சுதந்திர இந்தியா சாதித்துள்ள எத்தனையோ விஷயங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று ஆயுள் நீட்டிப்பு ஆகும். 1960-களில் இந்தியரின் சராசரி ஆயுள்காலம் 42 ஆண்டுகளாக இருந்ததென்றும், அது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இப்போது சுமார் 66 ஆண்டுகளைத் தொட்டிருப்பதாகவும் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அறிக்கை தெரிவிக்கிறது.
மருத்துவ வசதிகளின் பெருக்கம், மருத்துவமனைகளின் பரவல், தீவிரத் தொற்று நோய் ஒழிப்பு இயக்கங்கள், ஊட்டச்சத்து மிக்க உணவு ஆகிய பல காரணிகளால் ஓர் இந்தியக் குடிமகனின் சராசரி ஆயுள் இந்த அளவுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
எல்லாம் சரி! நீட்டிக்கப்பட்டிருக்கும் அந்த ஆயுள் நிம்மதியான வாழ்வுக்கு வழிவகை செய்திருக்கிறதா என்றால், இல்லை என்பதே அதற்கான விடையாக இருக்கும்.
இரண்டில் ஒரு முதியவர் ஆதரவின்றி இருப்பதாகவும், மூன்றில் ஒரு முதியவர் வசைச் சொற்களுக்கு ஆளாவதாகவும், நான்கில் ஒரு முதியவர் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், அறுபது சதவீதத்திற்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கள் மகன்-மருமகள் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களிடம் வசைச்சொல் கேட்பவர்களாகவும் இருப்பதாக இன்னோர் ஆய்வுத்தரவு எடுத்துக் கூறுகிறது.
கண்பார்வைக் கோளாறு, மூட்டுவலி இல்லாத முதியோரைப் பார்ப்பதே அரிது எனலாம். உழைக்கும் வலிமையின்றி, வருமானமும் வறண்டு போன நிலையில் இருக்கும் முதிய வயதினரை அவர்களது குடும்பத்தினர்களே சுமையாகக் கருதும் காலம் இது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முதியோர் இல்லங்கள் பெருகியிருப்பது ஒன்றே இன்றைய இந்தியக் குடும்பங்களில் முதியோர் பெறும் முக்கியத்துவத்தை உணர்த்தும்.
தமிழ்நாட்டில் கோயமுத்தூர் மாவட்டத்தில் மட்டும் 33 முதியோர் இல்லங்கள் இருக்கின்றன என்றால், நாடு முழுவதும் எத்தனை முதியோர் இல்லங்கள் இருக்கக் கூடும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
வருமானம் ஏதுமில்லாத முதியோர்கள் மட்டும்தான் புறக்கணிப்புக்கு ஆளாவதாகக் கூறிவிடவும் முடியாது. சொத்து சுகம், ஓய்வூதியம் போன்றவற்றைப் பெற்றிருக்கின்ற முதியோர்களும்கூட இத்தகைய புறக்கணிப்பிறகு ஆளாகின்றனர்.
ஓய்வூதியமும் சுமார் 30 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே கிடைக்கிறது என்பது ஒருபுறமிருக்க, புதிய தலைமுறை மத்திய-மாநில அரசு ஊழியர்களுக்கு அந்தச் சலுகை நீட்டிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
பழைய ஓய்வூதியம் தொடர வேண்டுமென்ற கோரிக்கையே இப்போது அரசு ஊழியர்கள் முன்வைக்கும் முக்கியக் கோரிக்கையாகிவிட்டது. நிதிச்சுமையைக் காரணம் காட்டி ஓய்வூதியக் குறைப்பு அல்லது தவிர்ப்பு என்ற நிலைமையை நோக்கியே மத்திய அரசு மற்றும் பல மாநில அரசுகளும் பயணிக்கின்றன.
