Monday, June 27, 2016

சுவாதி கொலை வழக்கில்

சுவாதி கொலை வழக்கில் அறிவியல் பூர்வ புலனாய்வு- ரயில்வே எஸ்.பி ஆனி விஜயா


சென்னை: நுங்கம்பாக்கம் சுவாதி கொலை குறித்து அறிவியல் பூர்வமாக புலனாய்வு செய்துவருவதாக திருச்சி ரயில்வே காவல்துறை எஸ்.பி ஆனி விஜயா தெரிவித்துள்ளார். ரயில்வே போலீசாரின் நத்தை வேக விசாரணையால் அதிருப்தியடைந்த டிஜிபி அசோக்குமார், சுவாதி கொலை வழக்கை சென்னை காவல்துறைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூளைமேடு கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுவாதி. கடந்த வெள்ளிக்கிழமை காலையில் வேலைக்கு செல்வதற்காக நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் வந்த சுவாதியை மர்மநபர் ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்தார். சுவாதி கொலையில் புதிய வீடியோ படங்கள் போலீசிடம் சிக்கி உள்ளன. அதில் கொலையாளியின் உருவம் ஓரளவு தெளிவாக தெரிகிறது. அதை வைத்து கொலையாளியை கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள 135 போலீஸ் நிலையங்களுக்கும் கொலையாளியின் படம் அனுப்பப்பட்டு உள்ளது. அவற்றை பொதுமக்களிடம் வழங்கும்படி மேல் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இந்த படங்களை மக்கள் கூடும்முக்கிய இடங்களுக்கு சென்று போலீசார் பொது மக்களிடம் வழங்கி வருகின்றனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே ஐ.ஜி. ராமசுப்பிரமணியம், சுவாதி கொலை தொடர்பாக துப்பு துலக்க சென்னை நகர போலீசார் உதவியையும் நாடி இருக்கிறோம். இதையடுத்து அனைத்து உதவி கமி‌ஷனர், இன்ஸ்பெக்டர்களுக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொலையாளி வீடியோ படங்களும் அனுப்பப்பட்டுள்ளன.

சந்தேகப்படும்படியான இடங்களில் சோதனை நடத்தும்படியும், விடுதி உள்ளிட்ட மற்ற இடங்களில் கண்காணிக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளோம். விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் கொலையாளியை கண்டுபிடித்து விடுவோம் என்று கூறியிருந்தார்.

திருச்சியில் இருந்து வந்துள்ள ரயில்வே எஸ்.பி ஆனி விஜயா, கொலை செய்யப்பட்ட சுவாதி வீட்டில் நேற்றும் இன்றும் விசாரணை மேற்கொண்டார். கொலை குறித்து அறிவியல் பூர்வமாக புலனாய்வு செய்துவருவதாகவும் எஸ்.பி ஆனி விஜயா தெரிவித்தார்.

கொலை நடந்து 3 நாட்களாகியும், இதுவரை குற்றவாளியை போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை. இதற்கு காரணம், ரயில்வே போலீசாரும், சென்னை மாநகர போலீசாரும் குற்றவாளியை பிடிக்க ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்ற புகார் எழுந்தது. இதற்கு நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்தது.

சுவாதி கொலை வழக்கின் புலன் விசாரணை என்ன நிலையில் உள்ளது என்ற விவரங்களை இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த உயர்நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். கொலையாளியைப் பற்றி இரண்டு வீடியோக்கள் கிடைத்த நிலையிலும் ரயில்வே போலீசாரின் விசாரணை நத்தை வேகத்தில் நகரவே, இந்த கொலை வழக்கை சென்னை காவல்துறைக்கு மாற்றி டிஜிபி அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் சுவாதி கொலை வழக்கு விசாரணை வேகமடையும் என்று எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024