தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரிப்பு ரவுடிகளை சுட்டுத்தள்ள உத்தரவு என்கவுன்டர் பட்டியல் தயாரிப்பு தீவிரம்
நெல்லை: தமிழகத்தில் கூலிப்படையினர் அட்டகாசம் அதிகரித்து வருவதைத்தொடர்ந்து ரவுடிகளை சுட்டுத்தள்ள போலீசுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐடி நிறுவன ஊழியர் சுவாதி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர சென்னையில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 3 வக்கீல்கள் உள்ளிட்ட 11 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலைகளில் கூலிப்படையினருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதுபோல் தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பழைய குற்றவாளிகள், ரவுடிகளை கைது செய்து வருகின்றனர். சென்னையில் மட்டும் கடந்த 4 நாளில் 491 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் 53 ரவுடிகளும், சிவகங்கையில் 12, ராமநாதபுரத்தில் 35, திண்டுக்கல் 80, விருதுநகர் 31 ரவுடிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்பு உடையவர்கள்.
அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர்கள் மீது உள்ளன.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் டிஐஜி தினகரன் உத்தரவின்பேரில் எஸ்பிக்கள் விக்ரமன், அஸ்வின்கோட்னீஸ் ஆகியோர் தலைமையில் போலீசார் அதிரடி வேட்டை நடத்தி சுமார் 180 ரவுடிகளை கைது செய்துள்ளனர். இவர்கள் தவிர பழைய குற்றவாளிகள், கொடூரச் செயல்களில் ஈடுபட்டு ஜாமீனில் வந்தவர்கள் ஆகியோரை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பெரும்பாலான கொலைகள் கூலிப்படையினர் மூலமே நடக்கின்றன.
மேலும் தென் மாவட்டங்களில் இருந்து தான் சென்னை, கோவை, சேலம், திருச்சி போன்ற இடங்களுக்கு கூலிப்படையினர் சென்று கொலைகளை கச்சிதமாக முடிக்கின்றனர். சமீபத்தில் சுவாதி கொலையில் கொலையாளி தண்டவாளத்தில் வீசிச்சென்ற கத்தி கூட தென் மாவட்டத்தினர் பயன்படுத்தும் கத்தியாக இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
சுவாதி கொலை சம்பவத்திலும் ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தொடர் கொலை சம்பவங்களில் ஈடுபடும் கூலிப்படையினர் மற்றும் ரவுடிகளை சுட்டுத்தள்ள போலீசுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான பட்டியலையும் அவர்கள் ரகசியமாக தயாரித்து வருகின்றனர்.
இதனால் ரவுடிகள், வெளி மாநிலங்களுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்..
No comments:
Post a Comment