Tuesday, June 14, 2016

எம்ஜிஆர் 100 | 85 - 'அடைந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி'

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

எம்ஜிஆர் 100 | 85 - 'அடைந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி'



M.G.R. நடித்த ஆரம்ப கால படங்களில் நம்பியாருக்கும் முன்னதாக வில்லன் வேடங்களில் நடித்தவர் அவர். ‘ஹா...ஹா... ஹா..’ என்ற அதிரடி சிரிப்பிலேயே கலங்கடித்தவர். எம்.ஜி.ஆர். நடித்த ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில்தான் முதன்முதலாக இந்த இடிச்சிரிப்பை அவர் வெளிப்படுத்தினார். அதற்கு கிடைத்த பலத்த வரவேற்பால், பின்னர், அதுவே அவரது தனி முத்திரை ஆனது. அந்த சிரிப்புக்கு சொந்தக்காரர் பி.எஸ்.வீரப்பா.

1939-ம் ஆண்டு வெளியான ‘மணிமேகலை’ என்ற படத் தில் வீரப்பா அறிமுகமானார். 1946-ம் ஆண்டு ஜூபிடர் பிக்சர்ஸின் ‘ முருகன்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித் திருந்தார். அந்தப் படத்தில் வீரப்பாவும் நடித்துள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட நட்பு இறுதிவரை நீடித்தது. எம்.ஜி.ஆரின் கடைசி படமான ‘மது ரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ உட்பட பல படங்களில் வீரப்பா நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். நடித்த ‘நாம்’ படத்தை ஜூபிடர் பிக்சர்ஸுடன் சேர்ந்து மேகலா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தில் கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் பங்குதாரர்களாக இருந்தனர். படத்துக்கு திரைக்கதை, வசனம் கருணாநிதி. படத் தில் வரும் வில்லன் பாத் திரத்துக்கு வீரப்பாவை எம்.ஜி.ஆர். சிபாரிசு செய்தார். ‘நாம்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு முற்போக் கான இளைஞர் வேடம். படத்தில் எம்.ஜி.ஆரின் வீட் டுக்கு வீரப்பா தீ வைத்துவிடுவார். இதில் எம்.ஜி.ஆரின் முகம் உருக்குலைந்து விடும். முகம் பாதிக்கப்பட்டாலும் கண்கள் தெரியும். தீயில் வெந்த முகத் தோடு இரவில் நடமாடும் அவரைப் பார்த்து பேய் நடமாடுவதாக ஊரில் வதந்தி பரவும். எம்.ஜி.ஆரின் அழகான முகத்தை பார்க்கவே ரசிகர்கள் விரும்பு வார்கள் என்பதை இந்தப் படம் உணர்த்தியது. படம் நல்ல கதை யம்சத்துடன் எம்.ஜி.ஆரின் சிறப்பான நடிப்போடு அமைந்திருந்தாலும் அவரை வெந்துபோன முகத்தோடு பார்க்க ரசிகர்கள் விரும்பவில்லை.

வீரப்பாவின் தமிழ் உச்சரிப்பும் ஏற்ற இறக்கத்துடன் அவர் பேசும் பாங்கும் மக்களைக் கவர்ந்தன. எம்.ஜி.ஆர். நடித்து 1957-ம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றி பெற்ற ‘மகாதேவி’ படத்தில் ‘‘அடைந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி’’ என்ற வீரப்பாவின் வசனம் இன்றளவும் பிரபலம். அந்தப் படத்தில் வீரப்பாவின் பெயர் கருணாகரன். சந்தர்ப்பவசத்தால், வீரப்பாவின் விருப்பத்துக்கு மாறாக, இளவரசியாக வரும் நடிகை எம்.என்.ராஜத்தை அவருக்கு கட்டாய மாக திருமணம் செய்துவைத்து விடுவார் கள். திருமணம் முடிந்து வீரப்பாவை ‘‘அத்தான்...’’ என்று எம்.என்.ராஜம் அழைப்பார். ஆத்திரத்தை அடக்கியபடி வேதனை கலந்த சிரிப்போடு வேண்டா வெறுப்பாக, ‘‘அப்படிச் சொல்... சத்தான இந்த வார்த்தையிலே கருணாகரன் செத்தான்’’ என்று வீரப்பா கூறும்போது தியேட்டரில் எழும் சிரிப்பலை அடங்க சில நிமிடங்கள் பிடிக்கும்.

படங்களில் வாள் வீச்சில் எம்.ஜி.ஆருக்கு ஈடு கொடுத்து வீரப்பா சண்டையிடுவார். எம்.ஜி.ஆரிடம் உள்ள ஒரு விசேஷ குணம், எந்த பாத்திரத்தில் எந்தக் காட்சியில் நடித்தாலும் சரி, சுற்றிலும் நடப்பவற்றில் ஒரு கண் வைத்திருப்பார். ‘ஜெனோவா’ படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆருக் கும் வீரப்பாவுக்கும் ஆக் ரோஷமான வாள் சண்டை. இந்தக் காட்சியில் நடித்துக் கொண்டிருக்கும்போது, பள்ளத்தில் உருண்டுவிழ இருந்த வீரப்பாவை எம்.ஜி.ஆர். பிடித்து இழுத்து சரியான நேரத்தில் காப்பாற்றியதால் அவர் உயிர் பிழைத்தார். இதை வீரப்பா பலமுறை நன்றி யோடு கூறியுள்ளார்.

