எஸ்.விஜயகுமார்
சென்னை ஐடி இன்ஜினியர் சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை விரைவில் பிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கை தங்களிடம் இருப்பதாக சென்னை காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:
தொடர் கொலைகள் குறிப்பாக சுவாதியின் கொலை சென்னையை நடுங்கச் செய்துள்ளது. தலைநகரில் சட்டம் ஒழங்கு சீர்கெட்டுவிட்டதாக மக்கள் கருதுகின்றனர்...
சென்னையின் நிலவரம் மிகைப்படுத்திக்காட்டப்பட்டுள்ளது. உண்மை அதுவல்ல. கடந்த சில நாட்களாக சென்னையில் குற்றச் செயல்கள் அதிகரித்திருக்கிறது. ஆனாலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சென்னை நகரில் குற்றங்கள் குறைவாகவே இருக்கிறது. அத்தனை கொலை வழக்குகளிலும் குற்றவாளிகளை கைது செய்திருக்கிறோம். தனிநபர் விரோதம், குடும்பப் பிரச்சினை காரணமாக கொலைகள் நடக்கும்போது அதை தடுப்பதில் காவல்துறைக்கு பெரிய பங்கு ஏதுமில்லை.
சென்னையில் அண்மையில் நடந்த கொலைச் சம்பவங்களில் ஒரு சம்பவத்தில் மனைவியே கணவனை கொலை செய்திருக்கிறார். மற்றொரு சம்பவத்தில் கணவர் தன் மனைவியையும் அவருடைய மூன்று பெண் குழந்தைகளையும் கொலை செய்திருக்கிறார். இத்தகைய குற்றங்களை எப்படி தடுக்க முடியும். இவற்றில் குற்றவாளிகளை கைது செய்வது மட்டுமே சாத்தியம். அதை 24 மணி நேரத்துக்குள் காவல்துறை செய்திருக்கிறது.
சுவாதியின் வழக்கு திங்கள்கிழமை அன்றுதான் எங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. குற்றவாளியை விரைவில் பிடித்துவிடுவோம் என நாங்கள் நம்புகிறோம்.
சமீபத்திய கொலை சம்பவங்கள் குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீது எள்ளளவும் பயமில்லை என்பதையே காட்டுகிறது. கொடுங் குற்றங்களுக்குப் பிறகு குற்றவாளிகளை பிடிப்பது மட்டும்தான் காவல்துறையினரின் கடமையா?
இங்குதான் பொதுமக்கள் தலையீடு அவசியமாகிறது. பாதிக்கப்பட்ட நபரை காப்பாற்ற இயலாவிட்டாலும் குற்றவாளி குறித்து போலீஸுக்கு தகவல் அளிக்கலாம், முடிந்தால் குற்றவாளியை சம்பவ இடத்திலேயே பிடிக்கவும் செய்யலாம். சுவாதி கொலையாளி சம்பவத்துக்குப் பிறகு சிறு தூரம் நடந்து சென்று பின்னர் அங்கிருந்த ஒரு சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து தப்பியுள்ளார். இந்த நிகழ்வை யாராவது புகைப்படம் எடுத்திருந்தாலோ அல்லது வீடியோ காட்சியாக பதிவு செய்திருந்தாலோ உடனடியாக காவல்துறைக்கு அளித்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். அவர்களது அடையாளம் மிகமிக ரகசியமாக பாதுகாக்கப்படும்.
இரவு நேர ரோந்து, வாகன தணிக்கை என போலீஸ் கெடுபிடி தளர்ந்துவிட்டதாக கூறப்படுகிறதே..
குற்றச்செயல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து போதுமான அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் 700 ரோந்து வாகனங்களில் போலீஸார் ரோந்து மேற்கொள்கின்றனர். குற்றச்செயல்கள் நடக்க அதிக வாய்ப்புள்ள பகுதிகளில் இரவு நேர கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நகர் முழுவதும் 20,000 சிசிடிவி கேமராக்கள் உள்ளன.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கே.கே.நகர், வலசரவாக்கம் காவல் சரகத்துக்கு உட்பட்ட ஒட்டுமொத்த பகுதியும் சிசிடிவி கண்காணிப்பின் கீழ் உள்ளது. நகர் முழுவதையும் கண்காணிப்பு கேமரா வளையத்துக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.
கொடுங் குற்றச்செயல்களைப் புரிபவர்களில் எத்தனை பேர் தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்? குறிப்பாக சென்னையில் நடந்த குற்றச் செயல்கள் குறித்து சொல்லுங்கள்? இது தவிர விசாரணை அதிகாரிகளுக்கு வழக்கமான விஐபி பாதுகாப்பு, போராட்டங்களை தடுப்பது உள்ளிட்ட பணிகளுக்கு இடையே தங்கள் வசம் உள்ள வழக்கு விசாரணைக்கு போதிய நேரம் இருக்கிறதா?
கொடுங் குற்றச்செயல்களைப் புரிபவர்களில் 50% பேர் தண்டனை பெறுகின்றனர். நீங்கள் சொல்வதுபோல் போலீஸாருக்கு வெவ்வேறு பணிகளும் இருக்கின்றன. அதற்கிடையிலும் குறிப்பிட்ட கால இடைவேளையில் அவர்கள் வசம் இருக்கும் வழக்குகளின் விசாரணை நிலவரத்தை கேட்டறிந்து வருகிறோம். வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் விரைவில் தாக்கலாவதை உறுதி செய்கிறோம்.
குற்றங்களை தடுக்க முயன்றாலோ அல்லது குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தாலோ தங்களுக்கு இடையூறு ஏற்படும் என மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. சாட்சிகளை பாதுகாக்க என்ன நடைமுறை இருக்கிறது?
மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. தங்கள் கண்முன் நிகழும் குற்றங்களை தடுக்க முடியாவிட்டாலும் உடனடியாக 100-க்கு போன் செய்யலாம். போன் செய்த சில நிமிடங்களில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சேரும் அளவுக்கு ஆங்காங்கே ரோந்து வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதுதவிர குற்றச் சம்பவங்கள் குறித்து தகவல் அளிப்பவர்களை பாதுகாக்க போலீஸாருக்கு தேவையான அறிவுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
செல்போன் திருட்டு போனாலோ தொலைந்து போனாலோ அதை போலீஸார் புகாராக பதிவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறதே?இதனால் தங்கள் செல்போனில் உள்ள முக்கிய ஆவணங்களையும், புகைப்படங்களையும் தவறவிட்ட பதற்றத்தில் பலரும் தவிக்கின்றனர்.
செல்போன் திருட்டு, செல்போன் தொலைந்த சம்பவங்கள் குறித்து நிச்சயமாக வழக்கு பதிவு செய்யப்படும். அத்தகைய வழக்குகளை பதிவு செய்ய வேண்டாம் என எவ்வித உத்தரவும் இல்லை.
No comments:
Post a Comment