறது.
இந்த கண்ணியத்தை ஸ்வாதிக்கு இரண்டு மணி நேரத்திற்கு கொடுக்காமல் வேடிக்கை பார்த்ததற்கு யார் பதில் சொல்ல வேண்டும், யார் இதற்கு பொறுப்பு என்பதுதான் இப்போது எழுந்திருக்கும் கேள்வி. தற்போது இந்த கேள்வியை மற்ற அமைப்புகளும் கேட்கத் துவங்கியிருக்கின்றனர். செவ்வாய் கிழமை மதியம் தேசீய மகளீர் ஆணையம் இந்த கேள்வியை சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் ரயில்வே துறையிடம் கேட்டிருக்கிறது. கொலை யாருடையை எல்லையில் நடந்த து என்ற குடுமிடிப் பிடி சண்டையில், அந்த சண்டை கொடுத்த மெத்தனத்தில் இரண்டு மணி நேரம் தங்களது கடமையிலிருந்து இரண்டு தரப்பு போலீசாரும் தவறியிருப்பது கண் கூடாகவே தெரிகிறது. இதனால்தான் இந்தக் கேள்வியை சென்னை உயர்நீதி மன்றத்தை அடுத்து, தேசீய மகளிர் ஆணையமும் கேட்கத் துவங்கியிருக்கிறது.
போலீஸ் சீர்திருத்தங்கள், போலீஸ் இலாகாவை நவீனமயமாக்குவது என்பதெல்லாம் நீண்ட கால விவகாரங்கள். அவையெல்லாம் படிப்படியாகத் தான் நடக்கும், ஒரு வேளை அவை நடந்தால் ... ஆனால் அதற்கு முன்பாக, தற்போதைக்கு இருக்கக் கூடிய தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் போலீசின் திறமையை வைத்து சென்னை போலீசால் அற்புதங்களை சாதிக்க முடியும் தான். மிகப் பெரிய அளவில் இந்த விஷயம், மீடியாக்களில் விவாதிக்கப் பட்டும், எதிர்க் கட்சிகள் குரல் எழுப்பியும் கூட அசையாத அரசு, சென்னை உயர்நீதி மன்றம் தலையிட்ட மூன்று மணி நேரத்திலேயே விசாரணையை சிட்டி போலீஸூக்கு மாற்றியிருக்கிறது. இதனை வெள்ளிக் கிழமை கொலை நடந்த சில மணி நேரத்திலேயே செய்திருக்க வேண்டும். ‘'எல்லைப் பிரச்சனையில்'' தமிழக போலீசின் இரண்டு பிரிவுகள் அடித்துக் கொண்ட போது மெளனம் காத்த மாநில அரசு சென்னை உயர்நீதி மன்றம் சாட்டையை சுழற்றிய பின்னர்தான் செயற்படத் துவங்கியது.
உச்ச நீதி மன்றத்தின் 2006 ம் ஆண்டு பிரகாஷ் சிங் தீர்ப்பின் ஏழு கட்டளைகளில் முக்கியமானவற்றை நிறைவேற்றாத மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்பதை நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இதனால் 2013 ல் தமிழக அரசு மீது உச்ச நீதி மன்றம் நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. தமிழக அரசின் தலைமை செயலளார் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் கூறியது. ‘'வழக்கமாக இது போன்ற உத்திரவுகளை நாங்கள் பிறப்பிப்பது இல்லை ... இது எங்களுக்கு வலியைத் தருகிறது .. எல்லா தருணங்களிலும் நாங்கள் இதுபோன்ற உத்திரவுகளை பிறப்பிப்பதை தவிர்க்கிறோம். ஆனால் தற்போது நாங்கள் நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறோம். நீதி மன்ற உத்திரவுகளை நிறைவேற்றாததற்காக, சில அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, அவர்கள் தண்டிக்கப் பட்டால்தான் நிலைமை முன்னேற்றம் அடையும் என்று நாங்கள் நம்புகிறோம்'' என்று நீதிபதி ஜி.எஸ். சிங்வி தலைமையிலான அமர்வு தனது உத்திரவில் தெரிவித்தது.
