பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தரின் மறைவையொட்டி, மூத்த பத்திரிகையாளரும், சமூக வலைத்தள கருத்தாளருமான ஏழுமலை வெங்கடேசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவிட்டுள்ளார்.
'ஏ.சி.திருலோகச்சந்தர் - வெற்றிகளை குவித்தவர்' என்ற தலைப்பில் அவர் இட்ட பதிவில் இடம்பெற்ற வியத்தகு தகவல்கள்:
* கல்லூரியில் படிக்கும்போது சக நண்பனின் தந்தை அறிமுகம் கிடைக்கிறது. அவர் வேறு யாருமல்ல, பல ஆண்டுகளாக சினிமா உலகில் கோலோச்சிவரும் பத்மநாப ஐயர். அவரிடம் உதவி இயக்குநராக சேருகிறார் ஏ.சி.திருலோகச்சந்தர். 1952ல் வெளியாகும் அந்த படம் எம்ஜிஆர் நடித்த 'குமாரி'யில் பணிபுரிகிறார். இதேபோல இன்னொரு ஜாம்பவான் இயக்குநர் கே.ராம்நாத்திடமும் உதவி இயக்குநர் வேலை.
* இப்படி காலம் ஓடிக்கொண்டிருந்தபோதுதான் இயக்குநர் ஜோசப் தளியத், தான் இயக்கும் 'விஜயபுரி வீரன்' படத்தில் உதவி இயக்குநர் என்பதோடு திரைக்கதை அமைக்கும் வாய்ப்பையும் அளிக்கிறார். ஆங்கில படங்களை பார்த்து அதன் தாக்கத்தில் விதவிதமான காட்சிகளையும் கதைகளையும் மனதில் வடிவமைப்பதில் ஏசிடி படு கில்லாடி.
* சி.எல்.ஆனந்தன் (நடிகை டிஸ்கோ சாந்தியின் தந்தை) கதாநாயகனாக நடித்து 1960-ல் வெளியான 'விஜயபுரி வீரன்' படம் மெகா ஹிட். படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் எஸ்.ஏ.அசோகனுக்கும் ஏவிஎம் நிறுவனத்திடம் நல்ல நட்புண்டு. அதன் அடிப்படையில் ஏ.சி.டி திறமை பற்றி மெய்யப்ப செட்டியாரிடம் சொல்கிறார். இப்படித்தான் ஏவிஎம் என்ற தாய்வீட்டில் நுழைகிறார் ஏ.சி.டி.
* 1962ல் சி.எல்.ஆனந்தனை கதாநாயகனாகவும் நடிகை சச்சுவை கதாநாயகியாகவும் வைத்து ஏவிஎம்முக்காக வீத்திருமகனை இயக்குகிறார் ஏசிடி. ரோஜா மலரே ராஜகுமாரி மற்றும் வெத்திலை போட்ட பத்தினி பொண்ணு ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் அலறின. படம் படு ஹிட். இன்னொரு பக்கம் ஏசிடி கொடுத்த கதைதான் ஏவிஎம்மில் தயாரான சிவாஜி, ஜெமினி நடித்து நட்பின் பெருமையை சொன்ன 'பார்த்தால் பசி தீரும்' படம். குழந்தை நட்சத்திரத்திலேயே கமல் இரட்டை வேடத்தில் கலக்கிய படம் இது.
* 1963ல் ஏசிடி-ஏவிஎம் காம்பினேஷனில் 'நானும் ஒரு பெண்' படம். சிறந்த படம், தேசிய விருது உட்பட பல விருதுகளை குவித்தது. சிவக்குமாரை முதன் முதலில் 'காக்கும் கரங்கள்' (1965) என்ற படம் மூலம் திரையில் அறிமுகப்படுத்தியதும் ஏசிடிதான்.ஏவிஎம் முதன் முதலில் வண்ணப்படம் தயாரிக்க விரும்பியதும் அந்த வாய்ப்பு அப்போதைய வசூல் சக்ரவர்த்தியான எம்ஜிஆருக்கே போனது. அதற்குமுன் வெளியான நாகிரெட்டியின் 'எங்க வீட்டு பிள்ளை' செய்து கொடுத்த வசூல் அப்படி..
* எம்ஜிஆரை வித்தியாசமான பாணியில் நடிக்க ஒப்புக்கொள்ள வைத்து, ஏசிடியே இயக்கவேண்டும் என்று அடம்பிடித்தவர் நடிகர் அசோகன்தான். ஏசிடி இயக்கி 1966ல் வெளியான 'அன்பே வா', 50 ஆண்டுகளாகியும் இன்றும் ரசிகர்களை சுண்டியிழுக்கிறது என்பதை சொல்லித்தான் தெரியவேண்டுமோ?