‘விக்கிரமாதித்தன்’ படத்தில் வீரப் பாவை கொல்ல வரும் கூட்டத் திடம் இருந்து அவரை எம்.ஜி.ஆர். காப்பாற்றுவார். அதற்கு நன்றி தெரிவித்துவிட்டு எம்.ஜி.ஆரைப் பற்றி வீரப்பா விசாரிப்பார். விவரங்களைத் தெரிந்து கொண்டபின், அவர் சொல் லும் வார்த்தைகளால் தியேட்டரில் எழும் கரவொலியால் காது கிழியும். எம்.ஜி.ஆர். பற்றி வீரப்பா சொல் வார்... ‘‘உலகத்துக்குத் தேவையான மனிதர்!’’

அந்த வசனத்தை உறுதிப்படுத்துவது போல மட்டுமல்ல; தன்னை அவமதிப்ப வர்களை எம்.ஜி.ஆர். எப்படி தண்டிப்பார் என்பதற்கும் ஒரு சுவையான சம்பவம். அவர் சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த காலங்களில் ஜூபிடர் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்த மான நெப்டியூன் ஸ்டுடியோவில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டார். எம்.ஜி.ஆருக்கு சிறிய வேடம்.

ஒரு காட்சியில் நடித்து முடித்து விட்டு அடுத்த ‘ஷாட்’டுக்கு கூப்பிடும் வரை வெளியே உட்கார்ந்திருப்பார். எங்காவது சென்றால், தேடும்போது ஆள் இல்லாவிட்டால் வாய்ப்புகள் போய்விடும் என்பதால் இடத்தைவிட்டு நகரமாட்டார். ஒருநாள் அப்படி உட் கார்ந்திருந்தபோது, அந்த ஸ்டுடியோ வில் பணியாற்றிய அப்பன் என்ற பெயர் கொண்ட பணியாளர் ஒருவர், ஒரு கூஜாவையும் டம்ளரையும் எடுத்துக் கொண்டு சென்றார். எம்.ஜி.ஆருக்கு கடுமையான தாகம். பணியாளர் அப்பனைப் பார்த்து, ‘‘அண்ணே, குடிக்க கொஞ்சம் தண்ணி’’ என்று கேட்டார். அதற்கு அப்பன் எரிச்சலுடன், ‘‘இருய்யா, பெரிய நடிகர்களுக்கு ஜூஸ் கொண்டுபோறேன். நீ வேற’’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். அதன் பின்னரும் எம்.ஜி.ஆருக்கு அவர் தண்ணீர் கொண்டுவரவில்லை.

சில ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். தமிழ்த் திரையுலகின் நம்பர் ஒன் கதாநாயகனாக உயர்ந்ததோடு, அதே நெப்டியூன் ஸ்டுடியோவையே விலைக்கு வாங்கி அதற்கு தன் தாயின் பெயரை வைத்தார். எம்.ஜி.ஆருக்கு தண்ணீர் கொடுக் காமல் அலட்சியப்படுத்திய பணியாளர் அப்பன், அதே ஸ்டுடியோவில்தான் பணியாற்றி வந்தார். அவ ருக்கு இப்போது எம்.ஜி.ஆர். முதலாளி!

ஸ்டுடியோவில் அப்பனைப் பார்த்த எம்.ஜி.ஆர்., அவரை அருகில் அழைத் தார். பழைய சம்பவங்கள் மனதில் ஓட, ‘வேலை போச்சு’ என்ற நினைப் புடன் கண்கலங்கியபடியே கும்பிட்ட வாறு எம்.ஜி.ஆரிடம் வந்தார் அப்பன். ‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். ‘‘இரு நூறு ரூபாய்’’ பலவீனமான குரலில் அப்பனிடம் இருந்து பதில் வந்தது.

‘‘இந்த மாதம் முதல் உங்களுக்கு நானூறு ரூபாய் சம்பளம்’’ என்று அப்பனின் தோள்களைத் தட்டி புன்முறுவலுடன் கூறிய எம்.ஜி.ஆரின் கால்களில் விழுந்து அழுதார் அப்பன். அவரைத் தூக்கி அணைத்தபடி தேற்றினார் எம்.ஜி.ஆர்.!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்




எம்.ஜி.ஆர். நடித்த ‘ஆனந்த ஜோதி’ படத்தை பி.எஸ்.வீரப்பா தயாரித்தார். நடிகை தேவிகா எம்.ஜி.ஆருடன் நடித்த ஒரே படம் இது. படத்தில் தேவிகாவின் தம்பியாக பள்ளிச் சிறுவனாக கமல்ஹாசன் நடித்திருப்பார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024