http://www.firstpost.com/india/sc-calls-chief-secretaries-of-four-states-for-failure-to-implement-police-reforms-960525.html
அதற்கு பிறகு பிரகாஷ் சிங் தீர்ப்பின் ஒரு சில கட்டளைகளை மட்டும் தமிழக அரசு அமல் படுத்தியிருக்கிறது. ஆனால் முக்கியமானதும், முதல் கட்டளையுமான ஸ்டேட் ஸெகியூரிட்டி கமிஷன் என்பதும் அக்கவுண்டபிளிட்டி கமிஷன் என்பதும் அதாவது, போலீசுக்கு அவர்களது செயற்பாடுகளுக்கு பொறுப்பை ஏற்கச் செய்யும் அமைப்பு இன்னமும் ஏற்படுத்தப் படவில்லை. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்னமும் நிலுவையில் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
உச்சநீதி மன்றத்தின் கட்டளைகள் ஒரு பக்கம் இருக்கட்டும் ... முதலமைச்சர் ஜெயலலிதா, டில்லி நிர்பயா படுகொலைக்குப் பின்னர், ஜனவரி, 2013 ல் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 13 அம்ச திட்டம் ஒன்றினை அறிவித்தார். இதில் பெரும்பாலானவை அமல்படுத்தப் படவில்லை என்பதுதான் கூடுதல் கேலிக் கூத்து. இதில் முக்கியமானது அனைத்து பொது கட்டிடங்களிலும் சிசிடிவி கேமிராக்கள் பொறுத்தப் படும் என்பது. இன்று சென்னையின் முக்கியமான ரயில்வே ஸ்டேஷன்களில் ஒன்றான நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனிலேயே சிசிடிவி இல்லை. ஜெயலலிதா வின் 13 அம்ச செயற்திட்டம் அறிவிக்கப் பட்டு மூன்றரை ஆண்டுகள் கழித்து காணப்படும் நிலைமைதான் இது.
ஆகவே தாங்கள் அறிவித்த செயற்திட்டத்தையே கூட மூன்றரை ஆண்டுகள் கழித்தும் செயற்படுத்த தவறிய ஆட்சியாளர்கள்தான் மீண்டும் தற்போது அரியணை ஏறியிருக்கிறார்கள். பெண்கள் தமிழகத்தில் அச்சமின்றி நடமாட எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப் படும் என்றார்கள், அனைத்து மாவட்டங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் ஏற்படுத்தப் படும் என்றார்கள் ... இவை எல்லாமே இன்றளவும் ஏட்டளவில் தான் இருக்கின்றன. இதில் ஸ்வாதி விவாகரத்தில் வந்த ‘'எல்லை பிரச்சனை'' யால் விளைந்த கால தாமதமும் தமிழக போலீசுக்கு தீராத அவமானத்தை தேடித் தந்திருக்கிறது. குற்றவாளி கண்டறியப் படும் வரையில் இந்த அவப் பெயர் தொடரத் தான் செய்யும்.
ஆட் பற்றாக்குறையும் பெருங் குறையாக இருக்கின்றது. ‘'தமிழக போலீசின் எண்ணிக்கை 1.27 லட்சம். தற்போது இருப்பது 99,000. நவீன பயிற்சிக்கு மொத்த எண்ணிக்கையில் ஒரு சத விகித போலீசார் எப்போதும் அனுப்ப பட்டுக்கொண்டிருக்க வேண்டும். ஆண்டுதோறும் இது நடைபெற வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகளில் இதுதான் நடைமுறை.'' என்கிறார் ஓய்வு பெற்ற போலீஸ் கல்லூரியின் துணைத் தலைவரும், எஸ்.பி யுமான சித்தண்ணன். ஸ்வாதி கொலைக்குப் பின்னராவது தமிழக அரசு இதற்கெல்லாம் செவி மடுத்தால் அது போலீசுக்கும், மக்களுக்கும் மட்டுமல்ல, தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கும் நல்லது.
மூலக்கதை
No comments:
Post a Comment