நான் நீண்ட காலமாக வழிபடச் செல்லும் ஒரு கோயிலின் வாசலில் சுமார் 70 வயதுள்ள, படிப்பு வாசனை உள்ளவர்போல் தோற்றமுள்ள ஒரு பெண்மணி பிச்சை எடுப்பது வழக்கம். ஒவ்வொரு மாதத்தின் முதல் ஓரிரண்டு நாள்கள் மட்டும் பிச்சை எடுக்க அந்தப் பெண்மணி வருவதில்லை. ஏன் என்று விசாரித்ததில், கிடைத்த தகவல் அதிர வைத்தது.
உண்மையில் அந்தப் பெண்மணி ஓர் ஓய்வு பெற்ற ஆரம்பப் பள்ளி ஆசிரியை. அவருடைய ஒரே அருமை மகன், மாதத்தின் முதலிரண்டு நாள்கள் மட்டும் அவரைத் தன் வீட்டுக்கு அழைத்துப்போய், சாப்பாடு போட்டு, அவரது ஓய்வூதியப் பணத்தை முழுவதுமாக வாங்கிக்கொண்டு, பிறகு அந்தக் கோயிலின் வாசலில் மறுபடியும் பிச்சை எடுக்கச் சொல்லிக் கொண்டு வந்து விட்டுவிடுகிறானாம்.
இன்னொரு காட்சி, கோயமுத்தூரைச் சேர்ந்த 77 வயது முதியவர். இவர் ஓர் ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள். அனைவரும் திருமணமானவர்கள். பெற்றெடுத்த செல்வங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் செய்து முடித்துவிட்ட திருப்தியுடன் தம்முடைய மனைவியுடன் தனியே வசித்து வந்தார் அந்த முதியவர்.
சில மாதங்களுக்கு முன்பு மனைவியும் காலமாகி விட்டார். முதுமையின் காரணமாகத் தன்னைத் தானே கவனித்துக் கொள்ள முடியாத நிலையில், தம்முடைய இரண்டு மகன்கள் மற்றும் மகளை அழைத்து, தன்னை அவர்களுடன் வைத்துக் கொள்ளும்படிக் கேட்டிருக்கிறார். இத்தனைக்கும் அவரது பராமரிப்புக்கு வேண்டிய பணம் அவரது ஓய்வூதியம் மூலமாகவே கிடைத்துவிடும்.
ஆனாலும், அவரை ஏற்க மறுத்த அவருடைய வாரிசுகள், அவரை ஒரு முதியோர் இல்லத்தில் சேரும்படிக் கூறிவிட்டு அவரவர் வீடு திரும்பியிருக்கிறார்கள். மன உளைச்சலில் இருந்த அந்த முதியவர் சென்ற வாரம் தற்கொலை செய்து கொண்டார். ஓய்வூதியம் என்ற பாதுகாப்பு இருந்தும் மேற்படி பெண்மணிக்கும், முதியவருக்கும் உறவினரின் ஆதரவு கிடைக்கவில்லை என்பதே இங்கு அறிய வேண்டியது.
இவை எல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுவதுதான் என்றாலும், ஒவ்வொரு வீட்டிலும் வயது முதிர்ந்தவர்களை வேண்டாத பாரமாகக் கருதும் போக்கு முன்னெப்போதையும்விட அதிகரித்து வருகிறது என்பதே உண்மை. இதைத்தவிர, இன்னொரு உண்மையையும் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.
இன்றைய இளம் பிராயத்தினர் அனைவரும் முதுமையை அடைந்தே தீர வேண்டும். இன்றைய முதியவர்களுக்கு நேர்வதைத்தான், இன்றைய இளைஞர்கள் தங்களது முதுமைப் பிராயத்தில் சந்திக்கவேண்டி இருக்கும்.
தங்களது எதிர்கால நலத்துக்காக அதாவது சுயநலத்துக்காகவேனும் தங்களைப் பெற்றவர்களைக் கைவிடாமல் இருக்க முயற்சிக்க வேண்டும். ஏனெனில், நீங்கள் உங்கள் பெற்றோருக்குச் செய்யும் எல்லாவற்றையும் உங்கள் வாரிசுகள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
எஸ். ஸ்ரீதுரை
No comments:
Post a Comment