Saturday, June 25, 2016

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் வெட்டிக்கொலை தப்பி ஓடிய மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு


சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில், கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் மர்ம ஆசாமியால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர்

சென்னை சூளைமேடு, தெற்கு கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தான கோபால கிருஷ்ணன். மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மகள் சுவாதி (வயது 24). செங்கல்பட்டு அருகே பரனூரில் உள்ள இன்போசிஸ் சாப்ட்வேர் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.

இவர் தினமும் காலையில் அலுவலகம் செல்ல, நுங்கம்பாக்கத்தில் இருந்து பரனூருக்கு மின்சார ரெயிலில் சென்று வருவது வழக்கம்.

பட்டாக்கத்தியால் வெட்டு

அதேபோல், நேற்று அவர் அலுவலகத்துக்கு செல்வதற்காக காலை 6.45 மணிக்கு செல்லும் மின்சார ரெயிலில் ஏற வீட்டில் இருந்து தன்னுடைய தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு வந்தார்.

6.35 மணிக்கு ரெயில் நிலையதிற்குள் நுழைந்த அவர், மின்சார ரெயிலில் உள்ள பெண்கள் பெட்டியில் ஏறுவதற்கு வசதியாக ரெயில் நிலையத்தின் நடுப்பகுதிக்கு பிளாட்பாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவர் பின்னால் வேகமாக வந்த மர்ம ஆசாமி ஒருவர் கூர்மையான பட்டாக்கத்தியால் சுவாதியை சரமாரியாக வெட்டினார். இதில், அவரது வாய், தலை, கழுத்து ஆகிய 6 இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

துடி, துடிக்க உயிர் இழந்தார்

திடீர் தாக்குதலில் நிலைதடுமாறிய சுவாதி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அவரது குரல்வலையில் வெட்டு விழுந்ததால் அவரால் அய்யோ... அம்மா... என்று சத்தம்கூட போட முடியாமல், துடி, துடித்து உயிர் இழந்தார்.

காலை நேரம் என்பதால், ரெயில் நிலையத்தில் பயணிகள் நடமாட்டம் குறைவாக இருந்தது. ஒரு சிலர் மட்டும் ஆங்காங்கே நின்றதால், இந்த பயங்கரத்தை யாரும் நேரில் பார்க்கவில்லை.

சுவாதியின் உயிர் அடங்கியதை உறுதி செய்துகொண்ட மர்ம ஆசாமி ரத்தம் சொட்ட... சொட்ட... பட்டாக்கத்தியுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

காலை 6.45 மணிக்கு சுவாதி ஏறுவதற்காக காத்திருந்த மின்சாரம் ரெயிலும் வந்து நின்றது. ரெயிலில் இருந்த பயணிகள் சுவாதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலை அடுத்து, எழும்பூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தனர். அங்கு நின்ற பயணிகளிடமும், கடைக்காரர்களிடமும் விசாரணை நடத்தினார்கள்.

இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த சுவாதியின் கைப்பையில் இருந்த அடையாள அட்டையை போலீசார் எடுத்துப்பார்த்தனர். அதன் பிறகுதான் அவரது பெயர் சுவாதி என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த அடையாள அட்டையில் இருந்த அவருடைய தந்தையின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர்.

மோப்பநாய்

அவரிடம் பேசிய போலீசார், முதலில் நடந்த உண்மையை கூறவில்லை. மாறாக, உங்கள் மகள் ரெயிலில் அடிபட்டு கிடக்கிறார் என்று கூறி அழைத்துள்ளனர். பதற்றத்துடன் ரெயில் நிலையத்துக்கு ஓடி வந்த சந்தான கோபாலகிருஷ்ணன், ரத்த வெள்ளத்தில் கிடந்த மகளின் பரிதாப காட்சியை பார்த்து அழுது துடித்தார்.

அதே நேரத்தில், சுவாதியை கொன்ற மர்ம ஆசாமியை பிடிக்க ரெயில்வே போலீசுக்கு சொந்தமான ‘ஜாக்’ என்ற மோப்பநாயும், மாநகர போலீசுக்கு சொந்தமான ‘அலெக்ஸ்’ என்ற மோப்பநாயும் சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்டன.

