விஸ்வரூபம் எடுக்கும் சுவாதி படுகொலை.. அதிகாரிகளுடன் ஜெ. அவசர ஆலோசனை
சென்னை: தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, உள்துறை செயலர் அபூர்வா வர்மா, டிஜிபி அசோக்குமார் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் வெள்ளிக்கிழமையன்று இளம்பெண் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. சென்னையில் மட்டும் ஜூன் மாதத்தில் 9 படுகொலைகள் நடந்துள்ளன. இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாக பல்வேறு அரசியல் கட்சியினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சேலத்தில் இளம்பெண் வினுப்பிரியா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆபாச புகைப்படம் வெளியானதாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சுவாதி கொலை, வினுப்பிரியா தற்கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பொது இடங்களில் மக்களின் பாதுகாப்பு குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆந்திராவை போல் பொது மக்களின் பாதுகாப்புக்கு ஏன் தனிச் சட்டம் இயற்றக் கூடாது?.குற்றச் செயல்களை தடுக்க காவல்துறை அவசியம் என்று தெரிந்தும், காவலர் பணியிடங்களை ஏன் நிரப்பவில்லை என்பன உள்ளிட்ட 10 அம்சங்கள் நிறைந்த கடிதத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் எழுதியிருந்தார்.
இதனையடுத்து, இக்கடிதத்தில் உள்ள விவரங்களை தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இது குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திவருகின்றார். உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா மற்றும் டிஜிபி அசோக்குமார், காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
No comments:
Post a Comment