Thursday, June 23, 2016

எம்ஜிஆர் 100 | 91 - ரசிகர்களுக்கு மதிப்பளித்து மகிழ்ச்சிப்படுத்தியவர்!


‘அடிமைப் பெண்’ படத்தின் வெற்றி விழாவின்போது மதுரை சிந்தாமணி திரையரங்கில் எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா, தியேட்டர் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, பண்டரிபாய்.

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. தனது திரைப்படங்களைக் காணவரும் ரசிகர்களை ஏமாற்றியதில்லை. உழைத்துக் களைத்து படம் பார்க்க வரும் மக்கள், படத்தைப் பார்த்துவிட்டு திருப்தியாக செல்லும் வகையிலேயே அவரது படங்கள் இருக்கும். பொழுதுபோக்கோடு நல்ல கருத்துக்களும் இருக்கும். படங்களில் மட்டுமின்றி; நிஜவாழ்விலும் தன்னைக் காணவரும் ரசிர்களுக்கு மதிப்பளித்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியவர் அவர்!

சாண்டோ சின்னப்பா தேவர் தயாரித்த ‘தேர்த் திருவிழா’ படத்தின் படப்பிடிப்பு கும்ப கோணம் அருகே ஏழு மைல் தொலை வில் காவிரி ஆற்றில் நடந்தது. படப் பிடிப்பு நடந்த சமயம் கோடைக்காலம். எம்.ஜி.ஆர். வந்திருப்பதை அறிந்து ஏராளமான மக்கள் கூடிவிட்டனர். ‘‘படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வந்து யாரும் தொல்லை செய்யக் கூடாது’’ என்று ஒலிப்பெருக்கி மூலம் எம்.ஜி.ஆர். அன்புக் கட்டளையிட்டார்.

அவர் வார்த்தைக்கு மதிப்பளித்து ஒருவர்கூட படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் அருகே செல்லவில்லை. கொதிக்கும் மணலில் நின்றபடியே தூரத்தில் இருந்து எம்.ஜி.ஆரைப் பார்த்து ரசித்தனர். வெயிலில் நிற்கும் மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள், மோர், தண்ணீர் கொடுக்க எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்தார். பத்து நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. தினமும் படப்பிடிப்பு முடிந்து கும்பகோணம் திரும்பும் வழியில் சாலையின் இரு புறமும் மக்கள் கூடி நின்று எம்.ஜி.ஆரை வாழ்த்தினர். மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் அன்பை வெளிப் படுத்தினர்.

படப்பிடிப்பு குழுவினர் கும்பகோணம் டி.எஸ்.ஆர். இல்லத்தில் தங்கியிருந்த னர். அங்கும் தினமும் வாசலில் ரசிகர்கள் திரண்டனர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற எம்.ஜி.ஆர். முடிவு செய்தார். படப்பிடிப்பின் கடைசி நாளன்று திறந்த வேனில் ஏறி நின்று ரசிகர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார். சக கலைஞர்களையும் கவுரவிக்கும் வகையில் அவர்களையும் வேனில் ஏறச் சொல்லி மக்களின் வாழ்த்துக்களை ஏற்கச் செய்தார்.

ஒரு ரசிகர் கூட்டத்தில் முண்டியடித்து முன்னேறினார். அவரை எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் தடுத்தனர். அதை கவனித்த எம்.ஜி.ஆர்., அந்த ரசிகரை அருகில் வரும்படி சைகை செய்தார். சின்னப்பா தேவர் அந்த ரசிகரை ‘அலாக்’காக தூக்கி வேன் மேலே ஏற்றினார். தன் கையில் வைத்திருந்த கடலைப் பொட்ட லத்தை எம்.ஜி.ஆரிடம் கொடுத் தார் அந்த ரசிகர். உடனேயே, ஒவ்வொரு கடலையாக வாயில் போட்டுக் கொள்ள ஆரம்பித் தார் எம்.ஜி.ஆர்.! உலகையே ஜெயித்துவிட்ட திருப்தி அந்த ரசிகரின் முகத்தில் ஜொலித்தது. இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் ஆர்ப்பரித்தது!

எம்.ஜி.ஆர். சொந்தமாக தயாரித்து, நடித்த ‘அடிமைப் பெண்’ திரைப்படம் 1969-ம் ஆண்டின் பிரம்மாண்டமான வெற்றிப் படம். மதுரை சிந்தாமணி திரையரங்கில் வெள்ளி விழா கொண்டாடியது. அந்த திரையரங்கில் நடந்த வெற்றி விழாவில் எம்.ஜி.ஆரும் சக கலைஞர்களும் கலந்து கொண்டனர். விழாவில் கலந்துகொள்வதற்காக மதுரை வந்த எம்.ஜி.ஆர்., பாண்டியன் ஓட்டலில் தங்கியிருந்தார். காலையில் இருந்தே ஓட்டல் முன் மக்கள் திரள ஆரம்பித்தனர்.