சம்பவ இடத்தை நோட்டமிட்ட மோப்பநாய்கள், அங்கிருந்த ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர் வழியாக நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பு வரை சென்று பின்னர் அங்கே நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. எனவே, அதுவரை நடந்து வந்த கொலையாளி அங்கிருந்து வாகனம் ஒன்றில் ஏறி தப்பிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

கழுத்து, தாடை, மண்டையில் வெட்டு

இதைத்தொடர்ந்து சென்னை எழும்பூர் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுவாதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்ல கூறினார்.

சுவாதி உடல் கிடந்த பிளாட்பாரத்தில் ரத்தம் உறைந்த நிலையில் காணப்பட்டது. அவருடைய கழுத்து, தாடை, மண்டை ஆகியவற்றில் வெட்டுக்காயம் ஆழமாக பதிந்திருந்ததால், முகமே முற்றிலும் சிதைந்து காணப்பட்டது. வாயில் இருந்த பற்கள் உடைந்து நடைமேடையில் சிதறிக்கிடந்தன.

சிதறிக்கிடந்த பற்கள், அவருடைய செருப்பு, கைப்பை ஆகியவற்றை தடயங்களாக போலீசார் எடுத்து சென்றனர். சுவாதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. நேற்று மாலை பிரேத பரிசோதனை முடிந்து அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

டிராவல் பேக்குடன் வந்த நபர்

கொலை நடந்த இடத்தில் போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கினார்கள். பொதுவாக நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் பயணிகள் அதிகம் வந்து செல்லும் முக்கிய இடமாக விளங்குகிறது. மேலும், ரெயில் நிலையத்தை ஒட்டி பிரபலமான லயோலா கல்லூரியும், பல்வேறு தனியார் நிறுவனங்களும் உள்ளன.

இதனால், எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கும் இந்த ரெயில் நிலையத்தில், இப்படி ஒரு பயங்கர சம்பவம் நடந்திருப்பது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலையாளி பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், கொலையாளி பச்சை நிற சட்டை மற்றும் கருப்பு நிற ‘பேண்ட்’ அணிந்து இருந்ததாகவும், கையில் ‘டிராவல் பேக்’ வைத்திருந்ததாகவும், தப்பியோடியதை நேரில் பார்த்த பயணிகள் சிலர் தெரிவித்தனர்.

மர்ம ஆசாமி யார்? எதற்காக சுவாதியை கொலை செய்தார்? சுவாதிக்கும், அந்த ஆசாமிக்கும் என்ன தொடர்பு? என்று பல்வேறு கோணங்களில் விசாரணையில் இறங்கிய போலீசார், முதலில் அவருடைய தந்தை சந்தான கோபாலகிருஷ்ணனிடம் விசாரித்தனர்.

கால் டாக்சி டிரைவர்

அப்போது, அவர் போலீசாரிடம் சில தகவல்களை தெரிவித்தார். அதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் கால் டாக்சி நிறுவனம் ஒன்றில் கார் ‘புக்கிங்’ செய்து சுவாதி பயணம் செய்துள்ளார். கார் ஓட்டிய டிரைவர் அவரிடம் கூடுதல் வாடகை கேட்டதால், அவரை பற்றி கால் டாக்சி நிறுவனத்தில் சுவாதி புகார் செய்தார். இதனால் கார் டிரைவரின் வேலை பறிபோனது. அதனால், அந்த கோபத்தில் இதுபோன்ற செயலில் கார் டிரைவர் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

இதை ஒரு துருப்பு சீட்டாக எடுத்துக்கொண்ட போலீசார் குறிப்பிட்ட கார் டிரைவரை தேடிப்பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த டிரைவர் கட்டணம் அதிகம் கேட்டதால், எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது உண்மை தான். ஆனால் அதன்பிறகு, அவரை (சுவாதியை) நான் பார்க்கவே இல்லை என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

செல்போன் காணவில்லை

அதைத் தொடர்ந்து, வெவ்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இதுகுறித்து ரெயில்வே போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

கால் டாக்சி டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர் இந்த கொலைக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். அடுத்தகட்ட விசாரணையை நோக்கி முன்நகர்ந்து கொண்டு இருக்கிறோம்.