* இதேபோல ஏசிடி- ஏவிஎம் கூட்டணியில் ஜெமினி நடித்த 'ராமு' படமும் சிவாஜி நடித்த 'பாபு' படமும் ஹிட்டாகி பல மொழிகளில் தாண்டவம் போட்டது தனிக்கதை. நடிகர் ரவிச்சந்திரனையும் காஞ்சனாவையும் வைத்து கலர்ஃபுல்லாக ஆனால் திகிலோடு மிரட்டிய ஏசிடியின் இன்னொரு பிளாக் பஸ்டர் படம் 'அதே கண்கள்'. ஏசிடி இயக்கத்தில் மைல் கல் படம் என்றால் 'இரு மலர்கள்' (1967) படத்தை சொல்லவேண்டும். சிவாஜி, பத்மினி ஆகிய இருவரையும் அசால்ட்டாக சாந்தி என்ற பாத்திரத்தில் துவம்சம் செய்திருப்பார் கே.ஆர். விஜயா.
* இங்கே இன்னொரு சுவையான விஷயம் என்ன வென்றால் 1967-ல் சிவாஜியை வைத்து ஏசி திருலோகச்சந்தர் இயக்கிய 'இரு மலர்கள்' படம்.. ரிலீசுக்கு ஏற்பாடு ஆகிவிட்டது.. அதே நாளில் ஜாம்பவான் ஸ்ரீதர், சிவாஜி நடித்த 'ஊட்டி வரை உறவு' படத்தை வெளியிடுகிறார். ஆனால் என்ன ஆச்சர்யம். ஒரு கதாநாயகனின் இரண்டு படங்களுமே நூறு நாட்களை கடந்தன.
* 1970-ல் சிவாஜியை வைத்து ஏசிடியின் 'எங்கிருந்தோ வந்தாள்' படம் ரிலீசுக்கு ஏற்பாடு ஆகிவிட்டது.. சோதனையாக டி.ஆர். ராமண்ணா சிவாஜியை வைத்து 'சொர்க்கம்' படத்தை அதே நாளில் ரிலீஸ் செய்கிறார். இரண்டு படங்களுமே 100 நாட்கள்.
* 1975ல் சிவாஜியை வைத்து ஏசிடி, 'டாக்டர் சிவா' படம் இயக்கி வெளியிடும் அதே நாளில் ஸ்ரீதர் மீண்டும் சிவாஜி கதாநாயகனாக நடித்த 'வைர நெஞ்சம்' படத்தை வெளியிடுகிறார். இம்முறையும் ஸ்ரீதர் படத்தோடு ஏசிடியின் படமும் 100 நாட்களை கடந்து வெற்றிக்கொடி நாட்டுகின்றன. ஒரு கதாநாயகனை வைத்து படம் இயக்கி அதே கதாநாயகனின் இன்னொரு படத்துடன் ஒரே நாளில் மோதி மூன்று முறை வெற்றிகண்டவர் ஏ.சி.திருலோகச்சந்தர்..
* 'பாரதவிலாஸ்', 'அவன்தான் மனிதன்', 'பத்ரகாளி', இலங்கையின் நாயகி மாலினி பொன்சேகாவை சிவாஜியுடன் ஜோடிபோட்டு சஸ்பென்ஸ் படமாக எடுத்த 'பைலட் பிரேம்நாத்', ரஜினியுடன் 'வணக்கத்துக்குரிய காதலியே', நதியாவுடன் சிவாஜி கலக்கிய 'அன்புள்ள அப்பா' என ஏசி திருலோகச்சந்தரின் இயக்குநர் பயணம் பெரியது என்பதைவிட வெற்றிகரமானது.
* 'பாவமன்னிப்பு' படத்தில் சிவாஜி முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டு கோரமான முகம் வெளிப்படும் காட்சியை உந்துதலாக வைத்து உருவாக்கப்பட்ட படம்தான் 'தெய்வமகன்' (1969). சிவாஜி தந்தை, மகன்கள் என மூன்று வேடங்களில் நடிப்பில் பல பரிமாணங்களை வெளிப்படுத்தி அசத்திய படம். எல்லாவற்றையும் விட ஆஸ்கார் விருதுக்காக முதன் முதலில் இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட படம், ஏசி திருலோகச்சந்தர் இயக்கிய தெய்வமகன்தான்.
தமிழ் சினிமாவின் சாதனையாளர்களில் ஒருவரான உங்களை கண்ணீரோடு வழியனுப்பி வைக்கிறோம் ஏ..சி.திருலோகச்சந்தர் அவர்களே.
ஏழுமலை வெங்கடேசன் |அவரின் ஃபேஸ்புக் பக்க இணைப்பு: Elumalai Venaktesan
No comments:
Post a Comment