விழாவுக்கு எம்.ஜி.ஆர். புறப்பட்ட போது, பாண்டியன் ஓட்டலில் இருந்து சிந்தாமணி டாக்கீஸ் வரை இருபுறமும் மக்கள் திரண்டு நின்று வாழ்த்துக் கோஷங்களை எழுப்பினர். அதற்குமுன் தியேட்டர்களில் நடந்த நூறாவது நாள் விழாக்களில் நடிகர், நடிகைகள் கருப்பு கண்ணாடி ஏற்றிய காரில் செல்வார்கள். தியேட்டரில் இருப்பவர்கள் மட்டுமே அவர்களைப் பார்க்க முடியும்.

ஆனால், ‘அடிமைப் பெண்’ வெற்றி விழாவின்போது, பொதுமக்களும் பார்க்க வசதியாக எம்.ஜி.ஆர். திறந்த வேனில் வந்தார். தேர்தல் பிரசாரத் துக்கு தான் பயன்படுத்தும் வேனில் ஜெயலலிதா, பண்டரிபாய் ஆகியோரு டன் நின்று கொண்டே வந்தார். வழிநெடுக மக்களின் ஆர்ப்பாட்டமான வரவேற்பை கையசைத்தும், கும்பிட்டபடியும் ஏற்றுக் கொண்டார். ‘அடிமைப் பெண்’ படப்பிடிப் புக்காக ராஜஸ்தானுக்கு எம்.ஜி.ஆர். சென்றபோதுதான் அவருக்குத் தொப்பி அணியும் பழக்கம் ஏற்பட்டது. திரை யரங்குக்கு தொப்பி, கண்ணாடியுடன் வந்த எம்.ஜி.ஆரைப் பார்த்த ரசிகர்கள் எழுப்பிய கரவொலியிலும் உற்சாக ஆரவாரத்திலும் மதுரையே குலுங்கியது!

திரையரங்கில் மதியக் காட்சியிலும் பின்னர் மாலைக் காட்சியிலும் இடை வேளையின்போது மேடையில் எம்.ஜி.ஆர். தோன்றி நன்றி தெரிவித்துப் பேசினார். அவருடன் கைகுலுக்க போட்டியிட்ட ரசிகர்களுடன் கைகுலுக்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இதற்கு நடுவே, திரையரங்கு அலு வலகத்தில் அமர்ந்து ஊழியர்கள், பார்வையாளர்களை சந்தித்துப் பேசினார்.

தமிழ் திரையுலகின் தன்னிகரில்லா சூப்பர் ஸ்டார், செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர் என்பதையெல்லாம் தாண்டி எம்.ஜி.ஆரிடம் தூக்கலாக இருந்த குணம் மனிதாபிமானம்.

ஒவ்வொருவரையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். எப்போதும் உறுதியாக இருப்பார். சிந்தாமணி திரையரங்கிலும் அவரது மனிதநேயம் வெளிப்பட்டது. தியேட்டர் அலுவலகத்தில் அவர் அமர்ந்திருந்த போது, கடமையே கண்ணாக பாதுகாப்புக்கு நின்றுகொண்டிருந்த போலீஸாரை எம்.ஜி.ஆர். அழைத்தார். அவர்களுடைய பணி மற்றும் குடும்ப விவரங்களை அன்போடு கேட்டறிந்து கைகுலுக்கி வாழ்த்தினார். போலீஸாரின் முகங்கள் ஆயிரம் வாட்ஸ் விளக்காய் பிரகாசித்தது!

எம்.ஜி.ஆருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. ஆனால், பல தளங்களிலும் உள்ள விதவிதமான தனது ரசிகர்களை நேசித்து ரசித்தவர் எம்.ஜி.ஆர்.!

‘குடியிருந்த கோயில்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடங்கள். ஓட்டலில் நடனமாடி பாடும் கலைஞராக ஒரு பாத்திரம். அறிமுகக் காட்சியில் ‘என்னைத் தெரியுமா?...’ பாடலில் திரையரங்கில் இருக்கும் ரசிகர்களைப் பார்த்தபடி திரையில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் வரிகள்...

‘ஆஹா ரசிகன்... ஆஹா ரசிகன்,

நல்ல ரசிகன்... நல்ல ரசிகன்

உங்கள் ரசிகன்... உங்கள் ரசிகன்...!’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார், எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்




ஆண்களைப் போலவே ஏராளமான அளவில் எம்.ஜி.ஆருக்கு ரசிகைகளும் உண்டு. 1967-ம் ஆண்டு ‘காவல்காரன்’ படம் வெளியானபோது, படத்தைப் பார்க்க பெண்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையில் குளோப் திரையரங்கில் பெண்களுக்காகவே பிரத்தியேக காட்சி திரையிடப்பட்டது. குளோப் திரையரங்கில் முதன்முதலில் 100 நாட்கள் கடந்த தமிழ்ப் படம் ‘காவல்காரன்’!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024