நகை மற்றும் பணத்துக்காக சுவாதியை மர்மநபர் கொலை செய்திருப்பாரா? என்று நாங்கள் பார்த்த போது அவர் அணிந்திருந்த நகையும், பணமும் கொள்ளை போகவில்லை. எனவே கொலைகாரன் நகை மற்றும் பணத்துக்காக இந்த கொலையை செய்யவில்லை.

இந்த கொலை சம்பவத்தில் சுவாதியின் செல்போன் மட்டும் காணாமல் போய் உள்ளது. நாங்களும் அவர் இறந்து கிடந்த பகுதிக்கு அருகில் தேடிப்பார்த்துவிட்டோம். செல்போன் கிடைக்கவில்லை.

எனவே முக்கிய தடயமாக இருக்கும் அந்த செல்போனை கொலையாளி எடுத்து சென்றிருக்க வாய்ப்பு இருக்கிறது.

காதல் விவகாரமா?

அடுத்ததாக, நாங்கள் சுவாதியின் நெருங்கிய நண்பர்கள், அலுவலகத்தில் பணிபுரிபவர்களிடம் விசாரணை தொடங்கி இருக்கிறோம். சுவாதி பயன்படுத்திய செல்போன் எண்ணுக்கு கடைசியாக யார்? யாரெல்லாம்? தொடர்பு கொண்டு பேசினார்களோ? அவர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறோம்.

இதற்கிடையில் எங்களுக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. சுவாதி ஏற்கனவே ஒருவரை காதலித்து, இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பினால் காதல் முறிவு ஏற்பட்டுள்ளது என்றும், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சுவாதிக்கு, அவருடைய காதலர் போன் செய்து மிரட்டல் விடுத்ததாகவும் தெரியவருகிறது.

ஒரு வேளை காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்குமோ? என்று 3 தனிப்படைகள் அமைத்து எங்களுடைய விசாரணையை துரிதப்படுத்தி இருக்கிறோம். கொலையாளியை விரைவில் பிடித்துவிடுவோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கத்தி கைப்பற்றப்பட்டது

போலீஸ் அதிகாரிகள் கூறிய தகவலை உறுதி செய்யும் வகையில், கொலை செய்யப்பட்டு கிடந்த சுவாதியின் உடலை பார்த்து அழுத அவருடைய தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன், ‘‘எவ்வளவு நாள் தான் என்னால் உன்னை பாதுகாக்க முடியும்’’ என்று கூறியபடி கதறி அழுதார். இதனால், இது காதல் விவகாரத்தால் நடந்த கொலையாக தான் இருக்குமோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், சுவாதியின் வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள் கூறும்போது, பெரும்பாலும் அவரது வீட்டில் சண்டை சச்சரவு எப்போதும் இருக்கும் என்று தெரிவித்தனர்.

இதற்கிடையில், நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் போலீசார் நடத்திய சோதனையில் ‘டிராவல் பேக்’கில் ரத்தக்கறையுடன் கத்தி ஒன்றை கைப்பற்றினார்கள். சுவாதியை கொல்ல மர்ம ஆசாமி இந்த கத்தியை பயன்படுத்திவிட்டு தூக்கி வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவத்தால் நேற்று காலை பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடுமையான நடவடிக்கை

இந்த சம்பவம் குறித்து சுவாதியின் சித்தப்பா கோவிந்தராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுவாதி மிகவும் அன்பானவள். அமைதியாக இருப்பாள். அவளுக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சம்பவத்தை கேட்டதும் நாங்கள் அதிர்ந்துபோனோம். கொலை செய்த மர்மநபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

விரைவில் அவனை போலீசார் பிடிக்க வேண்டும். சட்டத்தின் முன் அந்த நபரை நிறுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024