சிங்கப்பூர்,
பதிவு செய்த நாள்:
திங்கள் , ஜூன் 27,2016, 9:27 AM IS
சிங்கப்பூரில் அவசரமாக தரையிறங்கிய விமானம் தீ பிடித்து எரிந்தது. விமானத்தில் பயணித்து விமானிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.
'மரணத்தில் இருந்து தப்பினோம்' என்று பயணிகள் அதிர்ச்சியுடன் கூறிஉள்ளனர்.
சிங்கப்பூரில் இருந்து மிலனுக்கு புறப்பட்ட போயிங் 777-300ER ரக விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. எச்சரிக்கை செய்து கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டு, உடனடியாக விமானம் விமானநிலையத்திற்கு திரும்பியது. விமானம் அங்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக விமானத்தில் இருந்து தரையிறக்கப்பட்டனர். அப்போது விமான எஞ்ஜின் தீ பிடித்து எரிந்தது. இதுதொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வெளியிட்டு உள்ள செய்தியில்,”விமானத்தின் வலது எஞ்ஜினில் தீ பிடித்தது, உடனடியாக காலை 6:50 மணிக்கு சாங்கி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது,” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விமானத்தில் பயணம் செய்த 222 பயணிகள் மற்றும் 19 பணியாளர்களுக்கு எந்தஒரு காயமும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகள், “மரணத்தில் இருந்து உயிர்தப்பினோம்,’ என்று அதிர்ச்சியுடன் கூறிஉள்ளனர்.
பயணிகள் உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்து விமான நிலையத்திற்கு பஸ்சில் அழைத்து செல்லப்பட்டனர். பயணிகள் மாற்று விமானம் மூலம் மிலன் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறிஉள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு முழுவதும் ஒத்துழைப்பு அளிப்பதாக கூறிஉள்ளது. விமானம் தீ பிடித்து எரிந்த சம்பவத்தை பயணிகள் சில படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர்.
“நான் மரணத்தில் இருந்து உயிர் பிழைத்தேன்!!! சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் 3 மணி நேரங்களாக ஆயில் கசிவு ஏற்பட்டு உள்ளது, உடனடியாக சிங்கப்பூர் திரும்பியது. சாங்கி விமானநிலையம் திரும்பியதும் எஞ்ஜின் தீபிடித்து எரிந்தது,” லீ பீ யீ என்பவர் தனது பேஸ்புக் பகுதியில் வீடியோவுடன் தகவல் வெளியிட்டு உள்ளார். இதற்கிடையே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒரு மணிநேரம் 45 நிமிடம் பயணித்த பின்னர் திரும்பியது என்று கூறிஉள்ளது.
No comments:
Post a Comment